பார்வையாளனுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு இயக்குநர்

பார்வையாளனுக்கு பாடம் கற்பிக்கும் ஒரு இயக்குநர்
                  எஸ். கலீல்ராஜா
               தொகுப்பு: லாய்டர் லூன்
நிபந்தனைகள் என்ன?

    குறைந்த பட்ஜெட்டில் வார்னர் பிரதர்ஸ்க்காக நோலன் எடுத்துக்கொடுத்த ரீமேக் படமாக இன்சோம்னியா 100 மில்லியன் டாலர் வசூல் குவிக்க, அப்போதுதான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் நோலன்.

    அப்போது கதைக்கு ஹாலிவுட்டில் ஏகத்துக்கும் பஞ்சம். ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் போன்ற படங்களை தூசுதட்டி காலத்திற்கு ஏற்ப ரீபூட் செய்ய தொடங்கின தயாரிப்பு நிறுவனங்கள். ஏற்கனவே அறிமுகமான கதாபாத்திரங்கள் என்பதால் வித்தியாசமான கதை சொல்லும் முறை வார்னருக்கு தேவைப்பட்டது. பலமும், பலவீனமும் கொண்ட நாயகன், அவனது புதுமையான கார் மற்றும் பயன்படுத்தும் தொழில்நுட்பம், அவனை விட அதிக பலம் கொண்ட வில்லன் என பேட்மேனை புதிய கோணத்தில் நோலன் சொன்னவிதம் வார்னர் பிரதர்ஸ் க்கு பிடித்துவிட்டது.

‘டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்க மாட்டேன்’ , கிராபிக்ஸ் பயன்படுத்த மாட்டேன். முடிந்தவரை அனைத்தையும்  செட் போடவேண்டும். எடிட்டிங்கும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். நான் நினைத்தபடி படம் வரவேண்டும்’ இப்படி நோலன் போட்ட நிபந்தனைகள் அதிர்ச்சி ரகம். புதிய நவீன தொழில்நுட்பங்களில் சினிமாவின் ஆன்மா தொலைந்து போய்விடும் என்பது நோலனின் எண்ணம்.

பாடம் சொல்லும் நோலன்

    சாதாரணமாக படம் பார்க்கும்போது இயக்குநர் கதை சொல்வார். நாம் கேட்கலாம். இல்லை மொபைல் நோண்டலாம். கிண்டல் மெமீஸ் உருவாக்கலாம். ஆனால் நோலனின் படங்களுக்கு சென்று அமர்ந்து விட்டால் அங்கே அவர் வாத்தியாராகிவிடுவார். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாணவர்கள் ஆகிவிடுவோம். அவர் வகுப்பு  முடிந்ததும் அதைப் புரிந்துகொள்ள நிறைய ஹோம்வொர்க் செய்யவேண்டும். அதுதான் நோலனின் மேஜிக்.

  தன் சினிமாக்களைப் போலவே நோலனும் வித்தியாசமானவர். கிறிஸ்டோபர் ஜோனாதன் ஜேம்ஸ் நோலன், பிரிட்டீஷ் – அமெரிக்கப்பிரஜை. அவரது அப்பா, விளம்பர நிறுவனங்களுக்கு காப்பிரைட்டர். அதனால் நோலனின் ஜீனில் அபார கிரியேட்டிவிட்டி. அப்பாவின் சூப்பர் 8 கேமராவை எடுத்துக்கொண்டு படம் எடுக்கப்போகிறேன் என்று நோலன் கிளம்பியபோது, பையனுக்கு வயது ஏழு. கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கார்ப்பரேட் – இண்டஸ்ட்ரி வீடியோக்களை எடுத்துக்கொடுத்தார். கிரியேட்டிவ் மூளை கொண்ட நோலனுக்கு  வெறுமனே இருப்பதை ஆவணப்படுத்திக் காட்டுவது பிடித்தமானதாக இல்லை.

    மூன்று குறும்படங்களை எடுத்துவிட்டு, 1998 ல் ஃபாலோயிங் என்ற சாகச கதையை எடுக்கத் தொடங்கினார். எழுத்தாளனாக ஆசைப்படும் ஒருவன், சம்பந்தம் இல்லாத மனிதர்களைப் பின்தொடர்வதுதான் கதை. அப்படி ஒரு திருடனைப்பின்தொடரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் படம். படத்தின் பட்ஜெட் வெறும் 6000 டாலர். ஆனால் அந்த காசுமே அப்போது நோலனிடம் இல்லை. வாரம் ஐந்து நாட்கள் வேலைபார்த்து சம்பாதித்து அதைக்கொண்டு சனி, ஞாயிறுகளில் படம் எடுத்தார்.

    கருப்பு வெள்ளைப்படமாக வெளியானது ஃபாலோயிங். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘சேவிங் பிரைவேட் ரியான்’ , மைக்கேல் பே இயக்கிய ‘ஆர்மகெடான்’ என டெக்னாலஜியில் படங்கள் மிரட்டிக்கொண்டிருந்த காலம் அது. யானையின் காலுக்கு இடையே புகுந்து பூனை ஓடிய கதையாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர் வசூல் செய்தது ‘ஃபாலோயிங்’. ஒரு காட்சியில் இருந்து சம்பந்தமே இல்லாமல் அடுத்த காட்சிக்கு நகரும் நான்லீனியர் திரைக்கதை, நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று ரசிகர்களின் கற்பனைக்கு விடப்படும் கிளைமேக்ஸ். கதைக்குள் கதை என்று புத்தம் புதியதாக இருந்தாலும் நோலனை அப்போது யாருக்கும் தெரியவில்லை. படம் வசூலித்த தொகை குறைவுதான். ஆனால் போட்ட பணத்தை கணக்கில் கொண்டால் படம் பெரும் லாபம். அந்த உற்சாகமே நோலனை அடுத்த படத்தை நோக்கித் தள்ளியது.

    தன் தம்பி ஜோனதன் எழுதிய ‘மெமன்டோ மோரி’ என்ற சிறுகதையைத் தழுவி திரைக்கதை எழுதி அமைத்து உருவாக்கிய படம்தான் ‘மெமன்டோ’. ரிவர்ஸ் குரோனலாஜிக்கல் என்ற முறையில் திரைக்கதையை எழுதினார். படத்தின் கிளைமேக்ஸை முதல் காட்சியில் சொல்லிவிட்டு, பின் கதையை வண்ணத்தில் படிப்படியாக பின்னாக சொல்லிக்கொண்டே, கருப்பு – வெள்ளையில் முதலில் இருந்து நடந்ததை இன்னொரு பக்கம் சொன்னார். முதலில் கதை ரசிகர்களுக்கு புரிபடவில்லை. வெறும் 11 தியேட்டர்களில் வெளியானதால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை. யூகிக்க முடியாத கிளைமேக்ஸ். மீண்டும், மீண்டும் பார்க்கும்போது பிடிபடும் புதிய விஷயங்கள்.. என அதன் கனமான உள்ளடக்கத்தால் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் கவனத்தை ஈர்க்க, தான் செல்லும் விழாக்கள், கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் மெமன்டோவைப் புகழ்ந்து பேச, 11 வது வாரத்தில் 500 தியேட்டர்களில் வெளியாகி, பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஐந்து மில்லியன் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 400 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இதில் பயன்படுத்தப்பட்ட ஷார்ட் டெர்ம் மெமரிலாஸ் என்பதை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் படமான கஜினியினை நீங்கள் அறிவீர்கள்.

நாயகன் – வில்லன் முரண் நியாயங்கள்

    அசாத்திய நாயக கதைகளில் வில்லனுக்கு என்று எந்த நியாயமும் இருக்காது. நோலன் வில்லனுக்கு நியாயத்தை உருவாக்கினார். ‘மனிதர்கள் மனிதத் தன்மையை இழந்துவிட்டார்கள். அவர்கள் சுயநலவாதி ஆகிவிட்டார்கள் அவர்களை அழிக்க வேண்டும்’  என்பது வில்லனின் நியாயம். ‘அவர்களின் எண்ணத்தை அழிக்கவேண்டும் அவர்களை அல்ல ’ என்பது நாயகத்தரப்பு நியாயம். இப்படி வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட இரு கதாபாத்திரங்களை நாயக – வில்லனாக உருவாக்கி அதோடு, பல அறிவியல் தொழில் நுட்பங்கள் என வித்தியாச படைப்பாக நோலன் பேட்மேன் படங்களை எடுத்தார்(பேட்மேன் பிகின்ஸ், தி டார்க் நைட்(2008), தி டார்க் நைட் ரைஸஸ்).




நோலனின் இயல்பு
    திரைக்கதையில் புதுப்புது உத்திகளைக்கையாண்டாலும் நோலன் ஒரு பழமைவாதி. தன்னை ஒரு லுட்டிட் என்று சொல்லிக்கொள்பவர். அதாவது, மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை இயந்திரங்கள் வைத்து செய்பவர்களை எதிர்ப்பவர்கள் லுட்டிட்கள் எனப்படுவார்கள். அந்த வகையில் இன்றுவரையில் செல்போன் கூட பயன்படுத்தாதவர் நோலன். இமெயில் ஐடியும் கிடையாது. அலுவலில் தவிர்க்க முடியாது, என்பதால் அலுவலக மெயில் ஐடி மட்டும் உண்டு. மிக அபூர்வமாக மெயிலைத் திறந்து பார்ப்பார். அவருடைய நண்பர்கள் அவரை கடிதம் மூலமே தொடர்புகொள்வார்கள்.

கனவுக்குள் ஒரு கனவு வேட்டை

    நோலன் இயக்கிய இன்செப்ஷன் புதுப்பாணி சினிமாவில் சரவெடி. படத்தின் திரைக்கதையை ஏழு ஆண்டுகள் செலவழித்து எழுதியிருக்கிறார். அடுத்தவனின் கனவுக்குள் புகுந்து அவனது ஐடியாவைத் திருடும் அட்டகாசமான படம். படம் பார்த்த பலரும் எதுவும் புரியவில்லை என்றாலும் படத்தில் ஏதோ இருக்கிறது என்று மீண்டும், மீண்டும் பார்த்து பாராட்டியதில் வேர்ல்டு கிளாசிக் அந்தஸ்து கிடைத்துவிட்டது படத்திற்கு.

    படத்தில் பேரடாக்ஸ் தியரி, பென்ரோல் படிக்கட்டுகள், லூசிட் கனவுகள் என ஏராளமான அறிவியல் சங்கதிகளைப் புதைத்திருப்பார் நோலன்.
                               நன்றி: ஆனந்த விகடன்

    ஒட்டுமொத்த வித்தையை இறக்கி எடுக்கும் படங்கள் எப்படியோ! நோலனின் படங்கள் ஆழ்ந்த கவனத்தையும், பயன்படுத்தும் பல அறிவியல் கொள்கைகளையும் புரிந்துகொண்டால் மட்டுமே படத்தினை முழுமையாக ரசிக்கமுடியும். இவரின் படங்களை ரிலையன்ஸ் ஹோம் வீடியோ நிறுவனத்தில் தமிழ் மொழிபெயர்ப்பில் விலை


ரூ. 100 ல் எளிதில் பெறலாம். அல்லது நல்ல டிவிடியாக ஜெமினி பார்சன் காம்ப்ளெக்சிலும் குறைந்த விலையிலும் வாங்கிக்கொள்ள முடியும். பயணிக்கும் பேருந்தில் கூட பார்க்கமுடியாத படங்களைத்தான் மிகப்பிரயத்தனப்பட்டு வரிச்சலுகையோடு, திருட்டு வி.சி.டி கூடாது என்று தன் படங்கள் வரும்போது மட்டும் அறிக்கைவிட்டு கலைக்காக உழைக்கிறார்கள் சில இன்ஸ்ப்ரேஷன் கலைப்பெருமகன்கள்.

கருத்துகள்