பூமியை விதம் விதமான கணித வடிவங்களால் வரைந்த புவியியல் வல்லுநர்கள் - புவியியல் அறிமுகம்

 








டோலமி - தொன்மையான புவியியல் ஆராய்ச்சியாளர் 



கிளாடியஸ் டோலமி. தொன்மையான கிரேக்க நாட்டின் எகிப்தில் பிறந்தவர். கிரிகோ ரோமன் புவியியல் தகவல்களை உருவாக்கினார். கூடுதலாக கணிதம், வானியல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். புவியியல் என்ற பெயரில் எட்டு பாகங்களைக் கொண்ட நூலொன்றை உருவாக்கினார். அதிலுள்ள தகவல்களைக் கொண்டுதான் உலக நாடுகளின் வரைபடம் வரையப்பட்டது. இதில் 26 உள்ளூர் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டன. அப்படியானால் அந்த நூலில் எவ்வளவு தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் பாருங்கள்....  நூலில் எட்டாயிரம் இடங்களின் பெயர்களையும் குறித்து வைத்திருந்தார். 


13 பாகங்களாக எழுதப்பட்ட அல்மாகெஸ்ட் என்ற நூலில் சூரிய குடும்பம் பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்திருந்தார். நான்கு பாகங்களாக வெளிவந்த டெட்ராபிபிலோஸ் என்ற நூலில் ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக விளக்கியிருந்தார். டோலமியின் அறிவும், அவரது படைப்புகளும்தான் உலக நாடுகளின் வரைபடங்களை ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உருவாக்கவும் புவியியல் துறையை பின்னாளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் உதவியது. 


2



கிளாடியஸ் டோலமி


பூமி என்ன வடிவில் இருக்கிறது என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய ஒன்று. உருண்டை என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கினாலும் இன்றும் கூட பூமி தட்டை வடிவத்தைக் கொண்டுள்ளது என்று சொல்லி அதற்கான ஆதாரங்களை விளக்குபவர்கள் யூட்யூப் முதல் இன்ஸ்டாகிராம் வரை உண்டு. ஆரஞ்சு பழத்தின் மேற்தோலை உரித்தெடுத்து டேபிளில் வைத்து இப்போது தோலை ஆரஞ்சு பழத்தை மூடியிருப்பது போல செய்ய முடியுமா? அப்படி செய்ய முயற்சிப்பதுதான் பூமியை தட்டையானது என்று கூறுவதும் கூட. அன்று வரைபடங்களை உருவாக்கியவர்கள் அதனை பல்வேறு வடிவங்களில் செய்ய முயன்றனர். தட்டை வடிவம்,கூம்பு, உருளை வடிவம் என அவர்கள் முயன்ற வடிவங்களுக்கு டெவலப்பபிள் சர்ஃபேசஸ் என்று பெயர். 

கணித கணக்கீடுகளை வைத்து பூமியின் பரப்பை தட்டையான பல்வேறு வடிவங்களாக மாற்ற முடியும். இப்படி மாற்றும் முறைக்கு புரொஜெக்ஷன் என்று பெயர். பல்வேறு நூற்றாண்டுகளாக இந்த முறையில் உலக வரைபடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் வரைபடங்களை உருவாக்குவதில் நிறைய சவால்கள் உள்ளன. இப்படி கணித முறைகளைப் பயன்படுத்தி வரைபடங்களை இஷடம் போல உருவாக்குவதில் வரைபட வல்லுநர்களுக்கு தங்கள் விருப்பம் போல ஒரு இடத்தை சுருக்கி மற்றொரு இடத்தை விரிவு செய்ய முடியும். 

உலக வரைபடங்களை பல்வேறு வடிவங்களாக உருவாக்கினாலும் அதில் புகழ்பெற்ற வடிவங்களை இப்போது பார்ப்போம். மெர்காடர், ராபின்சன், வான் டெர் கிரைன்டென் ஆகியவை முக்கியமானவை. 

வின்கெல் ட்ரைபல் புரொஜெக்ஷன் என்ற உலக வரைபட வடிவத்தை தேசிய புவியியல் சங்கம் அங்கீகரித்தது. அங்கீகரித்த ஆண்டு 1998. இன்று வரை இந்த வடிவத்தை நாம் பயன்படுத்தி வருகிறோம். 

ராபின்சன் உலக வரைபட வடிவத்தை பாடநூல்களில் பார்த்திருப்பீர்கள். இந்த வரைபடம் 1988 தொடங்கி 1998 வரை புழக்கத்தில் இருந்தது. 

வான் டெர் கிரைன்டன் உலக வரைபட வடிவத்தை தேசிய புவியியல் சங்கம் அரசியல் வரைபடம் என்ற வகையில் பயன்படுத்தியது. இதன் பயன்பாட்டுக் காலம் 1922 - 1980 ஆம் ஆண்டு வரையில்தான். 

மெர்காடர் வடிவ உலக வரைபடம், உலக நாடுகளின் நிலப்பரப்பு அளவைகள், குறிப்பிட்ட இடத்தின் அட்ச ரேகை தீர்க்க ரேகை ஆகியவற்றை அடையாளம் காண இந்த வகை படம் பயன்படுகிறது. 

கூம்பு வடிவ உலகம் 

உலகை மேலிருந்து கூம்பு வடிவத்திற்குள் உள்ளடக்கி கற்பனை செய்யுங்கள். அதுதான் இந்த வடிவம். வட துருவம் பூமியின் அடித்தளத்தை தொட்டிருப்பது போல இதன் வடிவம் இருக்கும். இந்த கூம்பு வடிவத்தை அறுத்துப் பார்த்தால் மின் விசிறி போல உலக வரைபடம் கிடைக்கும். மடித்து வைத்தது போல தன்மையில் கூம்பு படம் இருக்கும். மத்திய பரப்பெல்லைகளை எளிதாக அடையாளம் காண இந்த வகை படம் உதவுகிறது. 

உருளை வடிவ படம்

பூமியின் மீது கேஸ் சிலிண்டரை வைத்தது போல வடிவம் இருக்கும். இந்த வகையில் ஈகுவடார் மட்டும் சரியாக இருக்கும். மற்றபடி துருவப் பகுதிகள் சற்றே இழுக்கப்பட்டு வம்படியாக விரிவாகி இருக்கும். இதன் விளைவாக துருவப் பகுதிகள் அதன் இயல்பான பரப்பெல்லையைக் கடந்து நீளமாக இருக்கும். 

அஸிமுதல் வடிவ படம்

பூமியின் மீது ஒரு சதுர வடிவ தாளை விரித்து பிடித்தால் எந்தளவு இடம் அதில் இடம்பெறும். அதேயளவுதான் இந்த வடிவத்திலும் தெரியும். இந்த வடிவத்தில் உலக நாடுகளில் குறிப்பிட்ட இடத்தைப் பார்க்க முடியும். குறிப்பிட்ட இடத்தை மட்டும் கவனத்தில் கொள்ள இதுபோன்ற வடிவத்தை ஆய்வாளர்கள் உருவாக்கினர். 

ஆன்சர் புக் -ஃபாஸ்ட் ஃபேக்ட்ஸ் அபவுட் அவர் வேர்ல்ட் 

படங்கள் 
குவாரா, தாட் வலைத்தளங்கள்


கருத்துகள்