தியோ ஏஞ்சலோ பவுலோஸ்: நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா

நிலத்தை கைவிட்டுச் செல்பவர்களுக்கான இரங்கற்பா:
மறுகட்டமைப்பு
ப்ளோரியன் ஹோப் – 1971






படம் பற்றி தங்களது கருத்துக்கள் மற்றும் முன்னுரையோடு தொடங்குவோம்.

      கிரீக் நாளிதழ்களில் பெண்கள் தம் கணவர்களை கொலை செய்வது குறித்த செய்திகளை நிறையவே நான் கவனித்துவந்திருக்கிறேன் என்றாலும் குறிப்பிட்ட ஒரு வழக்கு என்னை ஈர்த்து சிந்திக்கவைத்தது. கிரீக் நாட்டின் ஏழ்மையான மிகவும் பிற்படுத்தப்பட்ட வளர்ச்சியடையாத பகுதியாக எபிரஸில் இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தன.  அக்கிராமத்திற்கு தொடர்ச்சியாக சென்று அண்மையில் நடந்த குற்றம் ஒன்றினை பத்திரிகையாளரின் புலனாய்வு பார்வையில் பதிவு செய்ய முடிவெடுத்தேன். நான் குற்றம் நடந்த இடத்தில் வசித்தவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்களது குழந்தைகள், விசாரணைக்கு முன்னதாக பல விவரங்களைத் தெரிவித்த பிரதிவாதியின் வழக்குரைஞர் ஆகியோரிடம் உரையாடி பல்வேறு விவரங்களைச் சேகரித்தேன். இவைதான் எனது கதைக்கு அடிப்படையாக அமைந்தது. எபிரியன் கிராமத்தின் வாழ்க்கையை அக்குற்றச்சம்பவமான கொலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டே திரைப்படம் திரையிடப்பட்டது.
      நான் இந்தக்கொலையில் தனிப்பட்டரீதியில் சாட்சியாகக் கூட பங்காற்றவில்லை; குற்றம் தொடர்பான விவரங்களை பெரும் நகரத்திலிருந்து வந்து சேகரித்தேன். ஆனால் இதனை புனைவு என்று தொகுப்பது எனக்கு அறமில்லாததாக தோன்றியது. விஸ்கான்டினுடைய ‘ஒசேசியொன்’ படம் கூட இதுபோலான கதையைக் கையாண்டிருக்கிறார். மறுகட்டமைப்பு படம் இரண்டு வித அணுகுமுறைகளை  இந்த வழக்கில் கையாள்கிறது. முதலாவது, அந்த வழக்கு தொடர்பாக நான் திரட்டிய விஷயங்களின் அடிப்படையிலான தன்மையைக் கொண்டது. இரண்டாவது, காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய பங்களிப்பு குறித்து அவர்கள் மறுகட்டமைப்பு செய்யும் விஷயங்களைக் கொண்டது. படத்தின் நிகழ்வுகளுக்கிடையே அரசு முறையாக கட்டமைத்தவற்றுக்கும், நான் என்னுடைய அனுபவத்தின் பகுதியாக கண்டறிந்த சேர்த்த விஷயங்களுக்கும் முரண்பாடுகள் உருவாகி ஒரு கேள்விமுறை பிறக்கும். யதார்த்த எழுத்துமுறையிலிருந்து மாறுபட்டு மையமான இந்த மேற்கூறிய முறைகளில் மாறிக்கொண்டே இருக்கும். உங்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். படமானது, கொலை நிகழும் சம்பவமான முதல் காட்சியிலேயே முடிந்துவிடுகிறது. ஆனால் அங்கே என்ன நடந்தது என்று பார்வையாளர்களுக்கு மர்மமாக இருக்கும். காரணம் கேமரா தொடர்ந்து வெளியில் இருக்கும். உண்மையில் நடந்த சம்பவத்திற்கு அது சாட்சியாக இருக்காது. வெறும் ஒலிகள் மட்டுமே கேட்கும்.

வழக்கிலுள்ள சட்டரீதியான விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளவில்லையே?

      நிச்சயமாக இல்லை. முழுநாட்டிலும் விதியினால் புறக்கணிக்கப்பட்ட அழிந்துபோன ஒரு பகுதியை எதனால் இப்படி ஆனது என்று நான் கவனிக்க முயன்றேன் என்பதுதான் இதில் என்னுடைய பார்வையாக உள்ளது.

இதன் அர்த்தமாக நீங்கள் அப்பகுதியின் வரலாற்றுப் பின்புலத்தையும் அதன் சமூக அடுக்குகளையும் விளக்க முயன்றீர்கள்...

      அப்படியல்ல. இப்பகுதியில் சமூக, பொருளாதார அடுக்குகள் குறித்தெல்லாம் பேச தொடக்கத்தில் ஏதும் இல்லை. இப்பகுதியின் பொருளாதாரமாக இங்கிருந்து ஜெர்மனிக்கு சென்று உழைத்து அனுப்பும் பணம்தான் அடிப்படையாக உள்ளது. இப்பகுதியின் எளிமையான அடிப்படை பொருளாதாரம் குறித்த உண்மை என்பது இதுதான் என்று கூறலாம். இப்படம் என்னைப் பொறுத்தவரை நிலத்தை கைவிட்டு சென்ற மக்களுக்கான இரங்கற்பா என்பேன். இவை அனைத்தும் 1962 இல் மேற்கு ஜெர்மனி தன் மானிய உதவிகளில் ஒன்றாக கிரீக் குடிமக்களுக்கு ஜெர்மனியில் வாழவும், பணி செய்யவும் அனுமதி அளித்ததிலிருந்து தொடங்குகிறது.  இந்த விவகாரத்தை கிரீசில் உள்ள இடது மற்றும் வலது போக்கு பத்திரிகைகள் மிகவும் பரபரப்பாக விவாதித்தன. சிலர் குடியுரிமை வழங்குவது என்பது பெரும் பேரழிவு என்று கூறினர். மற்றவர்கள் வலே பல்லாயிர வேலை செய்யும் தொழிலாளர்கள் இங்கிருந்து செல்வது உழைக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு எந்த ஆபத்தும் விளைவிக்காது என்பதோடு, ஆட்சியில் உள்ளவர்களுக்கும் கேள்வி கேட்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் கூட்டம் இல்லை என்கிற நிம்மதி என்பதாக நேர்மறையாக எண்ணி அதனை சரியெனவே நம்பத் தொடங்கினர். உதாரணமாக என்னுடைய அனைத்து நண்பர்களும் அயல்நாடுகளில்தான் வசிக்கிறார்கள்; இல்லையென்றால் இங்கு சிறையில் அடைபட்டிருக்க வேண்டும். அவர்களுக்காகத்தான் நான் மறுகட்டமைப்பு படத்தினை உருவாக்கினேன். இப்படம் முன்னமே நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் குறித்ததே. அதைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கானது. மேலும் சில விஷயங்களும் இதில் உள்ளன. எபிரஸ் பகுதி மிக தொன்மையான வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. அதன் மூலாதாரமாக பண்டைய காலத்தையே கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிலத்தை விட்டு வெளியேறுவது நாம் அதைத் தடுக்க முடியாமல் கையறு நிலையில் பார்ப்பதுமான வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று. அவர்கள் வெளியேறிச் செல்லும் நிகழ்வென்பது அவர்களின் நாகரிகம் ஒன்று இறுதிக்கு வந்துவிட்டது என்பதைக் குறிக்கிறதாக கொள்ளலாம்.