அமெரிக்காவுக்கு
வடகொரியாவின் சுதந்திரதின பரிசு! - ப.அனுஷா
இந்திய மக்களுக்கு
மோடி என்றால் அமெரிக்காவுக்கு வடகொரியா. இந்த இருவருக்குமான ஒற்றுமை,
முன்னவர் நள்ளிரவில் அவசர அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு பிபி ஏற்றுகிறார்
என்றால், வடகொரியா அமெரிக்கா உட்பட உலகத்துக்கே பிபி,
சர்க்கரை டூ அலர்ஜி வரை சொல்லியடித்து செய்தில் கில்லி.
தன் மீது விதிக்கப்பட்ட
பொருளாதாரத் தடைகளை பீச்சாங்கையால் ஒதுக்கித் தள்ளிய வடகொரியாவின் இந்த வார ஏவுகணை, ஐசிபிஎம்
எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை. அமெரிக்காவுக்கு எங்கள்
சுதந்திரதின பரிசு என செம கெத்தாக பதில் சொல்லியது பலருக்கு பெரிய ஷாக். உண்மையில் இந்த விஷயங்களை படிப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகள் என்ன?
அதற்கு மட்டும் பதில் தேடுவோம் வாருங்கள்.
அமெரிக்காவும்
வடகொரியாவும் ஏன் ஒற்றுமையாக இல்லை?
பூசல்கள் தொடங்கியது 20 ஆம்
நூற்றாண்டில் தொடக்கத்தில்தான். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு
அமெரிக்கா தென்கொரியாவின் மீதும், ரஷ்யா வடகொரியாவின் மீதும்
ஆதிக்கம் செலுத்த தொடங்கிய காலமது. ச1949 ஆம் ஆண்டு சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாற, அதனைச் சுற்றியுள்ள
நாடுகளும் கம்யூனிஸ்ட் நாடுகளாகிவிடுமோ என அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் பயந்தார்.
ஜூன் 25, 1950 அன்று தொடங்கிய கொரியா உள்நாட்டு
யுத்தம் ஜூலை 27, 1953 அன்று முடிவுக்கு வந்தது. இப்போரில் 2.5 மில்லியன் மக்கள் தம் வாழ்வை இழந்தனர்.
ரஷ்யாவின் ஆதரவோடு இந்த உள்நாட்டுப்போரில் வடகொரியாவுக்கு சீனாவும் துணை
நின்றது அமெரிக்காவை கடுப்பேற்றியது. வடகொரியாவில் கொரில்லா படை
தலைவரான இரண்டாம் கிம் சங் ஆட்சிக்கு வந்தார். அடுத்து அவரது
மகன் இரண்டாம் கிம் ஜாங், அவரது பேரன் கிம் ஜாங் உன் என அவர்களது
குடும்பமே நாட்டில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மூலகாரணம் அமெரிக்கா என்று கூறி மக்களை
தேசபக்தி வெறியேற்றி
ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
தற்போது செய்துள்ள
சோதனை பற்றி!
வடகொரியா தற்போது
செய்துள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் அணுஆயுத பயணத்திறன் 5600 கி.மீ. இந்த ஏவுகணை தாக்கும் தூரத்தில்தான் அமெரிக்கா உள்ளது
என்பதுதான் அந்நாட்டிற்கு பதட்டமே. "வடகொரியாவின் ஏவுகணையால்
ஹவாய் தீவுகளை கூட எட்ட முடியாது. ஆனால் அலாஸ்காவை எட்டமுடியும்."
என தீர்க்கமாக பேசுகிறார் யூசிஎஸ் குளோபல் செக்யூரிட்டி அமைப்பைச் சேர்ந்த
டேவிட் ரைட். 2016 ஆம் ஆண்டு வடகொரியா சோதித்த ஏவுகணைகள் அனைத்தும்
1000 கி.மீ தூரம் சென்று இலக்கைத் தாக்கி கடலில்
விழுந்துவிடும். கண்டம் விட்டு கண்டம் 500 கி.மீ பயணித்துவிட்டு கடல் நோக்கி வீழும். முன்பை விட வடகொரியா தன் அருகிலுள்ள நாடுகளை மிக எளிதாக தாக்கிவிடும் என்பதுதான்
இன்று அதன் ராணுவ வலிமை.
வடகொரியாவை அமெரிக்கா
ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது?
2007 ஆம்
ஆண்டு அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவை
தனிமைப்படுத்தி 2 ஆண்டுகள் அணுஆராய்ச்சியிலிருந்து விலக்கி வைத்தது.
ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா இருவரும் வடகொரியாவை பயங்கரவாத நாடாக முத்திரை குத்தி அதன் மீது சர்வதேச
நெருக்குதலை அதிகரித்தனர். இதன் விளைவாக எரிச்சலான வடகொரியா தொடர்ச்சியாக
அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளில்
அதிதீவிரமாக இறங்கிவிட்டது. தற்போது ட்ரம்ப்பின் முறை.
கூடுதல் மூர்க்கம். கூடுதல் ஆக்ரோஷம்.
'அமைதி யுகம் முடிந்துவிட்டது' என அமெரிக்காவின்
துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியது அரசின் நடவடிக்கைக்கு சாம்பிள். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படைகள், தென்கொரியாவில் ராணுவப்பயிற்சி
செய்வது வழக்கம். இன்று ஏவுகணை பதட்டத்தை முன்னிட்டு அங்கு தற்போது
23 ஆயிரம் படைவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வட அமெரிக்காவின்
அணுஆயுத நிலைகளின் மீது அமெரிக்கா ஏன் தாக்குதல் நடத்தக்கூடாது?
அமெரிக்கா போரைத்
தொடங்க விரும்பவில்லை என்பதே முக்கியக் காரணம். மேலும் முன்கூட்டிய தாக்குதல் தென்கொரியா
மற்றும் ஜப்பான் போன்ற வடகொரியாவின் அருகிலுள்ள நாடுகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.
ஏனெனில் வடகொரியா எளிதில் தாக்கும் தூரத்தில் இந்நாடுகள் அமைந்துள்ளன.
வடகொரியா அதிபர் கிம், தன்னுடைய ஆயுதங்களை மலைப்பகுதியில்
ஒளித்துள்ளதால் போரினாலும் முழு ஆயுதங்களை அழித்துவிட முடியாது என்பதுதான் உண்மை.
"ராணுவ நடவடிக்கை சரியான தீர்வல்ல. பொருளாதார
அடிப்படையிலும் இது பாதிப்பையே ஏற்படுத்தும்" என உறுதியாக
பேசுகிறார் தென்கொரியாவிலுள்ள யான்செய் பல்கலைக்கழகத்தின்
கிழக்காசிய உறவுகள் வல்லுநர் ஜான் டெலூரி.
வடகொரியா விவகாரத்தில்
சீனா என்ன செய்யவேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்?
வடகொரியா தொடர்ந்து
ஐ.நா விதிகளை புறக்கணித்து செயல்படுவதை தடுக்கும் திறன் கொண்ட ஒரே ஆசிய நாடு
சீனா மட்டும்தான். வடகொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை செய்து வருவதால்
சீனா, அந்நாட்டிற்கு அளிக்கும் நிலக்கரி அளவை குறைத்துள்ளது.
ஆனால் 2017 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில்
சீனா-கொரியாவிற்கான பிஸினஸ் 37.4% உயர்ந்துள்ளதை
ட்ரம்ப் தன் ட்வீட்டிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். சீன அதிபரோடான
சந்திப்பிலும் பின் பத்திரிகைகளிடம் பேசியதிலும் மாற்றிப்பேசி குழப்பினாலும் சீனா இது குறித்த எந்த செய்தியையும்
வெளியிடவில்லை.
(நன்றி: முத்தாரம்)