36 நாட்களில் : தியோ ஏஞ்சலோ பவுலோஸ் த- லாய்ட்டர் லூன்







உங்கள் படங்களுக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறேன். சில பையன்கள் துண்டறிக்கைகளை விநியாகிக்கும் காட்சி எதைக் குறிக்கிறது?

இது அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிலைமைகளைக் குறிக்கிறது. துண்டறிக்கைகள் கொடுப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் அதனைப் புறம் தள்ளி அப்படி செயல்படுகிறார்கள். படத்தின் உள்ளடக்கமாக இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று சட்டம், இன்னொன்று இளைஞர்கள் அதனை சவாலாக ஏற்று அதற்கு எதிராக செயல்படுகிறார்கள். அரசு குறித்து சில விஷயங்களை அடிக்கோடிட்டு காட்ட இது ஒரு வழியாகும்.

இறுதிக் காட்சியில் மூன்று அரசு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்படுகிறார்களே ஏன்?

       சர்வாதிகாரத் தலைமையின் ஆட்சிக்கு முன்பு தூக்கிலிடுவதுதான்  பெருமளவு நடைமுறையில் இருந்தது. ஆனால் நடைமுறையில் ஏதேனும் ஒரு பழைய முறையில் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தனர். இரண்டாம் உலகப்போரில் மெட்டாக்சஸ் இறந்த பிறகே, அந்த நிகழ்ச்சிகள் குறித்த மக்களின் கருத்துகள் சுதந்திரமாக வெளிப்படத் தொடங்கின.

பின்டாரின் எழுத்துகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

       முசோலினி ரோமன் நாட்டு செவ்விலக்கியங்களை தனது பாசிச திட்டங்களுக்காக கொள்ளையடித்துப் பயன்படுத்திக்கொண்டார். கிரீசிலிருக்கும் பாசிசவாதிகளும் செவ்வியல் இலக்கியங்களை அதே போலத்தான பயன்படுத்திக்கொள்கிறார்கள். மெட்டாக்சஸ் அதிகாரத்தில் இருந்தபோது மூன்று சிறந்த குடிமைச் சமூகங்களாக தொன்மையான காலம், பைஸன்டைன் தலைமுறை மற்றும் மெட்டாக்சஸின் அரசு என்று அவர்களாக கூறி விளம்பரம் செய்துவந்தார்கள். அவர்கள் கூறும் பழமையான எழுத்துகளை யாரும் புரிந்துகொண்டு அவர்களது நிலை குறித்து என்றுமே புரிந்து கொண்டுவிட முடியாது. அவை முழுக்க எதுகை மோனைகளாக பொருளில்லாத சொற்களில் இருக்கும். அதில் வேறேதும் இல்லை.

படம் முதலிலிருந்தே குழப்பமாக இருக்கிறது. சங்கத்தலைவரை கொலை செய்வது யார்?

அதை யாரும் அறிய மாட்டார்கள். நமக்கு தெரிந்ததெல்லாம் மக்கள் அணிவகுத்து செல்லும்போது அவர்களை நோக்கி சுடும் மனிதர்களில் அவரும் ஒருவர் என்று கொள்ளலாம். துப்பாக்கி விசையை யார் இழுத்தது என்று தெரியாவிட்டாலும் அந்த மனிதர் பலருடன் இணைந்து சமமாக பொறுப்பை ஏற்று செயல்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

உங்களது படமானது வலுவான அரசியல் உண்மைகளை பேசுவதில்லை. பல விஷயங்களை பார்வையாளர்கள் நிறைவு செய்வார்கள் என்று காட்சியிலிருந்து வெளியேறி விடுகிறீர்கள். ஆனால் இது நிச்சயமில்லாத தன்மையை ஏற்படுத்துகிறதே?

       உண்மைதான். நான் முன்னர் கூறியதுபோல குறிப்பிட்ட சூழலை எதிர்பார்த்திருந்தேன். அதாவது கொடுங்கோலாட்சி. மக்கள் தம்முடைய களங்கமற்ற தன்மையினால் இன்னொரு தீங்கற்றவனை குற்றவாளியாக முடிவு செய்கிறார்கள். எவருமே அவன் அதைச் செய்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அறிய முயலுவதில்லை. அதிகார முகமூடி தருகிற உற்சாகத்தோடு சிறிதும் கருணையில்லாமல் அவனைக் கொல்வது என்று உறுதியான முடிவிற்கு வருகிறார்கள். தன்னை நிரபராதி என்று ஒருவன் நிரூபிக்க உதவும் சட்டத்தின் பலன்களை, வாய்ப்புகளை அவனுக்கு வழங்காமல் அவனைக் கொல்வது என்பது மிக மோசமான சமூக சூழலாக கருதுகிறேன். இது என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ஒருவரைக் கொல்வதற்கு விஷம் உள்ளிட்டவை ஏற்றுக்கொள்ளப்படலாம். இந்த சூழ்நிலை மக்களை வெகுகாலத்திற்கு அச்சத்தில் உறைய வைத்த ஒன்றாக இருந்து வந்தது.

படத்தில் அமெரிக்கன் கேங்ஸ்டர் படத்தின் சில ஒற்றுமைகள் காணப்பட்டன. சில கதாபாத்திரங்கள் அதுபோன்ற தன்மையில் உருவாக்கப்பட்டிருந்தன.

       ஆமாம். கொலை செய்பவர் 1930 களில் வந்த கேங்ஸ்டர் போல உடை அணிந்திருப்பார். காவல்துறையை சேர்ந்தவராக இருக்கும் அதே நேரத்தில் கேங்ஸ்டர்களில் ஒருவராகவும் இருக்கும் அவரை அங்கே வேலன்டினோ என்று அழைப்பார்கள். திரைப்பட நட்சத்திரத்தின் சாயலை பெருமளவு அவர் கொண்டிருந்ததால்தான் அப்படி பெயர். படத்தில் யாரெல்லாம் பேச தன்னை வெளிப்படுத்திக்கொள்ள  முயற்சிக்கிறார்களே அவர்களெல்லாம் அழிக்கப்படுகிறார்கள். அரசியல் நிபுணர்கள் மட்டும் தமது கருத்துகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் தாய்க்கு இது எப்படி பொருந்தும் என்றால், அதிகாரம் கொண்டவரும் பணக்காரரும் ஆவார். இதனாலேயே யாரும் அவரை எதுவும் செய்துவிட முடியாது.

வர்க்கப்போராட்டம் குறித்து..?

       நான் திரும்ப திரும்ப சலிப்பான இத்தகைய விஷயங்களை விலக்கவே விரும்புகிறேன். படம் வரலாற்றின் குறிப்பிட்ட காலகட்டத்தின் ஒரு வர்க்கம் குறித்துப் பேசுகிறது. முந்தைய தலைமுறை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பின் அவர்களது மகன்களும் அப்படியே அதில் ஈடுபடுகிறார்கள். கிரீசில் இப்படி பல குடும்பங்கள் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் அவர்கள் பலரும் பணத்தினை தனக்கான இணையாக கருதினார்கள். தன்னுடைய பெயருக்கான அங்கீகாரமாக வரதட்சணையைப் பெறத்தொடங்கினார்கள்.  கிரீசின் விதியை 200 க்கும் மேற்படாத குடும்பங்கள்தான் தீர்மானிக்கின்றன. உதா. ஆனாசிஸ்ஸினை எடுத்துக்கொள்வோம். கிரீஸ் நகர மத்தியில் தன் மகன் நினைவாக கட்டியுள்ள கோவில், நகரமே அவருடையது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.

36 நாட்களில் திரைப்படம் வணிகரீதியில் வெளியிடப்பட்டதா?

ஆமாம். ஏதேன்ஸில் 50 ஆயிரம் திரையரங்கு அனுமதிகளும், மொத்தமாக நாடு முழுவதும் 1 லட்சம் என இருக்கக்கூடும். ஆனால் கிரீசில் இது அதிகமான ஒன்று எனக் கூறமுடியாது.

உங்களுக்கு மாநில அரசின் மானிய உதவிகள் கிடைத்தனவா?


       ஒரு பென்னி கூட கிடைத்ததில்லை. ஆனால் அவர்கள் கிரீசில் திரைப்பட அனுமதிச்சீட்டில் 50 சதவிகித அளவு விதிக்கப்படும் வரியை வசூலிக்க என்றும் மறப்பதேயில்லை. 
(36 நாட்களில் அத்தியாயம் இதோடு நிறைவு பெறுகிறது)
நன்றி: www.Fotor.com

 http://www.theoangelopoulos.gr/

பிரபலமான இடுகைகள்