சு. ஆ. வெங்கடசுப்புராய நாயகர் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..

சு. ஆ. வெங்கடசுப்புராய நாயகர் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்..


                                           சீனு. தமிழ்மணி

நீங்கள் எப்படி மொழிபெயர்ப்புத்துறைக்கு வந்தீர்கள்?

தொடக்கத்தில் சாதாரணமாகவும், பின்னர் பயிற்சியாகவும் மொழிபெயர்ப்பினைச் செய்துவந்தேன். பிறகு அதில் உள்ள சவால்களும், சுவாரசியங்களும் அப்பணியை செய்து முடிக்கும்போது கிடைக்கும் மன நிறைவும் என்னைத்தொடர்ந்து இயக்கி வருகின்றன.

ஒரு படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் வருகின்றன. இப்படி பல மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பிரஞ்சு படைப்பு ஏதாவது இருக்கிறதா?
     பலவற்றைச்சொல்லலாம். மதாம் பொவாரி எனும் பிரஞ்சு புதினத்தின் ஐந்து ஆங்கில மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. அவற்றில் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்து Guillemin Fletcher நூல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த ஐந்து மொழிபெயர்ப்புகளைத் தவிர இன்னும் பல மொழிபெயர்ப்புகள் அதே படைப்புக்கு ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. எனவே காலந்தோறும், மாறிவரும் மொழியின் வளர்ச்சிக்கு ஏற்ப ஒரு படைப்புக்கு பல மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புகள் தேவையா?

     இயன்ற வரையில் அடிக்குறிப்புகளைத் தவிர்க்கவே நான் விரும்புவேன். காரணம் அவை வாசிப்புக்கு இடையூறாக அமைய வாய்ப்புண்டு. இது தொடர்பாக நொயல் கொவர்ட் குறிப்பிடுவதைப்போல ‘மாடியில் முதலிரவு நடக்கும்போது அழைப்புமணி ஓசையைப் போன்றது அடிக்குறிப்புகள்’ கட்டாயம் தேவை என்றால் அடைப்புக்குறிக்குள் சுருக்கமாக தரலாம். இல்லையென்றால் படைப்பின் இறுதியில் தரலாம். அடிக்குறிப்புகளைத் தவிர்த்து வாசகருக்கு விளங்கும் வகையில் பிரதிக்குள்ளேயே சொல்ல முடிந்தால் மிகவும் நல்லது.

மொழிபெயர்ப்பின் தேவை குறித்து சொல்லுங்கள்?   
  
     மொழிபெயர்ப்பின் உதவியால் பல எழுத்தாளர்களின் படைப்புகள் புகழ்பெற்றுள்ளன. சான்றாக, லூயி லாபோர்க் எனும் பிரஞ்சு கவிஞர் தம்படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். இவரது கவிதைகளைத்தான் டி.எஸ். எலியட் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். பிரஞ்சு வாசகர்களால் அதிகம் கவனிக்கப்படாத, கௌரவிக்கப்படாத இக்கவிஞரை மொழிபெயர்ப்புதான் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தது. இதேபோல், எட்கர் ஆலன்போ ஆங்கிலப் படைப்புகளை பிரஞ்சுக் கவிஞர்களான பொதலேர், மலார்மே ஆகியோர் மொழிபெயர்த்தனர். பொதலேரின் மொழியாக்கம்தான் சிறந்ததாக கருதப்படுகிறது. இவரது ‘The Purloined Letter’ மறைந்து போன கடிதம் எனும் சிறுகதையைத்தான் புகழ்பெற்ற சிந்தனையாளர் ஷாக் லக்கான் அதிகமாக கையாள்வார். எனவே மொழிபெயர்ப்பின் உதவியால் இருமொழிகளின் இலக்கியக்களமும் விரிவடைகின்றன. புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன என்பதும் விளங்குகிறது.

மொழிபெயர்ப்பாளர் படைப்பாளராகவும் இருக்க வேண்டுமா?

     உங்கள் கேள்வியில் மொழிபெயர்ப்பாளர் படைப்பாளராக இருக்க முடியாது எனும் தொனி வெளிப்படுகிறது. மொழிபெயர்ப்பாளரும் ஒருவகையில் படைப்பாளிதான் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான். படைப்பாற்றல் இல்லாமல் செய்யப்படும் மொழிபெயர்ப்பு வெறுமனே சுவை, சத்து இல்லாத நகலாகத்தான் இருக்கமுடியும். கவிதை மொழிபெயர்ப்பை பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர் கவிஞராக இருந்தால் கவிதை நடை இயல்பாக இருக்கும். அதே வேளையில் ஆர்வ மிகுதியில் தன் வரையறை கடந்து பொறுப்பை மறந்து மூலக்கவிதையின் சாயலில் தன் சொந்தக்கவிதையை எழுதிவிட நேரும் ஆபத்தும் உண்டு. அப்படிக்கிடைக்கும் கவிதை நன்றாக இருந்தாலும், அத்தகைய மொழிபெயர்ப்பைத் தழுவல் என்றுதான் அழைக்கமுடியும்.
     டெபான் மலார்மே எனும் 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரஞ்சு கவிஞர், எட்கர் ஆலன்போவின் ஆங்கிலக்கவிதைகளை மொழிபெயர்த்தார். ஹான்ரி பரிசோ என்ற விமர்சகர் மலார்மே செய்த மொழிபெயர்ப்பின் தவறுகளை ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார். மலார்மே  செய்த மொழிபெயர்ப்பை அப்போது யாரும் சந்தேகித்திருக்க முடியாது. தவறு நேர்ந்தால் படைப்பாளராக இருந்தாலும், விமர்சனத்திற்குள்ளாக நேரும் என்பதை மொழிபெயர்ப்பாளர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழகத்தில் மொழிபெயர்ப்புகளுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

     நல்ல மொழிபெயர்ப்புகளுக்கு எங்கும் வரவேற்பு இருக்கும். பல இலக்கிய இதழ்கள் மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழிலிருந்து பிரஞ்சுக்கு மொழிபெயர்க்கப்படும் படைப்புகள் e trait d’ union,la rencotre aveec l’ Inde போன்ற இதழ்கள் வெளியிடுகின்றன. மேலும் வரவேற்பு கிடைக்கும்படியாட மொழிபெயர்ப்புகள் அதிகளவில் வரவேண்டும்.

மூலப்பிரதிக்கு மொழிபெயர்ப்பாளர் எந்தளவுக்கு நேர்மையாக இருக்கவேண்டும்?
     எந்த மொழிபெயர்ப்பாளரும் ஆசிரியரை மிஞ்சவும் கூடாது. விலகிச்செல்லவும் கூடாது. மூல ஆசிரியர் நம்முன் இல்லாவிட்டாலும் நம்மை நம்பி அவரது படைப்பை ஒப்படைத்து இருக்கிறார் என்பதை நினைவில் வைத்து மொழிபெயர்ப்பாளர் இயங்கவேண்டும்.
     எப்படி ஒரு மருத்துவரை, வழக்கறிஞரை, ஆசிரியரை நம்புகிறோமோ அப்படித்தான் மொழிபெயர்ப்பாளரை நம்புகிறோம். எனவே அவருக்குள்ள கடமையை உணர்ந்து மூலப்பிரதிக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டும். ஆனால் அடிமையாக இருக்கவேண்டியதில்லை. போல் ரிக்கேர் எனும் தத்துவ அறிஞர் தனது ‘SURLA TRADUCTION’ என்ற நூலில் மொழிபெயர்ப்பாளரின் பணிகுறித்த சில விளக்கங்களை தருகிறார். வாசகன் மூல ஆசிரியரிடமும் மூல ஆசிரியரை வாசகனிடமும் அழைத்துவர வேண்டும். இதனை மொழி விருந்தோம்பல் என்கிறார். இரண்டு பேரிடமும் வேலை செய்யும் சேவகனைப்போன்ற நிலைமையில் மொழிபெயர்ப்பாளர் இருக்கிறார். அவர் இருவருக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும். எனவே மூல ஆசிரியரிடம் நேர்மையாகவும், வாசகரிடம் பரிவோடும் அணுகவேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாகும். ஆகவே எந்த இலக்கிய வகைமையாக இருந்தாலும் தன் எல்லைக்குள் இயங்கத் தெரிந்தவராக மொழிபெயர்ப்பாளர் இருக்கவேண்டும்.

சு. ஆ. வெங்கடசுப்புராய நாயகர்

     நவீன பிரஞ்சு மொழி சிறுகதைகளை தேர்ந்தெடுத்து ‘கலகம் செய்யும் இடதுகை’ என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறார். அண்மையில் குர்திய மக்களின் போராட்ட வாழ்வியலை முன்வைக்கும் நாவலை ‘அப்பாவின் துப்பாக்கி’ என்று தமிழாக்கம் செய்துள்ளார். புதுச்சேரியில் பிரஞ்சு பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நன்றி: குமுதம் தீராநதி அக்டோபர் 2014


கருத்துகள்