திமுகவில் ஈடுபாடு ஏற்பட்டு அதில் ஏமாற்றம் கண்டு புத்தி தெளிந்த சம்பவங்களின் தொகுப்பு - வனவாசம் - கண்ணதாசன்

 











வனவாசம் 
கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
மின்னூல்


வனவாசம், மனவாசம் என இரு நூல்களை கண்ணதாசன் எழுதினார். இதில் வனவாசம் அவரின் அரசியல் அனுபவங்களை வெளிப்படையாக பேசுகிறது. அவர் சினிமா, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் காலத்திலேயே எழுதிய நூல் என்பதால் வனவாசம் முக்கியத்துவம் பெறுகிறது. நூலைப்படித்தேன் என்று சொன்னபோது, நண்பர் ஒருவர், கண்ணதாசன் நம்ம ஊரு டால்ஸ்டாய் போல என்றார். டால்ஸ்டாயின் ஒழுக்க விதிகளைப்போலவே,  கண்ணதாசனும் பல்வேறு ஒழுக்க முறைகளை அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் கூறியிருக்கிறார். அதுவும் தன்னையே மோசமான எடுத்துக்காட்டாக வைத்துக்கொண்டு....  அவர் அதற்கு வெட்கமெல்லாம் படவில்லை. 


வனவாசத்திலும் ஒழுக்கம் தவறுகிற,செய்ய வேண்டிய விஷயங்களை செய்யாமல் விடுகிற மாது விஷயங்கள் நிறைய உண்டு. சினிமா நடிகை, விபச்சார பகுதியில் விலைமாது, பிறகு அவரே ஏற்கும் இரண்டாவது ஏற்பாடு.... என நீள்கிறது. 


கண்ணனை வணங்கும் கண்ணதாசனுக்கு இப்படி சலனமுறுகிற குணம் இருந்தாலும் கவி பாடுவதில் எந்தக் குறையும் எக்காலத்திலும் வரவில்லை. மது, மாது, போதை, அரசியல் பழகினாலும் கூட அவருக்கு வருமானம் ஈட்டித்தர தமிழ் தயங்கவில்லை. அவரும் நிறைய நூல்களை கற்று தன்னை திரைப்பட பாடல்களை எழுத, பகடி கட்டுரைகளை எழுத தயார் செய்துகொண்ட பகுதிகள் ஆச்சரியமூட்டுகின்றன. ரத்தத்தில் கலந்தது என்று கூறமுடியாது. கற்ற தமிழ் அவரை எந்த இடத்திலும் கைவிடவில்லை. சிவகங்கை சீமை, கவலை இல்லாத மனிதன் ஆகிய தயாரிப்புகள் அவரை ஐந்து லட்ச ரூபாய் அளவுக்கு கடன்காரனாக மாற்றினாலும், திரைப்பட பாடல்களை எழுதியே கடன்களை அடைத்திருக்கிறார் என்பது படிக்க எளிது. நடைமுறையில் மிகவும் கடினம், ஆனால் கண்ணதாசன் அதை செய்திருக்கிறார். 


சொந்த வாழ்க்கையைப் பற்றி விவரிக்கும் பகுதி அழகாக உள்ளது. பெரும்பகுதி நூலை ஆக்கிரமிப்பது நாத்திகமும், அதிலிருந்து உருவான அரசியல் ஆர்வமும்தான். கண்ணதாசன் ஏராளமான அரசியல் கூட்டங்களில் பேசியிருப்பதோடு, பிறருக்கும் தேர்தல் பணிகள் ஆற்றியிருக்கிறார். உழைப்பு, பணம் என இரண்டும் கொடுத்தும் கலைஞரின் சதியால் அவமானப்படும் இடங்களை மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார். 


திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக எப்படி தனது அடிப்படை கொள்கைகளை வாக்கு அரசியலுக்கு பலி கொடுத்தது என கண்ணதாசன் பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு விவரித்துள்ளார். டால்மியாபுரம் சம்பவம் இதற்கு சான்று. இதில் காவல்துறையினரின் தாக்குதலில் கண்ணதாசனுக்கு இடது கை கீழிறங்கியது.  சிலர் இறந்துபோனார்கள், சிலருக்கு விரல் துண்டானது, மண்டை உடைந்தது, கை, கால் எலும்புகள் உடைந்தது என நிறைய சம்பவங்களைப் பார்த்து கண்ணதாசன் வேதனைப்படுகிறார். அந்த சம்பவத்தில் அவர் மூன்றாவது அணிக்கு தலைவர். வருத்தப்படாமல் எப்படி?


பத்திரிகையாளராக கண்ணதாசன் எழுதிய கட்டுரைகள் சில நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், கண்ணதாசன் பத்திரிகையாளராக இருந்ததைப் பற்றி படிக்க ஆசையூட்டும்படி நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். சண்டமாருதம், தென்றல் ஆகிய பத்திரிகையில் சிறப்பாக செயல்பட்டு சாதித்துள்ளார் கண்ணதாசன், ஆனால் எழுத்தாளன் எழுத்தை மட்டுமே கவனித்து நிர்வாகத்தை கோட்டை விட்டால் என்ன ஆகுமோ அதுதான் தென்றல் இதழுக்கும் ஆனது. இதைத்தாண்டி காந்தி எப்படி தனது மனதில் உள்ள கருத்துகளை வெளியிட நாளிதழ்களை பயன்படுத்தினாரோ அப்படி கண்ணதாசன் தென்றல் இதழைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். 


உணர்ச்சிப் பெருகும் வாய்ப்புள்ள நிறைய பகுதிகள் நூலில் உள்ளன. அண்ணாதுரையின் பேச்சை முதன்முறையாக கேட்கும் சம்பவம். பிறகு, அவர் கொள்கையிலிருந்து வழுவி அதை மழுப்பி பேசும் சம்பவம்.. விலைமாது ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்வீர்களா என்று கேட்பதும், அதற்கு என்ன பதில் சொல்லுவதும் என தெரியாமல் கண்ணதாசன் தடுமாறும் சம்பவம்... இப்படி நிறைய கூறலாம். அனுபவ தரிசனமான நூல் என்று வனவாசத்தை உறுதியாக கூறமுடியும். 

கடந்துவந்த பாதை

கோமாளிமேடை டீம் 


நூலை வாங்க...


கருத்துகள்