நாடிழந்தவர்களுக்கான இரங்கற்பா: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
குடியுரிமை
தரப்படும் முன் எப்படி அயல்நாடுகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
அது எளிதானதாக இல்லைதான். ஆனால் ஏதோ ஒரு
வகையில் அவர்கள் அங்கே வாழ்ந்தார்கள். கிரீக் மக்கள் பெரும் திரளாக அயல்நாடு
சென்று வாழவேண்டிய தேவை இருந்தது. நூற்றாண்டு பிறந்த காலத்தில் பெரும்பாலோர்
அமெரிக்கா சென்று குடியேறினார். அமெரிக்காவில் ஒன்று அல்லது ஒன்றரை கோடி கிரீக்
மக்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். ஜெர்மனியில் 3 லட்சம் மக்கள் முன்னமே
குடியேறி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைத்து இடங்களுக்கும் பரவி வாழ்ந்து உழைத்து ஈட்டும்
பணத்தை தமது தாய்நாட்டிற்கு அளித்து பொருளாதார பங்களிப்பையும் ஆற்றுகிறார்கள். அமெரிக்கர்கள்
இன்று கிரீஸ் நாட்டிற்கு வந்து அதனை தொழில்மயமாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் அதில்
அவர்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து செய்ய முனைவார்கள். கிரீஸ் இன்று பல
மாநிலங்களைக் கொண்டதாக மாறியுள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னே இரு அமெரிக்கர்கள்
16 வயதான கிரீக் பெண்ணை வன்புணர்ச்சி செய்துவிட்டனர். அவ்வழக்கு விசாரணையில் அவர்கள்
அச்சமயத்தில் கிரீஸ் நாட்டில் இல்லை, ஆனால் அமெரிக்காவும் செல்லவில்லை என்றபோதும் சரியான
சாட்சியத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
கிரீஸ் ஒரு
மூன்றாம் உலக நாடு என்று குறிப்பாக உணர்த்துகிறீர்களா?
அந்த முறையில் விஷயங்கள் நடைபெறுகின்றன. மூன்றாம்
உலக நாடு என்பது ஆஃபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றல்ல.
கிரீசும், துருக்கியும் அதோடு இணைந்தவை என்றுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக
கூறுவேன். நாங்கள் பல குறுக்கிடும் சாலைகளைக் கொண்ட நவீன உலகின் நாகரிகத்தைக் கொண்டிருக்கிற
குடிமைச்சமூகமாக மாறியிருந்தாலும் மேற்குலகிற்கு சொந்தமானவர்களாகவோ, அல்லது கிழக்கு
ஐரோப்பாவின் ஒரு பகுதியாகவோ நாங்கள் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட நிலைப்பாடினைக்
கொண்டிருக்கிறோம். அமெரிக்க அரசியலில் நாங்கள் முக்கியமானவர்களாக இருக்கிறோம். அப்படி
நாங்கள் இல்லாவிட்டால் எங்களது விஷயத்தில் அவர்களது செயல்பாடு நிச்சயம் வேறுபட்டதாகவே
இருக்கும்.
மறுகட்டமைப்பு
படம் எப்படித் தயாரிக்கப்பட்டது?
கிரீசில் ஒவ்வொரு சுயேச்சையான தயாரிப்பு நிறுவனம்
தயாரிக்கும் படம் போலத்தான். படத்தினைத் தொடங்கும் அதற்கு கிடைத்த தயாரிப்பாளர் உண்மையிலேயே தயாரிப்பை தொழிலாக கொண்டவரல்ல. அவர் ஒரு திரைப்பட தொழில்நுட்ப
நிபுணர்தான். வணிகரீதியான பல்வேறு திரைப்படங்களுக்கு பணிபுரிந்து வந்தாலும் சமூகத்தின்
மீதான அக்கறையை தன் உள்ளத்தில் கொண்டிருந்தவராக இருந்தார். நேர்த்தியான படம் எடுக்கும்
பலரோடு பணிபுரிந்திருந்தாலும் அதைத்தாண்டி நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்று அவர் விரும்பினார்.
மறுகட்டமைப்பு படத்தினை அவர், அவரது தம்பி, மற்றும் நண்பர்கள் ஆகியோரின் நிதி பங்களிப்பு
கொண்டு சிறிய தொகை ஒன்றினை நிர்ணயித்து படத்தினை காட்சிப்படுத்த தொடங்கினோம். தொடக்கத்தில்
திட்டமிட்ட தொகை 2500 ஜெர்மன் மார்க்குகளாக இருந்தது என்றாலும் படம் உருவாகிய பின்பு
அது 46000 மார்க்குகளாக அதிகரித்துவிட்டிருந்தது.
இயக்குநராக
பெற்ற முந்தைய அனுபவங்களைக் கூறுங்கள்.
முதலில் நான் உருவாக்கிய குறும்படம் ஒன்று விமர்சகர்களால்
பெரிதும் பாராட்டப்பட்டு அது வானொலி, தொலைக்காட்சி (கிரீசில் தொலைக்காட்சி கிடையாது) வழியாகப் பரவி எனக்கு
விளம்பரம் கிடைத்தது. ஆனால் மறுகட்டமைப்பு படத்தினைப் பற்றி கூறவேண்டுமென்றால்,
தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், உதவி ஒளிப்பதிவாளர், தயாரிப்பு நிர்வாகி மற்றும்
திரைக்கதை ஆசிரியாகிய நான் என ஐந்து பேர் கொண்ட குழுவாகத்தான் படப்பிடிப்பினைத்
தொடங்கினோம். கிடைத்த இரு நடிகர்களில் ஒருவர் மதுபானக்கடையில் வேலை செய்பவர்,
மற்றொருவர் வேலை இல்லாதவர் என யாரும் முறையாக நடிப்பினைக் கற்றவர்களல்ல. வேலை
இல்லாதவர் அரசியல் காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு பின் வெளியே வந்து
இரண்டு ஆண்டுகளாகியும் நிரந்தரமாக எந்த வேலையும் அவருக்கு கிடைக்கவில்லை. நாங்கள் அவர்
நடிப்பதற்காக சம்பளம் பேசி ஒரு வேலை செய்வது போல ஒப்புக்கொள்ள வைத்தோம். மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்களையும்
படப்பிடிப்பு தளத்தில்தான் கண்டுபிடித்தோம். முன்னணி கதாபாத்திரமாக நடித்த பெண்
உண்மையில் தையல் வேலை செய்பவராவார். தேர்ச்சியான நடிகையல்ல. அவரைத்தேர்ந்தெடுக்க காரணம் அந்த
கதாபாத்திரத்திற்கு உடலளவில் தகுதியாய் இருப்பார் என்றல்ல; உளவியல்ரீதியான அளவில் பொருத்தமானவராக இருந்தார். மேலும் அப்பெண்ணுக்கு
எழுதவோ படிக்கவோ தெரியாது.
நீங்கள்
எழுதுகிற வசனங்களை நடிகர்கள் இதயப்பூர்வமாக பேசி உணர்ந்து நடிக்கிறார்கள்.
படப்பிடிப்புத் தளத்தில் வசனங்களை மாறுதல்களை செய்து மெருகேற்றுவீர்களா?
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே வசனம்
உட்பட அனைத்தும் தயாராக கையில் இருக்கும்படி செய்துகொண்டு பின்னர் திரைக்கதையில்
அதனை உள்ளீடு செய்வேன். இந்தப்படத்தில் அப்படி மாறுதல்கள் செய்து சேர்க்கப்பட்ட
எந்த வசனமும் இல்லை என்றே கூறுவேன்.