பங்குனி விழாவில் விழி பிதுங்கும் மயிலாப்பூர்!

 











மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித்திருவிழா பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. கபாலீஸ்வரரின் விழாக்களில் பிரபலமானது. பல லட்சம் பேர் வந்து ஊரை இறைவனின் சிலையுருவங்களோடு சுற்றி வருவார்கள். கூடவே பக்தர்களுக்கு தண்ணீர் கலக்கிய மோர், சாச்சி, முக்தி மசாலாக்களால் மணக்கும் தக்காளிச்சோறு என நிறைய  சோறு போடும் வணிக நிறுவனங்கள் வருவார்கள். மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அன்று தங்களை அன்ன தாதாவாக கருதிக்கொண்டு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். பாலகுமாரன் சொல்லுவது போல, இப்படி அன்னம் வழங்குவதும் ஒருவித வேண்டுதல்தான். வயிற்றுப்பசியை  அணைத்து தனது நலம் நாடுவதுதான். புண்ணியம் தேடுவதுதான். 


அன்னதானம் நடந்தபிறகு மத்தள நாராயணன் தெரு, கடைவீதி, கச்சேரி சாலை என அனைத்து இடங்களிலும் சாலை எண்ணெய்யில் நனைந்து கிடக்கும். சோற்று பருக்கைகள், இன்ஸ்டன்ட் சோற்றுத் தட்டுகள், பாக்குத் தட்டைகள் என ஏராளமாக நிரம்பிவிடும். எனக்கு இதைப் பார்ப்பது பிடிக்கும். நகரை பகலிலும் இரவிலும் பார்க்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு வேளையிலும் நகரம் தனித்தன்மையான இயல்பில் இருக்கும். பகலில் பார்க்கும் நகரம் இரவில் காணக் கிடைக்காது. அன்னதானம் நடந்தபிறகு அடுத்தநாள் நேரமே எழுந்து கச்சேரி சாலை வழியாக நடந்து சென்று நாளிதழை வாங்கிக்கொண்டு அப்படியே கபாலீஸ்வரர் தேர் உள்ள தெருவில் நடந்து சென்று காந்தி சிலை அருகே வலது பக்கம் திரும்பினால் கடைத்தெரு வரும். சற்று அகலமான சாலை. ஆனால் வங்கிகள், எலைட் உணவகங்கள் உள்ளதால் மக்கள் நெருக்கடி அதிகம். அதில் அப்படியே நடந்து சென்றால், மைந்தன் ஜெராக்ஸ் வரும். உள்ளே போய்விடாதீர்கள். மனநிலையைப் பொறுத்து பிரிண்ட் அவுட்டிற்கு காசு வாங்கும் கடை இது. கபர்தார். அப்படியே நடந்தால் சாலை தடுப்புகளைக் கடந்து வலது புறம் திரும்ப வேண்டும். இடது புறம் திரும்பினால் ராமகிருஷ்ண்ட மடம் செல்லலாம். அதன் அருகில் சென்று சாலையைக் கடந்து நேராக சென்றால் நவ நாகரிக மனிதர்களின் ஆன்மிக குருவான சாய்பாபாவை கோவிலை அடையலாம். இவர்தான், தினசரியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பெரும்பாலும் இலவச மதிய உணவு போடுபவர். பங்குனி விழாவிலும் கூட கலக்கமில்லாமல் சாய்பாபா தன் வழியில் உணவு தயாரித்து வருபவர்களுக்கு பசிப்பிணி நீக்கி வந்தார். வருகிறார். 


வலது புறம் திரும்பினால் அதுதான் மயிலாப்பூர் குளம் பேருந்து நிறுத்தம். அங்கேயே உணவகம் ஒன்றுண்டு. அதையொட்டி பழமையான பேப்பர் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்த கடை அந்தளவு வேகமான செயல்பாட்டில் இல்லை. உரிமையாளரைப் பார்த்தால் ஈசலைப் பிடித்து தின்னும் மழைக்கால தவளை போலவே கண்களைக் கொண்டிருப்பார். ஜீவனற்ற கண்கள். மழுங்க சிரைத்த கன்னம். பளிச்சென தெரியும் மேழுதடு. பெரிய உதடுகள்.  பழைய வார, மாத இதழ்களைக் கூட விலையைக் குறைக்காமல் விற்கும் ஆளுமை. 


இவரது கடையைத் தாண்டினால் அரசு தேநீர்க்கடை. டேன் கடை, தொடக்கத்தில் ஐந்து ரூபாய் டீ, ஆனால் இப்போது பத்து ரூபாய்க்கு டீ விற்கிறார்கள். இந்தக் கடையில் உருப்படியான விஷயம், பாலில் தண்ணீர் கலக்காமல் காய்ச்சி டீ போடுகிறார்கள். இதை போட்டியாளரான ஒரு டீக்கடைக்காரரே ஆய்வு செய்து பார்த்து சொன்னார். இவர்கள் கொடுக்கும் டீயின் அளவும் கூடுதலாக இருக்கும். மயிலாப்பூரைப் பொறுத்தவரை ஐயங்கார்கள் மிகவும் சந்தேகம் கொண்டவர்கள். சுயநலமானவர்கள். முதலில் டோக்கன் வாங்கிக்கொள், பிறகுதான் சோறு. அதை நீ சாப்பிட்டாலும் சரி, சாப்பிடாவிட்டாலும் சரி என வேலை பார்ப்பார்கள். அங்குதான் தேநீரை பெரும்பாலும் காம்ரேட்டுடன் குடிப்பது வழக்கம். முதலில் கார்ட்டூன் கதிரவனுடன் குடிப்பேன். அப்படியே நடந்தால் 5 பி பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் எதிரில் சர்வோதய சங்கம் இருக்கும்.  பாலைவன ஒட்டகத்தின் முகத்தில் இருக்கும் அலட்சியத்துடன் பொருட்களை விற்கும் ஆட்கள் இங்கு இருப்பார்கள். அதை அப்படியே கடந்தால் பிரபல உணவகம் ஒன்று இருக்கும். அதைக்கடந்தால், தேசிய உணர்வு கொண்ட மணிக்கூண்டு பதிப்பகம் இருக்கும். இதெல்லாம் இடதுபுறம். வலதுபுறம் சாலையை கவனமாக கடக்கவேண்டும். இல்லையெனில் மந்தவெளி மாக்கான்கள் உங்கள் புட்டத்தின் மீது ஆக்டிவாவை ஓட்டி நசுக்கிவிடுவார்கள். பிறகு உள்ள நிறுவனங்கள் எல்லாமே ஆடைகள், பேக்குகள் சார்ந்தவை. நின்றுகொண்டே சாப்பிடும் விரைவு உணவகம் ஒன்றுண்டு. அதைக் கடந்தால் ரயில் நிலையத்தின் பாலம் வந்துவிடும் இவற்றைக் கடந்தால், வணிக வளாகம் வரும். 


அதைக் கடந்தால் லஸ் கார்னர். அதையும் லட்சியம் செய்யாமல் நடந்த வலது புறம் கடந்தால் கச்சேரி சாலை வந்துவிடும். அதிகாலை இப்படி மயிலை வலம் வருவதில் உருப்படியான விஷயம் என்ன தெரியுமா? நாளிதழ்களை லஸ் கார்னரில்தான் வாங்கிப்போட்டு பிரிப்பார்கள். உடனே வாங்கிக் கொண்டு அறைக்குச் செல்லலாம். சென்னை உங்களை வரவேற்கிறதோ இல்லையோ சரியான நேரம் அமைந்து சம்பளம் கிடைத்தால் இந்த நகரில் சமாளிக்கலாம். இல்லையெனில் பரபரப்பான இந்த ஊர் உங்களை வெளியே தள்ளிவிடும். காலம் தள்ளுவது கடினம். லஷ்மி சரவணக்குமார் உப்பு நாய்கள் நாவலில் கூறியிருப்பார், எந்த கடையில் உங்களால் கடன் சொல்லி பொருட்களை வாங்க முடிகிறதோ அதுதான் உங்கள் ஊர் என்று. அது உண்மையிலேயே நிஜம்.  நகரம் என்பதல்ல, அங்குள்ள மக்களே அதன் ஆன்மாவாக இருக்கிறார்கள்.   


படம் - வெப் துனியா 















கருத்துகள்

பிரபலமான இடுகைகள்