நாம் தேர்ந்தெடுத்த பிரதமரிடம் நான் ஏன் பயப்படவேண்டும்?
                                                                                            -பாபா ராம்தேவ்


                                                            ஆங்கிலத்தில்: பிரக்யா சிங்


                                                                        தமிழில்: அன்பரசு சண்முகம்

பாபா ராம்தேவ் இந்தியாவிற்கான தனித்துவ யோகி என்பதில் சந்தேகமே இல்லை. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் தலைமையகத்தில்  மேரே அச்சே தின் சல் ரஹே ஹைன் என உரக்க கூறுகிறார். இதர வணிக சந்நியாசிகளை விட யோகாவினை பெருமளவு புகழ்பெறச்செய்த ராம்தேவ், எப்எம்சிஜி நிறுவனத்தின் வளர்ச்சி, அரசியல் திட்டங்கள், மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நம்மிடையே உரையாடியதன் சுருக்கம்.

உடனடி நூடுல்ஸ் வகை ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஆனால் அது உடனடியாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறதே?

                நூடுல்ஸ் விற்க எங்களிடம் முறையான உரிமம் உள்ளது. அதனை எங்களுக்கு உருவாக்கித் தருபவர்களும் தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளனர் எனும்போது சர்ச்சை என்பதற்கு இதில் இடமேயில்லை. எப்எஸ்எஸ்ஏஐ எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது என்பதைக் கேட்டால் அந்த அமைப்பு எங்களுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றால் அதனை பாரபட்சம் என்று நீங்கள் குறிப்பிடலாம். மேகி நூடுல்ஸ் குறித்த சர்ச்சை இந்தியா முழுவதும் பேசப்பட்டு அதன் தன்மை ஆராயப்பட்டபோது பாபா அது குறித்து எந்தக்கேள்வியும் எழுப்பவில்லை. நாம் இதனை நஸர் நா லக் ஜாயே என்று குறிப்பிடுவோம். நீங்கள் இதனை அறிவீர்கள்.

நீங்கள் ஒரு யோகி மேலும் ஒரு வணிக நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறீர்கள். உங்களது நீண்டகாலத்திட்டங்கள் என்ன?

                யோகாவை மக்களின் தினசரி வாழ்வில் ஒன்றாக இணைக்க முயற்சிக்கிறோம். அபி கரோ, அபி பாவோ (இப்போதே செய், இப்போதே பலனடை)  என்ற முறையில் உடனடி யோகாவை அவர்களுக்கு தர முயற்சிக்கிறோம். இன்றில்லையேல் எப்போதும் இல்லை என்பது எனது லட்சியம். எனக்கு முன் எந்த யோகியும் யோகா நோயை கட்டுப்படுத்துகிறது என்பதைத் தாண்டி குணப்படுத்துகிறது என்றெல்லாம் கூறியதில்லை. நாம் தைராய்டு, மனஅழுத்தம் போன்றவற்றை குணப்படுத்துகிறோம். பல லட்சம் மக்களுக்கு ரத்த அழுத்தத்தை குணப்படுத்தியிருக்கிறோம். கல்லீரல் வீக்கம், கீல்வாத மூட்டுவலி பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளோம். அறிவியல் முறையிலான நிரூபணங்களை இவை குறித்து வைத்திருக்கிறோம். புற்றுநோயினை குணப்படுத் தியதற்கான சான்றினை என்னால் காண்பிக்க முடியும். நடக்கமுடியாத கனவுகள் குறித்தோ அல்லது மூட நம்பிக்கைகள் குறித்தோ நான் பேசவில்லை.

பதஞ்சலி நிறுவனத்தை விட்டு வெளியேறிய மக்கள் எதனால் வெளியேறினார்கள்?

                அட, ஒவ்வொருவர் குறித்தும் நாங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக பராமரித்து வருகிறோம். நான் இதனை நேற்று தொடங்கி செய்து வரவில்லை. 20 ஆண்டுகளாக செய்துவருகிறேன். கோடிக்கணக்கான மக்கள் இப்பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்பொருட்களினால் யாராவது இறந்து போனதாக, பாதிக்கப்பட்டதாக என்னிடம் கூறியிருக்கிறார்களா? அப்படியிருந்தால் பாபா இந்நேரம் சிறையில்தான் இருக்கவேண்டும். பாபாவிற்கு எதிராக ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?

நீங்களே சொல்லுங்கள்...?

                எதுவுமில்லை. இன்றுவரை யோகா தொடர்பாக எந்தவொரு வழக்கும் என்மீது தொடுக்கப்படவில்லை. காங்கிரஸ்காரர்கள் என்மீது பல்வேறு விதமான வழக்குகளை தொடுத்தார்கள் என்பது வேறு கதை.. நீங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது உங்களுக்கு எதிரான ஒருவர் மேல் பல்வேறு வித வழக்குகளை எளிதில் தொடுக்க முடியும். காங்கிரஸ் அரசு என் மீது 250 வழக்குகளை பதிவு செய்து 1000 நோட்டீஸ்களை அதன் மீது அறிவித்தது. அத்தனை வழக்குகளில் ஒன்றிலாவது எதையாவது அவர்கள் நிரூபிக்க முடிந்ததா? காங்கிரஸ் அரசு அதன் பின் இரு ஆண்டுகள் பதவியில் இருந்தது (பதஞ்சலி நிறுவனம் வளரத்தொடங்கிய காலகட்டம்). இப்போது மோடிதானே ஆட்சியில் இருக்கிறார் என்று நீங்கள் கேட்கலாம். அது எந்தவகையில் எங்களுக்கு உதவவில்லை. சொல்லுங்கள் எங்கள் மீதான வழக்குகள் எங்கே சென்றன? சி.பி.ஐ. யின் வெளிப்படையான இரட்டைத்தாக்குதல் என் மீதும், ஆச்சார்யஜியின் மீதும் (ஆச்சார்ய பாலகிருஷ்ணா, பதஞ்சலி நிறுவன இயக்குநர்) வழக்குகள் தொடுக்கப்பட்டன.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் என்னவாயின?

                சில நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்றிருந்தால் அவை மேல் நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததால் எங்களுக்கு எதிரான வழக்குகள் தீர்க்கப்பட்டு விடவில்லை. நாங்கள் செய்யும் பணியில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.  முன்பு எங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் அரசியல்ரீதியானவை மற்றும் எங்களது புகழைக் கெடுக்கும் நோக்கத்திலும் அவதூறு செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டவையாகும்.

உங்களை பெருமளவு புகழ்பெறச்செய்த கருப்புபண விவகாரங்கள் குறித்து இப்போதெல்லாம் தாங்கள் பேசுவதில்லையே ஏன்?

                இன்றும் நான் பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவை குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். தினசரி அறிக்கைகளை வெளியிடுவதில்லை அவ்வளவுதான். நான் என் வேலையைச் செய்வதா அல்லது நேர்காணல்களை அளித்துக்கொண்டு இருக்கவா?

ஆனால் நீங்கள் இப்போதெல்லாம் கருப்பு பணம் குறித்து ஏதும் பேசுவதில்லையே?

                பேசுகிறேன்தான். முந்தைய அரசு எங்களைக்குறித்து எந்த கவனமும் கொள்ளவில்லை என்பதால் எனது கருத்துக்களை மக்கள் முன்பு தெரிவித்தேன். இன்றைய அரசு எங்களது கருத்துக்களை கேட்டறிகிறது என்பதால் அரசிடமே கூறுகிறோம். இப்போது கருத்துக்களை மக்களிடம் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

பிரதமர் மோடி நீங்கள் கூறுவதைக் கேட்கிறாரா?

                மோடிஜி, ஜெட்லிஜி, நிதின்ஜி(கட்கரி), ராஜ்நாத்ஜி என அனைவருமே எனது கருத்துக்களை கவனிக்கிறார்கள். பிரதமரிலிருந்து அமைச்சரவை வரை அனைவருமே எனது கருத்துக்களை கவனித்துக்கேட்கிறார்கள். நான் எனது கருத்துக்களை எங்கே நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அங்கே சரியாக சேரும்படி கூறுகிறேன். நாட்டின் தலையாய நாடாளுமன்றம் நாம் கூறுவதைக் கேட்கிறது. நான் பேசாமல் இருப்பதனால் அச்சம் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமல்ல. மோடிஜி குறித்து நான் ஏன் பயப்படவேண்டும்? நான்/நாம் தேர்ந்தெடுத்துள்ள மனிதர் பிரதமர் ஆகியிருக்கும்போது அவர் குறித்து நான் ஏன் பயப்பட வேண்டும்?

இது பயமா (அ) மோடியைப் பாராட்டவேண்டும் என்று கூறுகிறீர்களா?

                நான் அவரைப் பாராட்டுவதன் காரணம் அவர் கடின உழைப்பாளியாக ஒரு நாளுக்கு 15 – 20 மணி நேரங்கள் உழைப்பதுதான். மேலும் இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு கிடையாது. ஆமிர்கான் தன் மனைவி நாடுவிட்டு வெளியேற முடிவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடாக இருந்திருந்தால் ஓர் இந்துவின் மகளை முஸ்லீம் எப்படி திருமணம் செய்திருக்கமுடியும்? அவர் மனைவி கிரணுடனான மணமே இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடல்ல என்பதற்கான சாட்சியாகும். சகிப்புத்தன்மையற்றதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மக்களால் கொல்லப்பட்டு இருப்பார்களே தவிர என்றும் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது.

பதஞ்சலி எனும் நிறுவனத்தின் வளர்ச்சியில் சந்நியாசியாக உங்களது எல்லைகள் என்ன?

                முதலில் எனது சந்நியாசத்தன்மைக்கான எல்லைகள் என்ன?விசுவாமித்திரர், சுவாமிவிவேகானந்தர்ஆகியோருக்குஇருந்தஅதேவரம்புகள்தான்.தனக்கெனஏதுமில்லாமல்உலகத்திற்கெனஉழைத்துவாழ்பவன்சந்நியாசி – யோகிஎன்றுகூறலாம்.சோம்பேறியாக, தனக்குத்தானேதனக்குமட்டுமேஒன்றைஉருவாக்கிக்கொண்டுவாழ்ந்துவருபவன்சந்நியாசிஅல்ல. சிலர்சந்நியாசிஎன்றபெயரில்தனக்காகஉழைத்துக்கொண்டுஎதையும்சாதிப்பதுஇல்லை.  அந்தமனிதர்களாநாட்டினைநடத்திச்செல்கிறார்கள்?

உங்கள் வணிகத்திற்கான வரம்பு என்பது என்ன?

நாங்கள் வணிகத்தை நடத்திக்கொண்டிருக்கவில்லை. நாங்கள் சேவையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இதில் புழங்கும் பணம்....

                பணமில்லாமல் நீங்கள் உங்கள் ஏதாவது வேலையைச்செய்வீர்களா? பணமில்லாமல் குடிநீர், மின்சாரம், உணவு ஆகியவை உங்கள் வீட்டுக்கு வருமா? பணமில்லாமல் கோவில்கள், பசு கூடங்கள், தர்ம சத்திரங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள்.. ஏன் தர்மம் கூட செய்ய முடியாது. பணமில்லாதபோது அல்லது அர்த் தர்மத்திற்கு எதிரான அநர்த்தத்திற்குத்தான் செல்ல முடியும். தர்ம் கா மூல் ஹை அர்த் ஹைய்.

                மகாத்மா காந்தியின் சுதேசி இயக்கம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் சுதந்திரம் அடையும் வரை செலவிடப்பட்டன. என்னிடம் அதுபோல கோடிக்கணக்கான தொகை கிடைத்தால் இந்தியாவை மிகச்சிறந்த சுதேசி நாடாக மாற்றுவதோடு, பல கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்க முனைவேன். நாடு முழுக்க சுதேசி இயக்கத்தைக் கொண்டுவந்த காந்தி தேசத்தந்தை; ஆனால் ராம்தேவ் ஒரு வணிகன் இல்லையா?

ஆனால் நூடுல்ஸ் என்பது சுதேசிப்பொருள் இல்லையே?

                நாம் நூடுல்ஸை பாரதீய தன்மையுடன் இங்கு தயாரிக்கிறோம். இதுபோலவே பிஸ்கட்டுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் தயாரிக்கிறோம். உங்களைப் போன்ற மக்கள் ஏன் விதேசிப் பொருட்களின் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்? விதேசி மற்றும் சுதேசி என்பதை நாம் எப்படி அழைப்பது? நம் நாட்டுப்பொருட்கள் கொண்டு ஒரு பொருளை ஆரோக்கியமான தன்மையில் உருவாக்குவது சுதேசி. அவர்கள் மைதா கொண்டு உருவாக்கும் நூடுல்ஸை நாம் கோதுமை கொண்டு உருவாக்குகிறோம். அவர்கள் பாமாயில் பயன்படுத்துகிறார்கள். நாம் அரிசித் தவிட்டு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். நூடுல்ஸில் காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கிறோம். இம்முறையில் சுதேசித்தன்மையுடன் பாரதநாட்டில் பொருட்களைத் தயாரிக்கிறோம்.

பதஞ்சலி நிறுவனத்தில் கீழே அனைத்துப்பொருட்களும் அமைந்திருக்கும்.இதுதான் சுதேசி கருத்தியலா?

                பதஞ்சலி நிறுவனத்தில்சுதேசி எனும் தன்மை தவறாமல் இடம்பெற்றிருக்கும். பதஞ்சலி உணவுப்பூங்கா விரிவானதாக உத்தர்காசி, மொரதாபாத், முஸாஃபர்நகர் என 200 கி.மீ. தூரத்திற்கு அமையப்பெற்று இயங்கும்போது  ஒரு லட்சம் மக்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இவை பெரிய பிரிவுகளாக இயங்கும் தன்மையில் மூன்று பிஸ்கட் தயாரிப்பு பிரிவுகள் உருவாக்கப்படும். நூடுல்ஸ் தயாரிக்கும் பிரிவுகள்   7 – 8 பிரிவுகளாக அமைக்கப்படும். இவை பின்னர் 10 பிரிவுகளாக விரிவுபடுத்தப்படும். இந்த முறையில் 20 – 25 பெரிய, சிறிய பிரிவுகளாக செயல்படும் வண்ணம் உருவாக்கப்படும். சுதேசி கருத்தியல் கொள்கைகள், தீர்மானங்களை என்றுமே கைவிடவும் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம்.

மக்கள் தொடர்ந்து தங்களது யோகா வகுப்புகளுக்கு நன்கொடை அளிக்கிறார்களா? நன்கொடை மற்றும் விற்பனை வருவாய் நிறுத்தம் குறித்து கூறுங்கள்.

சில யோகா வகுப்புகளுக்கு கட்டணம் உண்டு. சில வகுப்புகள் இலவசமாக நடைபெறும். இடைநிறுத்தம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் மக்கள் விருப்பப்பட்டால் தொகை அளிக்கிறார்கள் என்பதுதான்.

உங்களது ஓராண்டு நன்கொடைத்தொகை எவ்வளவு?

                எண்ணிக்கைகள் எல்லாம் ஆடிட்டர்களின் வேலை. நமக்கு இதில் எந்த எதிர்பார்ப்புமில்லை. இது எப்படியென்றால் நீங்கள் நேர்காணலுக்காக எங்களிடம் வந்திருக்கிறீர்கள், ஆனால் இது குறித்து எப்படி எழுதுவீர்கள் என்று  எமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை(சிரிக்கிறார்).

நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதை மட்டுமே நாங்கள் பிரசுரிப்போம்..

                (சிரித்துக்கொண்டே) அப்படி நடந்தால் சரிதான். சரியாக இருந்தால் உங்களுக்கு இன்னொரு பேட்டி கிடைக்கும். அப்படி இல்லாதபோது எங்களது கதவுகள் உங்களுக்கு மூடப்பட்டுவிடும்.

                                                            நன்றி: அவுட்லுக், டிசம்பர் 7, 2015