மனிதர்களின் மனதில் உள்ள அக ஒளியை வெளிக்காட்டும் கதையுலகம் - சித்தன்போக்கு - பிரபஞ்சன்- காலச்சுவடு

 











எழுத்தாளர் பிரபஞ்சன்



சித்தன் போக்கு - பிரபஞ்சன் 
தொகுப்பு - பெருமாள் முருகன் 
காலச்சுவடு பதிப்பகம் 
மின்னூல் 

எழுத்தாளர் பிரபஞ்சன்




மொத்தம் இருபது கதைகள். அத்தனையும் மனிதர்களின் மனிதநேய பக்கங்களைக் காட்டுபவைதான். இதில் பாதுகை, பாண்டிச்சேரி போர்ச்சுகீசியர்களின் நிறவெறியைக் காட்டும் கதை. பெரும்பாலும் இந்த கதையை மாணவர்கள் துணைப்பாட நூலில் படித்திருக்கவே வாய்ப்பு அதிகம். 


பெருமாள் முருகன் தொகுத்துள்ள கதைகள் அனைத்துமே திரும்ப திரும்ப படிக்கலாம் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவைதான். அனைத்து கதைகளுமே அப்படியான பல்வேறு மனிதநேய அம்சங்களைக் கொண்டுள்ளன. மனிதர்களின் கோபம், கீழ்மையான எண்ணங்களைத் தாண்டிய பிறர் மீதான அக்கறை வெளிப்படும் கதைகள்தான் பிரபஞ்சனின் இத்தொகுப்பின் முக்கியமான தன்மை என்று கூறலாம். 


ஒரு மனுஷி,  குமாரசாமியின் பகல்பொழுது, குருதட்சிணை, தியாகி, ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், ருசி, தபால்காரர் பொண்டாட்டி ஆகிய கதைகள் பிடித்தமானவையாக இருந்தன. இவற்றை திரும்ப திரும்ப படிக்கலாம். அந்தளவு நிறைவான வாசக அனுபவத்தைக் கொடுத்தன. இத்தொகுப்பை வாசிப்பவர்களுக்கு வேறு கதைகள் இப்படியொரு உணர்வைக் கொடுக்கலாம். அதை மறுக்க முடியாது. கதைகளைப் பொறுத்தவரை அவர்கள் மனதில் உணர்வதுதான். அவர்களது கற்பனைதான். அதை மறுக்க முடியாது. 


இத்தொகுப்பில் உள்ள காதல் கதை என தோழமையை சொல்லலாம். அதில் வரும் சங்கர், சுமதி என இரு நண்பர்கள் ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பை அற்புதமாக சித்திரித்திருக்கிறார்கள். தனது எண்ணங்களை, கருத்தை வெளிப்படையாக சொல்லி அதற்கான விளைவை தானே பொறுப்பேற்கும் தன்மை சங்கருக்கு உண்டு. அதை அவன் சுமதிக்கு மெல்ல கற்றுத் தருகிறான். சிரிப்பை மட்டுமல்ல அந்த அறிவை துணிவை கற்றுத்தரும் பகிரும் மனிதனையும் நட்பாக வைத்திருப்பது சிறந்தது. வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் இப்படி ஒரு நட்பை உறுதியாக தங்கள் வாழ்வில் எதிர்கொள்ள நினைப்பார்கள். 


அத்தனை கதைகளையும் இங்கு விளக்கி சொல்ல முடியாது.அது பிரபஞ்சனின் உலகிற்குள் வாசகர்கள் செல்லாமல் தடுத்துவிடும். குமாரசாமியின் பகல்பொழுது கதை, இப்படித்தான் என்ற வடிவத்திற்குள் எல்லாம் இல்லை. அது அப்படியே காற்றில் விழும் மரத்தின் பழுத்த இலை போல அப்படியே பறந்து மெல்ல ஒரு நிலைக்கு வந்து சேருகிறது. அடைக்கலசாமி இறப்பின் செய்திகேட்டதிலிருந்து குமாரசாமி அப்படியே தன் வாழ்வை திரும்ப ஒருமுறை நினைவுகூர்கிறார். பகல்பொழுதை, சொல்லாமல் தவறவிட்ட காதலை, காதலே இல்லாத திருமண வாழ்வை, ஒண்டுக்குடித்தன வாழ்வை, காலையில் குளிக்கும் குளியலை என நிறைய விஷயங்களை குமாரசாமி நினைத்துப் பார்க்கிறார். இறுதியாக அவர் எடுக்கும் முடிவுதான் கதை. 


மனிதனின் மனதில் உள்ள அக ஒளியை தரிசிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா, அப்படியானால் காலச்சுவடு பதிப்பித்துள்ள சித்தன் போக்கு என்ற நூலை அவசியம் வாங்கி படியுங்கள். நீங்கள் நினைத்திரா வாழ்வு அனுபவத்தை எழுத்தாளர் தனது கதைகளின் வழியாக வழங்குகிறார். 


அக ஒளி 


கோமாளிமேடை டீம் 


படம்  ஆனந்த விகடன், இந்து தமிழ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்