காந்தியை இன்றைய காலகட்டத்தின் பார்வையில் மதிப்பிடாதீர்கள்!



Image result for ramachandra guha



ராமச்சந்திர குஹா பேட்டி ..

இரண்டாம் பகுதி



Image result for gandhi illustration




காந்தியைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதுவதற்கு என்ன காரணம்?

எனக்கு சிறுவயதில் புனித நூலை வலுக்கட்டாயமாக உடலில் அணிவித்தனர். அப்போது காந்தி ஏன் புனித நூலை வெறுத்தார் என்பதை யோசித்தேன். பின்னாளில் பல்வேறு காந்திய மனிதர்கள் மூலம் காந்தியை அறிந்து வியந்த காரணமே நூல் எழுதவும் உந்தியது. 


நவீன காலத்தில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட காந்தியை ஏறக்குறைய அனைவரும் தரக்குறைவாக பேசி அவரின் பங்களிப்பை மறைக்கத் தொடங்கியுள்ளனர். காந்திக்கு எதிரான கலக மனநிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

காந்தியை அம்பேத்கருடனோ அல்லது பிற தலைவர்களுடனோ ஒப்பிடக்கூடாது. காந்தி, சுதந்திர போராட்ட வீரர் என்ற நிலையை கடந்த ஆளுமை. இந்தியா சுதந்திரம் பெற்ற சமயம், இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது உண்மை. அதேசமயம் ஆங்கிலேயர்களின் படைபலத்தை அகிம்சை மூலம் எதிர்த்த காந்தி பல பரிமாணங்களை கொண்டவர். அவரை வெவ்வேறு கோணங்களில் எவரும் பார்க்க முடியும் என்பதுதான் அவரது பலமும் ஏன் பலவீனமும் கூட. 

காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது ஜாதி அமைப்பு சமூகத்திற்கு நல்லது என்று கூறுகிறார். பின்னாளில் தீண்டாமைக்காக ஒட்டுமொத்த இந்து சமூகத்தையே புரட்சிக்காரராக எதிர்க்கிறார். அவரின் பயணத்தை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? 

காந்தி எப்போதும் வெளிப்படையாக உரையாடவும் அறியாதவற்றை உற்சாகமுடன் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் வாழ்ந்தவர். பழைமை சமூகத்தில் பிறந்தவரான காந்தி, சாதி அமைப்பை முதலில் சரி என்று நினைத்தது உண்மை. தென்னாப்பிரிக்காவில் தமிழரான லாசரஸ், மதராஸில் பிராமணர்களின் தெருக்களில் பறையர்கள் நடக்க அனுமதியில்லை என்பதையும் குடிக்க தண்ணீர் பெற முடியாததையும் அழுத்தமான கடிதமாக எழுதி காந்திக்கு அனுப்பினார். பின்னர்தான் காந்தி பிராமணர்களுக்காக காங்கிரஸ் போராடக்கூடாது என்று பேசினார். பின்னர் தன் ஆசிரமத்தில் தலித்துகளை தங்கவைத்ததும் லாசரஸ் எழுதிய கடிதத்தின் விளைவுதான்.  

பத்திரிகையாளரும் நாராயணகுருவின் பக்தரான டிகே மாதவனை சந்திக்கும் வரையில் கோவில் நுழைவு போராட்டத்தின் முக்கியத்துவத்தை காந்தி பொருட்படுத்தவேயில்லை. இதன்பின்னர் அம்பேத்கர் காந்தி மீது செலுத்திய தாக்கம் அவரது முடிவுகளில் எதிரொலித்தது. இவர்களின் சந்திப்பு, பேச்சுக்கள் வழியாக காந்தி சமூகத்திற்கான வெளிப்படையான மனிதராக மாறினார். 

மகாத்மா பட்டத்திற்கு காந்தி தகுதியானவரில்லை என்று அருந்ததிராய் முன்னர் கூறினார். நீங்கள் இக்கூற்றை ஏற்கிறீர்களா?

நான் வரலாற்று ஆய்வாளர்: கருத்தியலாளர் கிடையாது. கடந்த கால மனிதரை நவீன காலத்தில் நின்று மதிப்பிட முடியாது. 1920 ஆம் ஆண்டு வாழ்ந்தவரை அன்றைய சூழல்களைக் கொண்டே மதிப்பிடவேண்டும். காந்தி தான் வாழ்ந்த காலத்தில் இந்துத்துவவாதிகள் அவரை கொன்றேயாகவேண்டும் என தீர்மானம் எடுக்கும்படி அதிதீவிரமான சீர்திருத்தவாதியாக இருந்தார். இன்று அவரைக் குறிவைத்து வரும் விமர்சனங்கள் காலகட்டத்தை புரிந்துகொள்ளாத பூனைக்கண் பார்வையால் ஏற்படுபவையே. 

அம்பேத்கரின் தலித்துகளுக்கான தனி வாக்காளர் தொகுதி என்பதை காந்தி மறுத்தது ஏன்? இந்துக்களின் ஒற்றுமையை அவர் விரும்பினாரா?

காந்தியும் அம்பேத்கரும் கடுமையான முரண்பாடுக்குள் சிக்கிய இடமது. தலித்துகளை மோசமாக நடத்திய இந்துகள் பின்னாளில் திருந்திவிடுவார்கள் என காந்தி நம்பி அம்பேத்கரின் கோரிக்கையை மறுத்தார். இந்துக்களின் தேசத்தில் தலித்துகளுக்கு நீதி கிடைக்காது என அம்பேத்கர் உறுதியாக நம்பினார். 

வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் காந்தி மேல்சாதி இந்துக்களை இணைத்துக்கொண்டது ஏன்?

இந்து, முஸ்லீம் வன்முறை நிகழ்வுகளை கண்ணால் பார்த்த காந்தி, சமூகம் பிளவுபடுவதை விரும்பவில்லை. எனவே அகிம்சையை முன்வைத்து வைக்கம் போராட்டத்தில் மேல்சாதி இந்துக்களின் இணைப்பை விரும்பினார். 

காந்தி தன் உடலை ஆயுதமாக்கியவர். புராண காலத்தில் உடலின் தூய்மையை முன்னிலைப்படுத்தி பேசுவார்கள். காந்தி உடலை ஆயுதமாக்கியதன் அடிப்படை என்ன?

இந்து மதத்தில் மட்டுமல்ல, புத்தம், சமணம் உள்ளிட்ட மதங்களிலும் உடலுக்கு முக்கிய கதாபாத்திரம் உண்டு. காந்தி தன் உடலை சமூகத்தில் தான் மேற்கொண்ட சமூக சீர்திருத்தங்களை செயல்படுத்த ஆயுதமாக பயன்படுத்தினார். 


தமிழில்: ச.அன்பரசு
நன்றி: டெக்கன் கிரானிக்கல், சார்மி ஹரிகிருஷ்ணன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா