மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?

மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?
                                           டிம் பார்க்ஸ்
தமிழில்: எதிராஜ் அகிலன்
     நீங்கள் நேசித்து வாசிக்கும் மிலன் குந்தேராவை எழுதியது யார்? விடை: மைக்கேல் ஹென்றி ஹைம். அறிவார்ந்த எழுத்தாளர் என்று கருதப்படும் ஓரான் பாமுக்கை? அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மௌரீன் ஃப்ரீலி. கற்பனை வளம் கூடிய பாண்டித்யம் மிக்க ராபர்ட்டோ காலஸ்ஸோ? ம்ஹ்ம். நான்தான்.

     தன் வேலையை முடித்துவிட்ட பிறகு மொழிபெயர்ப்பாளன் காணாமல் போய்விடவேண்டும். படைப்புத்திறன் மிகுந்த, கவர்ச்சிமிக்க, பேரெழுத்தாளர் மட்டுமே புவியெங்கும் வியாபித்து நிற்க விரும்புவார். அவருடைய வாசகர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் அவருடைய எழுத்தை வாசிப்பதில்லை என்ற யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாது.

     நான் மொழிபெயர்ப்பு பணிகளிலும் ஈடுபடுவதுண்டு என்ற தகவல் என் புதினங்களை வாசிக்கும் வாசகர்களை அதிருப்தி கொள்ள வைப்பதை அவர்களை சந்திக்கும்போது கண்டிருக்கிறேன். தான் முக்கியமான எழுத்தாளர் என்று நம்பும் ஒருவர் செய்யக்கூடாத காரியமாக மொழிபெயர்ப்பு பணியினை பார்க்கிறார்கள்.
     ஒரு மொழிபெயர்ப்பாளர் உண்மையில் என்ன செய்திருக்கிறார் என்பது எப்போதுமே நமக்குத் தெரிய போவதில்லை. வெறிமிகுந்த கவனத்துடன், கலாச்சாரத்தொடர்புகளையும் மனதில் இருத்தி, தான் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட நூலின் பின்புலமாயுள்ள அனைத்துப் புத்தகங்களைப் பற்றிய விழிப்புணர்வுடனும் அந்த நூலை அவர் வாசிக்கிறார். பின்பு சாத்தியமேயற்ற சிக்கலான விஷயத்தை தனது மொழியில் மாற்றி எழுத முனைகிறார். அனைத்தையும் மீண்டும் விளக்கி அதன் தன்மை மாறாமல் எல்லாவற்றின் வரிசைகளையும் மாற்றி மூலப் படைப்பனுவத்திற்கு நிகராகத் தனது பிரதியைக் கொண்டு வர முனைகிறார். ஒவ்வொரு வாக்கியத்திலும் அதன்மேல் கொண்டிருக்கும் விசுவாசமான மதிப்பு மிக்க வளமான கற்பனை ஆற்றலுடன் இணைந்திருக்கவேண்டும். பைசா நகரக்கோபுரத்தை மன்ஹாட்டன் உள்நகர் பகுதிக்கு மாற்றி விட்டு, அது சரியான இடத்தில்தான் இருக்கிறது என்று எல்லோரையும் ஏற்றுக்கொள்ளவைப்பதுதான் இந்த சவால் மிகுந்த பணியின் அளவுகோல்.

என்னுடைய சொந்தப் புதினங்களை எழுதுவதற்கு எனக்கு பெரும் பிரயத்தனமும், அமைப்பாக்கமும் கற்பனையும் வேண்டியிருக்கிறது. ஆனால் வாக்கியத்திற்கு வாக்கியம் மொழிபெயர்ப்பு செய்யும் பணி, அறிவுரீதியாக அதைவிடவும் அதிகமான உழைப்பைக் கோருகிறது. இன்னொரு எழுத்தாளர் எவ்வாறு தன்னுடைய படைப்பை ஒருங்கிணைக்கிறார் என்று பார்க்கும் செய்முறை அனுபவம் இந்த பணியின் மதிப்புமிக்க பக்கம். இது படைப்பு எழுத்துப் பயிற்சி வகுப்புக்கு ஒரு ஆண்டு சென்று வருவதற்கு நிகரானது. மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடும் அளவிற்கு தாழ்ந்துபோக இன்று அரிதாகவே எழுத்தாளர்கள் அகப்படுகிறார்கள் என்பது பெரும் இழப்பு.

     மொழிபெயர்ப்பாளர் ஏழ்மை நிலையில் உள்ளவர் என்றால் சங்கடமான கடிதங்கள் வருவதை தவிர்க்கவியலாது. தொடர்புத்தருணங்கள் தவிர்க்க இயலாதவை. (உள்ளடக்கம் சரி; ஆனால் நடையலங்காரம் சரியில்லை) அல்லது உரைநடை சரளமாகி, தவறுகள் மலிந்திருக்கும். (நடை சரியானது; உள்ளடக்கம் பிழை) மூலப்பிரதியைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும் தன்னுடைய சொந்த மொழியில் மொழிவளமும் மிக்க தேர்ந்த மொழிபெயர்ப்பாளர், நடையழகையும் உள்ளடக்கத்தையும் புத்தம் புதியதான வடிவில் ஒருங்கிணைத்து, மூலப்பிரதிக்கு உண்மையானதாகத் தனது பிரதியை மாற்றிக்காட்டுவார்.

     தனிமனித மேதமையைக் கொண்டாடும் விழாவிற்கு ஒரு மகத்தான எழுத்தாளரின் வாசிப்பு எல்லையை விரிவடையச்செய்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் எப்போதாவது அழைக்கப்படுகிறார். நியூயார்க்கில் அவர்தான் உம்பர்த்தோ எகோ. ஜெர்மனியில் அவர்தான் சல்மான் ருஷ்டி. மொழிபெயர்ப்பின் போது அவர் எடுத்த பல்லாயிரக்கணக்கான முடிவுகளுக்காக  அவர் அங்கீகாரம் பெறுவதில்லை. மாறாக, ருஷ்டியையோ, எகோவையோ மொழிபெயர்க்கும் பேறு பெற்றதற்காக மட்டுமே அவர் அங்கீகாரம் பெறுகிறார். அவர்கள் கேள்விப்பட்டிராத சாமானிய எழுத்தாளர்களை எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்திருந்தாலும் இந்த மரியாதை கிடைத்திருக்காது.

     ஒரு பிரபல எழுத்தாளரின் பெயரோடு, தொடர்புடையவர் என்பதற்காக அல்லாமல், மற்றெவரையும் விட ஒரு தேர்ந்தெடுத்த கதையை ஏற்றுக்கொள்ளும்படி மொழிபெயர்த்த செயலுக்காக ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு அங்கீகாரம் வழங்கும் விருதுகள் மிகச்சில. அப்படிப்பட்ட விருதுகளில் ஒன்றாக இளம் மொழிபெயர்ப்பாளர்களுக்கான விருதை நிறுவிய ஹார்வில் சீக்கரை நாம் பெரிதும் பாராட்டவேண்டும்.

     ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்கேயான மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். உன்னதமான இலக்கியப்படைப்பு காலத்திற்கு காலம் மெருகூட்டல் தேவைப்படாமல் நிலைத்து நிற்கிறது. ஆனால் எவ்வளவு அற்புதமானதாக இருந்தாலும், ஒரு மொழிபெயர்ப்பு தூசுபடிந்ததாகிவிடுகிறது. போப் மொழிபெயர்த்த ஹோமரைவிடப் போப்பையே அதிகமாய் வாசிக்கிறோம். கான்ஸ்டன்ஸ் கார்நெட் மொழிபெயர்த்த டால்ஸ்டாயை வாசிக்கும்போது நாம் கேட்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து நாட்டுக்குரலை. நாம் நம்முடைய பழம்பெரும் படைப்புகளிடம் திரும்பிச்செல்லவேண்டும்.  அவற்றை நம்முடைய சொந்தமொழிவழக்குக்கு தக்கவாறு மாற்றி அமைக்கவேண்டும். இதற்கு புது மலர்ச்சி கொண்ட மணமும், குரலும் வேண்டும். மொழிபெயர்ப்பாளர்கள் மிகத்தேவையானவர்கள் என்பதை ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில மணித்துளிகளாவது அங்கீகரித்து, மிகச்சிறப்பானவர்கள் உருவாக வழிவகுக்க வேண்டும்.

                     நன்றி: தி கார்டியன் நாளிதழ் ஏப்ரல் 25, 2010.
                           காலச்சுவடு, உலகத் தமிழ் இதழ்.


(காலச்சுவடு ஜூலை மாத இதழிலிருந்து பெறப்பட்ட கட்டுரை)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்