பசுமையின் காவலன்

பசுமையின் காவலன்

பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.

                      ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்

                      தமிழில்: வின்சென்ட் காபோ

    பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.

      ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில் அவற்றினை தயாரித்து கொள்கிறோம். எங்களது மரநில அமைவு முறையினை சோதித்த டெல்லி, அகமதாபாத், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்’’ என்று உற்சாகமாய் பேசும் விஜய் நிஷாந்த் 36 வயதுடையவர் ஆவார்.

      விருக்சா திட்டம் முன்னாள் தலைமை நீதிபதியான எம்.என். வெங்கடாசலய்யா மற்றும் உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் ஆகியோரின் முயற்சிகளால் பெங்களூருவின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்தது. ‘‘முதலில் பெங்களூரு  நகர உயரதிகாரிகள் ஆர்வத்தோடு இத்திட்டத்திற்கு நிதியளித்து செயல்படுத்த முன்வந்தனர். ஆனால் இடையில் ஏனோ அதனை கைவிட்டுவிட்டனர். எனவே குழு உறுப்பினர்களான நாங்கள் நால்வரும் இணைந்து எங்களின் பணத்தைக் கொண்டே கிடைத்த மூலங்களை கொண்டு இதனை செயல்படுத்த முடிவெடுத்தோம். ப்ரூஹட் பெங்களூரு மகாநகர பலிகே(BBMP) குறிப்பிட்ட தொகையை எங்களுக்கு அளித்திருந்தால் 198 பகுதிகளைக் கொண்டு பெங்களூருவில் மரங்களின் நில அமைவுத்திட்டத்தை 18 மாதங்களில் முடித்திருக்கலாம். திட்டங்களை செயல்படுத்த நன்கொடைகள் அதிகம் தேவைப்படுகின்றன. மக்களிடையே பணம் திரட்டும் சிந்தனையை பரிசீலித்து வருகிறோம். பெங்களூரு முழுக்க மரங்களின் கணக்கெடுப்பு எடுக்கவும் அரசு அமைப்புகளோடு தொடர்ச்சியாக உரையாடி வருகிறோம்’’ என்கிற விஜய் நிஷாந்த் மரங்கள் நில அமைவுதிட்டத்தை 4 பிரிவுகளில் செயல்படுத்தி வருகிறார்கள். நிதி கிடைத்தால் இதனை 10 பகுதிகளில் மாற்றியமைக்க  முயன்று வருகிறார்கள். வார இறுதி நாட்களில் மாநகர சுற்றுச்சூழல், இயற்கை வளம், உயிரிய பன்மைச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகளை செய்துவருகிறார்கள். விஜய் நிஷாந்த் வரைந்த ப்ளோரா, ஃபானா எனும் ஓவியங்கள் பல பெருநிறுவனங்களின் அலுவலங்களின் சுவர்களை அலங்கரித்து வருகிறது.

      நிஷாந்துக்கு எட்டு வயது ஆகும்போது பெங்களூருவின் வெளிப்புறத்தில் உள்ள பென்னர்ஹட்டா காடுகளில் ஒருநாளைக் கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காட்டில் இரவில் நடமாடும் மிருகங்களை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததுதான் இயற்கை மீதான பேரார்வம் தொடங்குவதற்கு அவருக்கு முதல் படியாக அமைந்தது. தன் அருகிலிருந்த ஜெய நகரில் அடிக்கடி பாதிப்புக்கு உட்படும் இயற்கை வளங்கள் குறித்து ஆர்வத்தோடு கற்கத்தொடங்கினார். தாக்குதலுக்கு ஆளான பறவைகளை விலங்குகளை பராமரித்து உடல் குணமடைந்ததும் அவற்றினை அருகிலுள்ள வனத்தில் விட்டுவிடுவதை சிறுவனாக இருந்த போதில் இருந்து செய்து வருகிறார்.

      தனது பொறியியல் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டு இயற்கை வள பாதுகாப்பு குறித்த படிப்புகளை முழுநேரமாக தேர்ந்து கற்கத்தொடங்கினார் நிஷாந்த். ‘‘ஒரு கல்லூரி மாணவனாக காட்டிற்குச் சென்று விலங்குகளின் வாழ்க்கை குறித்து ஆராய்வதும் அவற்றை அடையாளம் காணுவதும் மேலும் இயற்கையின் அதிசயமான தன்மைகள் குறித்து பேசுவதும் எனக்கு பெரும் ஆர்வமூட்டுபவையாக இருந்தன’’என்கிறார் நினைவுகளின் பாதையில் நடந்தபடி விஜய் நிஷாந்த்.

      நிஷாந்த் டபுள் ரோடில் உள்ள இயந்திரக்கடை ஒன்றில் இருந்து குள்ளநரி ஒன்றை மீட்டிருக்கிறார். ‘‘ நடைமுறையில் முறையற்ற சட்டவிரோத விலங்குகள் வணிகம் பெங்களூருவில் வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் விலங்குகளை மீட்கும் தன்னார்வலராக பிபிஎம்பி வனத்துறை பிரிவில் பணியாற்றியுள்ளேன். குள்ளநரி, பறவைகள், பாம்புகள், ஆமைகள், உடும்புகள் என சட்டவிரோதமாக விற்பனை செய்வோரிடமிருந்து பறிமுதல் செய்கிறோம் என்றாலும் இன்று வரை அந்த வணிகத்திற்கு முடிவு கிடைக்கவில்லை’’ என்கிறார் ஏமாற்றம் தோய்ந்த துயரமான குரலில் நிஷாந்த்.

      இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்து முன்னமே முயற்சிகளை தொடங்கியிருக்க வேண்டி இருக்கும் சூழலில் தற்போதைய காலங்களில் அவற்றுக்கான பாதுகாப்பு என்பது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ளார்.  2007 ஆம் ஆண்டு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜெயநகரில் இருந்த பசுமையான அழகிய நூற்றுக்கணக்கான மரங்களை இருப்பு பாதை அமைக்கவென கூறி வெட்டி வீழ்த்தியது.

      மென்பொருள் வடிவமைப்பாளராக கட்டிட அமைப்புகளை உருவாக்கிய அனுபவம் மரங்களின் அமைவை ஜிபிஎஸ் கருவி மூலம் உருவாக்க உதவியுள்ளது.

‘‘நகரமயமாதலுக்கு ஏற்ற எந்த திட்டமிடுதல்களும் நம்மிடையே இல்லை. மரங்களை பாதுகாப்பது குறித்த எனது கவனத்தை இந்த சம்பவமே தீவிரப்படுத்தியது. இதன் பின்னர்தான் விருக்சா திட்டத்தை 2010 இல் ஏற்படுத்தினேன்’’ விஜய் நிஷாந்த் இந்த முறையில் 300 மரங்களின் உயரம், சுற்றளவு, அவை அமைந்துள்ள இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை என ஜெயநகரில் உள்ள மரங்கள் குறித்து தொகுத்து இருக்கிறார்.