ட்ரைவ்(2011)- ரத்தம் தெறிக்கும் குற்றம்!
ட்ரைவ்(2011)
2005 ஆம் ஆண்டு ரிலீசான எழுத்தாளர் ஜேம்ஸ் சாலிஸ் புத்தகமான ட்ரைவ் நாவலை தழுவி உருவானது ட்ரைவ்.
கதை, காலையில் காரேஜில் மெக்கானிக்காகவும் இரவில் கொள்ளைக்காரர்களை காப்பாற்றும் ட்ரைவராகவும் வாழும் ஒருவரின் கதை. சாதாரணமாக பார்த்தால் சலிப்பான வாழ்க்கைதான். ஆனால் நான் லீனியர் நாவலை திரைக்கதை எழுத்தாளர் ஹூசைன் அமினி மாற்றிய விதத்தில் படம் திரில் ஹைவேயில் சேசிங், ரத்தம் பீய்ச்சும் சண்டை, துப்பாக்கிச்சண்டை என கிடுகிடுக்க வைக்கிறது.
ஹீரோவுக்கு (ரியான் கோஸ்லிங்குக்கு படத்தில் பெயர் கிடையாது) இந்த வாழ்க்கையில் புகார் ஏதும் கிடையாது. தன் அபார்ட்மெண்டில் சிறுவனோடு வாழ்ந்து வரும் ஐரீன் பழக்கமாகிறாள். அப்புறம் என்ன? குற்றவாளி கணவன் சிறையில் கிடக்க ரியானின் மென்மையான அணுகுமுறை ஐரீனை மயக்க அவளே ரியானின் கையை பற்றுகிறாள். இதற்கிடையில் சிறுவன் பெனாசியோவின் பிறந்தநாளின்போது சிறையிலிருந்து ரிலீசாகும ்ஐரீனின் கணவன் ஸ்டேண்டர்டு , ஏராளமான கடன்களோடு அதனை கட்டவேண்டிய நெருக்கடியோடு வெளியே வருகிறான். சிறையில் அல்பேனிய குற்றவாளி குக், கடன்தொகையை கட்ட அடகு கடை ஒன்றை கொள்ளையடிக்க வற்புறுத்துகிறான். ரியான், ஐரீனின் அமைதியான வாழ்க்கைக்காக கார் ஓட்ட சம்மதிக்கிறான். அதேநேரம் ரியானின் காரேஜ் ஓனருக்கும் ரியான் மட்டுமே நம்பிக்கை. ஏனெனில் அவருக்கும் கடன் பிரச்னை. அதை தீர்க்க பந்தய வீரனாக ரியானை இறக்கி கடனிலிருந்து தப்பிக்க அமெரிக்க யூதரான இரு சகோதரர்களை அணுக, ரியானின் வாழ்க்கை சுனாமியில் சிக்கிய படகாக சுக்கு நூறாகிறது. என்னதான் ஆச்சு பாஸ்? என்பவர்கள் கந்தசஷ்டி கவசம் சொல்லியபடியே படத்தை இணையத்தில் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்கியேனும் பார்த்து விடுங்கள்.
பிரெஞ்சு இயக்குநர் நிகோலஸ் வின்டிங் ரெஃபின் இயக்கத்தில், கிளிஃப் மார்டினெசின் அதிரடிக்கும் இசையில் அமைந்த க்ரைம் திரில்லரின் சண்டைக்காட்சிகளும் சேசிங்குகளும் பயத்தில் எச்சிலை விழுங்க வைக்கின்றன.
படத்தின் ட்ரைவர், காரேஜ் ஓனர், யூத மாஃபியா, ஐரீன் என கதாபாத்திரங்கள் குறைவுதான். சில இடங்களில் கொட்டாவியே வந்துவிட்டது. சோர்வான நீளமான காட்சிகள்தான் ஆக்சன் காட்சிகளுக்கு உதவுகின்றன. அடுத்த பார்ட் இன்னும் வேகமாக இருந்தால் சூப்பராக இருக்கும்.
-கோமாளிமேடை டீம்
நன்றி: த.சக்திவேல், ரஞ்சித் ஃபெர்னான்டஸ்