கருணாமனோகரனிடன் நிகழ் இதழுக்காக நடத்திய நேர்காணல்.

      எங்கள் குடும்பம் , பார்ப்பனிய சனாதனத்தை வரம்புமீறிக் காப்பாற்றி வந்த குடும்பம். எங்கள் அப்பா அதில் வெறி பிடித்தவர். ஸ்ரீரங்கத்தில் நான் பிறந்தேன்.
கோவையில் பத்து ஆண்டுகள் இருந்தோம். ஒரு கட்டத்தில் அகோபில மட ஜீயர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தந்தையாரிடம் உங்களுக்கிருக்கிற ஞானத்திற்கு கோவில் பணி செய்யலாமே என்றார். உடனே யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார். எட்டு பேர் கொண்ட எங்கள் குடும்பம் அதன்பிறகு உருக்குலைந்து சிதைந்துபோய்விட்டது. ஸ்ரீரங்கத்திற்கு திரும்பினோம். எனக்கு வயது பத்து. திடீரென வாழ்வின் கீழ்மட்டத்திற்கு தள்ளப்பட்டோம். ஒரு ஆண்டு அங்குமிங்குமாக அலைந்தேன். பிறகு திருவானைக்காவல் சத்திரத்தில் சேர்ந்தேன்.
எங்கள் அப்பா ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்தார். வீட்டோடு அவருக்கு உறவில்லை. அம்மாவுக்கு ‘மகோதரம்’ என்ற வியாதி. இப்படி ஐந்து, ஆறு ஆண்டுகள் சத்திரத்தில் கழிந்தன. சத்திரத்தில் எழுபதிலிருந்து எண்பது விழுக்காடு பேர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். அக்கிரகாரச் சூழ்நிலையில் இருந்து விடுபட்டவனாக நான் இவர்களோடு இருந்தேன்.
இது எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் எங்களுக்கு குடும்பச்சூழல் ஏற்பட்டது. திரும்பி வந்த அப்பாவின் சனாதன வெறித்தனம் கொஞ்சம் கூடக் குறையவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு மூன்று ஆண்டுகள் பாலிடெக்னிக் போய் வந்தேன். அப்பொழுது எனக்குள் மனப்போராட்டம் கடுமையாக இருந்தது.

மார்க்சியத்திற்கு நான் வந்த சூழல் பற்றிச் சொல்லவேண்டும். வறுமையான, சிதைந்த குடும்பச்சூழல், கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் பத்துமுறை சென்று பிரார்த்தனை செய்தேன். எதுவுமே மாறவில்லை. அப்போது நண்பரொருவர் மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைத் தந்தார். என் சிந்தனைக்குள் ஒரு மின்னல். ஏசுநாதரிடம் அளவு கடந்த நம்பிக்கையை அந்தத் தாய் கொண்டிருந்தாள். அதேசமயம் வறுமைமிக்க சூழல்.  ஏசுநாதரிடம் முறையிடுவதை விட வாழ்க்கையை நாமே திருத்தம் செய்துகொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அந்த தாய்க்கு ஏற்பட்டது. தாயின் மனநிலை எனது மனநிலைக்கு ஒத்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மார்க்சியத்தின் பக்கம் சாய்ந்தேன்.

கல்லூரியில் படித்த காலத்தில் என்.சி.பி.எச்லிருந்து மார்க்சிய புத்தகங்கள் வாங்கிப்படித்தேன். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் போக்கு எனக்குள் ஏற்பட்டது. படிப்பை முடித்த மறுநாளே எனக்கு வேலை கிடைத்தது. படித்த காலம் முழுவதுமே உச்சியில் குடுமி, நெற்றியில் நாமமும் போட்டிருந்தேன். குடும்பச்சூழலின் நிர்பந்தமே இதற்கு காரணம். வேலை கிடைத்த அன்றே வீட்டிலிருந்து அப்பாவை வெளியே துரத்தினேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. அன்று மாலையே குடுமியையும், பூணூலையும் அறுத்தெறிந்தேன். நாமத்தை அழித்தேன். அப்போதெல்லாம் மார்க்சியம் பற்றிய மிகக் குறைந்த அறிவே எனக்கிருந்தது.

இதன் பிறகும் வீட்டில் அண்ணனோடு போராட்டம். தம்பிகள் இருவர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. எனது அண்ணன் அப்பாவைப்போலவே சனாதன வெறியன். என் அப்பா வன்முறையைக் கையாண்டார். என் அண்ணனுக்கு இது சாத்தியமாகவில்லை. சுருட்டுத்தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் ஆகியோரோடு எனக்கு பழக்கம் இருந்தது. அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். வராந்தாவில் வைத்து அவர்களோடு பேசி அனுப்புவேன். பார்ப்பன சமூக அந்தஸ்து குறைந்துவிடும் எனக்கருதி அவர்கள் வருவதை என் அண்ணன் எதிர்த்தான். இருவரது வருமானமும் குடும்பத்திற்குத் தேவை. பிரச்சனையை உருவாக்கவேண்டாம் என்றேன். ஓராண்டுகாலம் இந்தப்போராட்டம்.

ஏற்கனவே திருவானைக்காவல் அருகில் இருந்த திரு. மகாதேவன் என்பவரோடு எனக்குத்தொடர்பு இருந்தது. அவரது குடிசைக்குப்போய் தங்கினேன். அவர் ஒரு மேதை. அவர் தமிழ்ப்புலவர். மார்க்சியம் படித்தவர். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். மக்களிடத்து அன்பும், மரியாதையும் கொண்டவர். எளிமையானவர். இளைஞர். என்.சி.பி.எச் லிருந்த நண்பர் (சி.பி.ஐ) இன்னொருவர். நாங்கள் மூவரும் மார்க்சிய நூல்களைச் சேர்ந்து படித்தோம். எனக்கு சி.பி.எம் மோடு உறவு அதிகம். மே தினக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்டேன். மகாதேவன் எனது மார்க்சிய அறிவை ஆழப்படுத்தினார். அந்தக்காலத்தில் பெரியார் கூட்டங்கள் சிலவற்றுக்குப் போனேன். பெரியாரிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. பெரியாரை நான் வெறுக்கவும் இல்லை.

மார்க்சியத்தின் தத்துவம் பற்றி ஆழமாகக் கற்றோம். மார்க்சின் கருத்துக்களை எழுதித் திருச்சியில் பல இடங்களில் ஒட்டினோம். மார்க்சின் புரட்சி, வர்க்கப்போராட்டம் ஆகிய கருத்துக்களை முதன்மைப்படுத்தி துண்டறிக்கைகளை வெளியிட்டோம். கட்சிக்கும் எங்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

தீவிரம் வேண்டாமென்று கட்சியில் கூறினார்கள். சில தலைவர்களுக்கு நாங்கள் இப்படிப்பெயர் வைத்தோம். காலகட்டம் 1, காலகட்டம் 2, காலகட்டம் பக்குவப்படவில்லையென்று எப்பொழுதும் இவர்கள் பேசினார்கள். புரட்சிக்கு மக்களைத் தயார்படுத்துவதுதான் கட்சியின் வேலையாக இருக்கமுடியும். காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கமுடியாது.

மார்க்சியம் புரட்சி பற்றிப்பேசுகிறது. மார்க்சிஸ்ட கட்சி பாராளுமன்றப்பாதை பற்றிச்சொல்கிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தை சவான் மீறுகிறார் என்று ஈ.எம்.எஸ் எழுதிய கட்டுரை அப்போது வெளிவந்தது. கேரளாவில் அப்போது ஈ.எம்.எஸ் முதலமைச்சர். எங்களுக்குள் ஒரு கேள்வி. சவான் பாராளுமன்றத்தை மீறீனால் நமக்கென்ன வந்தது? பாராளுமன்றத்தைக் காப்பாற்றுவதில் சவானை விட ஈ.எம்.எஸ் க்கு அக்கறை அதிகம். பாராளுமன்றத்தை அவர்களே உடைத்தெறிந்தால் நமக்கு வசதிதான்  என்று மார்க்சியவாதி சிந்திக்கவேண்டும். சி.பி.எம்மின் உண்மை உருவம் எங்களுக்குத் தெரிய வந்தது.

1967 ல் சிலிகுரியில் நக்சலைட் போராட்டம் வெடித்தது. கட்சிக்குள் நெட்டுக்குத்தாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு பிளவு ஏற்பட்டது. கிராமப்புறத்தில் விவசாயிகளைத்திரட்டி நடத்த வேண்டிய வர்க்கப்போராட்டம் பற்றி நக்சலைட் இயக்கம் பேசியது. இது எங்களுக்கு வசீகரமாக இருந்தது. இதற்கு முன்பு மாவோவைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. மாவோவைத்தீவிரமாக படித்தோம். சி.பி.எம்மின் தவறுகளிலிருந்து பார்க்கும்பொழுது மாவோ வெகு வசீகரமாகத்தெரிந்தார். மக்களுக்கு இத்தகையதொரு இயக்கத்திற்கான தேவை இருக்கிறது. வேறு வழியும் இல்லை என்று கருதினோம். எம். எல் இயக்கத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தோம்.

மார்க்சியத்திற்கு நான் வந்த வழியை இப்படி தொகுத்துச் சொல்லலாம். குடும்பத்தின் சனாதனப்பழக்கங்களை எதிர்த்துத்தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். வெளியில் வந்த பிறகுதான் நான் மார்க்சியவாதி ஆனேன். ஒருவேளை மார்க்சியவாதி ஆனபிறகு வீட்டை விட்டு வந்திருப்பேனா என்று கேட்டால் சந்தேகம்தான். பார்ப்பன எதிர்ப்பு என்பது எனக்குள் கோட்பாடு ரீதியாக ஏற்படவில்லை. நடைமுறைரீதியில்தான் ஏற்பட்டது. மார்க்சியத்தால் அது உறுதிப்பட்டது.

கிராமப்புறத்து அனுபவங்கள்

     பாராளுமன்றம் பன்றித்தொழுவம்’, ‘துப்பாக்கியில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’, ‘கிராமப்புறத்தை தளப்பிரதேசமாக மாற்றவேண்டும்’ நக்சலைட் இயக்கம் முன்வைத்த கொள்கை முழக்கங்கள் இவை. இந்தியா முழுவதும் புரட்சியை நேசிப்பவர்கள் சி.பி.எம் கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.

     தொழிற்சங்கம், நகர்ப்புறம் , சட்டவரம்புக்குட்பட்ட போராட்டம் என்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிதான் போர்க்குணமும், தியாக உணர்வும் செறிந்த இயக்கம் நோக்கி பலரைத் தள்ளியது. இது மாபெரும் வளர்ச்சி. நகர்ப்புறத்திலிருந்து படித்த இளைஞர்கள், முற்போக்கு இயக்கத்தினர் கிராமங்களுக்கு சென்றனர். எங்களுக்குள் குழப்பம். கருத்தியல் ரீதியாக இந்த நிலைப்பாடு சரியென்றாலும், அமைப்பு ரீதியாக திரட்சி பெற்று ஒரு மாற்றத்தை இந்த இயக்கம் கொண்டுவருமா? என்ற குழப்பம். ஓராண்டுக்குப் பிறகு இதுதான் சரியான வழி என்று முடிவெடுத்தோம். எனினும் எங்களுக்குள் ஒரு சிக்கல். மார்க்ஸ் கூறியது வர்க்கப்போராட்டம். ஆனால் எங்களைப்பொறுத்தவரை இளமைவேகம், போர்க்குணத்தால் உந்தப்பட்ட இயக்கம். இவை இரண்டுமே இரு வேறு வழிமுறை. இந்தப்போராட்டத்தில் எங்களுக்கு இதுவரை இருந்த மார்க்சிய ஞானம் கீழே போக, உணர்ச்சி வேகம் மேலோங்கி எம். எல் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டோம். இப்படித்தான் லட்சக்கணக்கான இளைஞர்கள் கிராமங்களுக்குப் போனார்கள்.

     எனது சொந்தப்பொறுப்பில் இந்தக்கொள்கையால் ஈர்க்கப்பட்டு கிராமத்திற்குப் போனேன்.  தொடக்கத்தில் கிராமம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பயிர், பச்சைகள் பற்றி, கிராமத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமைக்கொடுமைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் பாடத்தில் இப்பொழுதுதான் முதல் வகுப்பில் நுழைந்தேன். கருத்தியல்ரீதியாக, தத்துவரீதியாக அந்த வயதில் எந்த அளவு புரிந்துகொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு படித்துப் புரிந்து கொண்டுதான் கட்சிக்கு வந்தேன். தியாகத்திற்கு தன்னை உட்படுத்திக்கொண்டால்தான் நாம் ஏதாவது செய்ய முடியும் என்று தெரிந்துகொண்டுதான் கட்சிக்கு வந்தேன். கிராமத்திற்கு செல்வதற்கு என்னைப்பொறுத்தவரை தடை ஏதுமில்லை. ஏனெனில் எனக்கு வீடு, வாசல், சொந்தம் எதுவும் இல்லை.
     கிராமத்திற்குப்போனேன். தண்ணீர் கேட்டபோது, ‘சாமி’ என்றனர். நான் சாமியில்லை என்றெல்லாம் வீரவசனம் பேசினேன். நாளடைவில் கிராமத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அறிந்தேன். யார் பக்கம் நிற்பது என்ற கேள்வி? . ஒரே குழப்பம். என்னை அரவணைத்து கொள்ளக் கூடியவர்களாக அருந்ததியர்கள் இருந்தார்கள்.  தொடக்கத்தில் என் சாதியைக்கேட்டபோது, நாடார் என்று சொல்லி வைத்தேன். நான் எந்த வகையிலும் பார்ப்பானாக இல்லை. எனவே நாடார் என்று கூறினேன்.
     பெரியார் மாவட்டத்தின் மேற்குப்பகுதியிலிருந்த கிராமங்களுக்கு நான் சென்றேன். சுமார் இருபது, இருபத்தைந்து கி.மீ சுற்றுவட்டாரத்தில் சுற்றினேன். கிராமப்புறத்தில் கடுமையான வேலை செய்யமுடியாமல் அருந்ததியர்களோடு நிற்க முடியாது. கூலிவேலை செய்வது, மண்வெட்டி பிடிப்பது போன்ற வேலைகள் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. எப்படி புரட்சி செய்யப்போகிறோம்? என்று என்னை நானே தொடர்ந்து கேட்டுக்கொண்டதால்தான் இத்தகைய மனநிலைக்கு வந்தேன்.  அமைப்பு என்ற வடிவம் இருந்திருந்தால் அதற்குள் நான் சீராக வளர்க்கப்பட்டிருப்பேன். அமைப்பு இல்லை. நானேதான் கிராமத்திற்குள் சென்றேன். கிராமப்புறத்தில் கூலிவேலைகளை மட்டுமல்ல, அங்குள்ள அடுக்கடுக்கான சாதிமுறைகள் பற்றியும் கற்றுக்கொண்டேன்.  கவுந்தப்பாடி பகுதியில் என்னால் எங்கும் செல்ல முடிந்தது. அங்குள்ள மக்களை நான் இன்றளவும் மறக்க முடியாது. அவர்கள் அன்பும், பாசமும் மிக்கவர்கள். நான் இருந்த அந்தப் பத்து கிராமங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வு கூர்மையாக இருக்கவில்லை. கூலியாட்களுக்கு வருடம் முழுவதும் வேலை கிடைக்கிறது. பெரும்பாலான நில உடைமையாளர்களுக்கு பத்து ஏக்கருக்கு மேல் நிலம் இல்லை. பண்ணைகளில் குத்தகைக் கூலி முறை. உணவுக்கு சிரமமில்லை. இத்தகைய நிலைமைகளில் இந்த மக்களிடம் போர்க்குணத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. இந்தப்பகுதிகளில் இருந்து கற்க வேண்டியதைக் கற்றுக்கொண்டேன். இனி வேறு பகுதிக்கு செல்வதென முடிவு செய்தேன். எங்கு வர்க்கப்பகை மற்றும் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்த அந்த சமயத்தில் சிலர் தாராபுரம் பகுதி பற்றிச்சொன்னார்கள். எங்கள் மக்கள் செருப்பு போட்டுக்கொண்டு கூட அங்கு நடக்க முடியாது. சைக்கிளில் செல்லமுடியாது. கொடுமைகள் அதிகம் என்றனர். எனக்கு அங்குதான் வேலை இருக்கிறது என்று கருதி அங்கு போனேன். சாதிச்சமூகம் எப்படி உழைப்பாளிகளை ஒன்றாகச்சேராமல் பிரித்துவைத்திருக்கிறது என்பதற்கு தாராபுரம் வட்டாரம் நல்ல உதாரணம். வெள்ளகோவில் முதல் ஒட்டன்சத்திரம் வரை இரண்டு, மூன்று தாலுக்கா அளவிலான நிலப்பகுதி ஒரே மாதிரியான பொருளியல் அமைப்பு. வறண்ட வட்டாரம். நிலத்திற்கு அதிக மதிப்பில்லை. பெரும்பாலான மக்களின் தொழில் ஆடுவளர்ப்பு. கன்னிவாடி சந்தையில் ஆடுகளை விற்றுப்பிழைத்தார்கள். வெள்ளாள கவுண்டர்களுக்கும் சரி, அருந்ததியர்களுக்கும்  சரி கிடைப்பது சோளக்கஞ்சிதான். கூலி மிகவும் குறைவு.  நாளொன்றுக்கு ரூபாய் இரண்டு அல்லது மூன்று. நான் சொல்லுவது 1971 ஆம் ஆண்டு. கிளுவை முள் அடைப்பது கூலிக்கான வேலை. கவுண்டர்களுக்கு வருமானம் வாரத்திற்கு ஐம்பது ரூபாய் என்றால் அருந்ததியர்களுக்கு பதினைந்து ரூபாய். நிலமும் வளத்தைத் தரக்கூடிய உற்பத்திசாதனமாக இல்லை. கவுண்டர்களும், அருந்ததியர்களும் வாழ்வியல் நிலவரங்களில் அதிக வேறுபாட்டோடு இல்லாவிட்டாலும், சாதி உணர்வு அழுத்தமாக அந்த வட்டாரத்தில் இருந்தது. அருந்ததியர் செருப்பு போடக்கூடாது. சட்டை போடக்கூடாது. ஊருக்குள் புதியவர் யார் வந்தாலும் விசாரணை. இப்படி நூற்றுக்கணக்கான கிராமங்கள். செய்தித்தாள் படிக்க முடியாது. அருந்ததியன் பேப்பர் படிக்கிறானா? என்று கேள்வி எழும். இந்த வட்டாரத்தில் அருந்ததியினர் என்றுதான் என்னை நான் சொல்லிக்கொண்டேன். ஓரளவு தெலுங்கு பேசக் கற்றுக்கொண்டேன். ஓரளவு மக்கள் என்னை நம்புவதற்காகவும், நாட்டாண்மைக்காரர்கள் என்னை சந்தேகிக்கக்கூடாது என்பதற்காகவும் இப்படி நடந்துகொண்டேன். உழைப்பில் எனக்கு கஷ்டம் தெரியவில்லை. சூழல் தரும் கஷ்டமே அதிகம். சினிமா கிடையாது. டீக்கடை இல்லை. வேறு வாழ்க்கை வசதிகளும் இல்லை.

     செருப்பு போட்டுக்கொண்டதற்காகவும், டீக்கடைக்குப் போனதற்காகவும் எனது நண்பர் ஒருவரை அடிக்க ஊரே திரண்டு வந்தது. எப்படியோ அவர் தப்பித்துச் செல்ல முடிந்தது. இந்த வட்டாரதையும் தளப்பிரதேசமாக மாற்றுவதற்கான நிலவரங்கள் இல்லை. பின் பழனிப்பக்கம் சென்றேன். ஒரு மாதம் அங்கிருந்தேன். அங்கும் இரண்டும் கெட்ட நிலைதான்.

     அப்பொழுது பொள்ளாச்சி வட்டாரம் பற்றிக்கேள்விப்பட்டேன். இங்கெல்லாம் நாம் நிமிர்ந்து நடக்க முடியும். அங்கு முடியாது. கொடுமைகள் மிக அதிகம் என்றார்கள். கிணத்துக்கடவிலிருந்து உடுமலைக்கு சற்று முன்வரை நிலக்கிழமை  என்றால் என்னவென்று இங்கிருந்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நில உடமையாளர்கள் இங்கு இருந்தனர். மலைப்பகுதி வரை நிலங்களை வளைத்துப் போட்டுக்கொண்டார்கள். ஒரு பக்கத்தில் நிலப்பிரபுக்கள், நடுத்தர விவசாயிகள் அறவே இல்லை. வெள்ளாளக் கவுண்டர்களிலும் இருபது முப்பது சதவீதம் பேர் நிலமில்லாதவர்கள். வேட்டைக்காரன்புதூர், தேவிபட்டினம், இடையக்குளம், காளியாபுரம், அங்கலக்குறிச்சி இப்படிப்பல ஊர்கள்.
     எட்டு பத்து கிராமங்களில் படித்தவர்களையே பார்க்க முடியாது. எட்டாம் வகுப்பு என்பதே பெரிய படிப்பு. இந்த வட்டாரத்தில் கம்யூனிஸ்ட கட்சியோ, திராவிட இயக்கமோ எதுவும் கிடையாது. இவர்களை அங்கு வரவிடமாட்டார்கள். இயக்கம் என்று தொடங்கினால் கூட ஆதிக்கத்தில் உள்ளவர்கள்தான் தொடங்குவார்கள். இதுதான் அங்கு நிலைமை. கொடுமையான சூழல். எதிரிகளை நிர்மூலம் ஆக்குவது என்பதை கொள்கை அளவில் ஒப்புக்கொண்டார்கள். நிர்மூலம் எனபதற்கு குறைவாக எதைச் சொன்னாலும் அவர்கள் உடன்படமாட்டார்கள். அந்த அளவுக்கு கொடுமைகள் அதிகம். நிர்மூலமாக்குவது என்ற எங்கள் கட்சி கொள்கையை விளக்கினால் எதிர்ப்பவர்களே கிடையாது. ஒரு தலைமுறைப்பிரச்சனை என்றால் தீர்த்துக்கொள்ளலாம். பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளை எப்படித்தீர்க்க முடியும்? என்று கேட்டார்கள். எந்த அளவிற்கு உறுதுணையும், ஆலோசனையும் தந்தாலும் அவர்கள் அதைச் செய்ய முன்வரவில்லை.
     நாகரிக உலகிற்கு தெரிய வராத பலவற்றை அங்கு பார்க்கலாம். மாதாரி வளவுப்பெண்களை வெள்ளாளக் கவுண்டர்கள் நிரந்தரமாக வைத்துக்கொள்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இத்தகைய நிர்பந்தத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த கணவனுக்கு தான் திருமணம் செய்த மனைவியோடு வாழ உரிமையில்லை. எதிர்த்துக் கேட்டால் சவுக்கடிகள் சாதாரணம். காவல்நிலையங்கள் அசைவதில்லை. இந்திய அரசியல் சட்டம் பொள்ளாச்சி வட்டாரத்தில் செயல்படுவதில்லை. நடைமுறையில் இருப்பது நிலவுடைமையாளர்களின் சட்டங்களே.
     ஒரு சமயம் ஒரு பறையர் குலப்பெண்ணை நில உடமையாளர் ஒருவர் மானப்பங்கப்படுத்தினார்.  எதிர்த்துக்கேட்டபோது, குடிசைகள் எரிக்கப்பட்டன. அந்தப்பெண்ணும் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாள். கவுண்டரால் கெடுக்கப்பட்ட அந்தப்பெண்ணின் அண்ணன் ஒரு தட்டில் தாம்பூலம், தாலி ஆகியவற்றோடு கவுண்டர் வீட்டுக்குச் சென்று அவரது பெண்ணை தனக்கு கேட்டான். அப்படிக்கேட்டதனால் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் சின்னாபின்னமாக வெட்டிப்புதைக்கப்பட்டான். ஒரு அதிர்ச்சி நடவடிக்கையாக ஆதிக்கத்தில் உள்ளவர்கள் இப்படிச்செய்கிறார்கள். ஆயிரம் ஏக்கர் வைத்திருப்பவர் நூறு, நூற்றைம்பது ஏக்கரை நிர்வாகம் செய்ய காட்டுப்பண்ணாடி  இருக்குமிடத்தில் ஒரு குடிசையில் நிரந்தரமாக ஐந்து, ஆறு அருந்ததியர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒருவகையில் அடிமைகள்; எதிர்ப்புணர்வே இல்லாதவர்கள்.  பத்து, பதினைந்துபேர்கள் வெளியிலிருந்து வந்து போவார்கள். இப்படி வந்த ஒரு அருந்ததியப் பெண்ணை வெள்ளாளக்கவுண்டர் தன்னோடு வைத்துக்கொண்டார். வாரத்திற்கு ஒருமுறை தன் கணவன் வீட்டுக்கு சென்று திரும்புவாள். கணவன் கவுண்டரிடம் சென்று தன்னோடு தன் மனைவியை அனுப்புமாறு கேட்டான்.(கல்யாணம் செய்துகொண்டாலும் எனக்குப்பொண்டாட்டி இல்லை என்று பேசிக்கொள்வது அங்கு இயல்பு) கவுண்டர் மறுத்தார். நான் கூட்டிக்கொண்டுதான் போவேன் என்று அவன் உறுதியாகச் சொன்னான். அவன் ரத்தம் கொட்டுமளவிற்கு சவுக்கால் அடிக்கப்பட்டான். ஒரு டாக்டர் அழைக்கப்பட்டார். நிலைமை மோசமாக இருக்கிறது. தான் வைத்தியம் செய்யமுடியாது என்றார். மேலும் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று போய்விட்டார். பிறகு டாக்டர் வரப்பில் தூக்கி எறியப்பட்டிருந்தார்.
     மாசாணி என்ற ஒரு அழகான அருந்ததியப் பெண். நிலவுடைமையாளன் இவளை விரும்பினான். இந்தப்பெண் விரும்பவில்லை. இந்தப்பெண் ஒரு திட்டம் போட்டாள். தன் உறவுக்காரர்களிடம் கலந்துகொண்டாள். இரவு கவுண்டரை தன் வீட்டுக்கு வரச்சொன்னாள். திட்டமிட்டபடி வீட்டை அவர்கள் சூழ்ந்துகொண்டார்கள். கவுண்டர் பேரைச் சொல்லிச் சப்தமிட்டார்கள். கவுண்டர் அவமானத்தோடு வெளியேறினார். அடுத்த நாள் அந்த ஊரைச்சேர்ந்த கவுண்டர்கள் பலர் ஒரு தாம்பாளத்தில் கத்தியை வைத்து எடுத்துக்கொண்டு  சேரிக்குள் சென்றார்கள். அந்தபெண்ணின் எதிர்வீடுகளில் இருந்த நான்கைந்து பேர்களின் கட்டைவிரல் வேண்டும் என்றார்கள். கடைசியில் எல்லோரும் அவர்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். இப்படி பலவகையான கொடுமைகள். எதிர்ப்புணர்வுக்கு இடமேயில்லை.

     இப்படிப் புறவயமான கொடுமைகள் வரலாற்றில் எந்த நாட்டிலும் இல்லை. அகவயமாகப் பார்த்தால் எதிர்ப்புணர்வு அறவே இல்லை. எதிரியோடு போராடிச் சாவது என்பது இங்கில்லை. போரிடாமலேயே தோற்றுவிடுகிறார்கள். இதற்குக் காரணம் சாதி.  பல தலைமுறைகளாக படிந்து விட்ட குணம். குடும்பத்திலிருந்து தன்னைப்பிரித்துக்கொண்டு தனிநபராக எதிரியோடு மோதுவது இங்கு இல்லை. குடும்பமாக, குடிமைச் சமூகமாக வாழ்வதில் பழக்கப்பட்டவர்கள் இங்குள்ள மக்கள். கோட்பாட்டு ரீதியாகப்பார்த்தால் எதிரியை நிர்மூலம் செய்வது இங்கு சாத்தியமில்லை என்பது தெளிவாகும். எங்காவது ஓரிண்டு இடங்களில் சாத்தியப்படலாம். பெரும்பாலான பகுதிகளில் சாத்தியமில்லாத ஒன்றை கோட்பாடு ரீதியாக காண்பித்து நடைமுறைப்படுத்துவது முடியாது.

     என்னைப்பொறுத்தவரை பார்ப்பனியச்சாதியில் பிறந்து ஆரம்ப பத்து, பதினைந்து  ஆண்டுகள் அச்சூழ்நிலையில் வாழ்ந்து வந்தாலும் என் குடும்பத்தில் வன்முறை, அடக்குமுறை அதிகம் நிலவியதாலும் வீர உணர்ச்சி குறைவாக இருந்தது. ஒரு வன்னியராகவோ, மறவராகவோ பிறந்திருந்தால் நிர்மூல நடவடிக்கையை நான் மேற்கொண்டிருக்க முடியும் என்றே கருதுகிறேன். கருத்தின் நியாயம்தான், கொள்கைப்பிடிப்புதான் என்னைத்தள்ளியதே தவிர வீர உணர்ச்சி என்னைத் தள்ளவில்லை.  
     சாதிகளுக்கு அப்பால் நின்று ஒரு ஜனநாயகவாதியாகச் சிந்திக்கும்போது, சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத் தன்னைப் பலியிடுவதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டமுடியும். நம் சமூகத்தில் நடைமுறையில் பார்க்கும்போது செட்டியார் ஒரு பிரச்சனையை வஞ்சகத்தால் தீர்ப்பார். பிறன்மலைக்கள்ளர் வன்முறையால் தீர்ப்பார். அண்மைக்கால ஆய்வின் படி ஒரு தலைமுறையின் குணத்தில் 27 விழுக்காடு அடுத்த தலைமுறைக்கு தொடரும் என்று கூறுகிறார்கள். பிரச்சனையைத் தீர்க்க தனிநபர் என்ற முறையில் என்னிடம் போர்க்குணம் இல்லை. ஆனால் பலர் சேர்ந்த கூட்டுறவில் இந்தப் போர்குணத்தைப் பெறமுடியும்.

கட்சி, மார்க்சியம் எனது புரிதல்

      நான் தங்கி வாழ்ந்த பகுதிகளில் கட்சி ஒரு அமைப்பாக செயல்படவில்லை. நம் சூழலில் ஜனநாயகத்தோடு பல ஆண்டுகள் பழகியதால் அமைப்புக்கு கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு போக்கும் ஏற்பட்டுள்ளது. அமைப்புக்கு முழுமையாக தம்மை ஒப்படைத்துக்கொள்ளும் போக்காகவும் இது இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் அமைப்பே வேண்டாம் என்பதும் ஒரு போக்கு. இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு போக்கில்தான் சரியான அமைப்பு இருக்க முடியும். என்னைப்பொறுத்தவரை புரட்சிக்கு இது வழிமுறை என்று நான் தெரிந்துகொண்ட வழிமுறையில் நான் செயல்பட்டேன் என்றுதான் சொல்லமுடியும். ஒரு திட்டம் வகுத்து அமைப்பில் நெறிப்படுத்தல் என்பது எங்கும் செயல்பட்டதாக எனக்குத்தெரியவில்லை. 1971 ல் முதல் 74 வரை முப்பத்து ஒன்றரை ஆண்டுகள் நான் இப்படிச் செயல்பட்டேன்.
     அங்குள்ள நிலப்பிரபுக்களும், அரசாங்கமும் அந்த இடத்தில் நான் இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியதால் நான் அங்கிருந்தும் வெளியேறினேன்.
     அமைப்பு இல்லாத நிலையில்தான் மத்தியக்குழுவின் நெறிப்படி கிராமத்திற்கு நான் சென்றேன். கூலி விவசாயிகளைக் கொண்டுதான் அமைப்பை உருவாக்க வேண்டும். வர்க்க எதிரிகளை நிர்மூலம் செய்யவேண்டும் என்பது கொள்கை. நான் பார்த்த கிராமங்களில் கூலி விவசாயிகளிடம் போர்க்குணம் இல்லை. என்னிடம் போர்க்குணம் இல்லாமல் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஒர் அமைப்பு கூலி விவசாயிகளைத்திரட்டி அவர்களுக்குள் போர்க்குணத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இத்தகைய அமைப்பு இங்கு ஏற்படவில்லை. இப்படி அமைப்பு ஏற்படுவதற்கும், எதிரியை நிர்மூலம் செய்வதற்கும் இந்த கருத்தியலை ஒப்புக்கொண்டவர்கள் யாரும் தயாராக இல்லை.
     இந்த சமயத்தில் கோவையிலும், வேறு இடங்களிலும் இருந்த சில படித்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்தப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் அணுகினார்கள். அரசியல்ரீதியாகவும், ஆயுதப்போராட்டத்தின் மூலமாகவும் இத்தகைய பிரச்சனையை அறிவியல் முறையில் தீர்க்கமுடியும் என்பது இவர்கள் கருத்து. தனிநபர் கொலை என்பது ஒரு புரட்சிகர நடவடிக்கையாக இருக்கமுடியாது. இது விதிவிலக்கான செயல்பாடாக இருக்கலாம். விதியாக இருக்கமுடியாது. இப்படிப்புத்தகங்களிருந்து படித்தவர்கள் இந்த இளைஞர்கள். மக்கள் திரள் போராட்டம் இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பது இவர்கள் கருத்து. இந்தப்படிப்பாளிகளின் கோணமும், எனது கோணமும் சங்கமித்தன. எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. மக்கள் திரள் இல்லாமல் போராட்டம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியே புரட்சி செய்வதில்லை. கட்சி அமைப்புக்கும், கருத்தியலுக்கும் தலைமை தாங்குகிறது. இதுதான் கட்சியின் பாத்திரம் என்பதில் நாங்கள் உடன்பட்டோம். ஒரு முறையான அமைப்பைக் கட்டுவது, மக்கள் திரள் இயக்கத்தின் மூலமாக மக்கள் பிரச்சனையை முன்னெடுத்துச் செல்வது, எல்லா இடங்களிலும் வேலை செய்வது,  கிராமப்புறத்திற்கு கூடுதல் முக்கியத்துவம். கிராமப்புறங்கள்தான் தளப்பிரதேசம். அரசியல் போராட்டத்தை ஆயுதப்போராட்டத்தோடு இணைப்பது. அரசியல் போராட்டத்தின் முதிர்ச்சி நிலைதான் ஆயுதப்போராட்டம். இத்தகைய கொள்கைகளில் எங்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டது.

     இந்தப்புதிய அமைப்பை முன்னைய தலைவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. இந்த இளைஞர்களோடு அவர்கள் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை. நாங்கள் கட்டிய அமைப்புதான் முதலில் ஏ.ஓ.சி பிறகு எஸ்.ஓ.சி இந்த அமைப்பை பொறுத்தவரை அமைப்பு முறைகளில் மாற்றமில்லை. கோட்பாட்டு முறைகளில் மட்டும் மாற்றம். பழைய அமைப்பில் இருந்தவர்கள் புரட்சி என்றாலே தியாகம் என்ற உணர்வு கொண்டவர்கள். ஆனால் புதியவர்களோ முழு அறிவியல் பார்வையாகப் பார்த்தார்கள். உதிரிப்பூக்களாக இருந்த இத்தகையவர்கள் சேர்ந்துதான் இத்தகைய அமைப்பு. இவர்களுக்கு உற்பத்தி அனுபவமோ, குடும்ப வாழ்வில் ஈடுபட்ட அனுபவமோ எதுவுமே இல்லை. அறிவுரீதியாக இவர்கள் இயக்கத்திற்கு வந்தவர்கள். நடைமுறையில் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு அதன் வழியாக அனுபவம் பெற்று வந்தவர்கள் அல்ல. இவர்கள் எப்படி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டமுடியும்? வறட்டுச்சூத்திரங்கள், விவாதங்கள் என்ற முறையில் எங்கள் காலம் கழிந்தது.

     கோட்பாட்டு பிரச்சனைகளில் முடிவு செய்ய முடியவில்லை. எப்பொழுதும் பரிசீலனைகள், பரிசீலனைகள். எங்காவது ஒரு இடத்தில் மக்கள் இயக்கத்தை தொடங்கி, போராட்டம் நடத்தி அனுபவம் பெற்று, அதை பரிசீலனைக்கு உள்ளாக்கி கோட்பாட்டை செழுமைப்படுத்திக் கொண்டு பிறகு வேறு களங்களில் தொடர்வது என்ற நடைமுறை இல்லை. கிராமப்புறத்தில் மக்களோடு ஒரு மாதஅளவுக்கேனும் வாழ்வது என்பது இவர்களுக்கு இல்லை. இதன் காரணமாக மக்களுடைய ஆற்றல், பலவீனங்கள், ஒரு வட்டாரத்தில் உள்ள சேர்க்கைகள், வட்டாரத்தின் உள்ள சேர்க்கைகள், வட்டாரத்தின் பிரச்சனைகள், யார் யாரைத்திரட்டுவது, எப்படி? ஆகியவற்றை இவர்கள் மக்களோடு வாழும்போதுதான் அறிந்துகொள்ள முடியும். கிராமப்புறத்தில்  வேலை செய்யும் ஊழியரிடமிருந்து தலைமை தெரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயக மத்தியத்துவம் என்று சொல்லி எல்லாவற்றையும் தலைவர்களே வைத்துக்கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சி எதிலும் மத்தியத்துவம்தான் இருந்தது. ஜனநாயகம் இல்லை. ஜனநாயகரீதியாக, ஆரோக்கியமாக இருந்தால்தான் கட்சியும், மத்தியத்துவமும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  இந்தியாவில் இப்பொழுது எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் ஆந்திரா தவிர அரசோடு ராணுவரீதியாக போர் நடத்தவில்லை. இம்மாதிரி சந்தர்ப்பத்தில் மட்டுமே மத்தியத்துவம் முக்கியத்துவம் பெறும். ராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபடாத கட்சிகளில் ஏன் ஜனநாயகத்திற்கு இடமில்லை? வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டாலே ஒருவனை புரட்சியாளன் என்று கூறி கொம்புசீவி விடுகிறார்கள். மேலும், படித்தவர்கள் என்ற இவர்கள் அதிகாரிகள். அகம்பாவம் இவர்களை ஆட்கொண்டிருக்கிறது. இந்நிலைகள் எதுவும் தலைவருக்குத் தெரியாது. ஆகவே, இங்கு மக்கள் திரள் இயக்கம் உருவாகவில்லை. இயக்கம் இல்லாத நிலையில்தான் வறட்டுவாதம் மேலோங்குகிறது. இதன் ஒரு விளைவு புரட்சி பற்றி எல்லாவகையான கணக்குகளையும் வைத்திருந்தால்தான் புரட்சி செய்யமுடியும் என்ற நிலைப்பாடு ஏற்படுகிறது. புத்தகங்களிலிருந்து எடுத்த புரட்சி சாத்தியம் இல்லை. ஒருவர் முன்வைக்கும் புரட்சிச்சட்டகம் மற்றவருக்கு உடன்பாடாக இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சட்டகம்.

     என்னைப்பொறுத்தவரை எனக்கெப்பொழுதுமே ஒரு சட்டகம் இல்லை. சட்டகமே வேண்டாமென்பது என் கருத்து இல்லை. போதுமான விவரங்கள் என்னிடம் இல்லை என்பதனால்தான் இப்படி ஒரு பகுதியில் இருந்து செயல்பட்டு சேகரித்த அனுபவங்கள் என்ற முறையில்தான் ஒரு நடைமுறை பற்றிய சட்டகத்தை முன்வைக்க முடியும். போராட்ட அனுபவம் இல்லாதவர்கள்தான் புரட்சி பற்றி கணிதரீதியான கணக்கீடுகளை முன்வைக்கிறார்கள். இது கம்ப்யூட்டரில் புரட்சி செய்வது மாதிரி. போர்த்தந்திரம் , செயல்தந்திரம் முதலிய அனைத்தையும் முடிவு செய்து, பிறகுதான் புரட்சி செய்வது என்பது போகாத ஊருக்கு வழி அமைப்பது மாதிரி. 74 ஆம் ஆண்டு முதல் அதாவது எனது 24 வயது முதல் கிராமப்புறங்களைப் பருண்மையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மார்க்சியம், ஸ்டாலினியம் வைத்திருக்கிற சட்டகத்திற்குள் நம் கிராமப்புறத்து உறவுகள் அடங்கவில்லை. நான் அனுபவப்பட்ட மூன்றுவகையான கிராமங்களில் ஒன்று சுமாரான பகுதி. இரண்டாவது வறண்ட பகுதி. மூன்றாவது நல்ல பாசனப்பகுதி. இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து இருக்கின்றன. இங்கெல்லாம் நிலப்பிரபு- பண்ணை அடிமை- அல்லது நிலப்பிரபு- குத்தகைதாரர்- கூலி அடிமை வேறுபாடுகள் துல்லியமாக இல்லை. இங்கெல்லாம் சாதிதான் முன்வந்து நிற்கிறது. மார்க்சிய சட்டகத்திற்கும், இந்தியாவிலுள்ள அமைப்பிற்கும் இடையில் என்ன சிக்கல்? தொடக்கத்தில் இருந்தே எனக்கு இந்த மனப்போராட்டம். என்னிடம் தீர்வு இல்லை. இருக்கிற தீர்வை சரியென்று சொல்ல முடியவில்லை. கிராமப்புறங்களில் வேலை செய்யும்போது அனுபவரீதியாக புரிந்துகொள்ளமுடிகிறது. அரசாங்கத்தின் தொல்லை, நிலப்பிரபுக்கள் தரும் தொல்லைகள் ஆகியவை காரணமாக விஞ்ஞானரீதியான தீர்வை முன்வைக்க முடியவில்லை. அமைப்பிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டேன். சில முடிவுகளுக்கு வந்தேன்.
     இந்தியாவில் இருப்பது சாதிய அமைப்பு என்ற முடிவுக்கு வந்தேன். இக்கருத்தை முன்வைத்து ஒரு விரிவான கலந்துரையாடலைக்கூட இங்கு நடத்தமுடியவில்லை. சாதிய சமூகமா? இல்லை என்றால் நிலவுடைமை சமூகமா? இப்படி எதிர்க்கேள்விகள்தான் எழுகின்றன. பிரச்சனையை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இல்லை. தாங்களும் ஒரு தீர்வை முன்வைக்க மாட்டார்கள். மற்றவர்களையும் சிந்திக்க விடமாட்டார்கள். 82 – 83 வரையிலான எம்.எல் இயக்கம் பற்றி இதுதான என் முடிவு.

இன்றைய உலக, இந்தியச்சூழலை மார்க்சியம் எதிர்கொள்ளுவது எப்படி?

     கடந்த பத்து ஆண்டுகளுக்குள் உலக அளவிலும், இந்திய அளவிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பேரளவுக்கு ரஷ்யா சிதைந்த நிலையில் மக்கள் மத்தியில் சோசலிசம் பற்றிய நம்பிக்கைகள் மங்கிவிட்டன. இந்தியக்கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரையில் இனி எந்த இலக்கை நோக்கிச் செல்வது என்பது பற்றிய பார்வை இல்லை. அனைத்திந்தியக்கட்சி என்று ஒன்று இல்லை. அனைந்திந்திய அளவில் ஒரு கட்சியைக் கட்ட முடியாது என்பது தெரிந்துவிட்டது. தங்கள் சொந்த முகம் அடிபட்டு சிதைந்த நிலையில்தான் இன்று கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள்.
     சீனாவைப்பொறுத்தவரையில் டென்ஷியோபிங் வந்த பிறகு மாவோ முன்வைத்த வர்க்கப்போராட்டம் என்ற மையமும் சிதைந்து விட்டது. ஏகாதிபத்தியத்திற்கெதிரான தேசிய விடுதலை இயக்கங்கள் என்பதும் இன்று இல்லை. வியட்நாம் போருக்குப்பிறகு  சொல்லிக்கொள்ளும்படி தேசிய விடுதலை இயக்கம் எங்கும் வரவில்லை. வட்டார அளவிலான போர்கள் என்று இருக்கிறதே ஒழிய ஒரு வரலாற்று போக்கு என்ற முறையில் இது இல்லை.

     தகவல்தொடர்பு, நுகர்வியம் ஆகியவை உலகளவில் மக்களை பெருமளவில் பாதித்திருக்கின்றன. இதன் காரணமாக அரசியல் தளத்தில் ஏகாதிபத்தியம் தன்னைக்காப்பாற்றிக்கொண்டு உள்ளது. நுகர்வியம் என்பதைப் பொருளியல் கோட்பாடு என்பதைவிட தத்துவக்கோட்பாடாக நான் பார்க்கிறேன். தொழில் நுட்பப் புரட்சி முதலியவை அரசியலை பின்னுக்கு தள்ளிவிட்டன. உலகளவில் அரசியல்ரீதியான எல்லைகள் உள்ளனவே தவிர பொருளாதார ரீதியான எல்லைகள் இல்லை.
     இந்தியப்பொதுவுடமை இயக்கத்தில் இத்தகைய சிந்தனைகளுக்கு இன்று தேவை ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றையும் மேலிருந்து இனிப்பார்த்து பயனில்லை. கீழிருந்து தான் தொடங்கவேண்டும். இந்தியப்பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட தேக்கத்திற்கு என்ன காரணம் என்ற சிந்தனை இதுவரை இல்லை. உலகப்பிரச்சனைகள் பற்றி மாபெரும் விவாதம் நடத்தியவர்கள் இந்தியப்பிரச்சனை பற்றி விவாதம் நடத்தவில்லை. இதற்குக் காரணம் பொதுவுடமைக் கட்சித்தலைமைகளில் கற்றுக்கொடுக்கிற மனோபாவம் தவிர, கற்றுக்கொள்கிற மனோபாவம் இல்லை. இந்த மண்ணின் சாதிய அமைப்புதான் இதற்குக் காரணம். பத்துபேர் இருக்கிற இடத்தில் கூட நான் தலைவனாக இருக்கவேண்டும் என்பதுதான் இங்கு நிலவும் மனோபாவம். சாதிக்கோபுரம் என்ற அமைப்புதான் இத்தகைய கோட்பாடுகளை நெருப்பில் போட்டு வேகவைத்து அவற்றின் பலாபலன்களைப் பார்க்கவேண்டுமென்ற மனோபாவம் கட்சிக்கில்லை.

     இந்தியா, இந்திய வரலாறு என்ற கருத்தாக்கம் எப்படி, எப்பொழுது ஏற்பட்டது? பலவகைச் சாதிகள், குழுக்கள், மொழிகள் என்று இருக்கிற சமூகத்தில் முதலாளித்துவம் என்பதை எப்படிப்புரிந்துகொள்வது? மேற்கில் முதலாளியம் என்பதனுள் உற்பத்தி உறவுகள் என்பதை தெளிவாகப்பார்க்கமுடியும். முதலாளியம் வருவதற்கு முன்பு இந்தியாவில் இருந்த சமூகக் குழுக்கள் எவை? அவற்றின் வரலாறு என்ன? இப்படி சாதிகள் மற்றும் குழுக்கள் இருக்கின்ற சூழலில் உற்பத்தி எவ்வாறு நடைபெற்றது? அரசு அதிகாரம் எவ்வாறு செயல்பட்டது? இத்தகைய வரலாற்றுப்பார்வை நமக்குத்தேவை. செவ்வியல் மார்க்சிய வரலாற்றுப்பொருள்முதல்வாத விதிகளிலிருந்து இந்தப்பார்வையை நாம் பெற முடியாது.
     இந்திய கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தை மேற்கிலிருந்து வேதம் போலக்கற்றார்கள், கற்பித்தார்கள். உள்நாட்டு வரலாறு பற்றிய இயங்கியல் பார்வை இவர்களுக்கு இல்லை. இங்குள்ள சமூக அரசியல் நிலவரங்களைப் பார்ப்பதற்கு பதிலாக ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் நிலவரங்களைப் பற்றி பேசினார்கள். சீர்திருத்தம், புரட்சி இவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எந்த இடத்தில் சீர்திருத்தம்? எந்த இடத்தில் புரட்சி? என்பதைப் பார்க்கவில்லை. தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் தலைமையில்தான் புரட்சி என்கிற கருத்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இல்லை. அதாவது கம்யூனிஸ்ட் கட்சியே புரட்சி செய்கிறது என்ற பொருளில்தான் கருதப்பட்டது. கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கும் வால் போலத்தான் தொழிலாளர்கள் கருதப்பட்டனர். இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் இந்துத்துவத்தோடு ஒரு தெளிவான போராட்டத்தை மார்க்சியர்கள் இதுவரை நிகழ்த்தவே இல்லை. அண்மைக்காலத்தில் எழுந்த சில விவாதங்கள் தவிர இந்து தத்துவத்திற்கும் மார்க்சியத்தத்துவத்திற்கும் இடையிலான ஒரு கூர்மையான போராட்டம் இதுவரை ஏற்படவில்லை. கட்சியின் வரலாற்றுப்பாத்திரம் பற்றியும் விவாதம் இல்லை. 1956 வாக்கில் மேல் மட்டத்தில் சில விவாதங்கள் நடந்தன. கீழ் மட்டங்களுக்கு இவை வரவே இல்லை.
     ஐரோப்பாவில் இருந்தது போல இங்கும் நிலப்பிரபுத்துவம் இருந்ததாக இன்னும் இவர்கள் நம்புகிறார்கள். மேற்கத்திய நிலப்பிரபுத்துவம் என்பதனோடு இங்குள்ள விவரங்கள் ஒட்டவே இல்லை. இங்குள்ள தனித்தன்மைகள் எனப் பல விவரங்கள் உள்ளன. கிராம்சி, பவுலன்சர்ஸ், சாமர் அமின் போன்றோர் ஏகாதிபத்தியம், அரசு, குடிமைச்சமூகம், மக்களின் உளவியல் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஏங்கல்ஸ் தவிர கிராம்சி முதலியவர்களிடமிருந்து எடுத்துக்கொள்வது தங்கள் தகுதிக்கு குறைவு என்று கருதின. அறிவியல் ரீதியாக பிரச்சனைகளைப்பார்க்கும் பயிற்சி இதுவரை ஏற்படவில்லை. ஆசிய சமூகம் பற்றி மார்கஸ் கூறியதும் இங்கு விவாதத்திற்கு வரவில்லை. இந்த மண்ணின் தனித்துவம் பற்றிய பார்வை இல்லாத நிலையில் எப்படி புரட்சி நடத்த முடியும்?

     விவசாயமும், கைவினைகளும் இங்கு சாதியத்தோடுதான் சம்பந்தப்பட்டிருக்கின்றன. சாதியம் இருப்பதால் வர்க்கப்போராட்டம் இங்கு வராது என்பதைக் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லை. பொருளாதார முரண்பாடுகள் அரசியலில் பிரதிபலிக்கிறது என்பது ஐரோப்பிய சமூக நடைமுறை. அந்த வரைவிலக்கணத்தை இங்கு அப்படியே பொருத்தமுடியாது. தத்துவம் மட்டுமே உலகளவிலானது. வரலாற்றுச்சூழல் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. வர்க்கம் என்பது இயங்கும் திறன் உடையது. சாதியம் அப்படி அல்ல. வர்க்கம் என்று வைத்துக்கொண்டால் தான் அரசு என்பதை வன்முறைக்கருவி என்று சொல்லமுடியும்.  ஒவ்வொரு சாதிக்கும் கடமைகளை வரையறை செய்து வகுத்துக்கொண்ட பிறகு அரசு அதிகாரத்திற்கு வேலை இல்லை. இந்த சூழலில் அரசு இங்கு எவ்வளவுதான் வன்முறையை பயன்படுத்தினாலும் அதை எதிர்க்க மக்கள் முன்வரமாட்டார்கள். இங்கு மக்கள் என்ற பொருளில் சமூகம் இல்லை. சாதிகளின் தொகுப்பு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குத்தான் வன்முறை என்றால் மக்கள் முன் வருவார்கள். வன்முறையை ஒரு கோட்பாடாக பொதுமைப்படுத்தினால் முன்வரமாட்டார்கள். பேரரசாக இருந்தாலும் சரி, ஒப்பீட்டளவில் குடிமைச்சமூகம் இங்கு பலவீனமாகத்தான் இருந்திருக்கிறது. வர்ணக்கோட்பாடும், சாதியச்சமூகமும் செயல்படும் சூழலில் மக்கள் மத்தியில் செயலூக்கம் இருக்கமுடியாது. சாதியச்சமூகம் என இங்குள்ள கட்டமைப்பை புரிந்துகொள்ளாத வரை இருட்டில்தான் நாமிருக்க நேரிடும். அரசு இந்த சமூகத்தை ஆட்சி புரிகிறதா? பழக்க வழக்கங்கள் ஆட்சி புரிகிறதா? எது மேலோங்கி இருக்கிறது என்று பார்த்தால் நமக்கு உண்மை புரியும்.
     உலகளவிலான நவீனத்தொழில்நுட்பம், நுகர்வுச்செயல்பாடு முதலியவை காரணமாக வர்க்கமோதல் பெருமளவு குறைந்துவிட்டது. மத்தியதர வர்க்கம் அதிகளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இவர்களிடமிருந்து வரும் நிபுணர்கள், அதிகார வர்க்கம் ஆகியவர்கள் மூலம் ஒரு மேலாண்மைச்சமூகம் உருவாகி இருக்கிறது. இன்றைய சமூகம் முன்பு மாதிரி, எளிய மாதிரிகளை முன்வைத்து புரிந்துகொள்ளக்கூடியதாக இல்லை. எல்லோருடைய வாழ்க்கைத் தரங்களும் கூடியுள்ளன. சாலைவசதிகள், கடன் வசதிகள் முதலியவற்றை எங்கும் பார்க்கிறோம். வெகு ஜன இயக்கங்கள், சாதி அமைப்புகள், ஓட்டுமுறை ஆகியவை ஏற்பட்டுள்ளன. போராடும் திறனைப்பொறுத்து சில வசதிகளை கூடுதலாகப் பெறமுடியும். இவையெல்லாம் சேர்ந்து வர்க்க மோதலைக் குறைத்துவிட்டன. மறைத்துவிட்டன. மரபு ரீதியிலான வர்க்கப்போராட்டம் என்ற கருத்தாக்கத்தை இன்று வைத்துக்கொள்ள முடியாது.

     அவை அனைத்தும் எதன் மேல் செயல்படுகின்றன? சாதி, பாலினம், தேசிய இனம், மதம் என்ற சூழலின் மீது செயல்படுகின்றன. இவற்றோடு சேர்ந்து பசுமைப்புரட்சி முதலிய போக்குகள் இவற்றை எல்லாம் உள்ளடக்கி நமது சமூகம், போராட்டம் பற்றிய கோட்பாடு வகுக்கப்பட வேண்டும். நிகழ் விமர்சகர்கள் இவற்றையெல்லாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். கடந்த கால கொள்கை, நடைமுறைகளை முற்றும் பரிசீலிக்கும் மனத்துணிவு வேண்டும். நன்றி.

மார்க்சிய அறிஞர் ஞானி, அறிவன் ஆகியோர் கருணாமனோகரனிடன் நிகழ் இதழுக்காக நடத்திய நேர்காணல். நன்றி: நிகழ்.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்