நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா இறுதிப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்






படங்களைத் தயாரிக்கும் முன்னணி பெரும் நிறுவனங்கள் திரையரங்கு குழுமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாங்கள் தயாரிக்கும் படங்களை மட்டும் திரையிடக்கூறுகிறார்கள் என்கிறீர்களா?

       திரையரங்குகளில் எனது படம் திரையிடப்பட நான் ஒரு விநியோகஸ்தரைக் கண்டுபிடித்து அவரிடம் படத்தை ஒப்படைக்கவேண்டும். ஆனால் எனது படம் அவர்களது தயாரிப்பான படங்களோடு போட்டியிடுவதாக அவர்கள் நினைத்தால் அதனை அலமாரியில் வைத்து விட்டு மறந்துவிடுவார்கள்.

மொத்தமாக அனைத்து படங்களுமாக சேர்த்து கிரீசில் எத்தனை படங்கள் உருவாக்கப்படுகின்றன?

       ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுபவை மொத்தம் 120 படங்கள் தோராயமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஏதேன்ஸில் வெளியிடப்படாது. அவை முறையான முதல் காட்சி என்பதைத் தவிர்த்து பொதுவான வெளியிடலாக வெளியிடப்படும். கிரீஸ் நாட்டில் சில விதிகள் உள்ளன. மக்கள் படங்களின் கீழ் வரும் சப்டைட்டில்களை வாசிக்க மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் கிரீசில் குடும்பத்தோடு படம் பார்க்கச்செல்பவர்கள் அதிகம் என்பதால் எந்தப்படம் வயது வந்தவர்களுக்கானது என்று சான்றிதழ் பெற்றிருக்கிறதோ அப்படம் இயல்பாகவே தோல்வியைத் தழுவும். எனவே இருக்கும் ஒரே வாய்ப்பு குடும்பச்சித்திரங்களை உருவாக்குவதுதான்; அப்போதுதான் வயது வந்தவர்கள் தம் குழந்தைகளோடு படங்களைக் காண வருவார்கள்.

மறுகட்டமைப்பு படத்திற்கு என்ன நிகழ்ந்தது?

       இப்போது வரை அப்படத்தினை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் கண்டுள்ளனர். இதனோடு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தினை ஒப்பிட்டால், அவற்றினை 1.5 கோடி மக்கள் காண்கிறார்கள்.

எப்படியிருந்தாலும் தங்களின் திரைப்பட பங்களிப்பு மறக்கமுடியாத ஒன்றுதான். முன்பிருந்ததை விடவே தற்போதிருக்கும் நிலைமை பரவாயில்லை என்று நீங்கள் நம்பவில்லையா?

நாம் ஒரு உண்மையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். என்னுடைய படத்தினை மையமாக திரையிடாமல் ஒரே ஒரு திரையரங்கில் திரையிடுகிறேன். மற்றவர்கள் தங்கள் படங்களை பதினைந்து திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். இப்போது இந்தப்படம் தோல்வி அடைந்தால் கூட சில நூறுபேர்களாவது இதனைக் கண்டிருக்க முடியும். ஆனால் என்னுடைய படத்தினைப் பார்க்க யார் வருவார்கள்? அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் அந்த எண்ணிக்கை முக்கியம்தான்.

விநியோகஸ்தர் தான் தயாரிக்காத படத்தில் லாபம் வரும் என்றாலும் அதனை அவர் ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறுகிறீர்களா?

       மறுகட்டமைப்பு படத்தினை கிரீசின் மிகப்பெரும் விநியோகஸ்தருக்கு திரையிட்டு காட்டினேன். படம் தொடங்கிய 10 நிமிடங்களுக்கு பிறகு எழுந்து நின்ற அவர் ‘எனக்கு இப்படம் ஆர்வமூட்டவில்லை’ என்று கூறிவிட்டார். அப்படத்தின் இறுதி வரை கூட அவர் காத்திருக்க தயாராக இல்லை. என்னுடைய அடுத்த படத்திற்குக் கூட பெரும் விநியோகஸ்தரை என்னால் கண்டுபிடித்துவிட முடியும்தான். அதற்கு அப்படத்தினை வெளிநாடுகளில் விற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையை அவருக்கு நான் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உண்டு.

தணிக்கை அமைப்பு எப்படி செயல்படுகிறது?

       படத்தினை நாங்கள் நிறைவு செய்துவிட்டாலும், தணிக்கை அமைப்பினைத் தாண்டி படம் வெளிவரும் என்றெல்லாம் உறுதி கூறுவது மிகவும் கடினமான ஒன்றே. உண்மையைக் கூறவேண்டுமெனில் படம் தடைசெய்யப்பட்டு விடும் என்கிற பயமும் எங்களுக்கு உண்டு. எனவே படத்தினை முதலில் விமர்சகர்களுக்கு திரையிட்டு காட்டிவிடுவேன்.

பின்னர்தான் தணிக்கை அமைப்பிற்கு திரையிட்டு காட்டுவீர்களா?

       அப்படியேதான். அடுத்த நாள் படம் பார்த்த விமர்சகர்கள் அனைவரும் மிகச்சிறந்த கலைப்படைப்பை கண்டதாக எழுதுவார்கள். அந்த பரவசமான அனுபவத்துடன் தணிக்கை அலுவலகத்திற்கு செல்லவேண்டியதுதான். விமர்சகர்களுக்கு திரையிடுவதும் கூட அதற்காகத்தான். தணிக்கை அமைப்பினர், தாம் படத்தினை தடை செய்தால் மக்கள் ஆட்சேபித்து போராட்டம் நடத்தும் ஆபத்து உள்ளது என்பதையெல்லாம் உணராதவர்கள்.

அவர்கள் படத்தினை முழுக்க வெட்டுவார்களா?

இல்லை. உள்துறை அமைச்சகத்தில் உள்ள படத்தின் காட்சிகளை வெட்டும்படி கூறுகிறவர்களிடம் அது குறித்து சிறிது விவாதம் நடத்தும்படி இருக்கும்.



பிரபலமான இடுகைகள்