சரியான கல்வியை பள்ளிகள் வழங்குகின்றனவா? - ஜே கிருஷ்ணமூர்த்தி

 













சரியான கல்வி எது? - ஜே கே







1


கல்வி கற்காத மனிதன் யார்? பள்ளி செல்லாதவன், தன்னை முழுக்க அறியாதவன்தான். பள்ளி சென்றாலும் நூல்களை மட்டும் படித்தவன் முட்டாளாக இருக்க வாய்ப்புண்டு. அவன் அரசு, அதிகார வர்க்கம் தரும் தகவல்களை மட்டுமே அறிந்திருப்பான். புரிந்துகொண்டிருப்பான். 


ஒன்றைப் புரிந்துகொள்ளுதல் என்பது சுயமாக கற்றல் என்பதன் வழியாக சாத்தியமாகிறது. இது ஒருவரின் மனதில் நடைபெறும் உளவியல் கற்றல் செயல்முறையைப் பொறுத்தது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்குள் தன்னை உணர்ந்துகொண்டு கற்பதுதான் கல்வி என்று கூறவேண்டும். 


புத்தகங்களைப் படித்து அதிலிருந்து நாம் பெறும் செய்திகள், தகவல்கள் ஆகியவற்றின் தொகுப்பைத்தான் கல்வி என்று சொல்லுகிறோம். இதை யார் வேண்டுமானாலும் பெறமுடியும். புத்தகங்களை வாசிக்கத் தெரிந்தால் போதுமானது. இப்படி பெறும் அறிவு மனிதர்களிடையே கொள்ளும் மோசமான உறவு, சிக்கல்கள், எடுக்கும் முடிவு ஆகியவற்றுக்கும் முக்கியமான காரணமாகிறது. ஏறத்தாழ ஒருவரை குழப்பத்திற்குள் ஆழ்த்தி அவரை மெல்ல அழிக்கிறது. 


கல்வி கற்க ஒருவருக்கு உள்ள வாய்ப்பு பள்ளி மட்டுமேதானா?


நமது சமூகம் ஒருங்கிணைக்கப்பட்டது. நாம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என்பது சில தொழில்திறன்களைக் கற்று பிழைப்பை நடத்திக்கொள்ளத்தான். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் பாதுகாப்பான பொருளாதார ஸ்திர நிலையில் இருப்பார்கள். ஆனால் இப்படி பள்ளிக்கு சென்று கற்கும் கல்வி, நம்மை நாமே உணர்வதற்கு உதவுமா?


பள்ளிக்கு ஒருவர் செல்வதன் மூலம் அவர் எழுத படிக்க தெரிந்துகொள்ளலாம். கூடுதலாக பொறியியல் அல்லது வேறு தொழில்திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இந்த திறன்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவுமா? இதில் தொழில் திறன் என்பது இரண்டாவது நிலையில்தான் உள்ளது. நம் வாழ்க்கை நடக்க தொழில்திறன்தான் உதவுகிறது என்றாலும் அதை நாம் முக்கியமாக கருதும்போது வாழ்க்கையின் அடிப்படையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறோம் என்று பொருளாகிறது. 


வாழ்க்கை என்பது வலி, அழகு, அசிங்கம், காதல் என அனைத்தும் நிரம்பியது. இந்த உணர்வுகள் வாழ்வின் அனைத்து நிலையிலும் உள்ளன. இவற்றை நாம் அதன் தன்மையில்தான் புரிந்துகொள்ள முடியும். இதனை குறிப்பிட்ட திறன், நுட்பம் மூலம் புரிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையை குறிப்பிட்ட புதுமைத்திறன் நுட்பம் மூலம் புரிந்துகொள்ள முடியாது. 


இன்றைய நவீன கல்வி முழுக்க நுட்பங்களைக் கொண்டு வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயன்று தோற்றுப்போயுள்ளது. இதை முழுமையான தோல்வி என்று கூறவேண்டும். வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் நாம் நுட்பத்தை உருவாக்குவதன் மூலம் மனிதர்களை அழித்து வருகிறோம். கருத்து, ஆசை ஆகியவை பற்றிய பரிமாணம் இல்லாமல் நாம் வாழத் தொடங்கும்போது நாம் இரக்கமில்லாத மனிதர்களாக மாறி போர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றி மட்டுமே கவனம் கொள்ளுபவர்களாக மாறிவிடுவோம். நாம் கற்றுக்கொள்ளும் நுட்பங்கள் மூலம் அறிவியலாளர்கள், கணித வல்லுநர்கள், கட்டிட வல்லுநர்கள் ஆகியோரை உருவாக்க முடியும். இவர்கள் எவராலும் அவர்களது வாழ்க்கையை முழுமையாக உணர முடியுமா? அதற்கு அவர்கள் தங்கள் சிறப்பு நுட்ப வாழ்க்கையை கைவிட்டால் மட்டுமே சாத்தியம். 

எஜூகேஷன் அண்ட் சிக்னிஃபிகன்ஸ் ஆப் லைஃப் - ஜே கிருஷ்ணமூர்த்தி எழுதிய நூலிலிருந்து பெறப்பட்டது....

image - pinterest.com

கருத்துகள்