முதுபெரும் தலைவர் ஜோதிபாசு(1914-2010)
ஜோதி பாசு(1914-2010)
மார்க்சிஸ்ட் கட்சியின் பெயர்சொல்லும் அதன் முகமாகவே திகழ்ந்த முதுபெரும் தலைவர். கொல்கத்தாவின் ஹாரிங்டன் சாலையில் நிஷிகாந்த பாசு, ஹேமலதா பாசு ஆகியோருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் உறவுகளுடன் கூட்டுக்குடும்ப வாழ்க்கை.
1920-25 காலகட்டத்தில் லோரெட்டோ, புனித சேவியர் பள்ளிகளில் கல்வி கற்றார். பின்னர் பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார். சட்டம் பயில 1935 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார் ஜோதி பாசு. அங்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் பொருளாதார வல்லுநருமான ஹெரால்ட் லஸ்கி என்பவரின் சொற்பொழிவுகளை கேட்டு இடதுபக்கம் சாய்ந்தார். 1936 - 1939 ஆம் ஆண்டு படிப்பை முடிக்கும் வரையில் பல்வேறு இடதுசாரி தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு தன் அரசியல் அறிவை பெரிதும் வளர்த்துக்கொண்டார். ரஜனி பால்மா தத், நேரு, பென் பிராட்லி, ஹென்றி பொலிட், பூபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், இந்தர்ஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, பி.என். ஹக்ஸர், ஃபெரோஸ் காந்தி, வி.கே. கிருஷ்ண மேனன் உள்ளிட்ட ஆளுமைகளுடனும் ஜோதிபாசு நட்பு வளர்த்துகொண்டது இக்காலகட்டத்தில்தான்.
இங்கிலாந்தில் சட்டப் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் அனைந்திந்திய மாணவர் அமைப்பில் இணைந்தவர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் சோவியத் யூனியன் எனும் திட்டத்தை செயல்படுத்த உழைத்தார். ஏறத்தாழ இடதுசாரிகளும் காங்கிரசும் இணைந்து செயல்பட்ட இரண்டாம் உலகப்போர் காலம். செல்வாக்கு பெற்றவராக திரிந்தாலும் 1946 ஆம் ஆண்டு நடந்த தொழிலாளர் சங்க தேர்தலில் ஹிமாயூன் காபீரிடம் எட்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
கிழக்கு பாகிஸ்தானிலுள்ள அகதிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என நேருவை தாக்கிய ஜோதிபாசு, நிஜாம் ஆட்சியை இந்திய அரசு படைகள் கலைக்க முயன்றபோது சிபிஐ கட்சி பதட்டம் கொண்டிருந்ததை பார்த்தார். ஒருமுறை சிறைதண்டனையின்போது அறையில் சாரு மஜூம்தாரை சந்தித்து எனது தலைவன் என பெருமை கொண்டார். ஆனால் வங்கத்தில் புரட்சி என்பதை பாசு பெரிதாக நினைக்கவில்லை; சீனத்தலைவரை இந்தியத்தலைவராக பாசு ஏற்பதில் தடுமாறினார். வங்கதேசத்தில் ஏற்பட்ட பல்வேறு போராட்டங்கள், கலவரங்களின்போது அந்நாட்டை பெருமளவு ஆதரித்த ஒரே தலைவர் ஜோதிபாசு மட்டுமே. முதல்வராக 23 ஆண்டுகள் இருந்தாலும் புது டெல்லியில் கம்யூனிச அரசு அமையும் கனவு மட்டும் நிறைவேறவில்லை.
-தமிழில்: ச.அன்பரசு
நன்றி: பவுன்டைன் இங்க்.