பிகே எழுதும் சென்னை சீக்ரெட்ஸ் - நிறைவுப்பகுதி









சென்னை சீக்ரெட்ஸ்!- பிகே




1792 ஆம் ஆண்டு ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் உள்ளாட்சி சட்டம் வழிகாட்ட, மேயரும், நகர்மன்ற உறுப்பினர்களும் இல்லாமலேயே மெட்ராஸ் நகராட்சி சிறப்பாக செயல்படத் தொடங்கியது.

இதன்படி நகரங்களில், ‘அமைதி நடுவர்கள்நியமிக்கப்பட்டு தெருக்களின் பராமரிப்பு பற்றி முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இந்த அமைதி நடுவர்களுக்கு மதுபானங்களின் விற்பனை மீது வரி விதித்துக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டது. இவர்கள் நகரின் நீதி நிர்வாக விஷயங்களையும் கவனித்து வந்தனர்.
 
1856ம் ஆண்டில் அமைதிக் காவலர் முறை விலக்கப்பட்டு மூன்று ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். நகரத்தைப் பராமரிக்கவும், அதற்கு சில வரிகள் வசூலிக்கவும் ஆணையர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ‘‘நிலவரி அதிகமாக விதித்துக் கொள்ள சட்டம் இயற்றப்பட்டதால் வீட்டு வரி நூற்றுக்கு 5 சதவீதம் என்பதிலிருந்து ஏழரை சதவிகிதமாக உயர்ந்தது. வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் வரி போட்டது. 1863ல் வர்த்தக வரி, உத்தியோக வரி, சுங்கவரி முதலியன போட்டுக் கொள்ளவும் சட்டம் இடம் தந்தது. அதுவரையில் நகராட்சியிடமிருந்த போலீஸ்துறை சின் பொறுப்பில் வந்தது." என்கிறார் சென்னை மாநகர்நூலில் எழுத்தாளர் மா.சு.சம்பந்தன்.
பிறகு, மெட்ராஸ் எட்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆணையாளர்கள் வீதம் நகர மக்களிலிருந்தே அரசு நியமித்தது. ெமாத்தமுள்ள இந்த 32 ஆணையாளர்களும் சேர்ந்து விவாதிக்கும் கூட்டத்திற்கு ஒரு நிர்வாக அதிகாரி தலைமை வகித்தார்.
பின்னர், 1878ல் கொண்டு வரப்பட்ட சட்டப்படி 32 பேரில் 16 பேர் வரி செலுத்துவோரில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என்றது. ெதாடர்ந்து 1884ம் ஆண்டு நகர உள்ளாட்சிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பொது சுகாதாரம், பாதுகாப்பு, ஆரம்பக் கல்வி மற்றும் கழிப்பிட வசதிகள் போன்றவற்றிற்கு உள்ளாட்சி வருவாயைப் பயன்படுத்தலாம் என்றது இந்தச் சட்டம். இதன்பிறகு மீண்டும் உயிர்பெற்றது மேயர் பதவி! 


17



சென்னை சீக்ரெட்ஸ்! -பிகே





ரிப்பன் பில்டிங்!

1904ம் ஆண்டு. நகராட்சி மற்றொரு திருப்பத்தைச் சந்தித்தது. பணியிலிருந்த 32 நகராட்சி ஆணையர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1909ம் ஆம் ஆண்டு முத்தியால்பேட்டையிலுள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
நியோ கிளாசிக்கல் பாணியில் ஜி.எஸ்.டி ஹாரிஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் வடிவமைக்க லோகநாத முதலியார் கட்டினார். வெள்ளை நிறத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இக்கட்டிடம் கட்ட அன்று ஏழரை லட்சம் ரூபாய் செலவானது. பிறகு, நான்காண்டுகள் கழித்து 1913ம் ஆம் ஆண்டு திறப்பு விழா கண்டது. அதுவே பூந்தமல்லி சாலையில் சென்ட்ரல் அருகே கம்பீரமாக நிற்கும் இன்றைய ரிப்பன் பில்டிங் கட்டிடம்.
 
யார் இந்த ரிப்பன்?
  
ஜார்ஜ் ஃபிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (எ) ரிப்பன் பிரபு 1880 முதல் 1884 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். அன்று ஐரோப்பியர் சம்பந்தமான வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். வைஸ்ராய் கவுன்சிலில் சட்ட உறுப்பினராக இருந்த சர் சி.பி இல்பர்ட் என்பவர் இப் பாகுபாட்டை போக்க ஒரு மசோதா கொண்டு வந்தார். இதற்கு ஐரோப்பியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், துணிச்சலாக அதைச் செயல்படுத்தி மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார் ரிப்பன்.
பிறகு, உள்ளாட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததால் ‘உள்ளாட்சியின் தந்தை’ என்றும் போற்றப்பட்டார். இருந்தும் மசோதா சர்ச்சை, விமர்சனங்களால் மனமுடைந்த ரிப்பன் பதவியை விட்டு விலகி இங்கிலாந்திற்கே திரும்பினார். இந்தியர்களின் பிரச்னைகளை கனிவுடன் கேட்டதால் அவரை இந்தியர்கள், ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ எனப் புகழ்ந்தனர். இவர் நகராட்சி அலுவலகம் கட்டத் தொடங்கிய அதே ஆண்டில் இறந்து போனார். அதனால், அவரது நினைவாக இந்தக் கட்டடத்திற்கு ரிப்பன் எனப் பெயர் சூட்டப்பட்டது.


18

சென்னை சீக்ரெட்ஸ்! –- பிகே


Image result for ripon building illustration

1919ம் ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநகராட்சி புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 50 உறுப்பினர்கள் கொண்ட சபை உருவாக்கப்பட்டது.
இதில், மெட்ராஸ் முப்பது வட்டமாக பிரிக்கப்பட்டு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதி இருபது உறுப்பினர்களில் ஒன்பது இடங்கள் முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டது. பதினோரு பேர் வெளி நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராக முன்மொழிய கோரியது இச்சட்டம். இப்படித்தான் நீதிக்கட்சியைச் சேர்ந்த சர்.பி.தியாகராயச் செட்டியார் முதன்முதலாக தலைவரானார்.

பின்னர் 1933ல் சபைத் தலைவரை மேயர் என அழைக்கும் மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவைக் கொண்டு வந்தவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய அண்ணாமலைச் செட்டியாரின் மகன் குமாரராஜா முத்தையா செட்டியார் ஆவார். இவரே முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிறகு, மூன்றாண்டுகள் கழித்து துணைமேயர் பதவி உருவாக்கப்பட்டு, முதல் துணை மேயராக பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு மெட்ராஸை அடுத்துள்ள சிற்றூர்கள் இணைக்கப்பட்டு ஐம்பது வட்டங்களாக ஆக்கினர். பின்னர் 1959ல் நூறு வட்டங்களாக மாநகராட்சி மாறியதும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அ.பொ.அரசு முதல் திமுக மேயராக ஆனார்.
தற்போது 15 மண்டலங்கள், 200 வார்டுகள், 200 கவுன்சிலர்களுடன் இயங்கி வருகிறது கிரேட் சென்னை மாநகராட்சி! 

                           சுபம்!  


படம் உதவி: அருள் மீனாட்சி.
தொகுப்பு: கார்த்திக் ஜெயமணி


குங்குமத்தில் தலபுராணம் வரும்போது அதே தகவல்களை மற்றொரு இதழுக்கு யார் தருவார்கள்? ஆனால் பிகே அதற்கு பெரிய மறுப்பேதும் கூறவில்லை. சிம்பிளாக, எடிட்டர்கிட்ட பர்மிஷன் வாங்குங்க. நான் எழுதி தர்றேன் என்று கூறினார். 

பர்மிஷன் கிடைத்தபின்தான் நிஜமான பிரச்னை தொடங்கியது. சரியான நேரத்தில் தொடருக்கான அத்தியாயங்களை பிகேவிடம் பெறுவதுதான் அது. எப்படியோ போராடி அவரின் வேலைநேரத்திற்கேற்ப அத்தியாயங்களை வாங்கினாலும் படங்கள் பெரும் பிரச்னையாக இருந்தன.
 
ஒவியர் ராஜா, போட்டோகிராபர் வின்சென்ட் பால், ஓவியர் அருள் மீனாட்சி வைஷ்ணவி உள்ளிட்டோர் உதவினர். இவர்களின் உதவியின்றி பதினெட்டு வாரங்கள் எழுதுவது சாதாரண காரியமல்ல. அனுமதித்த ஆசிரியர் கே.என்,எஸ்ஸூக்கும், எழுத இசைந்த பிகேவிற்கும், குறைகூறாமல் வடிவமைத்த வடிவமைப்பாளர் சூரியகுமார் ஆகியோருக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

-ச.அன்பரசு
உதவி ஆசிரியர், முத்தாரம் வார இதழ் 

பிரபலமான இடுகைகள்