ராணித்தேனீயின் கதை

ராணித்தேனீயின் கதை
            மீரா பரத்வாஜ்
                    தமிழில்: ஜோ ஃபாக்ஸ்

    சாயா நஞ்சப்பாவின் கண்கள் தன் நிறுவனமான ‘நெக்டார் ஃப்ரெஷ்’ பற்றிப்பேசும்போது மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் அவ்வளவு அழகாக மினுங்கி ஒளிர்கிறது. ‘’ ஒரு சிறு கிராமம் சார்ந்த தொழில் நிறுவனமாக 2007ல் எனது கிராமமான கூர்க்கில், அதனைத் தொடங்கினேன். தேனுக்கு புகழ்பெற்ற பகுதி அது ’’ என்று மகிழ்ச்சி மாறாமல் கூறுகிறார் சாயா.

    திருமணத்தோல்வி மற்றும் தந்தையின் மரணம் என மிகச்சிக்கலான காலகட்டத்தில் அவர் தொழில் ஆரம்பித்த தருணம் இருந்தது.  தேன் பற்றிய தன் அறிவை விரிவாக்கிக்கொள்ள மத்திய தேன் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கழகத்தின் அடிப்படை பயிற்சியில் சேர்ந்தார்.

‘’நிறுவனத்திற்கு அடிப்படைத்தேவையான தேனை சித்திஸ், ஜீனு குருபாஸ் மற்றும் பல மக்களிடமிருந்தும், பல்வேறு மாநில விவசாயிகளிடமிருந்தும் பெறுகிறேன், ’’ என்கிறார் சாயா.

இன்று இவரது நெக்டார் ஃப்ரெஷ் நிறுவனமானது, பெரும் ஏற்றுமதியாளர் மற்றும் தயாரிப்பாளராக இந்தியாவில் உருவெடுத்திருக்கிறது. தேனைப் பக்குவப்படுத்தியும், மூலப்பொருள் ஏற்றுமதி செய்யும் 5 பெரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக நெக்டார் ஃப்ரெஷ் வளர்ச்சி பெற்றுள்ளது. பெண்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல் துறையில் இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோர் விருதினை சாயா நஞ்சப்பாவிற்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.

சாயாவின் தொழில் முயற்சி என்பது துணிச்சலானது மட்டுமல்ல. இவரது வளர்ச்சிப்பயணமே பெரும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தருவதாக உள்ளது. சாயாவின் பயணமானது, ஸ்ரீரங்கபட்டிணத்திலிருந்து ஜெர்மனிவரை நீண்டு, அங்கு சந்தையில் ஏகபோகம் செய்துகொண்டிருந்த ஐரோப்பிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி கொடுப்பது ஆச்சர்யமான செயல்தானே!

பொம்மன ஹல்லியில் 10 லட்சரூபாய் கடனுதவி பெற்று சிறிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினைத் தொடங்கி தேனை உள்ளூர் சந்தைகளில் விற்பதற்கான முயற்சியினை சாயா முதலில் தொடங்கினார். பிறகு, அவர் நஞ்சன்கட் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இடங்களில் 6 கோடிரூபாய் முதலீட்டில் 200 டன்கள் உற்பத்தித்திறன் கொண்ட தொழிற்சாலைகள் மூலம் சுத்தமான பூக்களில் உருவாகும் தேனினைப் பெற்று அவற்றை விற்பனை செய்கிறார்.

‘’20 தேனீ வளர்க்கும் இடங்கள், பீகார், உத்ராகண்ட், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், மற்றும் பல மாநிலங்களில் உள்ளன. தூய்மையான, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத ஒரே வகையான பூக்களிலிருந்து தேனினைப்பெற முடிகிறது. லிச்சி, வேலமரம், கஜானஸ், ஜாமுன், தைம் ஆகிய பூக்களைக்கொண்ட 80 – 90 ஏக்கர் பரப்பிலான பண்ணைகளிலிருந்து தூய்மையான தேனை பெறுகிறோம்’’ என்று விளக்கமாக பேசுகிறார் சாயா.

நெக்டார் ஃப்ரெஷ் நிறுவனம் குறிப்பிடத்தக்க அடையாளத்தை உலகளவிலான சந்தையில் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை பலவகையிலும் மேலும் முன்னேற்ற அந்தப்பெயரிலேயே ஜாம் மற்றும் சாஸ் வகைகளை உருவாக்கி ஐரோப்பாவில் சந்தைப்படுத்தும் முயற்சிகளில் சாயா ஈடுபட்டு வருகிறார். ‘’ ஜாம் மற்றும் சாஸ் ஆகியவற்றிற்கான பழக்கூழை பெங்களூரு மற்றும் மங்களூரு மேலும் சில இடங்களில் பெண்களின் சிறிய நிறுவனங்களிலிருந்தும், பப்பாளி, தக்காளி போன்றவற்றை விவசாயிகளிடமிருந்து நேரடியாகவும் பெற்றுக்கொள்கிறோம் ‘’ என்கிறார் சாயா.
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு தொடர்ந்து தன் பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் காதி கிராமிய தொழில்கள் நிறுவனத்தின்(கேவிஐபி) உதவிகளைப்பெற்று வளர்ந்துவரும் கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனமான நெக்டார் ஃப்ரெஷ்  ஐரோப்பாவில் முன்னணி நிறுவனமாக உள்ள பெரீன் பெர்க், தர்போ, பொனிமாமன் ஆகிய நிறுவனங்களை திகைக்கவைக்கும் அளவு திடமான போட்டியாளராக உள்ளது.

‘’மிகக் கடுமையான க்யூஎஸ் தர நிர்ணய சோதனைகள் ஜெர்மனி நாட்டிற்கு உணவுப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தேவைப்படுகின்றன. தேனைப்பெட்டியில் மற்றும் சாஷேக்களில் அடைப்பதில் மிக நவீன முறைகளைக் கையாள்வதால்தான் ஐரோப்பிய நிறுவனங்கள் எங்கள் நிறுவனப் பொருட்களைக் கண்டு நிலைகுலைகின்றன ’’ என்று தன் நிறுவனத்தைப்பற்றிக் கூறுகிறார் சாயா.

‘’இந்த மாதம் ஜப்பானியர்கள் எங்கள் தொழிற்சாலைக்கு வந்து பார்வையிடப்போகிறார்கள். இது இரு நிறுவனங்களும் இணைந்து கேரட் ஜாம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள உதவியாய் இருக்கும் ’’ என்று கூறும் சாயா தன் உற்பத்தி வரிசையில் காபியையும், அண்மையில் இணைத்திருக்கிறார். குடகு மற்றும் சிக்மகளூர் ஆகிய பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிறந்த காபி விதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மேலும், சாயா தனக்கு உதவியாக இருக்கும் பலரில் கே.எம் ராஜப்பாவினை முக்கியமாக குறிப்பிடுகிறார். ‘’ நம்பிக்கையாக பாதுகாப்பாக நிறுவனத்தை வழிநடத்த ஒரு தொழில் பங்குதாரர் எனக்குத் தேவைப்பட்டார். அப்போது என் அம்மாவின் உறவினரான ராஜப்பா கிடைத்தார். இவரின் மூலம்தான் மக்களை அணுகுவதற்கும், காலக்கெடு முடிவதற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கும் உதவியாக இருக்கிறார் ’’ என்று பெருமையுடன் கூறுகிறார் சாயா நஞ்சப்பா.

வளைகுடாவைச்சேர்ந்த நிறுவனத்துடன் ஜாம் செய்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு சவூதி அரேபியாவிலிருந்து வந்து சேர்ந்த 24 டன் பேரீச்சம்பழத்தினை பதப்படுத்த இயந்திரங்களை வாங்கி, அவற்றைக்கொண்டு தொழிற்சாலையை விரிவு படுத்திக்கொண்டிருக்கிறார்.

சாயாவின் அடுத்த தொழில் முயற்சியாக காதியின் உதவியுடன் கிராமிய தொழில்களான ஊறுகாய், சாஸ், அப்பளம் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை செய்ய முனைந்திருக்கிறார். கேவிஐபி இத்தொழில்களுக்கும், கைவினைப்பொருட்களுக்கும் மானிய உதவிகளை அளித்து வருகிறது. ‘’எனது தனிப்பட்ட குறிக்கோளாக, கிராமிய உற்பத்திப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும், பெண்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதும், அவர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான சந்தையை உருவாக்கித்தருவதேயாகும். இன்று சிறந்த தரத்தில் பெரும் நிறுவனங்கள் தமது பொருட்களை தயாரிப்பதோடு அவற்றை தரமாகவும் அடைக்கப்பட்ட எங்களது தொழிற்சாலைகள் உதவுகின்றன ’’ என்று சாயா நஞ்சப்பா நம்பிக்கையின் பேரொளி ஒளிர கூறுகிறார்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்