பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்







 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர் 
தமிழில் பெரியார் தாசன்
வெளியீடு பெரியார் தாசன் 



புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர். 


பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 


பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத மதங்களை தவிர்க்கிறார். 


புத்தர் பற்றிய பல்வேறு மூடநம்பிக்கைகள் நமக்கு உண்டு. அவை நூல்களிலும் அல்லது பேச்சாளர்கள் பேச்சு வழியாகவும் நாம் அறிந்திருப்போம். புத்தர் துறவு பூணும் முடிவை எந்த நேரத்தில் எடுத்தார். அதற்கு காரணமான விஷயங்கள் என்னென்ன என்பது... இந்த நூலில் அத்தகைய மூட நம்பிக்கைகளை அம்பேத்கர் விலக்கி உண்மையை வாசிப்பவர்கள் காணும்படி செய்திருக்கிறார். அதற்கேனும் நீங்கள் இந்த தம்ம நூலை வாசிக்கவேண்டும். 


மனப்பாடம் செய்வதை விட மெய்யறிவு பெறுவதே முக்கியம் என புத்தர் கருதுகிறார். அவர் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக கருதுவது ஆசை, அறியாமை, பற்று ஆகியவற்றைத்தான். இக்கருத்துகளை பல்வேறு உரைகளிலும், மதமாற்ற பேச்சுகளிலும் புத்தர் ஓயாமல் முன்வைக்கிறார். அதற்கான முன்னுதாரணமாக தன்னையே ஆக்கிக்கொள்கிறார். நூலில் மனம் கலங்க வைக்கும் பகுதி என்றால், புத்தர் என்ற நிலையை அடைய போதி சத்துவராக பத்து நிலைகளை கடக்கும் நிலைகளில் இருக்கும் காலம்தான். அந்த காலங்களில்தான் பல்வேறு நாடுகளாக சுற்றி அங்குள்ள சாமியார்களின் பல்வேறு தவநிலைகளை பயில்கிறார். அதன் மூலம் மெய்யறிவு, ஞானம் பெற முயல்கிறார். இறுதியில் நிரஞ்சனா ஆற்றின் கரையில்தான் சோறு உண்டு உடலை ஆற்றல் பெறச்செய்து ஒருமாதம் தவம் செய்துஞானம் பெறுகிறார். 


பிறகுதான் அவர் பிற சோதரர்களுக்கும் உடலை வருத்தாதீர்கள். அதனால் எந்த பயனும் இல்லை. மெய்யறிவு பெறுவதில் தீவிரமாக இருங்கள் என வழிகாட்டி உதவுகிறார். அதை அடைய பிக்குவாக சில வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டியதிருக்கிறது. முதலில் பரிவ்ராஜகர், உபசம்பதா ஆகிய நிலைகளைக் கடந்தவர் சங்கத்தில் பிக்குவாகலாம். இதிலும் நிறைய நிலைகள் உள்ளன. உபாத்தியாயருக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்ற வேண்டும்.  


சங்கத்தில் சேர்ந்து பிக்குவாக வாழ்வது, இல்லறத்தாராக இருந்து தம்மத்தைப் பின்பற்றுவது ஆகிய இரண்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறையற்ற மதமே கிடையாது என புத்தர் கூறிவிட்டதால், பௌத்தம் எப்படி அழிந்தது, அழிக்க சதி செய்தவர்கள் பற்றியெல்லாம் நாம் பேசுவது அவசியமில்லை.


நூல் நெடுக மன்னர்கள், அமைச்சர்கள், பிராமணர்கள், வெறுப்பாளர்கள், அதிசயங்களை நம்புபவர்கள் என பலரும் புத்தருடன் விவாதிக்கிறார்கள். இதில் மிகச்சிலர் மட்டுமே அவரை மறுத்து விவாதத்தில் அடையாளம் கண்ட உண்மையை ஏற்பதில்லை. மற்றவர்கள் எல்லோருமே புத்தரின் போதனையிலுள்ள உண்மையை அறிந்து தெளிவாகி சங்கத்தில் சேர்கிறார்கள். அல்லது புத்தரின் வழிமுறையை பின்பற்றத் தொடங்குகிறார்கள். 


இன்று பலரும் சைவம்,அசைவம், பிற உயிர்களை கொல்லாமை என விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு புத்தர் தெளிவாக விதிகளை வகுத்து தனது போதனையிலும் விளக்கியிருக்கிறார். அந்த வகையில் மக்களுக்கு எளிமையாக தெளிவு கிடைக்கும். 


தம்ம நூலை நெருக்கடியான காலகட்டங்களில் தொடர்ச்சியாக வாசிக்கவேண்டியது அவசியம். ஒரே வாசிப்பில் நூலை முழுக்க புரிந்துகொள்வது கடினம். பெரியார்தாசன் மொழிபெயர்ப்பு சிறப்பானது என எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார் என்பது நூலுக்கான் நற்சான்று.  நூலில் கூறியுள்ள கருத்துகள் பற்றி சந்தேகங்கள் எழுந்தாலும் இணையத்தில் புத்த நூல்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. அவற்றை படித்து தெளிவு பெறலாம். 

நூல் உதவி - திரு.முருகானந்தம், தாராபுரம்


https://www.panuval.com/buddharum-avarathu-thammamum-10018110

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்