நற்பூதம் பராக் பராக்!- பகுதி 1
1
காதல் கனவு!
நடிகை மஹிமா என்னுடைய காதலை கண்களில்
கேரளா மழைவெள்ளம் போல ஆசையுடன் ஏற்றுக்கொண்ட ஹோம்லி ஐமேக்ஸ் குவாலிட்டி கனவின்போது,
டேய் என்ற குரல் 3டி சர்ரவுண்டிங்கில் ஒலித்தது. மஹிமாவோட அப்பாவா லைட்டாய் கண்விழித்தபோது,
ரூம்மேட் செந்தில் ப்ளோரசண்ட் டீஷர்ட், பெர்முடாசில் எரிமலையாய் நின்றிருந்தான்.
நம்பவே முடியவில்லை. காலையில்
எழுந்ததும் கஞ்சா கசக்கிக்கொண்டு இருப்பான். இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்கிறான்
என யோசித்துக்கொண்டே பேசினேன். “ஹாய் செந்திலு! ஆபீசுக்கு இவ்வளவு சீக்கிரமே ரெடியாகிட்டே
சூப்பர்டா”
“துரோகி, எனக்கு செட் பண்றன்னு
சொல்லி வித்யாவோட பேசி உம்பேர்லயே பட்டா போட்டுட்டயே இது நியாயமா?”
யதார்த்தமான கேள்விதான். கிராண்ட்
பார்க் கம்பெனியில் சீப் டிசைனர். மாத இறுதியிலும் பர்ஸ் தளும்பும்படி காசு வைத்திருப்பவனை
பெண்கள் மொய்ப்பதில் ஆச்சரியம் என்ன? நேற்று ஹாலிடே இன்னில் நடந்த பார்ட்டியில் வித்யா,
வைன் ஹேங்ஓவரில் கிறக்கத்துடன் கன்னம் உரசி என் தோளில் சாய்ந்தாள். அதற்கு பிறகு நானே
அவளை அகற்றமுடியாதபடி நெஞ்சிலேயே சுருண்டுவிட்டாள். அரூ… என்றபடி அவளது வீட்டு படுக்கையில்
அழைத்தவளை கண்கள் சிவக்க பார்த்தேன்.
அவ்வளவுதான் தெரியும். பின்னிரவில் என் நெஞ்சில்
படர்ந்திருந்தவளை அகற்றிவிட்டு எழுந்து ஜாக்கியை வந்தே மாதரம் சொல்லி போட்டுக்கொண்டு
அறை திரும்பினேன். இது எல்ஐசி போல உறவல்ல; நாளை எனக்கு ஜெனிஃபர் என்றால்
வித்யாவுக்கு
ஷஃபான்
கிடைப்பான். இதெல்லாம் செந்திலுக்கு புரியுமா?
“தூக்கத்தை கலைக்காதே, மஹிமாவோட
டூயட் முடிச்சிட்டு அப்புறம் பேசுவோம் முருகு…” வாயில் வெளியே கசிந்த எச்சிலை துடைத்துவிட்டு
திரும்பி படுத்தேன்.
என் வாழ்க்கையை புல்டோசர்வுட்டு
நசிக்கிப்புட்டு மஹிமாவோடு டூயட்டா? யாருடா அந்த மஹிமா…
செந்திலிடம் மட்டுமல்ல எனது மாண்புக்குரிய
தமிழர்களிடம் பிடிக்காததே பாத்ரூமில் ஆண்குறியை எட்டிவிழுந்து சைஸ் பார்ப்பது போல அடுத்தவர்கள்
விஷயத்தில் எல்லை மீறி மூக்கை நுழைப்பதுதான். இளமையும் பணமும் வைத்திருப்பவனை ரவுண்டானா
பஸ் போல பெண்கள் சுற்றி வருவதில் ஆச்சரியமென்ன?
செந்தில் லவ்பேர்ட்ஸ் போல காதலியே
மனைவி என இந்து கலாசாரத்தை காக்க வந்த இனவிளக்கு. சென்னையின் படகோர, ஃபாரம்மால் காதல்களை
டொமெக்ஸ் போட்டு அழிக்கவேண்டுமென அவன் நினைத்ததில் ஆச்சரியமென்ன? அவனுக்கு ஆல்டைம்
ஃபேவரிட் நயன்தாரா.
எனக்கு சீசனுக்கு ஒரு நடிகை. இப்போ மஹிமா.அப்போ இந்துஜா கதி என
ஆபீஸ் கொலீக் குருஜி குரல் கேட்கிறது. அது அடுத்த சீசன் ப்ரோ!
ஒருமுறை இப்படித்தான் சாப்பிடும்போது
தன்னை கூப்பிடவில்லையென ஆபீசில் இருக்கும்போது
அத்தனை முன்னிலையில் தன் பேட்டா செப்பலாலேயே தன் கன்னத்தில் அடித்துக்கொண்டான். அப்புறமென்ன
ப்ரூஸ் வெய்னை “கோதம் சிட்டியே நகரத்தை காப்பாத்தாம விட்டுட்டியே” என்பதுபோல ஸ்லீவ்லெஸ்
ஜெனிஃபர் உட்பட அனைவரும் என்னையே குறுகுறுவென பார்த்தார்கள். எமோஷனலாக இருக்கும்போது
நான் மட்டுமல்ல யார் பேசுவதற்கும் செந்தில் சான்ஸே கொடுப்பதில்லை. டாம் ஹார்டி மாதிரி பல்க் பாடி மனுஷனை ப்ரூஸ்லீ
பாடி வைத்து நான் எப்படி சமாதானப்படுத்த?
“செந்தில், வித்யா உனக்கு ஒத்துவரமாட்டா,
சொன்னாக்கேளு. ரஞ்சனியை வேணும்னா ட்ரை பண்ணு. இதெல்லாம் ஜாலியா எடுத்துக்க செந்திலு.
பொண்ணுங்கள லவ் பண்ண ஓகே பண்றதே பெரிசு. நீ போய் பேச்சு குடுத்த அடுத்த வாரமே போய்
அக்கவுண்டன்ட் ஷமீராகிட்ட கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டால் எப்படி? உன்னோட வேகத்துக்கு
அவ இன்னும் செட் ஆகவேண்டாமா?” உண்மை 80% பரிகாசம் 20% என்னுடைய பாணி. நண்பர்கள் எண்ணிக்கை
இந்தியாவின் ரூபாய் மதிப்பாக டல்லடிப்பதற்கும் இது முக்கிய காரணம்.
நிச்சயம் அவனுக்கு கோபம் வரும்தான்.
ஆனால் உண்மையை சொல்லித்தானே ஆகணும். பெண்களிடம் பேசும் ஃபார்ம் முக்கியம். செந்தில்
பெண்களை பார்த்த இரண்டாம் நாள், நாயுடு ஹால் மேட்டருக்கு போனால் பரவாயில்லை. கேபிஎம்
மஹாலில் கல்யாணம் செய்வதற்கு மேனகா கார்ட் அடித்தது போல தில் காட்டுவான்.
நீ வௌவால் மாதிரி ருசி பார்த்துட்டு
கீழே போட்டா நா எடுத்து சாப்பிடணுமா? என்ற செந்திலை சீரியசாக பார்த்தேன்.
டாம்ஹார்டியின் முரட்டு பாடி.
ஆள் கறுப்பு என்றாலும் ஆணழகன். மூளையின் பிரச்னை பேசினால் தெரிந்துவிடும். சீரியசாக
பேசினாலும் செந்தில் முகம் அமுல் பேபியாய் மாறி விஷயத்தை மட்டுமல்ல அவனையே பங்கம் செய்தது.
டீஷர்ட்டை தாண்டி முகம் காட்டும் நெஞ்சின் ரோமம், அதிகாலை இருளிலும் பீதியூட்டியது.
காலேஜில் நண்பனானவன் அப்படியே என்னை பின்தொடர்ந்து சென்னைக்கு வந்து எங்கள் கம்பெனியில்
சைட் சூப்பர்வைஸராக குப்பை கொட்டுகிறான். சிபாரிசு வேறுயார் அருண்மொழியாகிய நான்தான்.
யார் இருந்தாலும் பார்க்காமல் தனக்கு தேவையானதை நெருங்கியவர்களின் குற்றவுணர்ச்சியை
தூண்டி சாதிக்கும் பேபி பிடிவாதம் அதிகம்.
“ஏண்டா, பொண்ணுங்களை காதலிக்கிறதுல
ரிசர்வேஷனா தர முடியும்? உன்னுடைய டேலண்ட்டை காட்டி அசத்து அவ்வளவுதான்.”
“உங்கள மாதிரி கெத்து காட்டுற
ஆட்கள் கொஞ்சம் ஒதுங்கிக்கிட்டாத்தான எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏபிசி என எல்லா
சென்டர்களிலும் போட்டிக்கு வந்தா எப்பிடிடா?”
பரிதாபமாக சுருங்கிய அவன் முகத்தை
பார்த்தேன். மஹிமா, கனவிலிருந்து வாய்தா வாங்கிக்கொண்டு இருளுக்குள் காணாமல் போய்விட்டாள்.
இரவுக்கு ஆயிரம் கண்களிலிருந்து கனவுகளில் உடன் இருந்தவள், இனி நாளைக்கு நைட்தான் வருவாள்.
செந்தில் வந்து சேர்ந்த திலிருந்து இப்படித்தான். நேரங்கெட்ட நேரத்தில் எமோஷனலாகி கோபப்பட்டு
அடுத்தவர்களுக்கும் சேர்த்து டென்ஷனாவான்.
ஆச்சு. கிராண்ட் பார்க் கம்பெனியில்
வேலைக்கு சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. கோவையிலிருந்து கிளம்பி வந்து அண்ணா
பல்கலையில் ஆர்க்கிடெக்சரில் முதுகலை முடித்து இரண்டு நிறுவனங்களை தாவியபோது என் பேங்க்
பேலன்ஸும் லைஃபும் 360 டிகிரியில் மாறியிருந்தது. திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மயிலாப்பூர்,
கே.கே.நகர் என படிப்பு முதல் வேலை கிடைத்தது வரை பல்வேறு நண்பர்களுடன் குப்பை கொட்டி
கே.கே.நகரின் அப்பாசாமி ஃபிளாட்டிற்கு வந்தபோது நிம்மதியாக இருந்தது. டிப்போவுக்கு
சற்று தள்ளி நடந்தால் வரும் ரவுண்டாவுக்கு அடுத்து ஜாஃபர்கான் பேட்டை சாலையைக் கடந்து
சாலையை கடந்தால் வரும் இரண்டு பெட்ரூம் ஃபிளாட். ஈ மட்டும் ஒட்டத்தெரிந்த நான் சுசுகி
இன்ட்ரூடர் பைக் ஓட்டுகிறேன் என்றால் ஜாதகத்திலுள்ள ஒட்டிக்கொண்டுள்ள அப்பா, தாத்தா
உள்ளிட்ட வம்சாவழி புண்ணியம்தான் காரணம். அப்பா இறந்தபிறகு அம்மாவின் சொல்தான் எனக்கு
கட்டளையும் சாசனமும்.
“நைட்டு தலைக்கு விளக்கெண்ணெய்
கொஞ்சம் வெச்சுக்கிட்டு படு. ஷாம்பூ தேய்க்காத, சீயக்காய் பேக்கில இருக்கு. தேங்காய்
எண்ணெய் ஆட்டினது கண்ணாடி பாட்டில்ல இருக்கு. கவனமா இரு” என போனில் அம்மா சொன்னபிறகு
அப்பீலே கிடையாது. அதற்காக நான ்எனக்கு பிடித்ததை செய்யமாட்டேன் என்றல்ல; எதிலும் மூக்கு
நுழைத்து கருத்து சொல்வது அம்மாவுக்கு பிடிக்காது. உன்னோட விருப்பம் என்று கூறி அடுத்தவேலைக்கு
சென்றுவிடுவாள்.
அம்மா செல்வியின் பெயர் சொன்னால்
ஊரிலேயே எச்சிலை அழுத்தமாக விழுங்கிவிட்டுத்தான் பேசுவார்கள். சாடை பேசுவது, நக்கல்
எல்லாம் என் செல்வித்தாயிடம் எதுவும் செல்லவே செல்லாது. நறுக்சுறுக்கென வெட்டி கேட்டுவிடுவது
உறவுகள் தீயாய் விலகுவதற்கு முக்கியக்காரணம்.
“ஏஞ் செல்வி அருண்மொழிக்கு சட்டுபுட்டுன்னு
கல்யாணத்தை பண்ணிட்டன்ன கோயில் குளமுன்னு நிம்மதியா இருக்கலாமே?”
“ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்ட
விஷயம் இது. அவசரப்பட்டு கல்யாணத்த பண்ணிட்டு சாவகாசமாக சங்கடப்பட முடியாது பாருங்க.
எங்க தெருவுல இருக்கற சுந்தரம் இப்படித்தான் பையனுக்கு விருப்பம்னு கல்யாணம் பண்ணி
வெச்சு, அவன் குடும்பமே பிரிஞ்சு போச்சு. இதெல்லாம்
தேவையா?” என பேச எதிர்முனையில் பதில் வருமா என்ன?
கல்யாணத்தில் கிடைத்த வரதட்சணை
பணத்தில் அப்பா கந்தசாமி தேங்காய் மரங்களை குத்தகைக்கு எடுத்து தேங்காய்களை வெட்டி
விற்று வந்தார்.
உடல் வலிக்காக குடிக்கத்தொடங்கியது
பின்னாளில் குடியையை கெடுத்தது. அதிகாலையில் குவார்ட்டர் அடித்தால்தான் கைநடுக்கம்
நின்று வேலை செய்யும் நிலை. இறுதியில் கல்லீரல் வீங்கி வேலை செய்யும் இடத்திலேயே மயங்கி
விழுந்துசெத்துப் போனார்.
“எங்கடி ஊரு பொறுக்க கிளம்பிட்டியா?’’
அம்மா சேலை கட்டி மாரியம்மன் திருவிழாவுக்கு
கிளம்பி நின்றபோது கேட்ட கேள்வியால், அம்மா அப்பா சாகும்வரை நல்ல புடவையே கட்டவில்லை.
ஆடு, மாடு என வளர்த்து நிலத்தை பராமரித்து தனி ராஜாங்கம் நடத்தி என்னை வளர்த்தாள்.
பிரயோஜனமாக இருந்தால் பேசலாம் என்ற அப்பாவின் உறவு நட்புக் கொள்கை பிசினஸிற்கு ஒகே.
குடும்பத்திற்கு எப்படி ஒத்துபோகும்?
“உன்னோட படிப்புக்கு என்னால பணம்
தரமுடியாது. பக்கத்துல இருக்கிற துரைசாமி மேஸ்திரிகிட்ட வேலைக்கு சேரு, இல்லனா பெருமாள்
முதலாளி கம்பெனில கணக்கு எழுத கத்துக்கோ. தொழிலுக்கு எனக்கு உதவியாக இருக்கும். நீ
பொறந்ததிலிருந்து செலவுதான். ஒரு பைசா லாபமில்லை” அதற்குப்பிறகு அவர் சாகும்வரை நான்
அவரிடம் எதுவும் பேசியதில்லை. சாப்பிட்டிங்களா என்று கேட்பதும் அடக்கம். அவர் உள்ளே
வரும் நேரம் நான் வெளியே போய்விடுவேன். இருவரும் ஒன்றாக வீட்டில் இருந்தது இரவில் மட்டும்தான்.
அப்பா, அம்மா இருவரும் மாமன் மகன்,
அத்தை மகள் என முறைதான். மணப்பொருத்தம் பார்த்தாலும் ஏனோ மனப்பொருத்தம் கிழக்கும் மேற்குமாய்
இழுக்க வருத்தியது. வாழ்க்கையே கற்றாழை கசப்பானது. தினசரி சண்டைகள் பொறுக்காமல் விரைவிலேயே
வீட்டை விட்டு சென்னைக்கு படிக்க வந்துவிட்டேன். ஆனால் அம்மாவை கூட்டி வரமுடியவில்லை.
“அருண்மொழி, உனக்கு சோழராஜன் பேரு
வெச்சதே, மத்தவங்களுக்கு உதவுற மாதிரி விஷயங்களை உருவாக்குவேங்கிற நம்பிக்கையில்தான்.
நீ உன் உழைப்புனால வேலை செய்யற இடத்துல ஒரு இடத்தை வாங்கு. வீட்டை கட்டு. நா அப்புறமா
வர்றேன்” என உறுதியாக சொல்லிவிட்டாள். காதோரம் நரைமுடி அம்மாவுக்கு தனி அழகு. குள்ளம்தான். ஆனால் முடிவெடுத்துவிட்டால் அவளின்
உயரத்தை அசைக்கவே முடியாது. சரி என்றால் ம் என்பதே ஒரே பதில்.
மதுவை தொடுவதில்லை என்பது அப்பாவின்
சாவிலிருந்து புரிந்துகொண்டதால் அதில் கவனமாக இருந்தேன். ஆனால் பெண்களையும், நிலத்திற்கும்
நோ என்று சொல்லமுடியவில்லை. மறுக்கமுடியவில்லை. ஆபீசிற்கு கிளம்ப சரியான நேரம். அதேநேரம்
மரபு மருத்துவ மைனா மதிமலரையும் பார்க்க நினைத்திருந்தேன்.
ஈக்காட்டுத்தாங்கலின் கலைமகள்
நகரில் சாலையைக் கடந்து பாரிவேந்தரின் டிவி அருகேயுள்ள சாலையில் நுழைந்து இரண்டாவது
வலது திரும்பினால் அகத்தியர் சித்த மருத்துவமனை கண்ணில் தென்படும். அதன் முன்புறம்
மருத்துவமனை. பின்புறம் வீடு. சிறிய வீட்டின்
முன்புறம் காலணியை கழட்டிவிட்டு நுழைந்தால் துப்புரவான ஹால். அதன் உள்ளே இரு அறைகள்
அப்புறம் கிச்சன் என வீடு நீண்டிருந்தது.
ஆலிவ் க்ரீன் டிஸ்டெம்பரில் சுவரில்
முருகனின் போட்டோவும், தாடி நீண்ட அகத்தியரின் போட்டோ மட்டுமே. கீழ் தரையில் ரெட் ஆக்சைடு
பாவப்பட்டிருந்தது. அலமாரியில் ஒருவரிசையில் மருத்துவ நூல்களும், அதன் கீழ்ப்பகுதிகளில்
மருந்து டப்பாக்களுமாக நிறைந்திருந்தது. மெல்லிய பச்சை கற்பூரம் கலந்த திருநீறு வாசம் அறையில் நிறைந்திருந்தது
“என்ன உடம்பு ரொம்ப சோர்வா இருக்குதா?
குல்கந்து சாப்பிடறியா இல்லனா நன்னாரி ஜூஸ் ” என்பதுதான் மதிமலரின் மரபு மருத்துவ பாசம்.
“ஓரிதழ் தாமரை, நெல்லிக்காய் லேகியம்
நீ லிஸ்ட்படி கொடுத்ததை சாப்பிட்டாலே காலையிலே
தலையில் கொம்பு முளைச்சிருமோன்னு பயமா இருக்கு” என்று போனின் ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷனை
எடுத்து பார்த்தேன். உடனே மலரின் பிஞ்சு முகம் சிவந்துவிட்டது.
“என் கூட இருக்கிற கொஞ்ச நேரமும்
நீ போனை பார்த்துக்கிட்டிருந்தா எப்படி?” என்றவளின் காஜல் கண்களில் நொடியில் கண்ணீர்
தேங்கி விட்டது. சரி என்று அவளின் கைகளைப் ஆதரவாக பற்ற மழையில் நனைந்த மூங்கிலின் குளுமை.
ஒற்றை நாடி சரீரம். காட்டன் புடவை,
சுடிதார் என எது உடுத்தினாலும் அம்சமான மாநிற சருமம். முதன்முதலாக சந்திப்புக்கு பிறகு
லக்கிடா கஃபேயில் சந்தித்தபோது பச்சையும் வெள்ளையுமாக சுடிதாரில் ப்ரூ பருகும் மாடல்
போலவே இருந்தாள். என் அம்மாவைப் போல ஏதோவொன்று கறார்த்தனம் திருத்தமாக இவளிடம் ஈர்த்தது.
பகலில் காட்டும் கறார்த்தனம் இரவில் காணாமல் போய்விடுவது நிச்சயம் நிலவின் கோளாறா,
ஹார்மோன் கபடி விளையாட்டா? நான்றியேன் பராபரமே!.
“கையில என்ன மோதிரமா? வெள்ளைக்கலர்ல
டாலடிக்குதே?”
“செம்பு மோதிரம் உடம்பு சூட்டை
கன்ட்ரோல் பண்றதுக்காக. வெள்ளி ராசிக்காக”
“கல்லு, மோதிரம் இதெல்லாம் வெச்சு
விற்கிற அவங்கதான் பணக்காரங்க ஆவுறாங்களே தவிர நாம எப்போதுமே ஆகறதில்லை. நீயும் உன்
நம்பிக்கையும்” என்று நக்கலாக சிரித்தேன்.
“உனக்கு நம்பிக்கை இல்லாதது எனக்கு
எந்த பிரச்னையில்லை. நான் நம்புறேன் அவ்வளவுதான். நான் உன்னை பீச்ல ஆழி அமைப்போட நிகழ்வுல
சந்திச்சது, அதில் நீ என்கிட்ட வழிஞ்சது, இதோ இப்போ என்கூட மல்லுகட்டுறது வரைக்கும்
எல்லாத்துக்கும் தொடர்பிருக்கு” என்ற மலரின் முகத்தை பார்த்தால் ராயப்பேட்டையில் அலகு
குத்தி அருளாடும் அம்மாவை பார்ப்பது போலவே பீதியாக இருந்தது.
“நீ இந்திரா சௌந்தர்ராஜன், கோட்டயம்
புஷ்பநாத் நாவல்லாம் படிப்ப போலயே. பாதிப்பு எழுத்தில தெரியுது”
“பிளஸ்டூல கட் ஆஃப் மார்க்
197 எடுத்துட்டு சித்தாவுல சேர்ந்திருக்கேன்னா, அது இந்திய மருத்துவத்துல இருக்கிற
விஷயங்களை ஆழமாக தெரிஞ்சிக்கிட்டு யாருக்காவது உதவ முடியும்கிற ஒரே எய்ம்தான்”
“நீ பேசறது என்கிட்டேயா, இல்ல
தந்தி ரிப்போர்கிட்டயான்னே எனக்கு இன்னும் புரிபடுல. சரி, நான் உன்கூட்ட இந்திய மரபு
மருத்துவ டிபேட்டுக்காக வர்ல. நைட் டின்னர் சென்னை பிஸ்ட்ரோ வர்றியா, ஃபிரைட் ரைஸ்
சூப்பராக இருக்கும். எத்தனை மணிக்கு பிக்அப் பண்ணிக்க வரட்டும்?”
“நான் சாயந்தரம் மயிலாப்பூர் கோயிலுக்கு
போகவேண்டியிருக்கு. பேஷண்ட்ஸ் அப்பாயின்ட்மெண்ட்
இருக்கு. வீக் எண்ட் பார்ப்போம்.” என தோள் பிடித்து எழுப்பினாள். வந்ததுக்கு எதுவுமே
இல்லையா? என்பதற்கு மதிமலரின் மருத்துவ முத்தம் போனஸ்.
ரஞ்சனியாகட்டும், வித்யாவாகட்டும்
ஏன் விடாம ரமணா பிளாட் கதவு தட்டும் செக்ரட்டரி பெண் விபானா ஆகட்டும். அத்தனை பேரிலும்
மதிமலர் தனியாக தெரிகிறாள். நான் என்ன செய்கிறேன், பெண்களுடன் வழிவது என அத்தனையும்
தெரிந்தாலும் எதையும் கேள்வியே கேட்டதில்லை. மெல்லிய புன்னகையும் திடமான உறுதி குறையாத
பதிலும் அவளை இன்னும் ஸ்பெஷலாக்குகிறது என நினைத்துக்கொண்டே இன்ட்ரூடரை உசுப்பினேன்.
ட்ராஃபிக் போலீஸ் கைகாட்டி நிறுத்துகிறார்களா?
வண்டி ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்சூரன்ஸ் என அனைத்தும் சரியாக வைத்திருப்பேன். கொள்ளையடிக்கப்போனாலும்
வண்டிக்கு லைசென்ஸ் வைத்திருக்கவேண்டும் என்பது என் லாரி டிரைவர் மாமா முத்துலிங்கம்
கற்றுத்தந்த பாலிசி. என்னுடைய வாழ்க்கை, கனவு, லட்சியம் மட்டுமே எனக்கு முக்கியம்.
“அரசே அரசே ஊழியர்களை நியமி, அறிவித்த
ஊதிய உயர்வை வழங்கிடு” என சாலையில் கூச்சல் கிளம்ப சாலையை சற்று கவனமாக பார்த்தேன்.
சாலையை அடைத்தபடி ஊதா நிறம், காக்கி உடைகளில் போக்குவரத்துறையினர் பேனர்களுடன் நின்றிருந்தனர்.
அப்படியே அந்த வழியா போ சார், போ நிக்காத என போலீசார் காலைவேளை பரபரப்பில் எரிச்சலாக
கத்திக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கலைமகள் நகர் ஸ்டாப்பிலிருந்து வேளச்சேரி செல்லும்
வழியிலிருந்து மின்னல் வேகத்தில் கட் அடித்து வைத்த இளைஞனின் பைக், வேகத்தை கட்டுப்படுத்த
முடியாமல் ஒரு பைக் மீது மோதி, சாலையில் உரசி நெருப்புபொறிகள் பறக்க விழுந்து டைவ்
அடித்தான். பைக் பிளாட்பாரத்திலுள்ள மின்கம்பத்தில் மோதி சாலையில் எறியப்பட்டது. இருபது
நொடிகளுக்குள்ளாக மண்டை உடைந்து மூளை தேங்காயாக சிதறி இரண்டு உயிர்கள் பறிபோனது. உடனே
கூட்டத்திலிருந்த மக்கள் ஐயையோ என பதறி இளைஞனை தூக்க ஓடினர். ஏதோ கேமின் காட்சியைப்
போல தெரிந்தது. ரத்த ஓட்டத்தையும் பைக் ஸ்பீடோமீட்டர் முந்தவேண்டும். போனில் தமன் ஹிட்ஸை
இயக்கி காதில் இயர்போன் மாட்டி ஹெல்மெட்டை அணிந்தேன். இசையின் பீட்டிற்கு ஏற்ப இன்ட்ரூடர்
உசுப்ப மீட்டர் டாலரின் மதிப்பாக வேகம் கூட்டினேன்.
ஆபீசின் செக்யூரிட்டி வளைந்து
பவ்யம் காட்டி குட்மார்னிங் சொல்லி, லைட்டாக தலையசைத்து பார்க்கிங்குக்கு உள்ளே சென்றேன்.
வெண்ணிற காளான் வடிவத்தில் கறுப்பு கண்ணாடிகள், கட்டிடத்தின் அடுக்குகளில் தாவரத்தோட்டம்
என நவீனமும் புதுமையுமாக ஆச்சரியப்படுத்தும் டிசைனை கிராண்ட்பார்க் கொண்டிருந்தது.
உள்ளே நுழைந்ததும் ஆலிவ் க்ரீனில்
ஸ்லீவ்லெஸ் டாப்சும் வெல்வெட் ஸ்கர்ட்டுமாக சிவப்பு லிப்ஸ்டிக்கில் டாலடித்தாள் ஜெனிஃபர்.
கிரானைட் மேடையில் ஆப்பிள் கணினியில் கைவைத்தபடி திரையில் ஆராய்ந்தபடி இருந்தாள். என்னைக்
கண்டதும், “ஹாய் ஹீரோ சந்தோஷமான நியூஸ சொல்றேன். பாரடைஸ் கூட்டிப்போவியா?”
“அப்ப திலீப் கதி என்னாகிறது?
நீ என்கிட்ட பிரியாணி கேட்டுட்டுருக்க, நியூஸ் என்னன்னு சொல்லு என்னோட மெழுகுச்சிலையே!”
“இன்டலிஜென்ட் கொழுப்பை காட்டறியா,
மேல போ கம்பெனியே ரெட் கார்பெட் போட்டு நியூஸை சொல்லும். ஆனா பார்ட்டி உன்னோடதுதான்.
மறந்துராத பேபி”
சந்தூர் சோப் போட்டு குளிக்கிறாளா
என்று தெரியாது. மின்மினி என்ற குழந்தைக்கு அம்மா என செந்தில் தலையில் அவளே சத்தியம்
செய்தாலும் நம்ப முடியாது. மணாளன் திலீப்,
அரபு ஆட்களுக்கு விசுவாசியாக வேலை செய்கிறார். பிரியாணியும், வோட்காவுமாக, மாறும்
பார்ட்னர்களுமாக ஜெனிஃபரின் வாழ்க்கை வாரவாரம் ரினியூவல் ஆகிக்கொண்டிருந்தது.
நாக்கில் விரல் தொட்டு பிங்கர்
அட்டெனன்ஸ் வைத்துவிட்டு மலைப்பாம்பாய் மேலேறிய படிக்கட்டில் இரண்டிரண்டு படிகளாய்
தொற்றி மேலேறினேன். கிராண்ட்பார்க் கம்பெனி, கட்டுமான பிஸினஸை மட்டுமல்ல பிபிஓ கம்பெனி,
கணினி நிறுவனம் ஆகியவற்றையும் நடத்தி வந்தது. அரசின் முக்கியஸ்தர்களை வளைத்து பல்வேறு
கான்ட்ராக்டர்களையும் பெற்றிருந்தது. பின்னே இந்த காலத்தில் திறமையையும் மட்டும் வைத்திருந்தால்
என்ன பிரயோஜனம்? க்யூவில்தான் நிற்கவேண்டும்.
சென்சார் விலகியவுடன் உள்ளே நுழைந்தேன்.
முதல் அடுக்கில் உட்கார்ந்திருந்த அட்மின் துறையினர் இருபது பேர் இருக்கலாம். ஹெச்ஆர்
சகிதமாக மானிட்டரில் தீவிரமாக வேலை பார்த்திருக்க, அதைத் தாண்டிச் சென்று ஐடிகார்ட்டை
தேய்த்தால் திறக்கும் கதவுதான் கிராண்ட்பார்க் கட்டுமான துறையின் ஆபீஸ். வலதுபுறம்
கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் மற்றும் கட்டுமானத்துறையினரின் கேபின்கள். எங்கள் குழுவின்
அறை இடதுபுற பிளைவுட் கதவை தள்ளினால் வரும். எனக்கு முன்னாள் மணி, சுப்பு, மைக்கேல்
என மூவரும் ஹிப்ஹாப் தமிழா பாட்டோடு வேலையை இமைக்காத விழிகளோடு தொடங்கியிருந்தனர்.
குட்மார்னிங் சொன்னவர்களுக்கு
தலையசைத்து கேபினில் அமர்ந்து மேக்கை திறந்தேன். மெல்லிய இசையுடன் வரவேற்ற திரையை பாஸ்வேர்டு
உள்ளிட திறந்தேன். திறக்கவும் போன் மெல்லிய குரலில் சிணுங்கவம் சரியாக இருந்தது.
“ஹே மேன், அருண்மொழி உடனே என்னோட
ரூமுக்கு வா, உன்னோட டிசைன் கோஷ்டியை பிக்கப் பண்ணி கூட்டிட்டு வந்துடுப்பா ராஜா” என
மேனேஜர் ராஜேஸ்வர் ஸ்டைலிஷ் சிவாஜி ஸ்டைலில் உத்தரவிட்டார்.
“மணி, சுப்பு, மைக்கேல் எல்லாரும்
மேனேஜர் ரூமுக்கு கிளப்புங்கப்பா” என்றவன் புது புராஜெக்டாக இருக்குமோ என நினைத்துக்கொண்டே
டைல்ஸ் தரையில் நடந்தேன்.
“சார், என்ன கேர்ள்பிரண்ட்டோட
நினைப்பா, தரையில் காலு பாவ மாட்டேங்குதே?” மணி சீண்ட போதாதா, குருஜியும் பின்னணி இசைத்தான்.
“ஆமாங்க சார், வீக்டேஸ்ல ஒருத்தர்,
வீக்எண்டுல ஒருத்தர், பஸ் ஸ்டாப்புல ஒருத்தருனு நீங்க யூஸ் பண்ணிக்கிறத கண்ணால பார்த்து
ஷாக் ஆயிட்டேன்” என்பவன் காவிக்கட்சியில் சேவகர் ஆவதற்கு அதிக நாட்கள் தேவையில்லை.
மேனேஜர் என பிளாட்டின எழுத்தில் எழுதியிருந்த அறையில் சடங்கிற்கு கதவை இருமுறை தட்டிவிட்டு
கம் இன் குரல் கேட்டதும் உள்ளே நுழைந்தோம்.
சுருளிராஜன் முகச்சாயல் கொண்ட
ராஜேஸ்வர் வாங்கும் சம்பளத்திற்கேற் செழுமையை 56 வயதிலும் அனுபவித்துக்கொண்டிருந்தார்.
தொங்கிய முட்டை சைஸ் வயிற்றை இறுக்கிப்பிடிக்க கட்சிக்குள் அல்லாடும் இபிஎஸ்ஸாய் திணறிக்கொண்டிருந்தது
அவரின் சட்டை பட்டன்கள். பிரேம்லஸ் கண்ணாடி அணிந்த கதகளி கலைஞர் முகத்தில் வசந்தமாளிகை
சிவாஜியின் ஹேர்ஸ்டைல் அதி விநோதமாக இருந்தது.
“வாங்க பசங்களா, குட் நியூஸ் என்னன்னா,
நம்ம டீம் அனுப்பிய பில்டிங் டிசைன், காஸ்ட் ஜெர்மனியோட நோரன் கம்பெனி ஏத்துக்கிட்டாங்க.
உங்க டீமோட உழைப்புதான் இதுக்கு காரணம்னு எம்டி பாராட்டினாரு” உற்சாகமாக பேசியவரை சுப்பு
எரிச்சலோடு பார்த்தான்.
“சூப்பர் சிங்கர்லயே நல்லா பண்ணியிருக்க
அப்படின்னா இன்னும் வேற ஏதாவது சொல்லு எதிர்பார்க்கிறாங்க. சிவாஜி என்ன டொங்கடிச்சு
பேசறாப்புல, கேளுங்க ப்ரோ” என என் காதை கடித்தான் குருஜி.
டூப்பு சிவாஜிக்கு காது கேட்காமலா
இருக்கும்? “ம்ம்.. கேட்குது.. டீம் ஆளுகளுக்கு இன்க்ரிமெண்ட் உண்டு. ஐயா, நீங்க கிளம்புங்க.
உங்க லீடர்கிட்ட தனியாக பேசணும்” என தொண்டையை கேன்சர் சிவாஜி போல இருமி காட்டி மூன்று
என்னைப் பார்த்து தம்ஸ் அப் காட்டி கண்ணடித்தபடி நகர்ந்தனர்.
பில்டிங் என்பது என்ன? கட்டுமானத்தில்
அது பார்வைக்கு கிடைத்தாலும் நான் அதனை வரைந்து கணினியில் டிசைன் செய்யும்போதே மனதில்
பலமுறை பார்த்துவிடுவேன். டிசைனில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை முதலிலேயே கேள்விகள்
கேட்டு தெரிந்துகொள்வதுதான் வெற்றி ரகசியம். பிளானை அழித்து அழித்து வரைந்துகொண்டிருப்பது
நூடுல்ஸில் கலந்துவிட்ட மசாலாவை பிரிப்பது போலான வேலை.
“அருண்மொழி கங்கிராட்ஸ். உங்களோட
கனவுக்கான டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டீங்க.”
“புரியல சார்”
“எம்.டி, உங்களுக்கு பெருங்குடியிலேயே
வீடு கட்டறதுக்கான இடத்தை கிஃப்டாக கொடுத்திருக்காரு. ஜெர்மன் கம்பெனியோட டிசைன் புராஜெக்டிற்கான
பரிசாக தர முதலிலேயே நினைச்சிருக்காரு. சிவசாமி பில்டர்ஸ், கேஏஜி ஹோம்ஸ் கம்பெனிகளை
முந்தி நம்ம கம்பெனி ஜெயிச்சதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம்.” என வாழ்த்துக்களுக்கு கை
நீட்டினார்.
உண்மையிலே இது எனக்கு பெரிய சர்ப்ரைஸ்தான்.
அம்மாவின் கனவு இதுதான். அவளை வீட்டுக்கு கூட்டிவர இதுதான் ஒரே சாய்ஸ். நாம் ஜெயிக்கிறதை
உளமார விரும்புகிறவர்கள் இருக்கும்போதே ஜெயிக்கிற வரம் எல்லோருக்கும் கிடைக்கிறதில்லை.
நன்றி சொல்லி மேனேஜர் ரூமிலிருந்து வெளியே வந்தேன். டிசைனர் ரூமுக்குள் செல்லும்போதே
மணி, சுப்பு, குருஜி என முப்பிரம்மாக்கள் எந்த ஹோட்டல் ஐட்டம் இன்க்ரிமெண்ட் காசை கரைக்க
சரியாக இருக்கும் என நெட்டில்தேட தொடங்கிவிட்டனர்.
“ஹோட்டல் தட்டாரம், நல்லா இருக்கும்.
சிக்கன், மட்டன் ஏன் பீஃப் கூட உண்டு. எலும்பு சுக்கா நல்லா இருக்குண்டா”
“நாம நான்வெஜ், வெஜ் பிரியரான
நம்ம தலைவர் அருண் சாரையும் கூட்டிட்டு போகிறமாதிரி தேடு. அங்க போய் உட்கார்ந்து நம்ம
வாயை பார்த்துக்கிட்டு இருந்தா நமக்கு கறி செரிக்காது..”
“அப்போ பாரடைஸ் போயிருவோம். சாருக்கு
அங்க வெஜ் பிரியாணி வாங்கித்தந்துட்டு நாம ஜாலியா சிக்கன், மட்டன்னு கொளுத்துவோம்.”
நகரில் தோசை ஊற்றினால்கூட கறிக்குழம்பு
என்று சொன்னால்தான் கூட்டம் படியேறி ஹோட்டலுக்குள் வருகிறது. பெரிய ஹோட்டலிலும் வெஜ்
ஆட்களுக்கு என இருப்பது வறண்டுபோன நான் ரொட்டியும், வெஜ் பிரியாணி மட்டும்தான். நான்
ஓகே சொல்லாமலே என்னை கமிட்டியில் சேர்த்துவிட்டது டிசைனர் கூட்டணி. திடீரென போன் சிணுங்கியது.
அம்மாதான்.
“சொல்லும்மா, திடீர்னு இந்த நேரத்துல
போன் பண்ணியிருக்கிறே?”
“பெரிய கம்பெனில நல்ல வேலையில
இருக்குற. இப்போ உனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பந்தானே?”
“ஏம்மா திடீர்னு கேட்குற”
“பழனிசாமி மாமா வரன் பத்தி சொன்னாரு.
நம்ம சொந்தத்துலதான். பொண்ணு சித்தா டாக்டரா சென்னையில்தான் வேலை பார்க்குதாம். போட்டோ
உனக்கு போன்ல அனுப்புறேன்னு சொன்னாரு. வந்துச்சா இல்லையான்னு பாரு”
சரி இரு ஒரு நிமிஷம் என வாட்ஸ்
அப்பை உசுப்பினேன். நோட்டிபிகேஷனை க்ளிக் செய்தால் இருபது நிமிஷங்களுக்கு முன்பே போட்டோ
ஆஜராகியிருந்தது. படத்திலிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்ததுபோலவே இருந்தது. இந்த கண்,
ஷார்ப்பான மூக்கு, இதெல்லாம் ஆஹா, இது மதிமலர்தானே! சூப்பர் என நெஞ்சு படபடத்தாலும்
அதைக்காட்டிக்கொள்ளாமல் பார்த்துட்டேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.
எனக்கே பயமாகிவிட்டது. ஒரேநாளில்
இத்தனை சர்ப்ரைஸா? நம்மவே முடியலியே முருகா! பஸ் பாஸ் வாங்க போனாலே அதைக்கொண்டுவா இதைக்கொண்டுவான்னு
நம்ம மூஞ்சிக்கு இழுத்தடிப்பார்கள். இது எப்படி இவ்வளவு வேகமாக விஷயம் டேக் ஆஃப் ஆகுது!
என நினைத்து குதூகலமானேன். ஆனால் பின்னாளில் நடக்கப்போகும் விஷயங்கள் என்னை ஜெயிலில்
தள்ளி புட்டம் வீங்க வெளுக்கப்போகின்றன என்பதை அப்போது நிஜமாகவே நினைத்துக் கூட பார்க்கவில்லை.
நற்பூதம் பராக்! பராக்!
-வின்சென்ட் காபோ
(முதல் பகுதி நிறைவு பெற்றது)