தனது மகனைப்போன்ற சிறுவனுக்காக தனது ஆன்மாவை வாளாக மாற்றும் கரடி! தி பாய் அண்ட் தி பீஸ்ட் - அனிமேஷன்

 






















தி பாய் அண்ட் தி பீஸ்ட் 
இயக்கம் - மமோரு ஹோசோடா



அப்பா, அம்மாவை விட்டு பிரிந்துவிட குடும்பம் சிதைகிறது. அம்மா இறந்துவிடுகிறார். கடனுக்காக உறவினர்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் க்யூட்டா என்ற சிறுவன் ஆதரவற்று தெருவில் திரியும் நிலை. இந்த நேரத்தில் அவனுக்கு சில விலங்குகள் கண்ணில் படுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். அது ஒரு விலங்குகள் உலகம். அங்குள்ள கரடி ஒன்று அவனுக்கு ஆதரவளிக்கிறது. அதற்கு வலிமை இருக்குமளவு தற்காப்புக் கலையில் நுட்பம் இருப்பதில்லை. அந்த நுட்பத்தை சிறுவன் எப்படி கற்றுக்கொடுக்கிறான், தற்காப்பு போட்டியில் வெல்ல உதவுகிறான் என்பதே கதை. 


இரண்டு உலகம் சார்ந்த கதை. ஜப்பானில் உள்ள தெருக்களில் உணவுக்கு பிறரிடமிருந்து திருடி சாப்பிடும் நிலையில் வாழும் சிறுவன், க்யூட்டா. அவனுக்கு அந்த நேரத்தில் எலி ஒன்று நட்பாகிறது. அவனது துன்பம், துயரம் என அனைத்திலும் உணர்ச்சி ரீதியான ஆதரவாக இருக்கிறது. பிறகுதான் விலங்குகள் உலகத்தில் கரடியை சந்திக்கிறான். அங்குதான், தனது உடலை வலிமையாக்கிக்கொண்டு கரடிக்கும் தற்காப்புக் கலையின் நுட்பங்களை கற்றுத் தருகிறான். இது விலங்குகள் உலகில் பரபரப்பை ஏற்படுத்த, அனைவரும் தற்காப்புக்கலை கற்க கரடியின் வீட்டு முன் வரிசையில் நிற்கிறார்கள். இந்த சூழ்நிலையில் க்யூட்டா மனிதர்களின் உலகிற்கு வந்து கல்வி கற்க முயல்கிறான். இந்த முயற்சியில் பள்ளி மாணவியை கேலி, கிண்டல்களிலிருந்து காப்பாற்றுகிறான். இதனால் அந்த மாணவி க்யூட்டா கல்வி கற்க அனைத்து உதவிகளையும் செய்கிறாள். இந்த நேரத்தில் க்யூட்டாவை கைவிட்டு சென்ற தந்தையை அவன் பார்க்கிறான். ஆனால் அவனுக்கு தந்தை போல அவனைப் பராமரித்த தற்காப்புக் கலை மூலம் அவனை பலப்படுத்திய கரடியின் நினைவுதான் வருகிறது. இதனால் இரண்டு உலகத்திற்கும் அல்லாடுகிறான். 


கரடி, அங்குள்ள பன்றி மூஞ்சி தற்காப்புக்கலை வல்லுநரை போட்டியில் தோற்கடிக்க சவால் விடுகிறது. அந்த முயற்சி சாத்தியமானதா, க்யூட்டா அதற்கு உதவினானா, அவனது தந்தையுடன் வாழும் முயற்சி சாத்தியமானதா என்பதே இறுதிக்காட்சி. 


நகைச்சுவை, கோபம், விரக்தி என பல்வேறு உணர்ச்சிகளை க்யூட்டாவை விட கரடி சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இறுதியில் தன்னையே தியாகம் செய்து க்யூட்டாவைக் காப்பாற்ற வாளாக மாறுவது நெகிழ வைக்கும் காட்சி. விலங்குகள் உலகிற்கு க்யூட்டா தனது காதலியோடு சென்று பங்கேற்கும் விழா அற்புதமான காட்சி. 


யாரும் தனக்கு ஆதரவில்லாதபோது கோபம் கொள்ளும் க்யூட்டாவின் ஆவேசமும், கோபமும், வன்மமுமே இறுதியில் அவனை கொல்ல முயலும் வில்லனாகிறது. இதை அனிமேஷனில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். 


துணிவு கொள்!


கோமாளிமேடை டீம் 










 




கருத்துகள்