தபால் வங்கி வளருமா?- அலசல்





தபால்வங்கியில் என்ன எதிர்பார்க்கலாம்? 
Image result for post payment banks



அண்மையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான தபால் வங்கியை பிரதமர் மோடி பெருமையுடன் திறந்துவைத்தார். இதில் இந்திய அரசின் முதலீடு ரூ.1,435 கோடி. 1 லட்சத்து 55 ஆயிரம் தபால் அலுவலகங்கள், 4 லட்சம் பணியாளர்கள் என பிரம்மாண்ட கட்டுமானம் கொண்டது தபால் வங்கி(IPPB). 2015 ஆம் ஆண்டே வங்கி தொடங்குவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கியிடம் பெற்றுவிட்டது.

வங்கிக்கு விண்ணப்பித்த ஏர்டெல், ஃபினோ, பேடிஎம் ஆகிய நிறுவனங்களைவிட பரவலான மக்களின் நம்பிக்கையை தபால்வங்கி பெற்றுள்ளது. தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 17 கோடி மக்கள் தபால் வங்கி மூலம் வங்கிச்சேவையில் நுழைய உள்ளனர். ஏர்டெல், பேடிஎம் உள்ளிட்டவை நிதிச்சேவை விதிகளை(e-KYC) மீறியதால் தடைவிதிக்கப்பட்டு புதிய வாடிக்கையாளர்களை அணுகமுடியாமல் தடுமாறி வருகின்றன. இதனைப் பயன்படுத்தி தபால் வங்கி எளிதாக வளரலாம் என நினைப்பீர்கள்; ஆனால் தபால் வங்கியின் கட்டண விதிகளே தடையாக உள்ளதுதான் சோகம்.

தபால் வங்கியில் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் செலுத்தினால் (அ) பெற்றால் ரூ.25 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரியும் மக்கள் தலைமீதுதான் விடியும். இணையத்தில் இ.பி பில் கட்டுவது, செக்புக் பதிவு செய்வது ஆகியவற்றை செய்தீர்கள் என்றால் அதற்கு கட்டணம் ரூ.15(ஜிஎஸ்டி உண்டு) என 80 வித கட்டணங்களை(ரூ.5-50 வரை) தபால் வங்கியில் உருவாக்கியிருக்கிறார்கள். மேற்சொன்னவை நீங்கள் உட்கார்ந்த இடத்தில் செய்தால் அதற்கு வங்கி வசூலிக்கும் கட்டணங்கள். தபால் அலுவலகம் சென்றால் சேவைக்கட்டணம் கிடையாதுதான். அங்கு பணியாட்கள் குறைவானவர்கள் என்பதால் பணத்தை டெபாசிட் செய்வதும், பெறுவதும் எளிதல்ல. 

இந்தியாவில் தபால் போக்குவரத்து 1 சதவிகிதமாக குறைந்துவிட்ட நிலையில் தபால்துறை 11.9 கோடி(2016-17) நஷ்டத்தில் தடுமாறி வருகிறது. “கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சேவைக்கட்டணங்கள் வசூலிக்காவிட்டால் தபால்துறையில் செயல்பாடுகள் சுணங்கிவிடும்” என்கிறார் தபால்துறை அதிகாரியொருவர்.

வணிக வங்கிகள் வைப்புத்தொகைக்கு 6 சதவிகித வட்டி வழங்கிவரும் நிலையில் தபால் வங்கி மக்களுக்கு வழங்குவது வெறும் 4 சதவிகிதம்தான். கிராமப்புறங்களில் வருவாய் ஆதாரங்கள் சுருங்கிவரும் நிலையில் கட்டணங்களை குறைத்தால் நம்பிக்கை மட்டுமல்ல தபால் வங்கிக் கணக்கில்  பணமும் பெருக வாய்ப்பு உண்டு.   

ஆக்கம் : ச.அன்பரசு
தொகுப்பு: டெய்லர் ஸ்னைடன்
நன்றி: பிஸினெஸ் ஸ்டாண்டர்டு, லிவ் மின்ட், என்டிடிவி இணையதளங்கள்.