சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

 

















ட்ரூத் - சீன  டிவி தொடர் 

யூட்யூப் 


தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர். 


பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை. 


பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப்படுத்துகிறார்கள் என்பதே முக்கியப்படுத்தி இருக்கிறார்கள். மையக்கதை தடய அறிவியல் என்பதால், அனைத்து இடங்களிலும் தடய அறிவியல் ஆட்களே வழக்கிற்கு குற்றவாளியை பிடிக்க முக்கியம் என்பதுபோல காட்டுகிறார்கள். இதில் வரும் அனைத்து திருப்பு முனைகளுமே புத்திசாலித்தனத்தை மையப்படுத்தியது என்பதால் காட்சிகள் பெரிய சுவாரசியத்தை கொண்டது போல இருக்காது. இதனால் தொடரை வலுப்படுத்த, தொடரின் இயக்குநர் ஏதாவதொரு பாத்திரத்தின் முன்கதையை இரண்டுநிமிடங்களுக்கு சொல்லிவிட்டு பிறகுதான் நிகழ்கால கதையை சொல்லுகிறார். இதுவும் பார்க்க நன்றாகவே இருக்கிறது. 


இதில் முக்கியமான இரண்டு பாத்திரங்கள் ஸாவோ ரூயின் மூத்த மகனான வழக்குரைஞர், சாங் பாய் யூ. அடுத்து இவரது நண்பனாக காவல்துறையில் தடய அறிவியல் துறையில் பணியாற்றும் லின் யுவான் ஹாவோ. இந்த இருவரின் நகைமுரணான நட்புதான் தொடரில் கவனிக்கத் தக்கது. எப்போதுமே நேர்மையான வழியில் செயல்படவேண்டும் என நினைப்பவன், ஹாவோ. இவன், அரசு வழக்குரைஞராக இருந்து ஒரு வழக்கில் தனது நண்பனான பாய் யூவுடன் தோற்றுவிடுகிறான். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதும் செய்யமுடியவில்லை என்ற கோபத்தில் எதிர்தரப்பு வாதியை அடித்துவிடுகிறான். இதனால் வழக்குரைஞர் பணியை விட்டு தடய அறிவியல் துறைக்கு வருகிறான். இவனது நண்பன் பாய் யூ, தனியாக சட்ட நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறான். அதில் சேர தனது ஒரே நண்பனான ஹாவோவை அழைக்கிறான். ஆனால் ஹாவோ நேர்மையானவன் என்பதால் தனது நண்பன் பாய் யூ தவறான வழிக்குப் போவதை உணர்ந்து தான் வரவில்லை என மறுத்துவிடுகிறான். பாய் யூவுக்கு ஹாவோ தனது அழைப்பை மறுத்தாலும் கூட அவனை அடிக்கடி சந்தித்து பேசுகிறான். இருவரின் நட்பு கல்லூரி காலத்தில் உருவானது. ஏன் பாய் யூவிற்கு ஹாவோவை அந்தளவு பிடிக்கிறது என்பது தொடரைப் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு புரியும். 


தொடரில் முக்கியமான வழக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு பிற வழக்குகளை அதாவது காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாமல் ஆதாரம் கிடைக்காமல் போன மற்றவற்றை மெல்ல தூசி தட்டி எடுக்கிறார்கள். அதற்கு தடய அறிவியல் துறையில் உள்ள புத்திசாலி ஹாவோ தான் காரணம். அவனது புத்திசாலித்தனத்தைப் பார்த்து முதலில் மிரண்டு கேலி பேசிய லின் லான் என்ற சக தடய அறிவியலாளர் பின்னர் அவன் மேல் காதலாவது இயல்பானது. தொடரில் எங்குமே காதல் காட்சிகள் கிடையாது. சாங் பாயூவுக்கு உண்டு. அவர் வில்லன் என்பதால் அதை கணக்கில் சேர்க்க வேண்டாம். நாயகன் ஹாவோதான், தொடரில் கடைசி வரை தனியாக இருந்துவிட்டு இறுதிக் காட்சியில்தான் நாயகி லின் லானோடு பைக்கில் பறக்கிறார். அதுதான் சற்று ஆசுவாசமாக இருக்கிறது. 


தடய அறிவியல் துறையை முக்கியமானதாக காட்ட பழைய வழக்கு ஒன்றை எடுத்துக்கொள்கிறார்கள்.இதனால் இந்த பிரிவு என்ன கண்டுபிடிக்கிறதோ அதற்கு ஒத்தாசை செய்ய பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு செல்கிறது. இதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் தொடரைப் பார்க்கும்போது பெரிதாக லாஜிக் பற்றி கவலை ஏதும் இருக்காது. 


படத்தில் பாய் யூ, ஹாவோ இருவருமே கணினி கோடிங்கில் திறமைசாலிகள். இருவருமே காபி கொட்டைகளை வாங்கி அதை தங்களின் பாணியில் அரைத்து காபி போட்டு குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். கூடவே மரப்பொருட்களை வினோதமான புதிர் தன்மையில் உருவாக்குவார்கள். அதை ஒருவருக்கொருவர் கொடுத்து புதிரை தீர் என சவால்விடுவார்கள். இதே தன்மையில் குற்றங்களையும் தீர்க்கும் சவால் பாய் யூ இறப்பிற்கு பிறகு ஹாவோவுக்கு வருகிறது. பாய் யூ குற்றவாளி என்றாலும் நண்பன் என்ற அடிப்படையில் அவனைக் கொன்றது யார் என தெரிந்துகொள்ள ஹாவோ விரும்புகிறான். உண்மையில் அவன் யாரால் கொல்லப்பட்டான், இறந்துபோக காரணமாக இருந்தது யார் என்பதை அறியும் உண்மையில் அதிர்ச்சியெல்லாம் ஏற்படவில்லை. விரக்தியும் வேதனையும்தான் ஏற்படுகிறது. 


நாட்டின் கலை பொக்கிஷங்களை ஒரு குழு திருடுகிறது. அது யார் என்பதை விசாரிக்கும்போதுதான் கேப்டன் லின்னின் மர்ம மரணம் பற்றிய முடிச்சும் அவிழ்கிறது. இந்த வழக்கில்தான் ஷாவோ ருய் என்ற தொழிலதிபரின் முற்கால வேதனைகள் பற்றிய காட்சிகள் வருகின்றன. குடும்ப வன்முறை, குழந்தை மீதான வன்முறை, கொலைமுயற்சி என முழுக்க கருப்பு பக்கங்களைக் கொண்ட அத்தியாயங்கள். அவையெல்லாம் பின்னாளில் ஷாவோ ரூயை எப்படி இரக்கமற்ற கொலைகாரராக உருவாக்குகிறது என்பதை அவர் தன் வாயால் வாக்குமூலமாக சொல்லுமிடம் சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. நாம் நேசிப்பவர்கள், அன்பு செலுத்துபவர்களே நம் துயரத்திற்கு காரணம் என புத்தர் கூறுவார். அதுபோல, அவரின் மனைவியே மகனின் இறப்பிற்கு கணவன் காரணம் என்பதால் காவல்துறையிடம் உண்மையைக் கூறிவிடுகிறார். சாங் பாய் யூவின் அம்மாவாக நடித்துள்ள நடிகை, சிறப்பாக நடித்துள்ளதை கூறியே ஆகவேண்டும். பதற்றமே இல்லாமல் காவல்துறையை எதிர்கொள்வது, மகன் இறந்தபிறகு மருமகளை, பேரனைக் காக்க வேண்டும் என உண்மையை உணர்ச்சியற்ற குரலில் சொல்வது, மெல்ல தந்திரமாக மகனின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்களை காவல்துறையில் ஆதாரங்களைக் கொடுத்து சிக்க வைப்பது என தொடரை அமைதியாக இருந்து பிறரை ஆட வைப்பதே இவர்தான். 


தொடரில் நகைச்சுவை தருணங்கள் மிக குறைவு, முழுக்க கடந்த காலத்தை நினைத்து வேதனைப்படும் சில காட்சிகளும், அழுகையும் பிற்பகுதியை நிறைக்கிறது. இதை லின் லான் ஏற்று திறம்பட செய்கிறார். அவரது அன்பிற்குரிய அம்மா இறந்துபோக தவித்துப்போய் நின்றவருக்கு காவல்துறையில் உள்ளவர்கள்தான் ஆறுதலாக இருக்கிறார்கள். அவர்களைத்தான் தனது குடும்பமாக கருதுகிறார். 


ஹாவோ, லின் லான் என்ற இருவரில் ஹாவோ அகவயமானவர். லின் லான் பட படவென பேசிக்கொண்டே இருப்பவர். இருவரும் ஒருவரையொருவர் நிறைவு செய்யும் ஆட்கள் என்பதை மெல்ல புரிந்துகொண்டு வழக்குகளின் புதிர்களை அவிழ்க்கிறார்கள். குற்றவாளிகளை தாக்குவது, கொல்லுவது என்று செய்யாமல் சட்டத்தின்படி தண்டனை கிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள். இந்த எண்ணம்தான் அவர்களை மதிப்புமிக்க அதிகாரிகளாக்குகிறது. பின்னாளில் லின் லான் தேர்வு எழுதி அரசு வழக்குரைஞராகிறார். ஹாவோ தடய அறிவியல் துறையில் தொழில்நுட்ப ஆய்வாளராக பணியாற்றுகிறார். இருவரும் ஒன்றாக பைக்கில் செல்வதோடு தொடர் நிறைவடைகிறது. 


நிதானமான தடய அறிவியல் தொடர்


கோமாளிமேடை டீம் 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்