சிறுவனைக் காப்பாற்றி கஜினி டெக்னிக்!




Image result for memento


கைகொடுத்த இந்தியர்கள்!

இந்திய அரசு கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி குறைந்த அளவு நிவாரணத்தொகையை அளித்தது. ஆனால் நாட்டின் பிற மாநில மக்கள் கையிலிருக்கும் தொகையை கேரளாவுக்கு அள்ளிவழங்கி இழப்புகளிலிருந்து காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள்.
கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரையில் ரூ.ஆயிரத்து 28 கோடி நிதி கிடைத்துள்ளது. கேரளா மீண்டும் புத்துயிர் பெற்றெழ 4.17 லட்சம் மக்கள் பங்களித்திருப்பது பெருமைக்குரிய செய்தி. வரைவோலை, பணமாக மட்டும் ரூ.835 கோடியும், டிஜிட்டல் பரிமாற்றம் வழியாக 146.52 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். சேதமதிப்பு 20 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் என்பதால் கேரள அரசு, பல்வேறு நாடுகளுக்கும் தம் அமைச்சர்களை அனுப்பி நிவாரண நிதியை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.


2

சகியா? சகோதரியா?

காதலி மூலம் கைகளில் ராக்கி கயிறு கட்ட பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்த விரக்தியான காதலன் தற்கொலைக்கு முயற்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

திரிபுரா தலைநகரமான அகர்தலாவிலுள்ள பள்ளியில் திலீப்குமார் சாகா படித்து வந்தார். படிப்புடன் காதல் துணையாக பெண்தோழியும் கிடைக்க வீக் எண்டுகள் விசாலமானது. இருவரின் டூயட் பள்ளி நிர்வாகத்தின் காதிற்கு போக, காதலியை சகோதரியாக்க நூதன திட்டத்தை ரக்‌ஷா பந்தனன்று அரங்கேற்றினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு திலீப் மற்றும் அவரது பெண்தோழியின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் பெண்தோழியை திலீப்புக்கு ராக்கி கட்ட டார்ச்சர் செய்தனர். இருவருமே முடியாது என மறுத்தாலும் மிரட்டல்கள் தொடர, அடுத்த நொடியே இரண்டாம் மாடியிலிருந்து திலீப் குதித்துவிட்டார். தோழி மட்டுமல்ல கூடியிருந்த ஆசிரியர் மாணவர் பரிவாரங்களே அரண்டுபோனது. தற்போது திலீப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. சகிதான் கன்ஃபார்ம்!


3
ஆட்டோமேட்டிக் அங்காடி!

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்குவது சுலபம். ஆனால் 2 கி.மீ நீளத்தில் நிற்கும் க்யூதான் பிரச்னை. ஆனால் கொச்சியில் திறந்துள்ள புதிய ஆட்டோமேட்டிக் கடையில் ஆட்களும் கிடையாது; க்யூவும் கிடையாது.  

கொச்சியில் வாட் எ சேல் எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள கடையில், அதன் ஆப்பிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து நுழைந்தால் போதும். நாம் தேர்ந்தெடுக்கும் பொருட்களுக்கான விலை இதில் சேர்ந்துவிடுவதால், பில் கவுண்டர்களில் நிற்கவேண்டியதில்லை. கேமரா, சென்சார் என அனைத்து டெக் சமாச்சாரங்களால் இயங்குகிறது என்பதால் கடையில் ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்கள்; இருபத்துநான்கு மணிநேர சேவையும் உண்டு என அதிரடி செய்திருக்கிறார்கள். ஆப்பில் டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பதால் பில் தொகை அதிலிருந்து சென்றுவிடும். விரைவில் இக்கடை டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களிலும் தொடங்கப்படவிருக்கிறது. வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள அமேஸான் கோ எனும் கடையின் ஏஐ ஐடியாவில் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள முதல் கடை இதுவே. 

 4
சிறுவனைக் காப்பாற்றிய கஜினி!

மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனை கஜினி டாட்டூ காப்பாற்றியுள்ளது.

கிழக்கு மும்பையின் கர்லாவைச் சேர்ந்த வெங்கன்னாவின் மகன் மாற்றுத்திறனாளி. காலையில் தன் மகன் சிவா மலாயமை பள்ளிக்கு வேனில் அனுப்பியவர், மாலை ஆனபின்னும் வீடு வந்து சேரவில்லை அறிந்து பதறிப்போனார். அக்கம், பக்கம் சுற்றம் என விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அப்போது குருதேக் பகதூர் ரயில்நிலைய போலீசிடமிருந்து அழைப்பு வந்தது. சிவா மலாயம் பள்ளி வேனில் ஏறாததுதான் முதல் பிரச்னை. பின் வீட்டு அட்ரஸ் தெரியாமல் பயந்து அழுதபடி ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தவரை போலீஸ் விசாரித்திருக்கிறது. மிரட்சியாக பதிலளித்தவரின் மணிக்கட்டில் டாட்டூவாக இருந்த வெங்கண்ணாவின் தொலைபேசி எண்தான் சிவாவை மீட்க உதவியுள்ளது. “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கஜினி படம் பார்த்துவிட்டு என் நண்பர் கூறிய ஆலோசனைப்படி டாட்டூ குத்தியது என் மகனை கண்டுபிடிக்க உதவியுள்ளது” என ஆசுவாசமாகிறார் வெங்கண்ணா.