அமெரிக்காவின் முகத்திரையை கிழித்த போட்டோகிராபர்!
நான் எடுக்கிற படம் இதழின் அட்டையில் வெளிவரவேண்டும். உள் அட்டையில், பிற பக்கங்களில் வருவது எனக்கு பிடிக்காது. இப்படி சொல்பவர் யாராக இருக்க முடியும்? 1972 ஆம் ஆண்டு வியட்நாமில் எடுத்த புகைப்படம் மூலம் உலகின் மூலை முடுகெங்கும் பிரபலமான புகைப்பட கலைஞர் நிக் வுட்தான் அது.
போரின் கொடூரம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட நிர்வாண சிறுமியின் புகைப்படம் அமெரிக்கா , வியட்நாம் நாட்டின் மீது தொடுத்த அநீதியான போரின் வரலாற்று சாட்சியானது. என்னுடைய கனவு எப்போதும் புகைப்படக்காரராக பணியாற்றுவதே. இதற்கு இன்ஸ்பிரேஷன் என் சகோதரர்தான். எனும் நிக் வுட் தான் எடுத்த புகைப்படம் மூலம் 21 வயதிலேயே புலிட்சர் பரிசை வென்றார். அசோசியேட் பிரஸ் நிறுவனத்தில் வேலை செய்த நிக் வுட், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பணிபுரிந்து அண்மையில் 51 வயதில் பணி ஓய்வு பெற்றார்.
அசோசியேட் பிரஸ்ஸில் புகைப்படக்காரராக பணியாற்றிய நிக்வுட்டின் சகோதரர், மேகாங் டெல்டா பகுதியில் கொல்லப்பட்டார். அப்போது நிக்கின் வயது 16. உடனே சகோதரரின் பணியில் இணைய ஆசைப்பட்டு அணுகியபோதும் நிறுவனத்தினர் அவருக்கு வேலை தர மறுத்துவிட்டனர். ஏனெனில் நிக்கும் இறந்துவிடுவார் என நிறுவனத்தினர் அஞ்சினர். பின்னர் நிக்குக்கு பணிகொடுத்தாலும் அவரை புகைப்படமெடுக்க உடனே அனுமதிக்கவில்லை.
என்னை பணிக்கு அனுமதிக்காத ஹார்ஸ்ட் ஃபாஸ், இருமுறை புலிட்சர் பரிசு வென்ற ஆளுமை. இரண்டாம்முறை வேலைக்கு அணுகியபோது என்னை அனுமதித்தனர் என்று புன்னகைக்கிறார் நிக் வுட்.
பணியின்போது ஹென்றி ஹியூட், எடி ஆடம்ஸ் உள்ளிட்ட சிறந்த புகைப்படக்காரர்களின் நட்பு நிக்குக்கு கிடைத்துள்ளது. அவர்களின் நட்பினால் கேமராக்களை கையாள்வதிலும் லென்ஸ்களை தேர்ந்தெடுப்பதில் மெல்ல தெளிவடைந்தார் நிக்.
ஃபாஸ் எங்களின் தலைவராக வந்த பின் எங்கள் அனைவரின் கேமராவும் லெய்காவாக மாறியது. பாம் வெடிப்பதை கூட ஃபோகஸ் செய்யாமல் அதில் எடுக்கலாம். என்னிடம் அப்போது நிகான் லென்ஸ்கள் இருந்தன எனும் நிக் வுட் கேமராக்களைப் பற்றி பேச பேச குதூகலமாகிறார். கம்போடியா, லாவோஸ் என அலைந்து திரிந்தவர் டோக்கியோவின் அலுவலகத்தில் பணிபுரிந்து 1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். 1975 ஆம் ஆண்டு சைகோன் எதிரிகளிடம் வீழ்ந்தது.
இன்றுள்ளதை விட போர்களத்தில் எங்களுக்கு நிறைய சுதந்திரம் கிடைத்தது. இறந்தவர்களின் உடல்கள், ராணுவ வீரர்களை புகைப்படம் எடுத்தோம். தனிமையில் வாடிய அமெரிக்கர்கள் தங்கள் புகைப்படங்களை குடும்பத்தினர் பார்க்கவேண்டும் என நினைத்து அனுமதித்தனர் என்கிற நிக் வுட் அமெரிக்காவில் பிரபலங்களின் புகைப்படக்கார ராகவும் பணியாற்றியுள்ளார்.
இளைஞர்கள் தமக்கான கணங்களுக்கு காத்திருந்து புகைப்படங்களை எடுக்கவேண்டும். கோணங்களை மாற்றாமல் டஜன் கணக்கில் எடுக்கும் புகைப்படங்களுக்கு எந்த மதிப்பும் கிடைக்காது. சிறந்த புகைப்படங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து பத்திரிகை எடிட்டரிடம் கொடுப்பதே சரியான புகைப்பட கலைஞனுக்கு அழகு என புன்னகைத்து விடைதருகிறார் நிக் வுட்.
ஆக்கம்-தொகுப்பு : ச.அன்பரசு