மீண்டும் முதலில் இருந்து.....

 










மீண்டும் முதலில் இருந்து...


லினக்ஸ் மின்ட் இயக்க முறைமையை கணியம் சீனிவாசன் அவர்கள் உள்ளிட்டதோடு ஏராளமான மென்பொருட்களையும் பதிவிட்டு கொடுத்தார். அதனால்தான் நிறைய மின்நூல்களை உருவாக்கவும், வலைப்பூவில் எழுதவும் முடிந்தது. ஆனால் பெருநகரில் இருந்தபோது கிடைத்த வாய்ப்புகள் கிராமத்தில் கிடைப்பதில்லை. எனவே வேறுவழியின்றி லினக்ஸ் இயக்கமுறையை கைவிட்டு விண்டோசுக்கு மாற வேண்டிய நெருக்கடி...

இதனால் இதுவரை சேர்த்திருந்த தமிழ் எழுத்துருக்கள், பாடல்கள், அனிமேஷன் படங்கள், ஆங்கில, சீன, கொரிய திரைப்படங்கள் என அனைத்தும் அழித்து விண்டோஸ் 10 இயக்கமுறையை பதிவிட்டுள்ளேன். வேறு வழியில்லை. கொடுமுடியில் லினக்ஸ் தெரிந்த நுட்ப வல்லுநர்கள் பற்றி எனக்கு தெரியாது. கணியம் சீனிவாசன் சாரும் விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறார். இந்த நேரத்தில் கணினிக்கான உதவியை நாட ஈரோடுதான் செல்லவேண்டும். ஈரோட்டை அடைய போக்குவரத்து வசதி இருக்கிறது. ஆனால் அங்கு சென்று லினக்ஸை புதுப்பிக்க ஆட்களை தேடுவது கடினம். அங்கு கடைகளை வைத்திருக்கும் பலரும் விண்டோஸ் சார்ந்த சேவைகளை செய்துகொடுத்து பணம் சம்பாதிப்பவர்கள். எனவே கடையில் ஏறி இறங்கி கணியை சரி செய்து கொண்டு வர ஒரு பொழுது போய்விடும். பிறகு கல்லூரி, பள்ளி மாணவர்களுடன் நெருக்கியடித்துக்கொண்டு வந்துதான் கரட்டாம்பாளையத்தில் இறங்கி வீட்டுக்கு வரவேண்டும். இந்த நெருக்கடிகளை யோசிக்கும்போதுதான் எஸ்ஆர் எலக்ட்ரிகல் சரவணன் நினைவுக்கு வந்தார். இவர் எனக்கு சொந்தக்காரர். கணினியில் தானே நிறைய கற்றுக்கொண்டு பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறார். எனவே அவரிடம் போன் செய்து கேட்டேன். கடைக்கு கொண்டு வா என்றார். கொண்டு சென்று விளக்கியதும், அவர் விண்டோஸைப் போட்டுக்குவோம் என்றார். நானும் ஏதேனும் ஒன்று இயங்கினால் போதும் என்ற நிலையில் இருந்தேன். 

கணினியில் எழுதியே நாட்களாகி இருந்ததால் கணினி எப்படியாவது தயாரானால் போதும் என நினைத்திருந்தேன். எனவே லினக்ஸ்  அல்லது விண்டோஸ் என  முடிவில் இருந்தேன். இறுதியாக இரண்டு இயக்கமுறைகளையும் சரவணன் அண்ணா நீக்கிவிட்டு, விண்டோஸ் 10 யை இன்ஸ்டால் செய்து தந்தார். அதிலும் பல்வேறு போராட்டங்களை செய்துதான் என்ஹெச்எம் ரைட்டர், லிப்ரே ஆபீஸ், சுமத்ரா பிடிஎப் ரீடர் எல்லாம் இன்ஸ்டால் செய்தேன். எப்படியோ ஒருவகையில் லினக்ஸ் காணாமல் போய்விட்டது. அது நிச்சயமாக வருத்தம்தான். குறைந்தபட்சம் எழுத முடிகிறதே என்ற வகையில் நிம்மதி. இப்போதைக்கு வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

பாதி எழுதிய சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் நூலை இனி முதலில் இருந்து எழுத வேண்டும். மின்னூல்கள் அத்தனையும் அழிந்துவிட்டன. இனி தேவைக்கு ஏற்ப ஒன்றை படித்தபிறகுதான் ஒன்றை தரவிறக்கி படிக்கவேண்டும். திரைப்படங்களை இனிமேல்தான் தரவிறக்கவேண்டும். அனைத்தும் முதலில் இருந்து  மீண்டும் தொடங்கவேண்டும். நூல்களை எழுதுவதும் கூடத்தான். 

இதுவரை லினக்ஸ் இயக்கமுறைக்கு உதவிகள் செய்த கணியம் சீனிவாசன், அன்வர் ஆகிய இருவருக்கும்  மிக்க நன்றி.....


கருத்துகள்