ஒற்றுமையை அழித்த படுகொலை! - மு.ராவின் வஞ்சகம்!
முதுகுளத்தூர் படுகொலைகா.அ.மணிக்குமார்பாரதி புத்தகாலயம்ரூ.150
4வது சென்னை புத்தகத்திருவிழா, YMCAஇம்மானுவேல் சேகரன் |
எகனாமிக் பொலிட்டிக்கல் வீக்லி இதழில் மணிக்குமார் பங்களித்திருப்பது அவரின் எழுத்துக்களில் தெரிகிறது. அந்நாளைய தினசரிகளில் வெளிவந்த பல்வேறு செய்திகளை கதம்பமாக கோர்த்து தேவர்கள் எப்படி கலவரங்களை திட்டமிட்டு நிகழ்த்தி பள்ளர்களின் வீடுகளை கொள்ளையடித்தார்கள், தாழ்த்தப்பட்டவர்களை கொன்றார்கள், விவசாய நிலங்களை அழித்தார்கள் என விரிவான சித்திரத்தை எழுப்புகிறார்.
அதோடு குருபூஜை என்ற பெயரில் சமூக இனக்குழுக்களிடை பதட்டம் ஏற்படுத்தும் தேவர்(கள்ளர், மறவர், அகமுடையோர்) உள்ளிட்டோரின் செயல்களை சீர்தூக்கி பார்க்கும் இவரின் பார்வை முக்கியமானது. தேவர்களை எதிர்கொள்ள பள்ளர்களும் தயாராக இருந்ததையும், காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக செய்த பாகுபாட்டு விளையாட்டையும் இந்நூல் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
முத்துராமலிங்கர் அமைதிப்பேச்சுவார்த்தையில் இம்மானுவேல் சேகரனை பார்த்து கேட்கும் ஒரு வார்த்தைதான் பல நூறு குடும்பங்களின் வாழ்க்கையை அழித்தது. ஒரு பள்ளனை என்னைப் பார்த்து கேள்வி கேட்க விட்டுட்டீங்களேடா? என்ற அவரின் ஆணவ அங்கலாய்ப்பு இன்றுவரை அப்பகுதியில் அமைதி திரும்ப விடவில்லை. பின்னர் காமராஜர் தேவரை பதினான்கு மாதங்கள் தடுப்பு காவலில் பிணையில் விடாமல் வைத்திருந்த சம்பவம் மட்டுமே அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்துகிறது என்ற செய்தி அசாதாரணமானது.
பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாக அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதும், காவல்துறைக்கு எதிரான வன்முறையை தேவர்கள் மூலம் ஏற்படுத்துவதையும் தேவர், பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தபின் தவறாமல் செய்து வந்தார். சுபாஷின் லட்சியமே இதனால் தமிழகத்தில் சிதைந்துபோனது வரலாற்றுத்துயரம்.
பள்ளர்களை இன்றும் கூட குருபூஜைக்கு அனுமதிக்கிறார்களே என நண்பர் சிவகாசி குருசாமி கேட்டார். அது, தேவரை ஜாமீன் எடுக்க மனுபோட்ட பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் போல சிலர் எங்கேயும் உண்டு. திருமணம் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் தேவர்களுக்கு கோழி, ஆடு கொடுக்காமல் எதையும் நடத்த முடியாது. தங்கம் வெள்ளி அணியக்கூடாது. உழைப்புக்கு காசு கேட்க கூடாது என நிபந்தனைகளை பள்ளர்கள் மீறக்கூடாது எனபதை யார் ஏற்பார்கள்? அதேசமயம் இப்பிரச்னையின் தீவிரத்தை ஹரிஜன் சேவா சங்கம் தீர்த்தாலும் ஒப்பந்தம் அதிகநாட்கள் அமுலில் இருக்கவில்லை.
இதில் போலீசின் துப்பாக்கிச்சூடு அநீதியும் உண்டு. இது பற்றிய வெங்கடேஷ்வரன் விசாரணை கமிஷனும் முறையாக இயங்கவில்லை என்பதை பல்வேற தகவல்கள் வழி மணிக்குமார் விளக்குகிறார். இதில் 1899 ஆம் ஆண்டு நாடார்களின் கமுதி கோவில் நுழைவு போராட்டமும் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தேவர்களுக்கு முதன்மை எதிரிகளாக பள்ளர்களும், இரண்டாவதாக நாடார்களும் உருவாகியதை மணிக்குமார் வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.
மு.ரா காங்கிரசிலிருந்தபோது அவரை எதிர்க்க பள்ளர்கள், நாடர்கள் நீதிக்கட்சியில் இணைந்த வரலாறும், காமராஜர் அங்கு வந்தபோது அவரை நாடார்கள் விரட்டியதும் புதுமையான செய்திகள். தேவர்கள், பள்ளர்கள், நாடார்கள் என மூன்று இனத்தினருக்கும் இன்றுவரை தீராமல் தொடரும் பழிக்குப்பழி மனநிலை ஏன் என்ற கேள்விக்கு விடை தந்திருக்கிறார் மணிக்குமார்.
-கோமாளிமேடை டீம்