வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவாத கல்வி ஏற்படுத்தும் பாதிப்பு - ஜே கிருஷ்ணமூர்த்தி

 

















பல்வேறு இடங்களில் ஏற்படும் பேரழிவுக்கு காரணம், கல்வியாகவே இருக்கிறது. நாம் கல்வி என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது எதற்கு? அவர்களை கற்றவர்களாக மாற்றுவதற்காகவா? பள்ளியில் குறிப்பிட்ட தொழில் திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  அது அவர்களுக்கு லாபம் தரும் வேலையைப் பெற்றுத் தருகிறது. இப்படி கல்வி கற்று கிளர்க்காக திறன் பெற்றவர்கள் நிர்வாக ஏணிப்படிகளில் ஏறி திறன் பெற்றுவிட முடியுமா?


ஏழாவது பாகம், தி கலெக்டட் வொர்க்ஸ் தொகுப்பு.


தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சில பகுதியினருக்கு பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. ஆனால் அதேசமயம் ஆழமான பிரச்னைகளையும் உருவாக்குகிறது. வளர்ந்துவரும் பல்வேறு சவால்களை சந்திக்கும் வகையில் ஒருவரின் வாழ்க்கை இருக்கவேண்டும். தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல் இதுதான். 


தொழில்நுட்ப ரீதியாக நாம் பெறும் அறிவு, நமது மனதிற்குள் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை, தர்க்க ரீதியான அழுத்தங்களை தீர்க்க உதவாது. வாழ்க்கையின் செயல்பாட்டை புரிந்துகொள்ளாமல் நாம் பெறும் தொழில்நுட்ப அறிவு மெல்ல நம்மையே அழிக்கத்தொடங்குகிறது. அணுவை எளிதாக பிளக்க கற்ற மனிதன், தனது இதயத்தை அன்பாக வைத்துக்கொள்ள தெரியவில்லை என்பதால் அழிவுசக்தியாக மாறுகிறான். 


ஒருவர் தனக்கு ஏற்றபடி ஒரு தொழில்திறனைக் கற்றுக்கொள்கிறார். இப்படி கற்றுக்கொள்ளும் திறன் ஒருவரின் வாழ்க்கையின் முரண்பாட்டை அல்லது குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? சில தொழில்திறன்களைக் கற்பது அடிப்படைதான். இந்த வகையில் நிறையப்பேர் பொறியாளர்கள், கணக்கு தணிக்கையாளர்கள், மருத்துவர்கள் ஆகிறார்கள். பிறகு என்ன? இது ஒருவரின் வாழ்க்கையை நிறைவு செய்கிறதா? நமது வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படி நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை, நம்மை பரபரப்பாக வைத்திருக்கிறது. இக்காலகட்டங்களில் நாம் உருவாக்கும் பொருட்கள் என்பவை மிக குறைவு. அவை பெரும்பாலும் நம்மை அழிப்பவைதான். நமது செயல்பாடு, நாம் கொடுக்கும் மதிப்புகள், பதவிகள்  பொறாமை, கசப்பு, வெறுப்புணர்வு ஆகியவற்றை உருவாக்குகின்றன. 


நாம் நம்மைப் புரிந்துகொள்ளாதபோது, நாம் செய்யும் வேலை என்பது நமக்கு உதவாது. அவை நம்மை விரக்தியில் தள்ளுகின்றன. தவறான செயல்பாடுகளில் ஆழ்த்துகின்றன. தொழில்நுட்ப திறன்களும் வளர்ச்சியும் நம்மை மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வைப்பதோடு ஒருவரையொருவர் அழிப்பதற்கான வழிகளை தேட வைத்துள்ளது. நாம் வாழ்க்கை என்பதை பல்வேறு அலங்கார வார்த்தைகளாக கருதி பேசுகிறோம். ஆனால் ஒருவருக்கொருவர் அழித்துக்கொள்வதற்கான தன்மையில்தான் வாழ்க்கை அமைந்துள்ளது. நாம் இப்போது அமைதியான மகிழ்ச்சியான மக்களாக வாழவில்லை. 


இயந்திரத்தனமான சலிப்பான அயர்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கவனத்தை திசைதிருப்பும் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொண்டு இருக்கிறோம். நாம் வாழ்க்கையின் எந்த பகுதிகளையும் முழுமையாக உணராமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழ்வை செயல்பாடு மற்றும் அனுபவங்கள் மூலம்தான் முழுமையாக அறியலாம்.


எஜூகேஷன் அண்ட் சிக்னிஃபிகன்ஸ் ஆஃப் லைப் - ஜே கிருஷ்ணமூர்த்தி எழுதிய நூலில் இருந்து.....


 




கருத்துகள்