எத்தனால் மூலம் பிரச்னை தீருமா?
பெட்ரோல், டீசலுக்கு எத்தனால் தீர்வாகுமா?
பெட்ரோல், டீசல் ரேட்(82.51/75.48(4.9.18 படி)) ரூபாயில் உயர்ந்து
பைசாவில் குறைந்துவரும் காலத்தில் அதன் அரசியல் பிரச்னைகளை யோசிப்பதை விட நம் கண்முன்
உள்ள எதார்த்த தீர்வுகளை தேடுவது புத்திசாலித்தனம்.
உயிரி எரிபொருளான எத்தனாலை பெட்ரோல்,
டீசலில் கலப்பது குறித்து பிரதமர் மோடி, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி மேடைதோறும்
பேசினாலும் இந்திய அரசு அதில் ஆழமாக கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை.
அமெரிக்காவில் சோளம், பிரேசிலில் கரும்பு, இந்தியாவில் மொலாசஸ்
ஆகியவற்றிலிருந்து உயிரிஎரிபொருளான எத்தனால்
தயாரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் எரிபொருட்களில் எத்தனால் கலப்பு 45-50% என இருந்தாலும்
இந்தியாவில் 2-3% சதவிகிதம் தாண்டி ஒரு இன்ச் கூட அதிகரிக்கவில்லை. இந்நிலையில் 2030
ஆம் ஆண்டில் 20% என்ற அரசின் லட்சியம் எப்படி நிறைவேறும்?
உயிரி எரிபொருளான எத்தனாலுக்கு முக்கியப் பிரச்னை இதற்கான பயிரிடும்
பரப்பும், நீராதாரங்களும்தான். பெட்ரோலுக்காக
விவசாயமா? உணவுக்கு என்ன செய்வது என இயற்கை ஆர்வலர்கள் உடனே ஆட்சேபம் கிளப்புவார்கள்.
டாலர் ஏற்றத்தாழ்வுகளை சமாளித்து உலகச்சந்தையில் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல்
விலை விண்ணை எட்டும்போது உயிரி எரிபொருளைத் தவிர நமக்கு வேறு தீர்வில்லை.
மேலும் உணவுத்தேவைக்கு
போக மீதியுள்ள பொருட்களிலிருந்துதான் எத்தனால் தயாரிக்கப்படும் என்பதால் பயம் தேவையில்லை.
இந்தியாவின் பரப்பில் எத்தனாலுக்கு மூலாதாரமான கரும்பு 3% மட்டுமே பயிரிடப்படுகிறது
என்பதோடு உற்பத்தி மற்றும் தூய்மை செய்வதற்கு தேவையான நீர்வளமும் நமக்கு குறைவு என்பது
மைனஸ்தான்.
அமெரிக்கா, பிரேசிலை(0.025%) விட நீர்வளத்தை அதிகம் பயன்படுத்தியும்
இந்தியா(0.701%) தயாரிக்கும் எத்தனாலின் அளவு 876 டன்கள்தான்.
ஆனால் அமெரிக்கா
44,755 டன்கள், பிரேசில் 2,086 டன்கள், சீனா, 2,483 டன்கள் என முன்னிலையில் நிற்கின்றன.
20 சதவிகித எத்தனால் என்ற லட்சியத்தை இந்தியா அடைய நீர்வளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதோடு,
உயிரி எரிபொருட்களை பயன்படுத்துவதற்கான எந்திரங்களையும் சூழல் அறிவுடன் உருவாக்குவது
அவசியம்.
“தெளிவான தொழில்நுட்பம் கிடைத்தால் முதல் தலைமுறை எரிபொருளான எத்தனாலை பயன்படுத்தி
தேவையை நிறைவுசெய்யலாம்” என்கிறார் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச்(CSTEP) சேர்ந்த ஆராய்ச்சி பொறியாளர்
ரம்யா நடராஜன். கரும்பு பயிரிடுவதற்கான பரப்பளவை நீர் சிக்கனத்துடன் அதிகரித்து எத்தனாலை
சுத்திகரித்து பெறுவதற்கான செயல்பாடுகளை தொடங்குவதே எதிர்காலத்தில் எரிபொருட்களுக்கான
விலையை குறைக்கவும் தற்சார்புடன் இந்தியர்கள் வாழவும் உதவும்.
ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளை இணைப்பது குறித்த சர்ச்சையும் புதிதாக கிளம்பியுள்ளது. வாராக்கடன் பிரச்னையில் மக்களின் இருப்புத்தொகையை இந்திய அரசு குறிவைப்பதுபோல எரிபொருள் பிரச்னையிலும் நடக்காது என்பதற்கு எந்த நம்பிக்கையும் தரமுடியாது.
-ச.அன்பரசு