பியார் பிரேமா புலி!




Image result for tiger


கோடீசுவரி சிந்து!

போர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் பேட்மின்ட்டன் வேங்கை சிந்து. ஜூன் 2017- ஜூன் 2018 காலகட்டத்தில் தோராயமாக ரூ.85 லட்சம் சம்பாதித்துள்ளார்(போட்டி பரிசு, விளம்பரங்கள்) சிந்து.

வருமான ஆதாரம் விளையாட்டுப்போட்டி அல்ல, பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள்தான். போர்ப்ஸ் லிஸ்ட்டில் முதலிடத்தில் செரீனா வில்லியம்ஸ் உள்ளார். இவருக்குப் பின் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோவன் ஸ்டீபன்ஸ், கார்பைன் முகுருசா ஆகியோர் உள்ள லிஸ்ட்டில் செரீனாவின் அக்கா வீனஸூம் உண்டு. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது முதல் இவ்வாண்டு வரை நோக்கியா, பானசோனிக், பிரிட்ஜ்ஸ்டோன் என ஏராளமான கம்பெனிகளின் விளம்பர தூதராக கோலோச்சி வருகிறார் சிந்து. டாப் 10 பட்டியலில் டென்னிஸ் விளையாடாமல் இடம்பிடித்தவர் அமெரிக்காவின் முன்னாள் ரேசிங் வீரரான டேனிகா பேட்ரிக் மட்டுமே. வின்னர் சிந்து!

2


மோடிக்கு ராக்கி!

ரக்‌ஷா பந்தன் தினத்தில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆயுளுக்கும் தம் சேஃப்டியை உறுதி செய்வது வழக்கம். அந்நாளில் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டியே தீருவேன் என இருபதாண்டு காத்திருந்து வென்றுள்ளார் பாக்.பெண்மணி.

பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட காமர் மொஹிஷின் ஷேக் என்ற பெண்மணி, பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டிய நாடெங்கும் பிரபலமாகியுள்ளார். “ஏறத்தாழ பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட 20 ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன். இவ்வாண்டு என் கனவு நிஜமாகியுள்ளது” என நெகிழ்ந்துள்ளார் மொஹிஷின் ஷேக்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக இருந்தபோதிலிருந்து மோடியை பின்தொடரும் மொஹிசின் ராக்கி ஆசையை மோடி அறிந்து தற்போது நிறைவேற்றியுள்ளார்.  

3

பியார் பிரேமா புலி!


காதலில் தொந்தரவுகள் வந்தால் நமக்கே சுள்ளென கோபம் வருவது இயற்கைதான். அதுவும் புலிகளிடம் வேலையைக் காட்டினால் சும்மாயிருக்குமா?\

ராஜஸ்தான் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் இணைசேரும் பரவசத்திலிருந்தன இரண்டு புலிகள். ரொமான்ஸ் நேரத்து கரடியாக அதைப் பார்த்து டென்ஷனான இளைஞர் மோகன், புலிகளின் காதலுக்கு தடை போட்டு கலாசாரம் காக்க முயற்சித்தார். தனிமையில் இனிமை காணும் புலிக்கு, பியார் பிரேமா காலத்திலும் டார்ச்சர் செய்தால் தாங்குமா? யெஸ். மோகனை பாய்ந்து புரட்டியெடுத்துவிட்டது. மோகனின் அலறலைக் கேட்டு ஓடி வந்த மக்கள் கற்களை வீசி புலியை விரட்டியதால் மோகனின் உயிர் பிழைத்தது சில மாதங்களுக்கு முன்பு இதே காப்பக பகுதியில் வாழும் டி-24 என்ற புலி, வனக்காவலரை தாக்கி, இருவரை கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


4


குழந்தைகளுக்கு உதவும் ஐஐடி மாணவர்கள்!

டெல்லியைச் சேர்ந்த ஐஐடி மாணவர்கள் குழு, ஏழை பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சிவகுப்புகளை நடத்தி பிரமிக்க வைத்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு தொடங்கி டெல்லியைச் சேர்ந்த 30 மாணவர்கள் ஆரோகன் என்ற பெயரில் ஒன்றிணைந்து பத்தாவது பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கான இலவச வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தினசரி மாலை 4-7 மணிவரை ட்யூஷன் கற்றுவரும் தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை 127. சமூகவலைதளங்கள் மூலமாக தங்களின் செயல்பாட்டை விரிவாக்கியுள்ள இவ்வமைப்பு, 15 அரசு பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களையும் இதில் புதிதாக இணைத்துள்ளனர். “திட்டத்தை தொடங்கியபோது பனிரெண்டு மாணவர்கள் இருந்தனர். தற்போது எங்களிடம் படிக்கும் மாணவர்களின் மூலமாக புதிய மாணவர்கள் கற்கவருகின்றனர்” என்கிறார் ஆரோகன் அமைப்பின் இயக்குநரான ஷ்ரேயாஸ் ராஜ். முயற்சியும், உழைப்பும் விடியல் தரட்டும்!


5

டாங்கிகளை நொறுக்கும் ஏவுகணை!
டாங்கிகளை குறிவைத்து தகர்க்கும் ஹெலினா என்ற ஏவுகணையை இந்திய ராணுவம் புதிதாக சோதித்து வெற்றிகண்டுள்ளது.

பொக்ரானில் சோதிக்கப்பட்ட ஹெலினா என்ற புதியரக ஏவுகணை, 5 கி.மீ தூரம் சென்று திட்டமிட்ட இலக்கை அதிரடியாக தாக்கி ராணுவத்தினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “ராணுவத்தின் முக்கியமான சாதனை இது. 

தற்போது ஐந்து கி.மீ தூரம் சோதித்த இலக்கை அடுத்தமுறை 7 கி.மீ வரை விரிவாக்க உள்ளோம். போர்ச்சூழல்களில் இந்தியாவுக்கு பெரிதும் கைகொடுக்க கூடிய ஆயுதம் இது” என்கிறார் டிஆர்டிஓ துறை அதிகாரி ஒருவர். இச்சாதனைக்கு உறுதுணையாக நின்ற ஆராய்ச்சியாளர்கள், ராணுவத்தினரை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டியுள்ளார். மேட் இன் இந்தியாவின் பெருமைக்குரிய தயாரிப்பு! 


பிரபலமான இடுகைகள்