குருதத் ரசிகனை சினிமா விமர்சகர்கள் கோபப்படுத்தினால்... சுப் - துல்கர்சல்மான், ஸ்ரேயா - ஆர்.பால்கி
சுப்
மொழி - இந்தி
இயக்குநர் - பால்கி
துல்கர் சல்மான், சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்திரி
சீரியல் கொலைகாரர்கள் அனைத்துவிதமாகவும் வந்துவிட்டார்கள். அப்படி கொலைகாரன் சினிமா வழியாக வந்தால்... அதுதான் படத்தின் மையம். இந்தி சினிமா இயக்குநரான குருதத்தின் ரசிகன், மோசமாக விமர்சனங்கள் எழுதும் பத்திரிகை, டிவி, வெப் என ஆட்களை போட்டுத் தள்ளினால்... அதை பிடிக்க முடியாமல் காவல்துறை தடுமாறினால் என்னாகும் என்பதே கதை.
முதல் காட்சியே பெண்மணி ஒருவர் வேலை முடிந்து தனது அபார்ட்மெண்டிற்கு வருகிறார். வீட்டில் அழைப்புமணியை அழுத்துகிறார். ஆனால் கதவு திறக்கவில்லை. தனது சாவியைப் போட்டு திறந்து உள்ளே செல்கிறார். பாத்ரூமில் தனது கணவரின் செல்போன் ஒலி கேட்டு சென்றால், அவர் மீனை வகுந்து வைப்பார்களே அப்படி ரத்த விளாராக கொல்லப்பட்டு கிடக்கிறார். நெற்றியில் முக்கோணச்சின்னம் இருக்கிறது.
இது ஒரு கதை. அடுத்த கதை. பூ விற்பவரான டேனியின் கதை. டேனி காலையில் எழுந்து பூ கொண்டு வருபவர்களிடம் பூ வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கிறார். பிறகு தனது பூத்தோட்டத்தில் அமர்ந்து இரண்டு டம்ளர்களில் டீயைப் போட்டுக்கொண்டு அமர்ந்து குடிக்கிறார். அவரது கடைக்கு பெண் ஒருவர் வருகிறார். அவர்தான் நீலா மேனன். மும்பை போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்யும் இளம்பெண். அவருக்கு தூலிப் மலர்கள் என்றால் உயிர். அதை டேனி முதலில் விலையில்லாமல் கொடுக்கிறார். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அவருக்கு லைட் எரிந்து மணி அடிக்கிறது. அந்தப் பெண்ணுக்கும் இவன் ஏதோ மாதிரி என மனதில் எண்ணம் தோன்றுகிறது. ஒப்பீனியன்களை அப்படியே இம்ளிமெண்ட் செய்தால்தானே பூமி சுற்றும், காதல் வளரும். இதில் டேனி பாடும் பாடல்கள் அனைத்துமே பழைய படங்களில் வரும் மறக்க முடியாத பாடல்கள். படம் திரில்லர் என்றாலும் கா்ட்சி ரீதியாகவே காமெடிக்கு முயன்றிருக்கிறார்கள். அதுவும் நன்றாக வந்திருக்கிறது. ஒருவர் தனது அனுபவங்களை கற்றதும் பெற்றதுமான திறன்களை வைத்து படமாக எடுக்கும்போது சமூக ஊடகங்களை வைத்துக்கொண்டு கவர் வாங்கிக்கொண்டு விமர்சனம் செய்பவர்களால் சிதறுண்டு போல ஃபிளாப் இயக்குநர்தான் சீரியல் கொலைகாரராக மாறுகிறார். அதிலும் படத்தின் இறுதியில் வரும் குடும்ப வன்முறைக் காட்சிகள், டேனியின் மனம் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிய வைக்கிறது. அவரின் குணம், ஆளுமை என முதலில் வரும் காட்சிகளுக்கான விளக்கம் இறுதியில்தான் நமக்கு தெரிய வருகிறது.
டேனியின் மனதை பல்வேறு அம்சங்களால் புரிய வைக்க இயக்குநர் முயன்று வென்றிருக்கிறார். நிதானமாக டீயே இரண்டு கிளாஸ்களில் குடிப்பது, கயா பாடலில் எப்போதும் இரண்டு கிளாஸ்களில் டீ குடிப்பவர், சற்றே தன்னை நெகிழ்த்திக்கொண்டு ஒரு கிளாஸை நீலாவின் புறம் கொடுப்பார். கார்கள் விரையும் சாலையில் சைக்கிளில்தான் சென்று டேனி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக்கொண்டு வருவார். கயா பாடலில் சைக்கிளில்தான் நீலாவை ஏற்றிக்கொண்டு செல்வார். அதுவே டேனியை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. தனக்குத் தானே பேசிக்கொண்டு வேலைகளை செய்வதும் நமக்கு மெல்ல இயல்பானதாகிறது. இப்படி பார்த்துக்கொண்டு வரும் நாம் இறுதிக் காட்சியில் முழுமையாக டேனியை புரிந்துகொண்டு விடுகிறோம்.
நீலா மேனனாக நடித்திருக்கும் ஸ்ரேயா தன்வந்திரி தனக்கு கிடைத்த காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சியில் சில காமெடிகள் உண்டு. அதையும் நீங்கள் காட்சி ரீதியாக பார்த்து அனுபவிப்பது முக்கியம்.
அமித் திரிவேதியின் இசையில் கயா, கயா என்ற ஒரு பாடல்தான் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பிற பாடல்களை நீங்கள் யூட்யூப்பில் அல்லது ஸ்பாட்டிபையில் தரமாக கேட்டு மகிழலாம் குருதத்தின் பாடலில் வரும் இசை நுட்பம் ஒன்றை படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்திற்கு அது சிறப்பாக பொருந்திவந்துள்ளது. இந்தப் பாடல் இல்லாமல் மேரா லவ் மெய்ன் என்ற பாடலும் கேட்க நன்றாக இருக்கிறது. எஸ்டி பர்மனின் பாடலை ஸ்னேகா கன்வால்கர் பயன்படுத்தி இன்னொரு பாடலை உருவாக்கியிருக்கிறார். பாடலுக்கான வீடியோவை நீங்கள் யூட்யூபில் பார்க்கலாம். ரசிக்கலாம்.
இந்திய பெருவெளிக்கான சினிமா என்பது பொருட்செலவு என்பதை கதையை அடிப்படையாக கொண்டது என துல்கர் சல்மான் சரியாக புரிந்துகொண்டிருக்கிறார். எனவேதான், பால்கியின் படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
சுப் படத்தைப் பார்த்தால் நீங்கள் குருதத்தின் பாடல்களை நிதானமாக பார்க்க விரும்புவீர்கள். அவரது படத்தின் பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்பீர்கள் என்பது உறுதி. அந்தளவு அவரின் படங்களை பார்க்க வைக்கும் துடிப்பை சுப் படத்தின் மூலம் பால்கி உருவாக்கியிருக்கிறார். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு படம், பாடல், நாவலின் ஒரு பகுதி, சம்பவம் ஒற்றுமையைக் கொண்டிருக்கும். இந்தப்படம், அப்படியான பல்வேறு விஷயங்களை நினைவுபடுத்திவிடுகிறது. இதிலிருந்து மீள்வது பெரும்பாடு.
ரத்தத்தில் கலந்தது சினிமா
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக