பஷீர் -தனிவழியிலோர் ஞானி! வாழ்க்கை முழுவதும் கனிவும் முரட்டுத்தனமுமாக வாழ்ந்த எழுத்தாளனின் கதை - யூமா வாசுகி

 







வைக்கம் முகமது பஷீர்



தனி வழியிலொரு ஞானி - வைக்கம் முகமது பஷீர்
ஸாநு மாஸ்டர்
தமிழில் - யூமா வாசுகி
பாரதி புத்தகாலயம் 






தலையோலபரம்பில் பஷீராக பிறந்தவர், எப்படி புகழ்பெற்ற வைக்கம் முகமது பஷீராக மாறினார் என்பதைச் சொல்லும் சுயசரிதை நூல்தான் தனி வழியிலொரு ஞானி. பஷீர் எழுதியதை விட அவரைப் பற்றிய இட்டுக்கட்டிய கதைகள் கொண்ட நூல்கள் அதிகம் என கூறப்படுகிறது. அந்தக் கூற்றை இந்த நூலின் இறுதிப்பகுதியிலும் கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும் தனி வழியிலொரு ஞானி நூல் அதன் எழுத்து சிறப்புக்காக முக்கியத்துவம் பெறுகிறது. 


தொடக்கத்தில் நூல் பஷீரைப் பற்றிய தகவல்களை அவரது சிறுகதைகள், நாவல்களிலிருந்து திரட்டுவது சற்று சோர்வு அளிப்பது உண்மை. ஆனால் அவையெல்லாம் பஷீரின் பிறந்த நாள் எது என்பதைக் கண்டுபிடிக்கும் வேகம்தான். அதைத் தாண்டி விட்டால் பஷீர் என்ற மனிதரின் பிம்பத்தை நாம் பிரமாண்டமான வடிவில் காண்கிறோம். 


இந்த நூல் படைப்பு சார்ந்து பஷீரின் சிறப்புகளைக் கூறுவதோடு அவருக்கு ஏற்பட்ட மனநோய் அதன் பாதிப்புகளையும் வெளிப்படையாக விவரிக்கிறது. இதனால் நூல் எழுத்தாளரை புனிதப்படுத்தி, படைப்புகளை உயர்வாக பேசுவது என்பதைத் தாண்டி அகவயமான பிரச்னைகளையும் பேச முயல்கிறது. அதுதான் நூலை முக்கியமான நூலாக மாற்றுகிறது என கொள்ளலாம். 


அனைத்து சிறுகதைகளுமே பஷீரின் வாழ்பனுவத்திலிருந்து பெறப்பட்டது என்பதால், அதற்கான சான்றுகளாக அவரின் கதைகளே உள்ளன. அதிலிருந்து நிறைய பகுதிகளை ஆசிரியர் எடுத்து நமக்கு விளக்கியிருக்கிறார். அதை வாசிக்கும்போது எழுத்தாளரின் மனிதர்களின் மீதான கருணையும், இலக்கிய அமைப்பு, இடதுசாரிகளின் மீதான பகடியும் புரிபடுகிறது. இதனால் நூலைப்படிக்கும்போது தொடக்கத்தில் இருந்த சோர்வு மெல்ல மறைகிறது. 


பஷீரின் எழுத்துக்களால் கவரப்பட்டு அவரின் நண்பர்களானவர்களே அதிகம் என நூலை வாசிக்கும்போது தெரிகிறது. கௌமுதி சிறப்பிதழ் ஒன்று பஷீரின் மதிலுகள் கதைக்காக இரண்டாம் பதிப்பு அச்சிடுவது உண்மையில் ஆச்சரியமான விஷயம்தான். இப்படி விற்பனையாவது எழுத்தாளருக்கு கிடைக்கும் பெரிய மரியாதைதான். அதேசமயம், இவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட நண்பர்கள் அரசின் பாடநூல்களில் கதைகளை இடம்பெறச்செய்தனர். 


ஆனால் இலக்கியத்தை விட அனைத்தையும் அரசியலாக பார்ப்பவர்கள் அதை இழிவு செய்ய பஷீர் மனம் நொந்துபோன அனுபவங்களும் நூலில் உள்ளன. கௌமுதி இதழில் பஷீரின் கதைகள் வெளிநாட்டு சிறுகதைகளின் தழுவல் என ஒருவர் எழுத, அதை கே.பாலகிருஷ்ணன் எனும் பஷீரின் நண்பரே வெளியிட்ட சம்பவம் அவரை கடுமையாக பாதித்தது. அதைத்தாண்டியும் பாலனுக்கும் பஷீருக்கும் நட்பு தொடர்ந்ததுதான் வியப்பான சங்கதி. 


இலக்கிய கூட்டங்களுக்கு செல்லாமல் பல்வேறு இடங்களுக்கு அலைந்தபடி வாழ்ந்த இலக்கியவாதி பஷீர். எழுத்து மட்டுமல்ல, பள்ளி தலைமை ஆசிரியரின் மகளான பாத்திமா பீபியை பெண் பார்க்கச்சென்று அவரை சந்திப்பதும் அவரது சிறுகதையில் வருவது போலவே அமைகிறது என்றால் யாரேனும் நம்புவார்களா? திருமணம் செய்து ஞானியாகிவிடுவது என பஷீருக்கு தோன்ற உடனே அதை நண்பர்கள் உதவியுடன் செயல்படுத்துகிறார். அப்படித்தான் பாபி பஷீர் மனைவியாகிறார். இப்படித்தான் இல்லற ஞானியாகி ஆண், பெண் என இரு பிள்ளைகளுக்கு தந்தையாகிறார் பஷீர். நூலில் வரும் முக்கியமான சம்பவங்களை தேவன் ஓவியங்களாக்கியிருக்கிறார். அவை யாவும் நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ளன. 


பஷீர் கதைகளில் மட்டுமல்ல அவர் மனநோய்க்கு உள்ளாகி வேற்றுகிரகவாசிகளை கொல்ல பயன்படுத்தும் கத்திக்கும் கூட அதை எப்படி அவர் பெற்றார் என்பதைக்கூறுமிடம் அருமை. பஷீரின் கதைகள் மட்டுமல்ல அவரது வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள் என அனைவருக்குமே அவரைப் பற்றி சொல்ல ஏதாவது ஒரு கதை, சம்பவம் இருக்கிறது. அப்படி ஒரு வாழ்க்கையை அலைந்து திரிந்து வாழ்ந்திருக்கிறார். அவரின் சிறுகதையில் வறுமையில் உள்ள இளம்பெண் ஒருத்தி, பணம் இல்லாமல் பூங்காவில் இருப்பாள். அவளின் தம்பி மருத்துவமனையில் இருப்பான்.  நாயகன் வேறு யா்ர பஷீர்தான். அவளுக்கு உதவி செய்ய விருப்பம் இருக்கும். ஆனால் அவனிடம் இருப்பதே சொற்பம் என்ற அளவில்தான் இருக்கும். யோசிப்பான். அந்த நேரத்தில் போலீஸ்காரன் இளம்பெண்ணை அவமானப்படுத்தி பேசி நெஞ்சில் லத்தியால் அடிப்பான். அழுதுகொண்டு விழுபவளை ஆற்றுப்படுத்தி கையில் இருக்கும் சொற்ப பணத்தையும் நாயகன் கொடுத்துவிடுவான். கதை அப்படியே முடியும். பஷீர் தனது வாழ்க்கை முழுவதும் இதே மாதிரிதான் இருந்தார். வாழ்ந்தார். இரக்கமும், முரட்டுத்தனமும் அவருடன் எப்போதும் இருந்தன. 


இந்த நூலை வாசித்தவர்கள் பஷீரின் நூல்களை தேடிப்படிப்பார்கள். என்ன காரணம் என்பதை நூலின் இறுதிப்பகுதியை படிப்பவர்கள் உணர்வார்கள். 


சிரிக்கும் ஞானி என்றுதான் பஷீரைக் கூறவேண்டும். 


கோமாளிமேடை டீம் 

படம் - காமன்ஃபோக்ஸ், அகதி பிளாக்ஸ்பாட்.காம்










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்