சுயநலமான காரியக்காரர்களால் நண்பருக்கு ஏற்பட்ட துயரம்!

 









சில உறவுகளை நாம் தேடிச்செல்கிறோம். சில உறவுகள் நம்மைத் தேடி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை நம்மைத் தேடி வரும் உறவை முக்கியமாக பார்க்கிறேன். அதில் நாம் ஏற்பவையும் குறைவுதான். அனைத்தும் நமது குணநலன்களுக்கு ஏற்ப இருப்பதில்லை. கார்ட்டூன் கதிரை நான் முதல்முறையாக முரசு அலுவலகத்தில் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. இவரின் திறமையை நாம் நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கு இருந்த சூழலில் அவருக்கு அதிக நம்பிக்கையைத் தர முடியவில்லை. ஆனால் அவரின் வலைப்பூ சென்று சோதித்துப் பார்த்தேன். நான் அப்படி செய்தது ஆசிரியர் தூயவருக்கு பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை. இப்படியொரு திறமைசாலி ஏன் உளுத்துப்போன இதழுக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்போது கார்ட்டூன் கதிரவனுக்கு, சாதி சார்ந்து இயங்கும் பத்திரிகையில் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை தோன்றியிருக்கிறது. பின்னாளில் அது தவறான முயற்சி என உணர்ந்திருப்பார். 


கார்ட்டூன் கதிரவன் பதினைந்து நாட்களில் மயிலாப்பூரில் உள்ள தினசரியில் வேலைக்கு சேர்ந்ததைப் பற்றி போன் செய்து தகவல் சொன்னார். அப்போது அவரது மனநிலை என்னவாக இருந்திருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. 


''எனக்கு ------- தினசரியில் வேலை கிடைச்சிருக்கு, உங்களுக்கு தகவல் சொல்லத்தான் போன் செய்தேன்'’


''அப்படீங்களா நன்றிங்க, நான் சார்கிட்ட சொல்லிடுறேன்'’ 


''சரி, நான் வெச்சிரட்டுமா'’


இந்த வெச்சிரட்டுமா என்ற வார்த்தை பின்னாளிலும் கார்ட்டூன் கதிரவன் பயன்படுத்திக்கொண்டு இருந்தார். வண்ணதாசன் கதையில் ஒரு பாத்திரம் சொல்லும் உணர்ச்சிகரமான வாக்கியம், சொல் ஒன்றை இன்னொரு பாத்திரம் லயித்துக் கேட்டு சந்தோஷப்படும். எனக்கு அந்த நேரத்தில் அவரது சொற்களைக் கேட்கும்போது அப்படித்தான் இருந்தது. நான் பொதுவாக நன்றிங்க என்று சொல்லி தொடர்பை துண்டிப்பேன். ஆனால் கதிரவன் வெச்சிரட்டுமா என்பதை மாறாமல் சொல்லுவார். நாகப்பட்டின தன்மையில் இப்படி அவர் தகவல்தொடர்பை பழக்கத்தை கற்றிருக்கலாம். ஆனாலும் அது பேசும்போது அப்படியொரு லயமாக காதில் கேட்கிறது.. இறுதியாக பணியிலிருந்து விடைபெறும்போது அவருக்கு தாளில் வரைவதற்கான பென்சில் செட் ஒன்றும், சாக்லெட் ரூ.25க்கும் வாங்கிக் கொடுத்தேன். பெரிய கிஃப்ட் வாங்கிக் கொடுக்க பனிரெண்டாயிரத்தில் முடியாது. 


மரியாதையும் கண்ணியமும் தோழமையும் நிறைந்துதான் உறவு இருந்தது. ஆனால், இறுதிக்கட்டத்தில் பொது அறிவு களஞ்சியம் இதழில் படம் வரைய மறுத்தார் கதிரவன். 


ஏன், என்ன ஆச்சுங்க


மேதா சார் கூப்பிட்டு, இப்படி படம் வரையறது அயோக்கியத்தனம்னு சொல்றாருங்க 


''இதில் அவர் அப்படி சொல்றதுக்கு என்ன இருக்கு, நான் எடிட்டர்கிட்ட சொல்லிட்டுத்தானே பர்மிஷன் வாங்கித்தானே  நீங்க வரையறீங்க'’  

''இல்லைங்க, இனி நான் வரையலீங்க. டிசைன் சீஃப் இப்படி சொன்னதுக்கப்புறம் நான் உங்களோடு மேகசின்ல வேலை செய்றது நல்லா இருக்காது'’


எனக்கு அப்போதிருந்த நிலையில் பெரிய அதிகாரம் கிடையாது. பொது அறிவுக்களஞ்சியம் என்று கேப்ஷன் போடும் இதழ் பெரிதாக விற்காத வார பத்திரிக்கை. பத்திரிகை நிறுவனரின் அப்பா அதை தொடங்கி நடத்தினார். அப்போது லேனா தமிழ்வாணன் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு போட்டியாக இந்த பத்திரிகை இருந்தது. பெயரளவில்தான். தமிழ்வாணனின் பத்திரிகை சுய முன்னேற்ற கட்டுரைகளுடன் எப்போதோ கல்வி வேலை வழிகாட்டி இதழ் போல மாறிவிட்டிருந்தது. ஏறத்தாழ அந்த இதழ் ரீடர்ஸ் டைஜெஸ்ட் போலத்தான் தொடக்க காலத்தில் இருந்தது. பின்னாளில் மாறிவிட்டதும் பொது அறிவுக்களஞ்சியத்தின் தொடக்க காலகட்டமும் அப்படித்தான் இருந்தது. விஷயத்திற்கு வருவோம். பனிரெண்டாயிரம் சம்பளம் வாங்கும், பெரிய சிபாரிசு இல்லாத ஆட்களின் தொடர்பில்லாத உதவி ஆசிரியன் அரசியல் செய்து பிழைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஒருவருக்கு எதிராக என்ன செய்துவிட முடியும்? எடிட்டர் கேஎன்எஸ் கூட தன்னைத்தானே காப்பாற்றி நிலைப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இருந்தார். யாரையும் குறை சொல்ல முடியாது. தனக்கு அப்புறம்தானே பிறரின் நலன்?… வெளிப்படையாக சொன்னால் அப்போதைய டிசைன் சீஃப் நேரடியாக ஒன்றும், மறைமுகமாக ஒன்றும் பேசக் கூடியவராக இருந்தார். இரட்டை நாக்கு ஆள். எடிட்டர் கேஎன்எஸ் பற்றி அவர் ஏகவசனத்தில் பேசியதையும் அவரது அறையில் நின்றபடியே கேட்டிருக்கிறேன். 


ஆனால் கதிரவன் விஷயம் எனக்கு முகத்தில் எச்சில் துப்பியது போல கோபத்தை ஏற்படுத்தியது. டிசைன் சீஃப்பிற்கு ஆதரவான ஓவியர் ஒருவர் இருந்தார். அவர் தினசரிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்த்து வந்தார். அவரது ஓவியங்கள் பெரிதாக மனதைக் கவர்வது கிடையாது. ஓவியத்தை விட ஓவியரின் பெயர் பெரிதாக தெரியும். கட்டுரையை உள்வாங்கி அதை ஓவியமாக வெளிப்படுத்தும் விதம் தட்டையானது. அவரது ஓவியங்களை மூன்று ஆண்டுகளாக பார்த்தவகையில் எந்த மாற்றமும் இல்லை. அதேதான். டெய்லி புஷ்பத்தில் மாணவர் இதழில் வேலை செய்தபோது அங்கு ஜெமினி கணேஷின் சாயலில் ஒரு ஓவியரைப் பார்த்தேன். வேகமாக படம் போடுவார். ஆனால் அதில் புதுமையோ சொல்ல வரும் விஷயத்தை தெளிவாக சொல்லுவதோ இருக்காது. நீர்த்துப்போன ஓவியங்கள். இவருக்கும் முன்னோடிதான் தினசரி ஓவியர். திறமையை விட அரசியல் செய்து பிழைத்து வந்தார் என்பது கதிரவன் வரைந்த ஓவியங்களைப் பார்த்து பொறாமைப்பட்ட பிறகுதான் தெரியும். தகழி இதுபோன்ற மனிதர்களை நாற்றமெடுக்கும் ஜந்துகள் என்று குறிப்பிடுவார். இதைத்தாண்டி பெரிதாக சொல்ல என்ன இருக்கிறது?


கதிரவனுக்கு ஏதாவது பணம் கொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று எடிட்டர் கேஎன்எஸ்சிடம் கேட்டேன். அவர் முதலில் சரி என்றவர், பின்னாளில் என்ன நினைத்தாரோ அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லை இருபத்தி இரண்டு வயதில் ஒருவன் பத்திரிகை துறையில் நம்பிக்கை இழந்தால் என்ன செய்வது? நான் அப்போது துணியை பிட்களாக வாங்கி கிரான்ட் ஃபிட் என்ற கடையில் கொடுத்து தைத்து போட்டுக்கொண்டிருந்தேன். ஒருநாள் சரவணா ஸ்டோர் சென்று சட்டை வாங்கும்போது சலுகை விலையில் இரண்டு பிட் துணி கிடைத்தது. அதில் ஒன்றை அவருக்கு சம்பளமாக கொடுக்க முடிவு செய்து கொடுத்துவிட்டேன். அன்றைக்கு வேறு எப்படி அவருக்கு நன்றி செலுத்துவது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த சட்டையைத் தைக்க அவருக்குத்தான் கூடுதல் செலவு. நான் துணியை மட்டுமே பேப்பரில் பொதிந்து கொடுத்தேன். அப்போதும் அவர் அதை வாங்குவதற்கு தயங்கினார். ''கம்பெனிதானே காசு தரணும், நீங்க ஏன் தர்றீங்க'’ நான் நிலைமையை சுருக்கமாக சொன்னேன். அவருக்கு புரிந்திருக்கும் என நினைத்தேன். பிறகு வாங்கிக்கொண்டார். இப்படித்தான் பொது அறிவு இதழில் அவரது வேலையை நிரந்தரப்படுத்திக்கொண்டேன். 

Image - cartoon stock

கருத்துகள்