குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

 


















ஆறடி புல்லட் 


இயக்கம் பி கோபால்


இசை மணி சர்மா 


கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங்



கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை. 


படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை. 


குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேறு எந்த வாய்ப்புகளும் காட்சிகளில் இல்லை. 


நயன்தாராவின் பெயர் நயனா. பெரும்பாலும் பாடல்களுக்கான வாய்ப்பு இவர் வந்தாலே உருவாகிவிடுகிறது. அதைத்தாண்டி பெரிய நடிப்பு ஏதும் இல்லை. படத்தில் சற்றே நடித்திருப்பவர், பிரகாஷ்ராஜ்தான். முதலில் மகன் மீது வெறுப்போடு நடந்துகொள்வதும், பிறகு தன் மீது மகன் வைத்திருக்கும் பாசத்தை புரிந்துகொண்டு நெக்குருகுவதுமாக எப்போதும் போல நன்றாக நடித்துவிட்டார். மற்றவர்கள் எல்லாம் இவருக்கு ஈடு கொடுக்க திணறுகிறார்கள். 


அப்பா, மகனைப் புரிந்துகொண்டு பாசம் காட்டுகிறார் என்பதை எப்படி முதிர்ச்சியான முறையில் சொல்லலாம். கட்டுமான நிறுவனம் தொடங்க உதவுகிறார் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் காட்சிகளின் நீளத்திற்காக பஞ்சுமிட்டாய் வாங்கித் தருகிறார், ராட்டினத்தில் சுற்றுகிறார், பைக் வாங்கித் தருகிறார் ..... அடச்சே என சொல்லும்படியான காட்சிகள் இவை. 


நட்பாகிட்டா நான் மறக்கமாட்டேன். பகையாகிட்டா நீ மறக்கமாட்டே என சில வசனங்கள் மட்டும் அசத்துகின்றன. முதல் சண்டைக் காட்சியில் கட்டுமான நிறுவனத்திற்குள் காரைக்கொண்டு இடித்து கூடவே அந்தரத்திலேயே கோபிசந்த் பறந்து வருகிறார். அப்போதே படத்தின் தலைவிதி முடிவாகிவிட்டது. இப்படித்தான் படம் முழுக்க இருக்கும் என....


தமிழ் டப்பிங்கில் ஒருமுறை பட்டுக்கோட்டை என அடுத்தமுறை புதுக்கோட்டை என வருகிறது. ஆங்கில சப் டைட்டிலில் விஜயவாடா, பெஜவாடா என வருகிறது. தெலுங்கு படம் என்பதை மாற்றவே முடியாது. ஊரை அப்படியே வைத்துக்கொண்டு வசனங்களை மட்டும் தமிழில் எழுதினால் போதுமானது. இல்லையெனில் படம் பார்ப்பவர்கள் சீரியசான காட்சியில் கூட சிரித்து வைப்பார்கள். 


சுடாத தோட்டா 


கோமாளிமேடை டீம்


கருத்துகள்