மனநல நோயாளிகளை தேடி சிகிச்சை தரும் மருத்துவர் வாட்வானி!
உளவியல் பணிக்கு மகசசே கௌரவம்!
–- ரோனி
மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு
30 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்பாக பணி செய்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மரு.பரத்
வாட்வானிக்கு அண்மையில் ராமன் மகசேசே விருது கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலுள்ள சாரதா ஃபவுண்டேஷன்
மையம் மூலம் தோராயமாக 7 ஆயிரம் பேர்களுக்கு மேல் உளவியல் மருத்துவம் அளித்து அவர்களின்
குடும்பத்தோடு அவர்களை சேர்த்து வைத்து வாழ்வை புதுப்பித்துள்ளது உளவியல் மருத்துவர்
பரத் வாட்வானியின் அரும்பணி. “பனிரெண்டாவது வயதிலேயே எனது தந்தையை நான் இழந்துவிட்டேன்.
அந்நிலையில் கல்வியிலும் சுமாராகவே இருந்தேன்” என எளிமையாக புன்னகைத்தபடி பேசுகிறார்
மரு.பரத் வாட்வானி.
மனநிலை பாதிக்கப்பட்டு சாக்கடை
நீரை அள்ளிக்குடித்தபடி இருந்த இளைஞரை சாலையில் பார்த்து அதிர்ந்து போனார் பரத். உடனே
இளைஞரை தன் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து ஆந்திராவிலுள்ள அவரின்
தந்தையிடம் ஒப்படைத்த நிகழ்வே உளவியல் மையத்தை தனியாக தொடங்க முக்கியக் காரணம்.
1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாரதா ஃபவுண்டேஷன் மட்டுமே இன்றுவரை இந்தியாவில் மனநல
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே தன்னார்வ மருத்துவ மையம். தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்கு
உழைத்த அமரர் பாபா ஆம்தேவை தன் முன்னோடியாக கருதுபவர், தன் மையத்தை நிதிப்பிரச்னை,
மக்களின் ஆதரவின்மை பிரச்னைகளால் நடத்துவதற்கு தொடக்கத்தில் சிரமப்பட்டிருக்கிறார்.
“மனநல பிரச்னைகளுக்கான மையத்தை மக்கள் தீவிரமாக வெறுப்பதோடு தங்களின் வீடுகளுக்கு அருகில்
இருக்க கூடாது என நினைக்கின்றனர். எனக்கு வழங்கப்பட்ட மகசேசே விருது, மக்கள் மனநலம்
குறித்த விழிப்புணர்வை பெற உதவும் என நம்புகிறேன்” எனும் பரத்தின் மையத்தில் இரு மருத்துவர்கள்,
எட்டு செவிலியர்கள், 22 தன்னார்வ தொண்டர்கள் நோயாளிகளை அக்கறையும் கனிவுமாக கவனித்துக்கொள்கின்றனர்.
“இந்தியாவின் எந்த நகரங்களுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். அங்கு மனநலப் பிரச்னைகளுடன்
சிலர் சுற்றித்திரிவதைப் பார்க்கலாம். அத்தகைய மனிதர்களை பார்க்கும் அந்த நொடியிலேயே
அதுவரை நோயாளிகளுக்கு நான் செய்த சிகிச்சைகள் அனைத்தும் எனக்கு மறந்துபோய்விடுகிறது”
என தன்னடக்கமாக புன்னகைக்கிறார் மரு.பரத் வாட்வானி. தற்போது மனநல நோயாளிகளை கவனிக்கும்
தன்னையொத்த தன்னார்வ தொண்டுநிறுவனங்களை பரவலாக தொடங்குவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளை
செய்துவருகிறார் உளவியல் மருத்துவர் பரத் வாட்வானி.
மருத்துவர் பரத் வாட்வானியுடன் இணைந்து லடாக்கில் பள்ளி நடத்திவரும் சோனம் வான்சுக்கும் மகசசே விருது வென்றுள்ளார். சோனம் வான்சுக்கின் பணிகளைப் பற்றி குங்குமத்தில் முன்பே கட்டுரை எழுதப்பட்டுள்ளது.