இந்துக்களை காக்கவே காந்தியை சுட்டனர்! - ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா காந்தியின் வாழ்க்கை குறித்து காந்தி: உலகை மாற்றிய காலம்(1914-1948) என்ற தலைப்பில் நூலை எழுதி பெங்குயின் வெளியீடாக கொண்டுவந்துள்ளார். நூலின் விலை ரூ. 1000. காந்தியின் இளமைக்கால வாழ்க்கை, ஆப்பிரிக்க வழக்குரைஞர் பணி, பொதுவாழ்க்கை என ஆயிரத்து இருநூறு பக்கங்களில் பிரமாண்டமாக விரிகிறது குஹாவின் நூல்.
காந்தி இடதுசாரியா, வலதுசாரியா அல்லது நடுநிலைவாதியா? அரசியல் செயல்பாட்டுவாதியாக அவரை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
காந்தியை குறிப்பிட்ட வகைப்பாட்டுக்குள் அடக்குவது சிரமம். அரசியல் செயல்பாட்டுவாதியாக தீண்டாமை ஒழிப்பு, சாதி நல்லிணக்கம், அகிம்சை ஆகியவற்றை தன் அடிப்படையாக்கி கொண்டவர் காந்தி. அவரின் ஆயுள் முழுக்க அமைப்புகளை தொடங்குவதும் அவை சரியான பலன்களை தராதபோது நிறுத்திவிடுவதுமாக இருந்தார். தனிப்பட்ட ஒருவருக்கு என்றில்லாமல் அனைவருக்குமான சிந்தனை காரணமாகவே அனைத்து விஷயங்களையும் காந்தி செய்தார். ஆங்கிலேயர்களின பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்த்தாரே தவிர அம்மக்களை வெறுக்க கூறவில்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
உயர்சாதியில் பிறந்தது காந்தியின் அரசியல் சமூக புரிதலில் மாற்றம் தந்திருக்கிறதா?
நிச்சயமாக, காந்தியின் அரசியல் சமூக புரிதல் என்பது முழுக்க தியரி; அனுபவரீதியானது அல்ல. ஆனால் தீண்டத்தகாதவரான அம்பேத்கரின் சாதி குறித்த கருத்துகள் நம் மனதை துளைப்பதற்கு காரணம், அத்தனையும் அவர் அனுபவித்த அனுபவங்களின் விளைவாக அவை உருவாயின என்பதே.
இந்துக்களின் தேசத்தில் முஸ்லீம்கள் பாதிக்கப்படுவார்கள் என ஜின்னா கவலைப்பட்டார். இன்று இந்தியாவில் முஸ்லீம்கள் மீது நடக்கும் தாக்குதல் ஜின்னாவின் கூற்றை நியாயப்படுத்துவது போல உள்ளதே?
ஜின்னா மட்டுமல்ல காந்தியும் அது குறித்து கவலைப்பட்டார். காங்கிரஸ் கூட்டத்தில், " இந்தியா மனிதநேயத்தையே முன்னிறுத்துகிறது. இந்துக்களையோ அல்லது முஸலீம்களையோ அல்ல. இந்தியா என்பது இருவருக்குமான தேசம்தான்" என்று பேசிய காந்தி ஜின்னாவின் பேச்சை தவறு என நிரூபிக்க நினைத்தார். ஆனால் இன்று ஜின்னாவின் பேச்சு வென்றிருக்கிறது.
உண்ணாவிரமிருந்து நொந்துபோன உடலைக்கொண்ட 79 வயது கிழவரை எதற்கு சுட்டுக்கொல்ல வேண்டும்?
இந்துக்கள் மற்றும் இந்துக்களின் ஒற்றுமைக்காக என்பதே கோட்சேவின் பதில். இந்துக்களை என்றென்றைக்குமாக அவமானத்தில் ஆழ்த்தும் காந்தியின் வீர மரணம் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருமதத்தினரிடையே அமைதியை ஏற்படுத்தியது.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: சோமக் கோசல், லிவ் மின்ட்