பெருந்தொற்று ரகசியம் பொதிந்த கிருஷ்ண ஆபரணத்தை மீட்க செல்லும் மருத்துவர்! கார்த்திகேயா 2 - சந்து மாண்டெட்டி
கார்த்திகேயா 2
இயக்கம் சந்து மாண்டெட்டி
இசை கால பைரவா
ஒளிப்பதிவு கார்த்திக் கட்டமனேனி
தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவன் கார்த்திக். கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகன். அவன் அந்த மருத்துவமனையில் புகும் பாம்புகளை உயிருடன் பிடித்து அகற்றுவதில் திறமையானவன். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவன் செய்யும் செயலால், அவனுக்கு வேலை பறிபோகிறது. பிறகு, அவன் அம்மா கூறியதன் பேரில் நேர்த்திக் கடனை நிறைவேற்ற துவாரகா செல்கிறான். அங்கு சென்று விஷ்ணுவுக்கான நேர்த்திக்கடனை செய்ய நினைக்கிறாள் கார்த்திக்கின் அம்மா. இன்னொருபுறம், விஷ்ணுவின் மறைத்து வைக்கப்பட்ட மூன்று ஆபரணங்களைத் தேடி எடுத்தால் அதிலுள்ள விஷயங்களை வைத்து பெருந்தொற்று பிரச்னையை சமாளிக்க முடியும் என அகழ்வராய்ச்சியாளர் நம்புகிறார். இவரை பின்பற்றி விஷ்ணுவின் ஆபரணங்களைத் திருடி அதை வைத்து மருந்து தயாரித்து லாபம் பார்க்க ரகசிய மருத்துவக்குழு ஒன்று முயல்கிறது.
கார்த்திக் எப்படி தனது அனுபவங்களின் வழியாக நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறுகிறான் என்பதே காட்சி ரீதியான கதை. ஆனால் இறுதிக் காட்சியில் பேசும்போது, அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். நம்பிக்கையால் ஒருவன் அதற்குமேல் ஆராய்ச்சி செய்வதில்லை. ஆனால் அறிவியலை நம்புபவனும் அதேபோல்தான் அறிவியல் சோதனைகளை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறான். இரண்டுமே நம்பிக்கை அடிப்படையில் சேர்ந்தவைதான் என லாஜிக்காக பேசுகிறார். அடுத்த பாகத்தை எடுப்பதற்கான விஷயங்களையும் இந்த படத்திலேயே இணைத்து விட்டார்கள்.
படத்தில் கால பைரவாவின் கிருஷ்ணனின் தீம் ஒன்று வருகிறது. வசீகரமான இசை. படம் நெடுக நவீனத்தையும், தொன்மத்தையும் இணைத்துப்பார்க்க இசை பெருமுயற்சி செய்கிறது. இதோடு படத்தில் வரும் அனிமேஷன், சிஜி காட்சிகளும் மோசமில்லை.
படம் இந்துத்துவ சங்கம், கட்சிகளுக்கு பெரியளவு உதவும் என்பதில் ஆச்சரியமில்லை. அந்தளவு சமஸ்கிருதம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், முஸ்லீம் ஒருவரை சேர்த்துக்கொண்டு கிருஷ்ணரின் மர்மங்களைக் கண்டுபிடிப்பது என சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். படம் பெரிய அளவில் எங்குமே தேங்கவில்லை. இயக்குநர் நிறைய ஆராய்ச்சி செய்து வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு கதையை நகர்த்திச் சென்று சுவாரசியமூட்டி இருக்கிறார். கோவர்த்தனகிரி மலை, கிருஷ்ணர் உறங்கும் சந்திரசீலா மலை, கிருஷ்ண தடாகம் என சுவாரசியங்களுக்கு குறைவில்லை.
பொதுவாக பொக்கிஷங்களைத் தேடி செல்லும் படங்கள் சுவாரசியமானவை. இவற்றின் டெம்பிளேட் எளிதானது. ஒருவர் நல்ல எண்ணத்திற்காக பொக்கிஷங்களை தேடுவார். இன்னொருவர் நல்ல எண்ணம் என்ன நல்லெண்ணெய் என அனைத்துமே விற்கத்தான் என பொக்கிஷங்களை வேட்டையாடத் துடிப்பார். படத்தில் இந்த விஷயங்கள் ஏற்கெனவே திட்டமிட்டபடி அமைந்துவிட்டன. ஆனால் நாயகனுக்கு உதவும் ஆதரவு குழுவாக கொள்ளையர் கூட்டம் ஒன்று உள்ளது. அதன் தலைவன் அபிரா வருவது முக்கியமான திருப்பம். நாயகனுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் கையில் ஆயுதத்துடன் வந்து எதிரிகளை சங்கறுக்கிறார். பீதியூட்டும் காட்சியாக இருந்தாலும் அபிராவின் நம்பிக்கை, வெறித்தனமான கிருஷ்ண பக்தி. அவ்வளவுதான்.
படம் பார்க்கும்போது திருப்பங்கள், சுவாரசியங்கள் என எந்த இடத்திலும் தேங்காதபடி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சந்து மாண்டெட்டி.
அடுத்தடுத்த பாகங்கள் வரும்போது இந்துத்துவ தலைவர்கள் படத்தை மக்கள் பார்க்கவேண்டும் என பரிந்துரைப்பார்கள் என நம்பலாம்.
கிருஷ்ண கானம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக