காதலி மீது அவளது அப்பா வைத்துள்ள அதீத பாசத்தை தடுக்க முடியாத காதலனின் கதை - நுவ்வே நுவ்வே - திரிவிக்ரம் சீனிவாஸ்

 













நுவ்வே நுவ்வே 
இயக்குநர் திரிவிக்ரம் 
தருண், ஸ்ரேயா சரண்


அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தில் மகளின் காதலன் சிக்கிக்கொண்டால் என்னவாகும்? 


படத்தில் நாயகன் என்பது பிரகாஷ்ராஜ்தான். படம் தொடங்கி இறுதிக்காட்சி வரை உறுதியாக நின்று நடித்திருக்கிறார். இது திரிவிக்ரம் சீனிவாசின் முதல் படம். 


படத்தில் முரணான பாத்திரங்களுக்கு இடையில் வரும் வசனங்கள் கச்சிதமானவை. அச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. கதையைப் பார்ப்போம். 


அஞ்சலி, கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறாள். இவளது அப்பா தொழிலதிபர். அதைத்தாண்டி மகள் மீது பாச வெறி கொண்டவர். மகளுக்கு கொடுக்கும் பரிசு கூட பாசத்தைப் போல ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. மகளுக்கும் அம்மாவை விட அப்பாவே ஆதர்சம். மகளுக்கு, தனது குடும்பத்தினர் ஏன் அவரது மூத்த பையன் பரிசு கொடுக்கும் முன்னரே பரிசு கொடுத்து திகைப்பு ஏற்படுத்துகிறார். இப்படி இருப்பவர், அதீத பாசத்தால் திருமணம் என்று வரும்போது என்ன முடிவு செ்யகிறார் என்பதே கதை. 


படத்தின் தொடக்க காட்சியே மது அருந்தியபடி பிரகாஷ் தனது நண்பரிடம் பேசும் காட்சிதான். 


அதில் தனது மகளைப் பற்றி பாசத்தோடு பேசுகிறார். மனம் கனிந்த பேச்சில் நடைபெறும் சம்பவங்கள் காட்சிகளாக விரிகின்றன. 


இதற்கு எதிர்ப்பதமாக நாயகன் அறிமுகம். தருண். சூப்பர் மார்க்கெட் உரிமையாளரின் மகன். கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்து்க்கொண்டே வந்து அஞ்சலியின் கார் மீது மோதிவிட காரின் பின் விளக்குகள் உடைந்து விடுகின்றன. இப்படித்தான் அஞ்சலி, தருண் மோதல் உருவாகிறது. பின் இருவரும் நண்பர்களாகிறார்கள். 


என்னதான் அப்பா பாசத்தை நிறைய கொடுத்தாலும் அவளுக்கு கல்லூரியில் வியப்பு தருவது தருண்தான். அவளிடம் காசு வாங்கிக்கொண்டு இன்னொரு பெண்ணுக்கு காபி, டீ வாங்கித் தருவது, பெண்ணின் காசில் காலை உணவு சாப்பிடுவது, பெட்ரோல் போடுவது என ஃபன் செய்துகொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவன் மனதிற்குள்ளும் காதல் வருகிறது. அதை கடிதமாக எழுதிக்கொண்டு சென்று அஞ்சலியிடம் கொடுக்கிறான். அவளுக்கோ அவ்வளவு சந்தோஷம். அங்குதான் திருப்பம். கடிதம் அவளுக்கல்ல. அவளது தோழிக்கு. இது அஞ்சலிக்கு கடும் கோபத்தையும் விரக்தியையும் ஏற்படுத்துகிறது. பிறகுதான் தருண் தனது காதலை சொல்லுகிறான். ஆனால் அஞ்சலி அதை ஏற்பதில்லை. தனது காதலை நிரூபிக்க அவளை காசு கடன்வாங்கி மும்பைக்கு கூட்டிச்செல்கிறான். வேறெதையும் நினைக்காதீர்கள். கடற்கரையில் சேரைப் போட்டு உட்கார்ந்து கோலா குடிக்கிறார்கள். அந்தே.... 


ஆனால் இங்குதான் பிரச்னை முளைவிடுகிறது. அஞ்சலி மும்பை வந்ததை அவளது அப்பாவுக்கு, அவரது நண்பரே சொல்லிவிடுகிறார். பிறகு வீட்டுக்கு வரும் பெண்ணிடம் எங்கு சென்றாய் என்று கேட்கும்போது காதல் கள்ளத்தனத்தோடு மகள் பொய் சொல்லிவிட அப்பாவுக்கு தூக்கம் போய்விடுகிறது. எவ்வளவு நம்பினேன், ஆனால் என்கிட்டயே பொய் சொல்லிட்டாளே என மனம் குமைகிறார். 


இதனால் மகளை ஏதும் சொல்லமுடியாமல் காதலனை வரச்சொல்லி ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து மகளை விட்டு போய்விடு என எச்சரிக்கிறார். தருணும் பணம் வாங்கிக்கொண்டு போய்விடுகிறார். உண்மையில் அவர் ஏன் பணம் வாங்கிக்கொண்டார். அவர் காதலை விட்டுக்கொடுத்துவிட்டாரா, அஞ்சலியிடம் அவளது அப்பா மனம் திறந்து பேசினாரா என்பதுதான் இறுதிப்பகுதி. 


படத்தில் முக்கியப் பாத்திரங்கள் அஞ்சலி, அவளது அப்பா, அஞ்சலியின் காதலன். கதையில் துணை பாத்திரமாக வரும் அஞ்சலியின் அண்ணன் தருணுக்கு ஆதரவாக பேசும் வசனம் எதிர்பார்க்காத ஆச்சரியத்தைத் தருகிறது. ஏனெனில் செய்யும் விஷயங்களை எப்போதும் தடுமாற்றத்துடன் செய்துகொண்டிருப்பவன். அவனது அப்பாவுக்கும் அவன் மீது பெரிய நம்பிக்கை இருக்காது. 


பிரகாஷ்ராஜ், தருண் கோல்ப் விளையாடும் இடத்தில், இறுதிக் காட்சியில் கல்யாண மண்டபத்தில் பேசும் வசனங்கள் மாஸ் பன்ச்சுகள். 


தந்தைக்கு, தன்னைத் தவிர்த்து இன்னொரு ஆணை மகள் பிடித்திருக்கிறது என சொல்லும்போது பதற்றம் வருகிறது. அதை அவர் வெளிப்படுத்தும் விதம்தான் காதலனை பணம் கொடுத்து விலகச்சொல்வது, தன்னை அண்டி வேலை செய்யும் சாதாரண அலுவலக பணியாளருக்கு மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுப்பது என எல்லாம் வருகிறது. தொடக்கத்தில் திருமண தரகர் ஒருவர் வருவார். அவர் மாப்பிள்ளை அமெரிக்காவில் இருக்கிறார் என்று சொன்னதும், பிரகாஷ்ராஜ் உடனே மறுப்பார். அதன் காரணம், மாப்பிள்ளை அவரது பெற்றோரை எப்படி நடத்துகிறார் என்பதல்ல கவலை. பிரகாஷ் ராஜூவுக்கு அவரது மகளை அருகிலேயே வைத்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான். தன்னை மிஞ்சுபவனை அவர் ஏற்பதில்லை. தன்னை விட கீழே இருப்பவனையும் மதிப்பதில்லை. தன் செல்வாக்கு, பணம் ஆகியவற்றுக்கு பக்கத்தில் கூட வரமுடியாத அனைத்திற்கும் தன்னையே மகள் நாடவேண்டும் என்ற இயல்பில் பிரகாஷ் ராஜ் முடிவுகளை எடுக்கிறார். உளவியல் ரீதியாக பார்த்தால் இப்படித்தான். படத்தைப் பார்த்தபிறகு பார்வையாளர்கள் இந்தளவு யோசிப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி யோசித்தால் அந்த பாத்திரத்தை இன்னும் நன்றாக உள்வாங்க முடியும். 


பிரகாஷ்ராஜ் நாயகன் என முன்பே சொன்னபடி படம் தொடங்கி முடியும் வரை வேறு எவரையும் நினைக்க முடியாதபடி செய்கிறது அவரது நேர்த்தியான நடிப்பு. இயக்குநரின் உணர்வுகளை தெளிவாக உள்வாங்குபவர்தான் இந்தளவு சிறப்பாக நடிக்க முடியும். நுவ்வே நுவ்வே - நீதான் நீயேதான் என தமிழில் டப் செய்தால் கூட நமக்கு நினைவுக்கு வருவது பிரகாஷ்ராஜ்தான். 


இந்த கதையை சற்றே மாற்றி சில பல காராபூந்தி, லட்டு என ஹால்திராம் போல சேர்க்கை செய்தால் இரு படங்களை நினைவு கொள்ள முடியும். அபியும் நானும், திருவிளையாடல் ஆரம்பம். இரண்டிலும் பிரகாஷ்ராஷ் இருக்கிறார். அவர் சொல்லும் வசனம் சொல்லுவது போல சொல்வது என்றால், யெஸ் தட்ஸ் இட், தட்ஸ் மை பாய்.....


படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவாகிவிட்டது..... அதற்கான விழாவையும் அண்மையில் ஆந்திரத்தில் கொண்டாடினார்கள். 


பிரகாஷ் ராஜூக்காக....





கருத்துகள்