கரன்சியை எண்ணியாச்சு!



Image result for corruption



சகியா? சகோதரியா?

காதலி மூலம் கைகளில் ராக்கி கயிறு கட்ட பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்த விரக்தியான காதலன் தற்கொலைக்கு முயற்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

திரிபுரா தலைநகரமான அகர்தலாவிலுள்ள பள்ளியில் திலீப்குமார் சாகா படித்து வந்தார். படிப்புடன் காதல் துணையாக பெண்தோழியும் கிடைக்க வீக் எண்டுகள் விசாலமானது. இருவரின் டூயட் பள்ளி நிர்வாகத்தின் காதிற்கு போக, காதலியை சகோதரியாக்க நூதன திட்டத்தை ரக்‌ஷா பந்தனன்று அரங்கேற்றினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு திலீப் மற்றும் அவரது பெண்தோழியின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் பெண்தோழியை திலீப்புக்கு ராக்கி கட்ட டார்ச்சர் செய்தனர். இருவருமே முடியாது என மறுத்தாலும் மிரட்டல்கள் தொடர, அடுத்த நொடியே இரண்டாம் மாடியிலிருந்து திலீப் குதித்துவிட்டார். தோழி மட்டுமல்ல கூடியிருந்த ஆசிரியர் மாணவர் பரிவாரங்களே அரண்டுபோனது. தற்போது திலீப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. சகிதான் கன்ஃபார்ம்!

2

சிறுவனைக் காப்பாற்றிய கஜினி! 


மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனை கஜினி டாட்டூ காப்பாற்றியுள்ளது.

கிழக்கு மும்பையின் கர்லாவைச் சேர்ந்த வெங்கன்னாவின் மகன் மாற்றுத்திறனாளி. காலையில் தன் மகன் சிவா மலாயமை பள்ளிக்கு வேனில் அனுப்பியவர், மாலை ஆனபின்னும் வீடு வந்து சேரவில்லை அறிந்து பதறிப்போனார். அக்கம், பக்கம் சுற்றம் என விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. அப்போது குருதேக் பகதூர் ரயில்நிலைய போலீசிடமிருந்து அழைப்பு வந்தது. சிவா மலாயம் பள்ளி வேனில் ஏறாததுதான் முதல் பிரச்னை. பின் வீட்டு அட்ரஸ் தெரியாமல் பயந்து அழுதபடி ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தவரை போலீஸ் விசாரித்திருக்கிறது. மிரட்சியாக பதிலளித்தவரின் மணிக்கட்டில் டாட்டூவாக இருந்த வெங்கண்ணாவின் தொலைபேசி எண்தான் சிவாவை மீட்க உதவியுள்ளது. “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கஜினி படம் பார்த்துவிட்டு என் நண்பர் கூறிய ஆலோசனைப்படி டாட்டூ குத்தியது என் மகனை கண்டுபிடிக்க உதவியுள்ளது” என ஆசுவாசமாகிறார் வெங்கண்ணா. 

3


காதலர்களுக்கு சிறுநீர் குடிபானம்!

மத்தியப்பிரதேசத்தில் அலிராஜ்பூரில் திருமணமான தம்பதிகளை கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து சிறுநீரை குடிக்க வைத்திருக்கிறது பாசக்கார குடும்பம் ஒன்று.

தனக்கு பிடித்தவரை பெண் தேர்ந்தெடுத்து திருமணம் செய்ததுதான் இக்கொடுமைக்கு காரணம். கணவரை கம்பத்தில் கட்டிவைத்து விளாசுவதையும், அருகில் மனைவி கையறுநிலையில் அழுவதையும் அக்குடும்பத்தில் ஒருவரே வீடியோவும் எடுத்துள்ளது குரூரத்தின் உச்சம். ஜாதி பஞ்சாயத்து தீர்ப்புப்படி, பெண்ணின் குடும்பத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் பணமும், இரண்டு ஆடுகளையும் கணவரின் குடும்பம் கொடுத்திருக்கிறது. குஜராத்திலிருந்து ம.பி கிராமத்திற்கு வந்த தம்பதிகளை துப்பாக்கி முனையில் கடத்தி முடியை வெட்டி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.தம்பதியின் புகாரின் பேரில் பெண்ணின் குடும்பத்தினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

4
மலம் கழித்தால் மரணம்!

ஸ்வச் பாரத் திட்டத்தில் இந்திய அரசு கூட அறிவிக்காத கறார் உத்தரவை உ.பியின் பாக்பத் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
மல, ஜலம் திறந்தவெளியில் கழித்தால் உடனடியாக மரணதண்டனை என அறிவித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது முனிசிபாலிட்டி நிர்வாகம். நகரில் நிறுவியுள்ள பேனர்களை நிறுவியுள்ள முனிசிபாலிட்டி, திறந்தவெளியில் மலம் கழித்தால் விரைவில் கொல்லப்படுவீர்கள் என மக்களை நேரடியாகவே மிரட்டுகிறது. மக்கள் இது குறித்து முனிசிபாலிட்டியிடம் புகார் தெரிவிக்க, பேனர் வாசகங்கள் கிராபிக் டிசைனரால் ஏற்பட்டது என கூறியவர்கள் உடனடியாக  சர்ச்சை பேனர்களை அகற்றியுள்ளனர். “ஸ்வச் பாரத் திட்டத்திற்காக 45 பேனர்களை பல்வேறு இடங்களில் நிறுவினோம். அதில் சில பேனர்களில் மட்டும் சர்ச்சை வாசகங்கள் கவனக்குறைவால் இடம்பெற்றுவிட்டது. வடிவமைப்பாளரிடம் அது குறித்து விசாரணை செய்து வருகிறோம்.” என கூறுகிறார் முனிசிபாலிட்டி அதிகாரி லலித் ஆர்யா. இம்புட்டு கோபம் ஆகாது ஆபீசர்ஸ்!

5

கரன்சியை எண்ணியாச்சு!

பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை செயல்படுத்தி இருபது மாதங்களுக்கு பிறகு ஆர்பிஐ ஒருவழியாக 99.3% பணத்தையும் எண்ணி முடித்துவிட்டனர்.
2016 ஆம் ஆண்டில் புழக்கத்திலிருந்மத 15.41 லட்சம் கோடி பணத்தில் 15.3 லட்சம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துள்ளது. “குறிப்பிட்ட வங்கிகளில் வந்துள்ள பணத்தை கண்டறியவே இவ்வளவு காலம் பிடித்தது” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அதிகாரிகள் டீம். 2016-17 ஆம் ஆண்டு புதிய ஐநூறு- இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி 7 ஆயிரத்து 965 கோடி ரூபாயை செலவழித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.3,421 அதிகம். ஜூலை17-ஜூன் 18 காலகட்டத்தில் 4 ஆயிரத்து 912 ரூபாய் செலவழித்து சாதனை புரிந்துள்ளது. “59.7 சதவிகித கறுப்புபணம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் குறைந்துள்ளது. மறைமுக வரி வசூலிப்பில் ஜிஎஸ்டியும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்கிறது ரிசர்வ் வங்கி. திருப்பதி தேவஸ்தானத்துக்கிட்ட பணத்தை எண்ணச்சொல்லிருந்தா வேலை சுளுவா முடிஞ்சிருக்குமே படேல் சார்!



  




பிரபலமான இடுகைகள்