ட்விட்டர் ராஜாங்கம்!





Image result for sushma at twitter


ட்விட்டர் எனும் நீதிமணி!


தேர்தலில் ஜெயிக்கும்வரை மண்ணில் பார்த்த வேட்பாளர்கள், வெற்றிக்குப் பிறகு கார் அணிவகுப்பிலும் ஹெலிகாப்டரில்தான் தொகுதிக்கு விஜயம் செய்வார்கள். குறைகளை கேட்பதும் அப்படித்தான். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இந்திய பிரதமர் மோடி வரை அனைவரும் சமூகவலைதளங்களையே அதிகாரப்பூர்வ ஊடகமாக்கி நீதிபரிபாலனம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்களான வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வணிகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தெலுங்கானாவின் ஐ.டி அமைச்சர் கே.டி. ராமாராவ் ஆகியோர் ட்விட்டர்களிலேயே மக்களின் குறைகளை தீர்த்து பிரபலமாகி வருகின்றனர்.

படிப்பு, ஆபரேஷன், சாலை, குடிநீர் என அத்தனை புகார்களையும் ஏற்று தெலுங்கானாவின் ஐ.டி அமைச்சர் ராமாராவ்(கே.டி.ஆர்) ட்விட்டரிலேயே தீர்வு தருகிறார். தனது ட்விட்டர் கணக்கில் “உங்கள் குறைகளை எனக்கு தெரியப்படுத்தினால் அதனை உரிய அமைச்சகத்துக்கு அனுப்புகிறேன்” என்று கொடுத்துள்ள வாக்குறுதி பொய்யல்ல. இவருக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் உதவிகோரி ட்விட் மனுக்களை அனுப்புவது தீர்வு கிடைக்கும் நம்பிக்கையில்தான்.  
ட்விட்டர் முறை புதிதான ஒன்றல்ல. 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜஹாங்கீர் காலத்தில் தர்ஷன் எனும் மக்கள் தம் குறைகளை அரசரிடம் நேரடியாக கூறும் முறையின் நவீன வெர்ஷன் இது.  “உலகில் எந்த மூலையிலுள்ள இந்தியர்களுக்கு பிரச்னை என்றாலும் இந்தியாவின் வெளியுறவுத்துறை உதவும். பதினைந்தே நிமிடங்களில் தீர்வு” என அமெரிக்காவில் மார்தட்டினார் பிரதமர் மோடி. அமைச்சரே தலையிட்டு தீர்வுகளை தருவது பிரமிப்பு தந்தாலும் அத்துறை சரியாக செயல்பட்டால் அப்பிரச்னை எளிதாக தீர்வு கிடைத்திருக்குமே என்பது சரியான லாஜிக் சிந்தனை. அரசு உள்ளாட்சி முதல் நகர நிர்வாகங்களின் செயலற்ற தன்மையை ட்விட்டர் மாற்றிவிடாது. அமைச்சர்களுக்கு ட்விட்டரின் இன்ஸ்டன்ட் தீர்வு புகழ், விளம்பரம் தருமே ஒழிய ஏழை மக்களுக்கு உதவிகள் கிடைக்கப்போவதில்லை.

“சிறிய ட்விட்டின் மூலம் மக்களின் பிரச்னைகளை தீர்த்துவிடுகிறேன்” என தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்கா H1B விசா பிரச்னைகளை இப்படி சொடக்கு போடும் நேரத்தில் தீர்வு காண முடியுமா? “அரசியல்வாதிகள் ட்விட்டர் மூலம் பிரச்னைகளை தீர்ப்பது உதவிகள் கிடைக்காத ஏழைகளுக்கல்ல; மேல்தட்டு வர்க்கத்திற்கு” என சுளீர் உண்மையை பேசுகிறார் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரான பிரிட்டிஷ் நந்தி. 

ட்விட்டர் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக ஆந்திராவின் ஐடி அமைச்சர் நர லோகேஷ் கிராமங்களை தேடிச்சென்று குறைகளை அடையாளம் கண்டு வருகிறார்.
”சமூகவலைதளங்கள் பல்லாயிரம் மக்களை இணைத்தாலும் அவை எட்ட முடியாத தொலைவில் பலகோடி மக்கள் உள்ளனர். எனவே நேரடியாக சென்று குறைகளை கேட்பதோடு, நாளிதழ்களில் வெளியாகும் பிரச்னைகளையும், புகார்களையும் அடையாளம் காண முயற்சிக்கிறோம்” என்கிறார் நரலோகேஷ். வாக்குகளை பெற மக்களிடம் வரும் மக்கள் பிரதிநிதிகள் குறைகளை களையவும் தரையிறங்கி வந்தால் நீதிமணி கட்டுவதற்கான தேவையிருக்காது.

ஆக்கம்- தொகுப்பு: ச.அன்பரசு 

பிரபலமான இடுகைகள்