கூகுளை நொறுக்கும் இன்டர்நெட் விதிகள்!
வெனிசுலா அகதிகள்!
ஹியூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்தில்(2000-2012)
சமூகநல திட்டங்களுக்கு பெயர்பெற்ற நாடான வெனிசுலா இன்று உணவு, மருந்துகள் பற்றாக்குறையால்
தவித்துவருகிறது.
வெனிசுலாவிலுள்ள பிரச்னைகளால்
7 சதவிகித மக்கள்(2.3 மில்லியன்) நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். தென் அமெரிக்காவுக்கு
செல்லும் வெனிசுலா மக்களின் சதவிகிதம் 900% என அறிவித்துள்ளது ஐ.நா சபை. 78 சதவிகித
மருந்து பற்றாக்குறையால் அங்குள்ள மருத்துவமனைகளும், மருந்தகங்களும் அடைக்கப்பட்டுவிட்டன.
சம்பளம் குறைப்படுவதால் நாட்டிலுள்ள ஐந்து பல்கலைகளிலிருந்து 1,600 ஆசிரியர்கள் பதவி
விலகியுள்ளனர்(2012-18).
வெனிசுலாவிலிருந்து வெளியேறிய
8,70,093 மக்கள் கொலம்பியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் 45 ஆயிரம் பேருக்கு
முறையான அடையாள அட்டை இல்லாமல் (அ) காலாவதி விசாவை வைத்துள்ளனர். ஐரோப்பியநாடான ஸ்பெயினுக்கு
அகதி மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அரசியல், பொருளாதார பிரச்னைகளை வெனிசுலா
தீர்க்காதவரையில் அந்நாட்டு மக்களின் இடம்பெயர்வை தடுப்பது இயலாத ஒன்றே.
இயற்கையை அழிக்கும் வரிச்சலுகை!
வரியற்ற சொர்க்கங்கள் என அழைக்கப்படும்
நாடுகளின் செயல்பாடுகளால் அமேஸான் காடுகள் முதல் உள்நாட்டு வனப்பரப்புகளும் அதிவேகமாக
குறைந்துவருகிறது என ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
“அநீதியான வரிச்சலுகையை அனுமதித்ததால் இயற்கையின் எதிர்வினைகளை விரைவில் நாம் அனுபவிக்க
போகிறோம்” என எச்சரிக்கிறார் ஆராய்ச்சியாளர் விக்டர் கலாஸ். விவசாய நிறுவனங்கள் மற்றும்
மீன்பண்ணைகளை ஆராய்ந்து அறிக்கையை(2016) தயாரித்துள்ளார்.
பிரேசிலின் மத்தியவங்கி தகவல்படி(2000-2011),
அங்குள்ள மாட்டிறைச்சி மற்றும் சோயா தயாரிப்பு 18.4 பில்லியன் டாலர்கள் (70%)அளவு வெளிநாட்டு
முதலீடுகளை பெற்றுள்ளதும், அமேஸான் வனப்பரப்பை அழிக்குவிதமாக செயல்பட்டுள்ளதையும் அறிக்கை
வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இம்முதலீடுகளுக்கு மிக குறைவான வரி அல்லது வரியே கிடையாது
என்பது அதிர வைக்கும் நிஜம். அறிக்கை வெளியானதும் லூயிஸ் ட்ரேஃபஸ், கார்கில், புங்கே,
அமாகி குழுமம் உள்ளிட்ட உணவு உற்பத்தி நிறுவனங்கள் விதிப்படியே செயல்பட்டோம் என அறிக்கை
வெளியிட்டன. உலகெங்கும் வளரும் நாடுகளில் வரிச்சலுகைகளால் 200 பில்லியன் டாலர்கள் இழப்பாகிறது
என பொருளாதார கூட்டுறவு மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
இன்டர்நெட் பிழைக்குமா?
ஐரோப்பிய நாடாளுமன்றம் இணையத்தில்
காப்பிரைட் தொடர்பாக கொண்டுவந்த விதிகளுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிஜிட்டல்
காப்புரிமை தொடர்பாக கொண்டுவந்த சட்டத்திற்கு 226 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் பிரிவு 11,13 விதிகள்தான் டெக் வல்லுநர்களை அலறவைத்துள்ளன.
கூகுள், ஃபேஸ்புக் ஆகியோருக்கு
பெரும் லாபம் தருவது செய்திகளை பகிரும் வசதி. சிறுபதிப்பு நிறுவனங்கள் குறைவான கட்டணங்களை
செலுத்தும் வசதிக்கு செக் வைக்கும் விதமாக லிங்க் வரி விதிக்கப்பட்டுள்ளது. காப்பிரைட்
மீறல் வீடியோக்களை யூட்யூப் பயன்படுத்துவதை விதி 13 தடுக்கிறது. இனி மீம்ஸ்களை இவ்விதிப்படி
பரிமாறுவது சட்டப்படி குற்றம். விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், இவ்விதிகளை கடுமையாக
விமர்சனம் செய்துள்ளார். தகவல்பாதுகாப்பு விதி தொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்
நிறைவேறவிருக்கிறது. காப்பிரைட் இல்லாத வீடியோக்களை அப்லோட் செய்யக்கூடாது என கறார்
காட்டுகிறது ஐரோப்பிய யூனியன். அமேஸான், பண்டோரா, இபே ஆகிய நிறுவனங்கள் இவ்விதிகளை
எதிர்த்துள்ளன.
4
அமெரிக்காவில் வறுமை!
அமெரிக்காவில் 12.3 சதவிகித(39.7
மில்லியன்) வறுமையில் வாடும் மக்கள் உள்ளதாக அண்மையில் வெளியான அரசு அறிக்கை தகவல்
கூறுகிறது. 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின்போது 15.1% வறுமை தற்போது
11.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆண்களைவிட குறைந்த சம்பளம் வாங்கும்
பெண்களே(13.6%) வறுமையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பினத்தவர்கள்(21.2%)
ஒட்டுமொத்தமாக வறுமையான வாழ்வைக் கொண்டுள்ளனர். பெண்குழந்தைகளைக் கொண்டுள்ள வீட்டின்
சராசரி வறுமை அளவு 50%. 1970 ஆம் ஆண்டில் இதன் அளவு 17.5%. அமெரிக்காவில்
1960-1990 காலகட்டத்தில் பல்வேறு சமூக நல திட்டங்களை அமெரிக்கா செயல்படுத்தியதால் வறுமையின்
அளவு பெருமளவு குறைந்திருந்தது. மேல்நிலைக்கல்வி பயிலாத 24.5 சதவிகிதத்தினர் வேலைவாய்ப்பின்றி
வறுமையில் சிக்கியிருப்பதும் அறிக்கை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. பால்ய வறுமையை
சமாளிக்க அமெரிக்காவுக்கு 1 ட்ரில்லியன் டாலர்கள் தேவை.