ஏரியா 51: தீராத மர்மங்களின் வாசல்
ஏரியா 51: தீராத
மர்மங்களின் வாசல் - வின்சென்ட் காபோ
அண்மையில் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக போட்டியிடும்
ஹிலாரி கிளிண்டன், ரேடியோ நேர்காணல் ஒன்றில்,
மர்ம இடமாக கருதப்படும் நெவாடாவில் உள்ள ஏரியா 51 மற்றும் பறக்கும்தட்டு குறித்த கோப்புகளையும் மக்களிடையே வெளியிட ஆர்வம் கொண்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.
ஏரியா 51 குறித்த கோப்புகளை
விரைவில் மக்களுடைய பார்வைக்கு கொண்டுவர முடியும் என நம்புகிறேன். அங்கு அப்படி ஏதும் இல்லையென்றால் அதனை மக்களுக்கு தெரிவிப்போம் என்று ஜிம்மி
கெம்மல் ஷோ எனும் டி.வி. நிகழ்ச்சியில்
ஹிலாரி கூறியிருக்கிறார்.
ஏலியன்கள், பறக்கும்தட்டு
உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து அந்த இடத்தை அணுகினால் கடும் ஏமாற்றமே கிடைக்கும் என்கிறார்
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு ஆவணக்காப்பகம் துறையின்
மூத்த அதிகாரியான டி.ரிச்செல்சன்.
1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய பாதுகாப்பு
ஆவணக்காப்பகம் அரசு தொடர்பான ஆவணங்களையும் அரசு சார்பற்ற ஆவணங்களையும் மக்கள் பார்வைக்கு
வெளியிட்டு வருகிறது. அரசு தொடர்பற்ற ஆவணங்களை பாதுகாப்பதில்
நாட்டின் இரண்டாவது பெரிய ஆவணக் காப்பகமாக விளங்கி வருகிறது. அமெரிக்க அரசு பல்வேறு ஆவணங்களை பாதுகாத்து வருகிறது. ஏரியா 51 குறித்த 60 ஆவணங்களை
2013 ஆம் ஆண்டு ரிச்செல்சன் வெளியிட்டுள்ளார். இதில் ரகசியமாக அமெரிக்கா செய்த சோதனைகளான பனிக்காலப்போரில் ஈடுபட்ட ரஷ்யாவின்
சோவியத் எம்ஐஜி விமானங்கள் குறித்தவை வெளிவந்துள்ளன. இவர் இப்படி
கூறினாலும் இவை தொடர்பான இன்டிபென்டன்ஸ் டே, எக்ஸ் பைல் உள்ளிட்ட
திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், ஆவணப்படங்கள்,
நாளிதழ் செய்திகள் ஏரியா 51 ல் நிகழ்த்தப்படும்
சோதனைகள், உருவாக்கப்படும் ஆயுதங்கள் குறித்து பெரும் ஆர்வத்தை
மக்களிடையே உருவாக்கியுள்ளன.
ஏரியா 51 - மர்மதேசம்
லாஸ்வேகாசின் வடமேற்கு பகுதியான நெவாடாவில் 130
கி.மீ. தொலைவில் அமைந்துள்ள எட்வர்ட் விமானப்படையின் ஆளுகைக்கு
உட்பட்ட பகுதியாக நெவாடா சோதனை மற்றும் பயிற்சி மையம்(NTS) என்ற
அதிகாரப்பூர்வ பெயரில் அழைக்கப்படுகிறது. ராணுவம் என்றாலே மக்களை உள்ளே நுழைய
அனுமதிப்பார்களா என்ன? வேலிகளை கட்டி நோ என்ட்ரி போர்டுகளை மாட்டி
மக்களுக்கு 144 தடை விதித்துவிட்டார்கள். அமெரிக்காவின் புதுமையான விமானங்கள் குறித்த ஆராய்ச்சி வேற்றுகிரகவாசிகளின்
பறக்கும் தட்டு குறித்து அறியத் தூண்டியிருப்பது இயல்பான ஒன்றே. யு-2, ஆக்ஸ்கார்ட், எஃப்-117,
எஸ்ஆர்-71, பிளாக்பேர்ட், ஆளில்லாத ட்ரோன் உளவு விமானம் உள்ளிட்ட போர் விமானங்கள் குறித்த தகவல்கள் ரிச்செல்சன்
வெளியிட்ட ஆவணங்களிலிருந்து வெளிவந்திருக்கின்றன. பல விமானங்கள்
குறித்த தகவல்கள் எந்த எண் கொண்ட பெயரிலும் குறிப்பிடப்படவில்லை.
பெயர்கள் பலவிதம்
ஏரியா 51 பெயர் பெற்றது
குறித்த பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அணுசக்தி கமிஷன் இந்த
இடத்தை அணுகுண்டுகளை சோதனை செய்ய பயன்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. நெவாடா டெஸ்ட் சைட்(NTS) என அழைக்கப்படும் இடம்
1 - 30 வரை எண்ணிடப்பட்டு ஏரியா 51 பகுதியில் உள்ளது.
இப்பகுதிக்கு ஏரியா 51 என பெயர் வந்ததற்கு காரணம்
இது என்டிஎஸ் பகுதியைச் சாராது இருப்பதால் அதனை வேறுபடுத்தி காட்டத்தான் என ஒரு கருத்து
உலாவருகிறது. 1960 -1970 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆவணங்களில்
குறிப்பிட்ட தொழில்நுட்ப பகுதியாக ஏரியா 51 பயன்படுத்தப்பட்டிருப்பதை
முதன்முதலில் லாக்ஹீத் மார்டின் எனும் நிறுவனம் தனது படத்தில்
ஏரியா 51 என்ற பெயரில் குறிப்பிட்டிருந்தது. ஏரியா 51 என்ற ஒரு பெயரின் காரணத்தை மட்டுமே நாம் தேடியிருக்கிறோம்
ஆனால் பல பெயர்களும் இதற்கு உண்டு. இதனை வடிவமைத்து உருவாக்கிய
கெல்லி ஜான்சன் பாரடைஸ்
ரான்ச் என்று பெயர் வைத்தார். இவை மட்டுமில்லாமல் வாட்டர்டவுன்
ஸ்ட்ரிப், தி பாக்ஸ், ரெட் ஸ்கொயர்,
தி பார்ம், க்ரூம் லேக், ட்ரீம்லேண்ட், டிடாச்மெண்ட் -3 என்ற பெயர்களும் உள்ளது.
வரைபடத்திலேயே காணோம்!
நெவாடாவின்
ரேச்சல் நகரின் அருகில் அமைந்துள்ள பகுதியில் 90,000 ஏக்கர் பரப்பில்
ஏரியா 51 வில் விமான ஓடுதளங்கள், காவலர்
குடியிருப்புகள், அலுவலகங்கள், வீடுகள்,
ரேடார் ஆன்டெனாக்கள் என அமைந்துள்ளன. சாட்டிலைட்
பார்வையிலிருந்து விமானங்கள் எளிதில் வேகமாகவும், மறைவாகவும்
தப்பிச்செல்லும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நாம்
பார்ப்பது மிக குறைவானவையே என்றும் இதன் கீழ் பகுதியில் 40 அடுக்குகளாக
கட்டிடங்கள் கட்டப்பட்டு லாஸ் அலமோஸ், லாஸ் ஏஞ்சல்ஸ்,
வொய்ட் சாண்ட்ஸ் பகுதிகளுக்கு செல்லும் வகையில் சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளதாக
கூறுகின்றனர். அப்படி பிரமாண்ட பணியினை செய்ய பேரளவு கான்க்ரீட்
தேவை என்ற நிலையில் இதனை எப்படி திட்டமிட்டு செய்திருக்க முடியும்? என்ற கேள்வியும் உள்ளது. இன்று இந்த இடம் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது என்றாலும் பல ஆண்டுகளுக்கு
முன்புவரை அமெரிக்க மேப் தயாரிப்பாளர்கள் ஏரியா 51 என்ற பகுதியையே
மறைத்து தம்முடைய மேப் தயாரிப்பில் நெல்லீஸ் வான்படை தளத்தை மட்டும் குறிப்பிட்டு காட்டியிருந்தார்கள்.
ரகசியத்திற்கு பூட்டு
ஏரியா 51 இல் தேவையில்லாத
நபர்கள் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. குறிப்பிட்ட பணியை
முடிக்க ஒரே நேரத்தில் பல குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்றாலும் ஒரு குழுக்களோடு மற்ற
குழுக்கள் கலந்துரையாடுவது தடை செய்யப்பட்டு ரகசியம் காக்கப்படுகிறது. முக்கியமான விமானங்களின் பரிசோதனை ஓட்டத்தின்போது தொடர்பில்லாத நபர்கள் அங்கு
இருக்க அனுமதி கிடையாது.
R-4808 என அழைக்கப்படும் ஏரியா 5 பகுதியின் மேலே அங்கு தயாரிக்கப்பட்ட விமானங்கள் தவிர மற்ற விமானங்கள் பறக்க
தடைவிதிக்கப்பட்டுள்ளது. விமானிகள் தவறி இப்பகுதிக்குள் ஓட்டிச்சென்று
விட்டாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டு சிறைதண்டனை விதிக்கப்படுவது
நிச்சயம் என்று மேலதிகாரிகளால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அணுகுண்டு தொடர்பான ஆராய்ச்சிகளை அருகிலுள்ள நகரான ரேச்சல் பகுதியில்
வாழும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களுக்கு எந்த அறிவிப்பும், எச்சரிக்கையும்
தராமல் நடத்துவதால் பலமுறை அவர்களின் வீட்டுக் கண்ணாடிகள் நொறுங்கி சிதறியிருக்கின்றன.
அதோடு இச்சோதனைகளால் ஏரியா 51 நிலப்பகுதி முழுவதும்
பல ஆண்டுகள் தூய்மையே செய்ய முடியாத அளவு கதிரியக்கம் நிறைந்துபோயுள்ளதை ஆரோக்கியமான
சூழல் என்று கூற முடியாது.
ரகசியங்களை வெகு நாட்கள் அரசு காப்பாற்ற முடியாது
என்பதற்கு தொடர்ந்து முன்னேறி வரும் நவீன தொழில்நுட்பம் சாட்சியாக உள்ளது.
உலகத்தின் ஏகாதிபத்திய முதலாளியாக அமெரிக்கா உருவாக பல கருவிகள் ஏரியா
51 பகுதியில்தான் உருவாகி சோதிக்கப்பட்டிருக்கும் என்பதை யாரும் எளிதில்
யூகிக்க முடியும். இன்னும் சொல்லப்படாத பல டெராபைட் மர்மங்களை
தன்னுள் புதைத்துக்கொண்டு அமைதியாக நிற்கிறது வேலிக்குள் அடைபட்ட ஏரியா 51 பகுதி.