இருள் மனிதர்களின் கொந்தளிப்பான வாழ்க்கை - உப்பு நாய்கள் - லஷ்மி சரவணக்குமார் - எதிர் வெளியீடு

 







உப்பு நாய்கள் 
லஷ்மி சரவணக்குமார் 
எதிர் வெளியீடு 
மின்னூல் 






இந்த நாவல் சென்னையில் இருளான, நிழல் வேலைகளை செய்யும் மனிதர்களைப் பற்றி துல்லியமாக சொல்லிச் செல்கிறது. வாசிப்பவர்களை நிறைய வன்முறை சம்பவங்கள் வாயடைத்து பீதி கொள்ளச்செய்யும். அந்தளவு காட்சிகள் வன்முறையை விவரிக்கின்றன. 


நூலுக்கு வண்ணதாசன் முன்னுரை எழுதியிருக்கிறார். ல.ச.குவின் அனைத்து நூல்களையும் படித்துவிடுவதாக கூறியிருக்கிறார். நம்பிக்கையான மனிதர்கள் பற்றி மட்டுமே அதிக சிறுகதைகள் எழுதியுள்ளவர், ல.ச.குவின் கதை பற்றி முன்னுரை எழுதியுள்ளது ஆச்சரியமானது. உண்மையில் அவர் அப்படிப்பட்ட மனிதர்களையும் அறிய நினைப்பது இயல்பானதுதான். மணிரத்னம் எப்படி பாலா படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டுகிறாரோ அதேபடிதான். 


சென்னையில் சேரி அருகில் வாழ்பவர்களான சம்பத், மணி, சுந்தர் ஆகியோரின் வாழ்க்கைதான் முக்கியமான கதை. இதற்கடுத்து மதுரையில் பிக்பாக்கெட் அடிக்கும் செல்வி, தவுடு அவர்களின் கணவர்கள், விபச்சாரத்தை தொழிலாக செய்யும் முத்துலட்சுமி, ஆந்திரத்தில் வாழ்ந்து வந்து சென்னையில் வாழ்க்கையைத் தொலைக்கும் ஆதம்மா ஆகியோர் வருகிறார்கள். 


நாவலில் சற்று நம்பிக்கை அளிப்பது தெலுங்கு பாத்திரங்களான ஆதம்மாதான். கட்டிட தொழிலாளியாக வந்து அதிலிருந்து விடுபட்டு எங்கு செல்வது என தெரியாமல் நின்று, பிறகு ஆர்த்தியின் அன்பைப் பெற்று வாழ்க்கையில் குறிப்பிட்ட நிலையில் நிற்கிறார்கள். அதுவே நாவலை வாசித்து முடிக்கும்போது சற்று நிம்மதியாக இருக்கிறது. மற்றபடி அனைத்து பாத்திரங்களும் அவர்களின் வாழ்க்கையும் எப்படி முடிகிறது என வாசித்து யோசித்தால் சற்று கடினம்தான். 


அடிப்படையில் அனைத்து மனிதர்களும் அன்பும் அங்கீகாரமும்தான் தேவைப்படுகிறது. அதைத்தான் அனைத்து பாத்திரங்களும் எதிர்பார்க்கிறார்கள். இசை எப்படி சமூகத்தில் பாகுபாடின்றி அறிவாளிகள், முட்டாள்கள், குற்றவாளிகள், நீதிபதிகள் என அனைவரையும் ஈர்க்கிறதோ, அதேபோல்தான் இதில் வரும் பாத்திரங்களும் இருக்கிறார்கள். 


சம்பத், போதைப்பொருட்களை விற்பவனாக இருந்தாலும் அவன் செய்யும் செயல்பாட்டில் பாவங்களை சம்பாதிக்கக் கூடாது என நினைக்கிறான். ஆனால் அப்படி தான் நினைத்துப் பார்க்க முடியாத பாவத்தை செய்யும்போது, தனக்கு என்ன பரிகாரம் என கன்னியாஸ்த்ரீயான சோபியாவிடம் அழுகிறான். உடலுறவில் தன்னை மறக்கும் கணம் மட்டுமே அவன் நிம்மதி அடைகிறான். ஒருகட்டத்தில் தான் செய்யும் குற்றம் அவனை தீராமல் துரத்த அவன் தனது அடையாளத்தையே துறக்கிறான். ஏறத்தாழ இது அவன் இறந்துபோகும் நிலைதான்.  ல.ச.கு, கொரிய திரைப்பட இயக்குநரான கிம் கி டுக்கின் ரசிகர் போல. த்ரீ அயர்ன் படத்தின் கதையை சற்றே மாற்றி சம்பத்தின் முடிவை விவரித்திருக்கிறார். இதுவும் எழுத்து வடிவில் படிக்கும்போது மாயப்புனைவு போல வசீகரிக்கிறது. 


அதிகாரம், அரசியல் என பலவற்றையும் அனுபவிக்கத் துடித்த சுந்தர் சம்பத்தின் ரகசியங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் பீதியடைகிறான். ஒருகட்டத்தில் அந்த பயம் அவனை கடுமையாக குழப்ப அவன் எடுக்கும் முடிவு, பாவத்தின் சம்பளம் என்றே தோன்றுகிறது. 


நாவலில் பேசும் முக்கியமான விஷயங்கள், மார்வாடிகள் செய்யும் வழிபாட்டு அரசியல். அதன் மூலம் எப்படி சென்னையில் வாழும் முஸ்லீம்களை ஓரங்கட்டி அவர்களது வியாபாரத்தை அழிப்பது என்பது... அடுத்து, தேவாலயத்தில் எப்படி சட்டவிரோத அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன, அதற்கு பாதிரியார் மத்தியஸ்தம் செய்கிறார் என்பது. இவை நாவலில் பல்வேறு சம்பவங்களை செய்வதற்கு காரணமாக உள்ளன. 


போதைப்பொருட்களை எப்படி கடத்துவது, சென்னையில் உள்ள அசைவ உணவகங்களில் எப்படி நாய்க்கறியை கலக்கிறார்கள் என்பதை துல்லியமாக விவரித்திருக்கிறார்கள். படிக்கும்போதே இதற்காக ஆய்வுகளை எழுத்தாளர் செய்திருக்கிறார் என தெரிகிறது. சென்னையில் உள்ள இருள் மனிதர்கள் பற்றிய கதைகளில் உப்புநாய்கள் முக்கியமான ஒன்று. 


இதில் வரும் மூன்று கதைகளிலும் உள்ள பாத்திரங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதில்லை. செல்வி, ஷிவானி, சம்பத் தவிர. பிறர், சென்னை எனும் நகரத்தில் வாழ்ந்து தாயின் இடுப்பில் இருந்து இடுப்பு கடுக்கு என இறக்கிவிடப்பட்ட குழந்தைகளாக தங்களுக்கான வழிகளைப் பார்த்துக்கொள்கிறார்கள். 


இருளிலிருந்து ஒளிக்கு.... 


கோமாளிமேடை டீம் 



கருத்துகள்