சாதியும் வர்க்கமும்
விவாதத்திற்காக…
நீண்ட காலத்திற்குப் பிறகு
சாதியின் சமுதாய / பொருளாதார / அரசியல் பாத்திரத்தை அங்கீகரித்திருப்பதன் அடையாளமாக
‘’ சாதியும் வர்க்கமும் ’’ என்ற புத்தகம் தமிழ்நாடு புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தினரால்
வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் ஏற்கனவே சென்னையில் 15, 16.8.1987 தேதிகளில்
அனைத்திந்தியப் புரட்சிப்பண்பாட்டு இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ‘’சாதியும் வர்க்கமும்’’
பற்றிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும்.
இப்புத்தகத்திற்காக
பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை வழங்கியிருக்கிறார். அம்முன்னுரை பற்றி விமர்சிக்கும்
போக்கில் வரலாற்றைப்பற்றி சில கேள்விகளை எழுப்புகிறார் திரு. கருணாமனோகரன்.
பேராசிரியர் தன்
முன்னுரையில் ‘’ இந்தியாவில் பிறக்கிற ஒருவன் மத முத்திரை தவிர சாதி முத்திரையையும்
தரித்துக்கொண்டு தான் இம்மண்ணில் கால்பதிக்கவேண்டியிருக்கிறது ‘’ என்று குறிப்பிடுகிறார்.
மேலும் ‘’ இந்தியப்புரட்சிக்கு ஒர் சவாலாய் இன்றளவும் சாதி நிலவி வருகின்றது ‘’ எனக்குறிப்பிடுகிறார்.
பொதுவுடமை இயக்கத்தினர் தங்களின் யுத்த தந்திரங்களில் , போர்த்தந்திரங்களில் , திட்டங்களில்
எல்லாவற்றிற்கும் மேலாக பருண்மையான நடைமுறைச் செயல்பாடுகளில் இதன் முக்கியத்துவத்தை
எப்படி உணரச்செய்யப்போகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க கருத்தளவிலேயாயினும் எழுபது ஆண்டுகளுக்குப்
பிறகு, அதுவும் இப்பிரச்சனையை தந்தை பெரியார் அவருக்கே உரித்தான பார்ப்பனிய எதிர்ப்புக்
கண்ணோட்டத்தில் ஐம்பது ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக தமிழகமெங்கும் தீவிரப் பணியாற்றிய
பிறகு சாதியம் பற்றியும், வர்க்கம் பற்றியும் பரிசீலனை செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி
தரத்தக்கதாகும்.
அறுபது ஆண்டுகளாக
ஐரோப்பிய வகைப்பட்ட வர்க்க சமுதாயமாக இக்கண்டத்தை பார்த்ததும், வர்க்கப் போராட்டத்தின்
வீச்சை விட அல்லது அதற்கு இணையாக முதலாளியத்திற்கு முற்பட்ட உறவுகளான பொதுவான அர்த்தத்தில்
மதம், சாதி, பழங்குடி மக்கள்(tribalism) பிரச்சனை மீதான போராட்டங்கள் நடைபெற்று வருவதும்
அவர்களின் சிந்தனையைத் தொட்டிருக்கக் கூடும்.
எனவே இயக்க ரீதியான
மார்க்சியவாதிகள் இதுநாள் வரை சாதி எதிர்ப்புப்போராட்டங்களை நடத்தியவர்களின் கொள்கைகளையும்,
அனுபவங்களையும் கிரகித்து தங்களது பார்வையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சாதியப்பிரச்சனையை ஏதோ இவ்வளவு காலமாக புறக்கணித்து வந்துவிட்டோம். இது தவறு எனப் புரிந்தால்
மட்டும் போதாது. அதற்கான காரணங்களைப் பரிசீலிப்பதன் மூலமே அடிப்படைத்தவறுகளை களைந்து
கொள்ள முடியும். பருண்மைமயான நிலைமைகளுக்கு பருண்மையான தீர்வு கொடுப்பதிலேயே மார்க்சியத்தின்
ஜீவன் இருக்கிறது என்பதை முதலில் ஏற்று ‘’ பருண்மையான நிலைமைகளை ’’ இதுநாள் வரை ஏன்
பரிசீலிக்கவில்லை என்பதை தங்களுக்குள் அவர்கள் கேள்விகள் எழுப்பிக்கொண்டு விடை கண்டாக
வேண்டும். வறட்டுத்தனமான சூத்திரங்கள், பொருந்தா ஒப்பீட்டு முறைகள், நகலெடுக்கும் போக்குகள்,
ஆகியவை எங்கிருந்து வந்தன என்பதையும், இப்போக்குகளுக்கான தலைமையின் பாத்திரம் என்ன
என்பதையும் அவர்கள் பரிசீலித்து விடை கண்டாக வேண்டும். தாங்கள் உண்மையில் இந்திய /
தமிழக மக்களின் வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்களை விரும்புவார்களானால் இதை விருப்பு,
வெறுப்பின்றி காலனிய அறிவாளிகளுக்கே உரித்தான அகந்தையை நீக்கி சிந்தித்து விவாதித்து
விடை காணவேண்டும்.
அதை விடுத்து, இந்நூற்றாண்டின்
ஆரம்பத்திலிருந்து எழுந்த சாதி எதிர்ப்பு போராட்ட கருத்துக்களையும், தலைவர்களையும்,
இயக்கங்களையும், தங்களை கரைத்து குடித்த அறிவாளிகளாக பாவனை செய்துகொண்டு விமர்சிப்பது
அர்த்தமற்றது.
கோட்பாடுகளிலிருந்து
ஆய்வைத் தொடங்குவதா? ஆய்விலிருந்து கோட்பாடுகளை அடைவதா? என்பதே அடிப்படை பிரச்சனை.
எந்த நாட்டு வரலாறையும்
அதை ஒட்டிய மக்களின் பண்பாடு, உளப்பாங்கு ஆகியவற்றையும் ஆராயாமல் அந்த நாட்டின் வரலாற்றை
எப்படி மாற்றியமைக்க இயலும்? அரசியல் புரட்சி என்பது இதிலிருந்து விலகி தனியாக இருக்கிறதா?
பாரிஸ் கம்யூனும், செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் எழுச்சியும், சிங்கியாங் மலைப்போராட்டமும்,
இந்த நாட்டு வரலாற்றோடு அடிப்படையில் சம்பந்தப்பட்டு இருக்கிறதா? இப்போராட்டங்களின்
எல்லா அனுபவங்களும் சர்வரோக நிவாரணிகளா? இத்துணைக்கண்ட வரலாறும், அனுபவங்களும் இரண்டாம்
பட்சமானதுதானா?
சொந்த நாட்டு வரலாறு,
மக்கள் அனுபவம் இவற்றை ஆழமாக பரிசீலனை செய்யாமல் எந்த ஒரு பிரச்சனையையும் முழுமையான
கண்ணோட்டத்தில் பார்க்க முடியுமா?
ஏற்கனவே மார்க்சிய
அறிவாளிகளிடத்தில் (இயக்கவாதிகளிடம் அல்ல) இவையெல்லாம் விவாதத்தில் இருப்பவைதான். இவ்விவாதங்களில்
பல படிப்பாளி ஆய்வுகளாக இருக்கலாம். சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக இருக்கலாம். படிப்பாளி
ஆய்வுகள் (academic) இன்றி, அதன் மீதான விமர்சனமின்றியா விஞ்ஞானப்பூர்வமான முடிவுகள்
வந்துவிட்டன ? மார்க்சும், லெனினும் வரலாற்று விவாதத் தொடர்ச்சியில் இவற்றைப் பெற்றார்களா?
அல்லது போர்க்குணத்திலிருந்து பெற்றார்களா?
நோக்கமின்றி ஆய்வு
இருக்கமுடியாதுதான். அதற்காக எல்லா ஆய்வுகளுக்குமே ஒரு நோக்கம் இருப்பதாக கற்பிதம்
செய்துகொள்வது தவறாகிவிடும். சமுதாய மாற்றத்தில் பங்கெடுப்பது என்பது அமைப்புரீதியான
தெருப்போராட்டம் மட்டுமல்ல; கருத்தப்போராட்டமும், ஆய்வுப்போராட்டமும் ஆகும்.
மார்க்ஸ் – ஏங்கல்ஸ்,
லெனின் – ஸ்டாலின் – மாவோ தவிர எதையும் படிக்கமாட்டேன், ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள
மாட்டேன் என்பது வறட்டு சூத்திரத்திற்கே கொண்டுபோகும்; கொண்டு போயிருக்கிறது. எனவே இதுநாள் வரை இந்திய சமூக அமைப்பின் பிரத்தியேக
நிலைமை பற்றி, மார்க்சிய இயலாளர்களும், மற்ற அறிஞர்களும், சாதி, மதம், வரலாறு பற்றி
எழுதியவை எடுத்துக் கொள்ளப்படவில்லை; விவாதிக்கப்படவில்லை; சரி, தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படவோ,
புறக்கணிக்கப்படவோ, அல்லது தவறுகள் களையப்பட்டு வளர்க்கப்படவோ இல்லை. ‘ முதலாளித்துவ
சீர்திருத்தவாதி ’ , ‘குட்டி முதலாளித்துவ அறிவுவாதம் ’ போன்ற சொற்களால் முத்திரை குத்தப்பட்டு
மன மகிழ்ச்சி அடைவதில் போய் நிற்கிறது. மனதிற்கு, அகந்தைக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம்.
மக்களுக்கோ, வரலாற்றிற்கோ அல்ல.
பேராசிரியர் அ. மார்க்சின்
முன்னுரையும் இத்தகைய அடிப்படையையே கொண்டிருக்கிறது. சாதியம் பற்றிய விஷயம் பொதுவுடமைவாதிகளால்
எடுத்துக்கொள்ளப்படவில்லை. என்றும், தவிர்க்க நேர்ந்துவிட்டதாகவும்(!!) எழுதுகிறார்.
இதுவல்ல பிரச்சனை. இது ஒரு ஒப்புதல் வாக்குமூலமே. இதற்கான சித்தாந்த அரசியல் அமைப்பு
காரணங்கள் என்னவாயிருந்திருக்கிறது என்பதும், அதைக் களையும் முறைகள் பற்றியும் முழுமையான
அளவில், தயக்கமின்றி பூசி மெழுகுதல் இல்லாமல் விவாதிப்பதுதான். இத்தகைய தேடல் அவர்
முன்னுரையில் சிறிதும் இல்லை.
‘’சாதி எதிர்ப்பிலும்
சமூக மாற்றத்திலும் அக்கறையுள்ள அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் விட்ட பிழைகளை கணக்கில்எடுத்துக்
கொண்டு முன்னேற வேண்டியிருக்கிறது ’’ என்கிறார். சாதியம் பற்றிய கடந்த காலப் புறக்கணிப்பு
அல்லது மெத்தனத்தை ‘விட்ட பிழையாக’ கொள்வதாக அல்லது சமுதாயம் பற்றிய பரிசீலனையில் கருத்தியல் அணுகுமுறை(Methodology) ல் அடிப்படை தவறிருப்பதாகக்
கொள்வதா? உற்பத்தி உறவுகளை சமூக, பொருளாதார உறவின் தொகுப்பாகப் பார்ப்பதற்குப் பதில்
வெறும் சொத்து உறவுகளாக(Property relations) பார்த்த அணுகுமுறையில் தவறா? முதலாளித்துவ
உற்பத்தி வளர, வளர அதற்கு தகவுப் பொருத்தமாக தானாகவே சாதியம் ஒழியும் அல்லது மறையும்
என்று வைத்திருந்த கருத்தாக்கம் சரியா? முதலாளித்துவ
சமுதாய வரலாற்றியல் விதிகளை முதலாளியத்திற்கு முற்பட்ட சமுதாயங்களில் பொருத்தியது சரியா?
முதலாளியத்திற்கு முற்பட்ட சமுதாயங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் சிறப்பியல் வேறுபாடுகளைக்
கொண்டது என்பதையும், இங்குள்ள சிறப்பியல்புகளையும் கணக்கில் கொள்ளாதது ‘விட்ட பிழைகளா’,
அல்லது அடிப்படை அணுகுமுறைத் தவறுதலா?
பூலேயோ, அம்பேத்கரோ,
பெரியாரோ முழுமையான பாத்திரமாற்றவில்லை என்பதை விட பருண்மையான நிலைமைகளுக்கு செயல்பட்டார்கள்.
பொதுவுடமை இயக்கத்தினரின் பங்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதா? மற்றவர்களின் பாத்திரம்
வரலாற்றில் இடம் பெறத்தக்கது இல்லையா? (எ.கா சன்யாட் சென்), பொதுவுடமை, புரட்சி பேசியவர்கள்,
பேசுபவர்கள், பார்வையாளர்களாக மட்டுமே இருந்திருக்கின்றனர் என்பது உண்மையில்லையா? பொதுவுடமை
கருத்தியலாளர்கள் சாதிய அமைப்பை மாற்றியமைக்கும் பிரச்சனையில் நடைபெற்ற கருத்தியல்
போராட்ட வரலாற்றையும் நடைமுறைப் போராட்ட வரலாற்றையும் ஆய்ந்தறிந்து மற்றவர்களின் தவறை
குறிப்பிடும் போதே தங்களின் உதாசீனத்தையும் பொருந்தாப் போக்கையும் மனம் விட்டு ஏற்றுக்கொள்ள
வேண்டும். காலனியப் படிப்பில் வரும் மேல் சாதி அகந்தையால் மக்களை ஏற்கச் செய்ய முடியாது.
ஐம்பது ஆண்டுகால
வரலாறு முழுவதும் தேடிப்பார்த்தால் அறிவுக்கும், ஆய்வுக்கும் மார்க்சியம் மொத்தக் குத்தகையாக
இருக்கவில்லை. எவ்வளவோ நிலப்பிரவுத்துவம், முதலாளிய அறிவாளிகளும், எதிர்ப்புரட்சி அறிவாளிகளும்
தங்கள் நோக்கத்தில் செய்த ஆய்வுகளிலிருந்தும், அறிவுப் பணிகளிலிருந்தும் மார்க்சியம்
தன்னுடைய இயக்க இயல் பொருள்முதல்வாத கோணத்திலிருந்து ஆய்வு செய்து எடுத்துக்கொண்டிருக்கிறது
/ புறக்கணித்திருக்கிறது / அம்பலப்படுத்தியிருக்கிறது. வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில்
, தத்துவத்தின் வளர்ச்சிப்போக்கில் பியூவர்பர்க்கும், ஹெகலும் தோன்றாமலா மார்க்சியம்
தோன்றிவிட்டது? சுலபமான முறையான முத்திரை குத்தும் போக்கையா மார்க்சும், ஏங்கல்சும்
கையாண்டனர்?
கெட்டிப்பட்டுப்போன
சாதிய அமைப்பில் பார்ப்பனரும், பார்ப்பனரை ஒட்டிய மேல்சாதியினரும் மட்டுமே படிக்க உரிமை
கொண்டவர்கள் என்ற சாதிய அமைப்பில் காலனியம் குறிக்கிட்டது. காலனிய எதிர்ப்பு என்ற அர்த்தத்தில்
(சமுதாய மாற்றத்தை உள்ளடக்கிய அர்த்தத்தில் அல்ல) இதே வரலாற்று மேல்சாதிகள் உள்ளுணர்வாகவோ,
அல்லது திட்டமிட்டோ சமூக அமைப்பை விளக்கவும் மாற்றியமைக்கவும் முன்வராதபடி மார்க்சிய
அணுகுமுறையை தங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளவில்லையா? பிரதான முரண்பாட்டை தீர்த்தல், ஏகாதிபத்தியத்தை
எதிர்த்து பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் போன்ற எவ்வளவோ யந்திர ரீதியான ‘தத்துவ’
விளக்கத்திற்குள் இந்திய சமுதாய அமைப்பில் மாற்றம் என்ற கருத்து புதைக்கப்படவில்லையா?
அன்றைய கட்டத்தில் உலக மார்க்சியத்தில் நிலவிய பொருளாதாரவாதத்தை உள்ளிழுத்துப் போட்டுக்கொண்டு
தங்களைக் காத்துக்கொள்ளவில்லையா? உற்பத்தி உறவை வெறும் சொத்து உறவாக பொருளாதார உறவாக
விளக்கவில்லையா? அரசியல் புரட்சியிலிருந்து சமுதாய உறவுகளில் மாற்றம் கொண்டு வருதல்
என்பது பிரிக்கப்படவில்லையா? வர்க்கங்கள் என்பதும் வர்க்கப்போராட்டம் என்பதும் பொருளாதார
வகைப்ப்பட்டவை என்று மார்க்சியத்தை திரிக்கவில்லையா? இந்த அடிப்படைகள் மேல் கேள்விகள்
எழுப்பி, சுயவிமர்சனத்தோடு தன் அடிப்படையை மாற்றிக்கொள்ளாமல் போவதுதானே 1967 க்குப்
பிறகு சிந்திய ரத்தங்கள். ( சாதியும் வர்க்கமும் பற்றிய பரிசீலனை இன்றி கிராமப்புற
வர்க்க ஆய்வு)
பிரச்சனைகள் ஆழமாய்
இருக்கின்றன. ஆழமாய் இருப்பதோடு, அல்லாமல் திரிக்கப்பட்டு குழப்பப்பட்டு இருக்கின்றன.
சாதியும் வர்க்கமும் பற்றிய பிரச்சனையும் இப்படித்தான் இருக்கிறது. மார்க்ஸ் அறிவாளியாய்
இருந்தார் என்பது மட்டுமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான( அவர் காலத்தில் ஐரோப்பாவில்
தொழிற்துறை பாட்டாளி வர்க்கம்) அறிவாளியாய் இருந்ததாலே உண்மையின் பக்கம் அவரால் வந்து
சேர முடிந்தது என்றும் சொல்லலாம். நமது நாட்டில் ஒடுக்கப்பட்டோர் யார்? மக்களில் எண்பது
விழுக்காட்டினரான தலித்துகள், பழங்குடியினர், சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட
சாதிகள், சிறுபான்மை மதத்தவரில் பெரும்பான்மையினர். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு
வரும் இம்மக்களே இன்று முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கிலும் ஒடுக்கப்பட்டவராயிருக்கிறார்கள்.
நமது நாட்டு பொதுவுடமை இயக்கத்தின் தோற்றத்தின் போது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்,
இப்பகுதியினர் இன்றுள்ளதை விட மிக கேவலமான நிலையில் இருந்தனர் என்பது அப்பட்டமான உண்மை.
ஆனாலும் ஆரம்ப கால பொதுவுடமை இயக்கத்தலைவர்கள் இவற்றைக்கண்டு கொள்ளவே இல்லை. இவர்கள்
பக்கம் நின்று மார்க்சியம் பேசியிருந்தால் இன்று பொதுவுடமை இயக்கம் அடிப்படையில் கருத்துரீதியில்
சரியான பாதையில் இருந்திருக்க முடியும்.
அ. மார்க்ஸ் அவர்களோ
தனது முன்னுரையில் இத்தகைய தேடல் அணுகுமுறையைக் கையாளவுமில்லை. அதை கோடிட்டு காட்டவும்
இல்லை. இம்முன்னுரையிலிருந்து ஒருவர் என்ன அறிந்துகொள்ள முடியும்?
பல அறிஞர்களின் பெயர்களையும்
மேலோட்டமான குறிப்புகளையும் கொடுத்துக்கொண்டே போகிறார்.
எப்படியோ ‘ சாதியும்
வர்க்கமும் ‘ என்பது விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது எனினும் சாதி ஒரு பிரச்சனை
என்பதாகவும், நிலப்பிரவுத்துவ உற்பத்தி முறையில் சாதி அடிப்படையில் தொழிற்பிரிவு என்பதாகவும்
விளக்கப்படுகிறதே அல்லாமல் சாதியம் ஒரு உற்பத்தி முறை என்பதாக விளக்கப்படவில்லை.
சாதியத்தின் தோற்றம்
பற்றி இந்திய அறிவாளிகளால் (மார்க்சிய அறிவாளிகளும் மற்றவர்களும் ) நிறையவே எழுதப்பட்டிருக்கிறது.
எனினும் இவற்றின் மேல் இயக்கரீதியில் விவாதம் தொடங்கப்படவே இல்லை. இதையும் படிப்பாளி
வாதமாக(academic debate) இயக்கங்கள் கருதுகின்றன. இதனால் விளைவது என்னவென்றால் ஆரியர்-திராவிடர்
இனப்பிரச்சனை(Race theory) வேதமதம், புத்தமதம், பார்ப்பனர் ஆதிக்கம் போன்றவற்றில் கருத்து
விவாதமே நடத்தப்படாமல் இருந்து வருகிறது. சாதிக்கான வேர்களை சரியாகப்புரிந்து கொள்ள
முடியாமல் போவதால் வரலாற்று ரீதியில் சாதியப்பிரச்சனை விளக்கப்பட முடிவதில்லை. இன்றைய
சாதிய நடைமுறையின் ஆழத்தையும் விளக்க முடிவதில்லை. ஒரு தெளிவற்றதாயினும், ஓரளவு ஊகம்
கொண்டதாயினும் அதிலும் ஒரு அர்த்தம் கொண்ட அடிப்படைக் கருதுகோளைக் கூட அடைய முடியவில்லை.
எனவே பொதுவுடமை இயக்கங்கள் இவ்விஷயத்தில் திக்குத்தெரியாத காட்டில் இருக்கின்றன. அப்படி
இருப்பதாகவும் கூட உணர வில்லை. வர்ணத்திற்கும், சாதிக்கும் உள்ள வேறுபாடும் மயங்கிய
நிலையில் இருந்து வருகிறது.
பண்டைய பொதுமைக்குழுக்கள்(Primitive
communist tribal society) உடைந்து புதிய உற்பத்தி உறவுகளும், ரத்த உறவு மாற்றங்களும்
தோன்றியதை பரிசீலிக்க முடியாமல் போனாலும் கூட, தொழில் பிரிவினையும், உபரி உற்பத்தியும்,
வர்க்கமும் அரசும் தோன்றாமல் சாதி தோன்றியிருக்க முடியாது என்ற கருத்துக்கு இன்றும்
வந்தபாடில்லை. தாய்வழி சமுதாயம் உடைந்து தந்தைவழி சமுதாயம் வரும்போது தொழில்பிரிவினை
கெட்டிப்படுவதோடு, குல ஒழுக்கங்களும் கெட்டிப்படுகின்றன. இயல்பாகவே புறமணமுறை வழக்கொழிந்து
அகமணமுறை வருகிறது. ஆனால் அது ஒரு விதியாக எங்குமே இருந்திருக்க முடியாது. பழமையான
தொழில் கருவிகளைக் கொண்ட உழைப்பு பிரிவினையில் அகமண முறையே சாத்தியமான ஏற்பாடாகும்.
ஆனால் இது ஒரு சமூக அரசியல் தத்துவநெறியாக நிர்பந்திக்கப்படும்போது அது சாதியாகிறது;
அல்லது உபசாதியாகிறது. இது ஒரு சிக்கலான நெடிய வரலாற்று வளர்ச்சிப்போக்கு. இதை உருவாக்கியதில்
பார்ப்பனர்களின் பங்கை முக்கியக் காரணியாக கூறுகிறார் அம்பேத்கர். பார்ப்பனர்களின்
தீட்டு, பரிசுத்தம் ஆகியவற்றின் மூலமான ஆதிக்கப்
போக்கினாலேயே பார்ப்பனர்கள் அகமணமுறை ஒழுக்கத்தை கடைபிடித்தனர். ஆளும் வர்க்கமாக( சொத்துரிமையின்
அடிப்படையிலேயே ஆளும் வர்க்கம் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எ.கா: சோசலிச இடைக்கட்டத்தில் ஆளும் வர்க்கம்) அல்லது ஆதிக்க சக்தியாகப் பார்ப்பனர்
இருந்த காரணத்தால் அதை ஒட்டிய மற்ற தரப்பினர்
(எ.கா. போர்த்தொழில், வாணிபம் இதர) பார்ப்பனர்களை ஒட்டி தங்களையும் அகமண வட்டத்திற்குள்
அடைத்துக்கொண்டனர். மற்றவர்கள் புறமணத்தை விரும்பினாலும் அதற்கான வாய்ப்புகள் அடைபட்டு
கிடப்பதால் அகமணமுறைக்கு தள்ளப்பட்டனர். சாதிகளின் (சாதி ஒருமையில் இருக்கமுடியாது;
சாதிகள் என்ற பன்மையே இருக்கமுடியும்) தோற்றத்தை விளக்குகிறார் அம்பேத்கர். ஆரியர்களே
பிராமணர்கள் என்று இனக்கொள்கை (Race theory) பேசுபவரோடு அம்பேத்கர் முற்றிலும் முரண்படுகிறார்.
ஆரியர்களுக்கும், சாதிக்கும் அம்பேத்கர் முடிச்சு போடுவதில்லை; அதேபோல் பிரம்மவாதம்
– வேதமதம் – பிராமணியம் என்பதே அம்பேத்கரின் வரலாற்று அணுகுமுறை. அம்பேத்கரிடமிருந்து
அகமணமுறை கெட்டிப்பட்டதையும், அதன் விளைவாக சாதிகள் தோன்றின என்பதையும் எடுத்துக்கொள்ளும்
குணா அதன் தோற்றத்திற்கான இடத்தை தென்புலத்தில் திராவிடர்களிடையே, தமிழர்களிடையே காண்கிறார்.
ஆனால் இத்தகைய கருத்துக்கு எந்த ஒரு சொத்தை வாதத்தையும் கூட அவர் முன் வைக்கவில்லை.
ஒருக்கால் கற்பு நெறி தெற்கிலேயே தோன்றியிருப்பதும், பலப்பட்டிருப்பதும் ஒரு காரணமாக
அவர் கொள்ளக்கூடும். அது பற்றி அவர் விளக்கவில்லை.
அ. மார்க்ஸ் அம்பேத்கரின்
கருத்துக்களை மிக மேலோட்டமாகக் குறிப்பிடுகிறார். ஆனால் இது பற்றியெல்லாம் ஆழப் பரிசீலிக்காமல்
, தன்னுடைய கருத்தை தெளிவாக்க முயலாமல் ‘இந்தக் கருத்துக்கள் அனைத்திலும் ஓரளவு உண்மை இருந்தாலும்’( அழுத்தம் என்னுடையது)
என்று சொல்வது ஏமாற்றாகும். ஒன்றைப் பரிசீலிக்கும்போது ‘ஓரளவு உண்மைகள்’ என்று எழுதுவது
என்ன நேர்மையோ! மேலும் ‘’ இவை எதுவும் சாதியின் தோற்றத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்கும்
முழுமையான கருத்தல்ல என்பதை சற்று சிந்தித்தால் விளங்கிக்கொள்ள முடியும் ‘’ என்று எழுதுகிறார்.
எதை சற்று சிந்திப்பது என்பதையும் விளக்கவில்லை. மேற்கூறப்பட்ட அம்பேத்கரின் கருத்துக்கள்
‘இந்தியாவில் சாதிகள்’ என்ற புத்தகத்தில் இருக்கின்றன. அம்பேத்கரின் கருத்து சரியோ,
தவறோ இன்றுவரை இப்புத்தகத்தின் மீது மார்க்சிய அறிவாளிகளானாலும் சரி(கெய்ல் ஓம்வெட்,
குணா போன்ற சிலரைத் தவிர) விமர்சிக்கவே இல்லை. கண்டுகொள்ளப்படாமல் இருப்பது விமர்சனமல்ல.
குறுகிய காழ்ப்புணர்ச்சியே.
அ. மார்க்சின் கருத்துக்கள்
குழப்பமாயுள்ளன. அவர் கூறுவதாவது: ‘’ சாதியின் அடிப்படையில் தொழில் பிரிவினை என்பது
நிலப்பிரவுத்துவ உற்பத்தி முறையில் உறுதியாய் செய்யப்பட்ட ஒன்று. இன்று அது ஒரு குறிப்பிட்ட
அளவிற்கு நடைமுறையில் இருந்தாலும் கோட்பாட்டளவில் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வரலாறு
முழுவதும் வெவ்வேறு வடிவங்களை எடுத்துள்ள சாதியை ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அல்லது
திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கிய ஒன்று என்று கருதுவது அறிவியலுக்கு புறம்பானது.
இந்திய சமூக வளர்ச்சிப்போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு இங்கேயுள்ள பிரத்தியேகச் சூழலில்
மலர்ந்த உற்பத்தி முறைகளில் அது திண்மையாகி உருக்கொண்டுள்ளது. உபரியை உறிஞ்சி எடுக்கும்
ஓர் சுரண்டல் வடிவமாக சாதி உருப்பெற்ற போது அதற்கு ஒரு கோட்பாட்டு நியாயத்தை வழங்கி
அதன் இருத்தலுக்கு இன்று வரை காரணாமாக இருப்பன என்கிற வகையில் பிராமணியத்திற்கும் இந்து
மதத்திற்கும் மிக முக்கியப் பங்குண்டு என்பதுதான் உண்மை. அதனால்தான் சாதி ஒழிப்பை வன்மையாய்
வலியுறுத்திய அம்பேத்கரும், பெரியாரும், பூலேயும் பிராமணியத்தையும், இந்து மதத்தையும்
கடுமையாக தாக்க நேர்ந்தது.(ப.11)
மேற்கண்ட எழுத்துக்கள்
பல கேள்விகளை எழுப்புகின்றது. 1. தொழிற்பிரிவினை தோன்றியபின் சாதி தோன்றியதா அல்லது
சாதியின் அடிப்படையில் தொழிற்பிரிவினையா? ( முன்னது பொருள் முதல்வாதம், பின்னது கருத்து
முதல்வாதம்). 2. நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்று அ. மார்க்ஸ் கூறுவதன் பொருள்
என்ன? நிலத்தின் மீதான சொத்தின் அடிப்படையில் உற்பத்தி உறவு எனச்சொல்கிறாரா?( அதாவது,
நிலக்கிழார் – பண்ணையடிமை / வார விவசாயி. நிலக்கிழார்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய
அரசு. உபரியை நிலக்கிழார் அபகரித்து அரசுக்கு ஒரு வரி கொடுப்பது – சுருக்கமாக). நிலக்கிழார்கள்
என்ன சாதி அல்லது சாதிகள்? பண்ணையடிமை / வார விவசாயி என்ன சாதி அல்லது சாதிகள்? ஏன்
2000 ஆண்டுகளாக மேற்கண்ட அடிப்படையில் வர்க்கப்போராட்டம் நடைபெறவே இல்லை? நடைபெற்ற
உதாரணம் ஏதாவது உண்டா? நிலப்பிரபுத்துவம் என்ற
சொல்லை பொதுவுடமை இயக்கத்தினர் நிறையவே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்திய அளவில் இதன்
பொருள் என்ன என்று விளங்குவதேயில்லை. உண்மையிலேயே பயமுறுத்தல் கொண்ட வார்த்தை இதுதான்.
3. ‘’வெவ்வேறு உற்பத்தி முறைகளில் வெவ்வேறு
வடிவங்களை எடுத்துள்ள சாதியை’’ என்று எழுதுகிறார். வெவ்வேறு உற்பத்தி முறை எனக்குறிப்பிடுவது
எதை? இந்திய மார்க்சியவாதிகள் கூறி வந்திருப்பது இப்படித்தான்: 1. புராதனப்பொதுவுடமை
2. ஆண்டான் அடிமை 3. நிலப்பிரபுத்துவம் 4. முதலாளித்துவம் 5. கம்யூனிசம் (மார்க்சோ,
லெனினோ இப்படி வரையறுத்து கூறவில்லை). எனவே ஆண்டான் அடிமை என்ற உற்பத்தி முறை இங்கு
இருந்ததா? அதில் சாதி என்ன வடிவத்தை எடுத்துள்ளது? அதற்கும் ‘நிலப்பிரபுத்துவ உற்பத்தி
முறையில் ’ நிலவிய சாதி வடிவத்திற்கும் என்ன வேறுபாடு? ஏன்? சாதியை உற்பத்தி முறை எனச்சொல்லுகிறாரா
என்பதும் தெரியவில்லை. 4. ‘’ இந்திய சமூக வளர்ச்சிப்போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு இங்கேயுள்ள பிரத்தியேகச் சூழலில் மலர்ந்த உற்பத்தி முறைகளில் (அழுத்தம் என்னுடையது)
அது திண்மையாகி உருக்கொண்டிருக்கிறது ’’ .
அ. மார்க்ஸ் ஒரு புதிரைப்போடுகிறார். ‘இயற்கையாகக்
கருக்கொண்டு’ என்ற வார்த்தையைப் பார்த்ததும் மலைப்புத்தட்டுகிறது. சரி, இந்த இயற்கை
மற்ற நாடுகளில் ஏன் கருக்கொள்ளவில்லை. ‘பிரத்தியேகச்சூழல்’ என்றால் என்ன? அது மார்க்ஸ்
கால ஐரோப்பாவிலிருந்தும், லெனின் கால ரஷ்யாவிலிருந்தும், மாவோ கால சீனாவிலிருந்தும்
எப்படி பிரத்தியேகப்படுகிறது? இந்த நாடுகளின் ஆரம்பகால வரலாற்றில் இல்லாத ‘பிரத்தியேகச்சூழல்’
இங்கே என்ன? இது தானே புதிராய் இருக்கிறது என்கிறாரா? அல்லது புதிருக்கு காரணம் என்னவென்று பதிலளிக்கிறாரா? அவருக்கே வெளிச்சம்!!!.
5. ‘’ சாதியின் இருத்தலுக்கு இன்றுவரை காரணமாகி இருப்பன என்கிறவகையில் பிராமணியத்திற்கும்
இந்து மதத்திற்கும் மிக முக்கியப்பங்குண்டு என்பதுதான் உண்மை’’ என்று குறிப்பிடுகிறார்.
சாதிகளின் தோற்றத்திற்கும், பார்ப்பனியத்திற்கும், இந்து மதத்திற்கும் (இந்து மதமா?
வேத மதமா?) உள்ள சம்பந்தத்தை விளக்காவிடினும் ‘இன்றுவரை’ காரணமாயிருக்கிறது என்று கூறுகிறார்.
இப்படி எழுதிவிட்டால் போதாது. பார்ப்பனி இந்துமத எதிர்ப்புப்போராட்டங்களின் முற்போக்கான
வரலாற்றுத் தன்மைகளை போற்றவேண்டும் என்பதோடு நிகழ்காலத்திலும் பார்ப்பனிய – இந்துமத
எதிர்ப்புப்போராட்டம் நடத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டாக வேண்டும். பொதுவுடமை
இயக்கத் திட்டங்களிலும் நடைமுறைகளிலும் இயக்கரீதியாக இதை அமுல்படுத்த வேண்டும். இதையெல்லாம்
அ. மார்க்ஸ் ஏற்பாரா என்பது தெரியவில்லை.
தமிழகமாயினும் சரி,
இந்தியாவாயினும் சரி, இங்கு நிலவிய உற்பத்தி முறை பற்றிய பரிசீலனை இயக்கரீதியாக நடத்தப்படவே
இல்லை. எனவே, விஷயங்கள் சுற்றிச்சுற்றி வருகின்றன. அரசுக்கும், நிலத்திற்கும் உள்ள
உறவு; கைவினைஞர்களுக்கும் நிலத்திற்கும் உள்ள உறவு; தொழில் பிரிவினையும் அடக்குமுறையும் தன்னகத்தே கொண்ட
சுயாட்சித்தன்மை கொண்ட கிராம சமுதாயம் பயன்படுத்தப்பட்ட விதம் ஆகியன பற்றிய ஆய்வும்,
புரிதலும் இல்லாமல் இங்குள்ள உற்பத்தி முறையை ‘நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை’ என்று
குறிப்பிடுவது நிறுத்தப்பட வேண்டும். கேள்விகளை எழுப்பிக்கொள்ளாவிட்டால் பதில் தேடவேண்டிய
அவசியமிருக்காது. எல்லா முடிவுகளும் சரியென கருதிக்கொண்டிருந்தால் கேள்விகளை எழுப்பிக்கொள்ளவேண்டிய
அவசியம் ஏற்படாது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி எழுதியவை
கூட இயக்கங்களுக்குள் விவாதிக்கப்பட்டதில்லை. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் வறட்டுச்சூத்திரவாதம்
கூட இதில் இல்லை. தேக்கம் நிறைந்திருக்கும்போது கேள்விகள், பரிசீலனைகள் எழுகின்றன.
எனினும் முறையான ஆய்வின் தேவை உணரப்படவில்லை. எனவேதான ‘’இந்தியாவில் ஆசிய உற்பத்தி
முறை நிலவியதா இல்லையா என்பது விவாதத்திற்குரியதாக
இருப்பினும் ஐரோப்பாவில் தோன்றிய முதலாளியத்திற்கு முற்பட்ட உற்பத்தி முறைகட்கும் இங்கு
தோன்றியவைகட்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு’’
(அழுத்தம் என்னுடையது) என அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஐரோப்பாவில் தோன்றிய முதலாளியத்திற்கு
முற்பட்ட உற்பத்தி முறை என்பது நிலப்பிரபுத்துவம்தான்( நாட்டுக்கு நாடு சிற்சில அளவு
ரீதியான வேறுபாடுகள் உண்டு). ஆனால் அவற்றிற்கெல்லாம் சாதிய சமுதாய முறை இருக்கவில்லை.
‘பாரிய வேறுபாடுகள்’ இருக்கும்போது நிலப்பிரபுத்துவம் என்ற சொல்லை இங்கே எப்படி அதே
பொருளில் பயன்படுத்துகிறார் எனத்தெரியவில்லை. ‘பாரிய வேறுபாடுகள்’ இருப்பதாக அங்கீகரித்திருப்பது
முக்கியமான முன்னேற்றமே. ஆனால் ‘பாரிய வேறுபாடுகள்’ என்ன எனத் தீர்மானிக்காமல் சாதியமும்,
வர்க்கமும் பற்றிய ஆய்வு அர்த்தமற்றதாகிறது. ‘நிலப்பிரபுத்துவம் அரை நிலப்பிரபுத்துவம்’
என்னும் கருதுகோள்கள் பொருள் செறிந்ததாயில்லை. ஒருக்கால் தீவிரமாக இப்பாரிய வேறுபாடுகள்
என்ன என்பதை ஆராயும்போது வேறுபட்ட ஒரு கருத்து தொகுப்பையே வந்தடையலாம். ஐரோப்பியர்
வருகைக்கு முற்பட்ட சமுதாயம் பற்றி மட்டுமல்ல இன்றைய சமுதாயத்தையும் பருண்மையாக புரிந்துகொள்ள
வழிவகுக்கும்.
அ. மார்க்ஸ் கூறுவதாவது,
‘’ சாதி உரிமைப்போராட்டங்களின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத்தன்மையைப் புறக்கணித்த பொதுவுடமை
இயக்கத்தினருக்கு ஏகாதிபத்தி எதிர்ப்பே பிரதானமாக இருந்தது. அதுவும் கூட சோவியத் சோசலிச
அரசைக் காக்கும் லட்சியத்திற்காகவே அமைந்தது. இதன் விளைவாக, சாதி உரிமைப்போராட்டங்களிலிருந்து
அந்நியமான இவர்கள் தரகு முதலாளியம் மற்றும்
நிலப்பிரபுத்துவத்தால் தலைமை தாங்கப்பட்ட காங்கிரசுடன் தங்களை அதிகம் இணைத்துக்கொள்ள
நேர்ந்தது. சுருங்கச்சொன்னால் சாதிஉரிமை இயக்கங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மையை
இழந்தன. இதன் விளைவுகள் இன்றளவும் தொடர்கின்றன ’’(ப.19).
மேற்கண்ட அ. மார்க்ஸின்
கருத்துக்கள் பொதுப்படையாக வைத்துப்பார்க்கும்போது சரியே. ஆனால் பிரச்சனையின் அனைத்து
பரிமாணத்தையும் இது விளக்கவில்லை. ஒருவேளை சுருக்கமான முன்னுரையாக இருப்பதால் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
எனினும் பிரச்சனையின் சாராம்சம் முக்கியத்துவம் காரணமாக விரித்துரைக்கப்பட்டிருக்க
வேண்டும். ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பெரும்பாலான கிராமங்கள் கிட்டத்தட்ட சுயேட்சை
அமைப்பாகவும்(Unit) அரசுக்கும், கிராமத்திற்கும் ஒரு மெல்லிய அமைப்பாக இருந்து வந்திருக்கிறது
என்பதையும் (கிராம உபரி, வரியாக அரசுக்கு அளிக்கப்பட்டது. அரசு பதிலுக்கு தனது கடமையாக
உற்பத்திக்கான மராமத்து துறையை கொண்டிருந்தது) ஏற்றுக்கொண்டால் கிராம அதிகாரம் பார்ப்பனர்களிடமோ,
சத்திரியர்களிடமோ அல்லது வேளாளர்களிடமோ இருந்து வந்திருக்கிறது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும்.
தொண்டூழியம் செய்யும் சாதிகளும், கைவினைஞர்கள் சாதிகளும் வறண்ட பூமியில் விவசாயம் செய்யும்
சாதிகளும் இத்துணைக்கண்டத்தின் பெரும்பகுதியினரும் மரபு ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுமாவர்(
இத்தோடு Criminal tribes, Aborriginal tribes ஐயும் சேர்த்துக்கொள்ள வேண்டும்). ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்பது பிரதான முரண்பாடயிருக்கலாம்( சமஸ்தானங்களின் நிலை வேறு). ஆனால் ஏகாதிபத்தியத்தை
விரட்டி விட்டு யார் ஆள்வது என்பது உடனடி சித்தாந்த நடைமுறைப் பிரச்சனையா அல்லது விரட்டியபின்
எழும் பிரச்சனையா என்பதே கேள்வி. அதிகாரம் என்பதே இங்கு கிராம அளவில் இருந்திருக்கும்போது
அதுவும் சாதியோடு பின்னிப்பிணைந்திருக்கும்போது காலனி எதிர்ப்பு என்பது எப்படி இருந்திருக்கவேண்டும்?
சாதி ஒழிப்பு அல்லது சாதி ஆதிக்க ஒழிப்பை சமூகத்தளமாகக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு
போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். கீழே பார்க்காமல்( கிராமிய சாதி அமைப்பு) மேலே மட்டும்
பார்த்தால்( ரஷ்யா, உலக ஏகாதிபத்தியம்) எழுந்த
சிக்கல் இது. இது ஒரு விளைவு அல்லது வெளிப்பாடு
விளைவுதான். காரணம் என்ன? ஆதிக்கசாதி சக்திகள் தங்கள் மரபுவழி ஆதிக்கம் ஏகாதிபத்தியத்தால்
தகர்க்கப்படும் போது அல்லது பாதிக்கப்படும்போது அதன் அறிவுப்பிரதிநிதிகள் ஏகாதிபத்திய
எதிர்ப்புக்கு மக்களைத்திரட்டினர். இதிலிருந்து சற்று மேம்பட்டவராக சோசலிச ஆதிக்க சாதிகள், சக்திகள் பொதுவுடமையாளர் ஆனார்கள்.
தொழிற்சங்கங்கள் முன்பும் சரி இன்றும் சரி ஆதிக்க எதிர்ப்புக்கான மையமாக இல்லாமல் பொருளாதாரக்
கோரிக்கைகளுக்காக மட்டுமே நடத்தப்படும்போக்கு கெட்டிப்பட்டதற்கு இந்த சோசலிச மேல்சாதியினர்
காரணம் இல்லையா? ஆனால் மரபுரீதியாக ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிகள், வெள்ளையனை
எதிர்த்துப்போரிட்டு அந்த இடத்தில் யார் வருவார்கள்? யாரை வைப்பது என்ற கேள்வியை எழுப்பினர்.
பார்ப்பனரல்லாதோர் இயக்கமும் (பெரியார்), தலித் மக்களின் இயக்கமும் (அம்பேத்கர்) இவ்வாறுதான்
தங்கள் நிலைகளைக்கொண்டிருந்தார்கள். இதில்
என்ன தவறு? இன்று எந்த சமூக சக்திகள் வெற்றிபெற்றுள்ளன? தரகு முதலாளிகள் வென்றிருப்பதாக
அவர் கூறலாம். இது ஒரு உண்மை. இதைவிடப் பெரிய உண்மை பார்ப்பனிய – பனியா சக்திகளே வென்றிருக்கின்றன.
சமூக சமன்பாட்டைக் காக்கும் பொருட்டு (Social balance) பிற்பட்ட, தீண்டாமை சாதிகளுக்கு
சில சில்லறைச்சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அம்பேத்கரும் இல்லை என்றால் இச்சலுகைகள்
கூட கிடைத்திருக்குமா? பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட நிலைமைகளை ஒருவர் அறிந்தால் என்ன முடிவுக்கு
வரமுடியும்? சரியாகச்சொல்லுவதென்றால் விஞ்ஞான ரீதியான அணுகுமுறை என்பது இல்லாவிடினும்
இப்பிராமணிய சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் புற நிலைமைகளின் தேவையாய் அதற்கு பொருத்தமாய்
இருந்தன. ‘விஞ்ஞானப்பார்வை’ பார்த்தவர்கள்
வறட்டுத்தனமான, யதார்த்த நிலைமைகளுக்கு பொருத்தமில்லாத படிப்பாளி சூத்திரங்களை மேல்
சாதி அறிவாளித்தனத்தோடு முன்வைத்தார்கள்; இந்த நாடு அப்படிப்பட்டது. குறைந்த பட்சம் கீழ்சாதிகள் எனப்படுவோருக்கு படிப்புரிமை இருந்திருந்தால்
காலனிய எதிர்ப்புப்போராட்டத்தில் இவர்கள் தலைமை எடுக்க வாய்த்திருக்கும். பொதுவுடமை
இயக்கத்தில் வட்டார அளவிலேயே சில பகுதிகளில் கீழ்சாதியினர் தலைமையை எடுக்க முடிந்தது.
அவர்கள் எளிமையான தங்களின் கருத்துக்கள், செய்ல்பாடுகள், தியாகங்கள்
மூலம் மேல் எழும்பி வராதபடி கட்சி அமைப்பும்
அதற்குள் செயல்படும் விநோதமான ‘ஜனநாயக மத்தியத்துவ’ கோட்பாடும், நரித்தனமான பல வழிமுறைகளும்
தடை செய்து விடுகின்றன.
புரட்சி பற்றி பேசுபவர்களுக்கு சிபிஐ, சிபிஎம்
ஐ சாடுவதில் ஒரு மகிழ்ச்சி. ஆனால் இந்திய சமுதாய அமைப்பை அணுகும் முறையில் இவர்களுக்குள்
என்ன பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது?
முடிவாக ‘’ சாதிப்போராட்டங்கள், புரட்சிகரப் போராட்டங்களுடனும்,
புரட்சிப் போராட்டங்கள் சாதிப் போராட்டங்களுடனும் ஒத்திசைய வேண்டும் ’’ எனத்தோழர்
கே.வி ஆர் குறிப்பிட்டுள்ளதை அ. மார்க்சும் ஏற்கிறார்.
வேதாளம் முருங்கை
மரம் ஏறிய கதையாகவே இருக்கிறது. சாதி ஒழிப்புப்போராட்டங்களும், புரட்சிப்போராட்டங்களும்
தனித்தனியா, ஒன்றிசைவதற்கு? புரட்சி என்பது
என்ன? அது யாருக்காக, யாரால் நடத்தப்படுகிறது? இந்தியாவில் அதை நடத்தும், நடத்த வேண்டிய
சக்தி எது? போன்ற பல அடிப்படை விஷயங்களை மேற்குறிப்பிட்டுள்ள கருத்து மூழ்கடித்துவிடுகிறது.
புரட்சிகர இயக்கங்கள் திறந்த மனதோடு சாதிப்பிரச்சனையை அணுகத் தொடங்கியிருப்பதாகவும் ‘’வறட்டுத்தனமற்ற பன்முகப்பட்ட பார்வையோடு
விவாதம் செய்ய எடுத்துக்கொண்டுள்ளதாலும் இந்த சூழலை சாதி ஒழிப்பில் அக்கறையுடைய சிந்தனையாளர்களும்
இயக்கங்களும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ’’ என்கிறார் அ. மார்க்ஸ். தொடங்கும்போதே மற்றவர்களின் அனுபவத்திலிருந்து
கற்றுக்கொள்வதற்குப்பதில் ‘ நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்கிற ஆணவப்போக்கு,
யாரும் உங்களை அணுகிவிடாதிருக்க நல்ல எச்சரிக்கைதான்! வாழ்க அ. மார்க்ஸ்!!
கருத்துகள்
கருத்துரையிடுக