டெலிபோன் இன்டர்வியூ - சிம்பிளாக அசத்தலாம்! சூப்பர் டிப்ஸ்கள் இதோ!



டெலிபோன் இன்டர்வியூ - சிம்பிளாக அசத்தலாம்! சூப்பர் டிப்ஸ்கள் இதோ!

-ச.அன்பரசு

முதலில் கங்ராஜூலேஷன். உங்களின் அட்டகாச ரெஸ்யூம் நிறுவனத்தை மேக்னட்டாய்  ஈர்த்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போன் இன்டர்வியூக்களை சிக்கனமாக நடத்தி பலரை விலக்கி தமக்கு தேவையான நபர்களை அடையாளம் காண்கின்றன. போன் இன்டர்வியூக்கள் உடனே வேலையைப் பெற்றுத்தராது என்றாலும் அடுத்த லெவலுக்கு செல்ல இதுவே பாலம். உங்களுக்கான டிப்ஸ்கள்

கொஞ்சம் சீரியஸ்! கொஞ்சம் சின்சியர்!

இதுவும் நேருக்குநேர் இன்டர்வியூ போல முக்கியம்தான். எனவே கால்மேல் போட்டபடி ஸ்டைலான காஃபி வித் டிடி அலட்சிய பேச்சு வேண்டாம். "போன் இன்டர்வியூக்களில் மறக்காமல் ரெஸ்யூமை கையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை நேர்காணல் செய்பவரின் பெயர், வேலையை கேட்டு உறுதிசெய்துகொண்டு பேசுங்கள்" என்கிறார் டச்சு வங்கியின் ஹெச்ஆர் மகராந்த் கடாவ்கர். பக்கா ஃபார்மல் உடையில் போன் இன்டர்வியூவை அணுகுவது உங்கள் மனநிலையை அதற்கென தயாராக்கும் அமேசிங் ஐடியா.

இடைஞ்சல்களை தவிருங்கள்!

இன்டர்வியூவில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போது, பின்னணியில் மதியம் சிக்கன் ஆர்டர் பண்ணீருடா என நண்பனும், பாத்ரூமுல ஏன் தண்ணீர் ஊத்தல என்ற அம்மாவின் அத்தியாவசிய டயலாக்குகள் போனில் கேட்டால்  உங்களை நேர்காணல் செய்பவருக்கு உங்களைப் பற்றி என்ன ஒப்பீனியன் தோன்றும்? மரியாதை தெரியாதவர் என்றுதானே! முடிந்தவரை லேண்ட்லைன் போனில் பேசுங்கள். அதிலும் இரைச்சல்கள் குறுக்கிடாமல் இருப்பது முக்கியம். ரிசீவரை மூடியபடி அம்மாவிடம் காஃபி கேட்டு இன்டர்வியூவில் பேசினால், காலம் முழுவதும் உங்கள் அப்பாதான் உங்களை காப்பாற்ற வேண்டும்.

நம்பிக்கையோடு பேசுங்கள்!

நேர்காணலில் எப்படி ஹேண்ட்ஷேக் செய்து புன்னகைத்து ஹலோ சொல்லி பேசுவீர்களோ அந்த உணர்வோடு போன் இன்டர்வியூவிலும் பேசினால் ஆசம். ஆனால் அதற்காக நடிகர் குமரிமுத்து போல அன்லிமிடெட்டாக சிரித்து பேசினால் உங்கள் வேலைவாய்ப்பு அன்றே அப்போதே லாக்ஆப்தான். எனவே பட்ஜெட் படம்போல அளவோடு புன்னகைத்து நிதானமாக கேள்விகளை உள்வாங்கி தெளிவாக பதில் சொன்னால் வேலை நிச்சயம்.

ஓவர்டேக் எடுக்காதீர்கள்!

இன்டர்வியூவை நடத்துபவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான துல்லிய பதில்களை சொன்னால் போதும். சார் என்ன இப்படி கேட்கறீங்க, இது கூட தெரியாதா உங்களுக்கு? என்ற ரீதியில் பேச்சில் ஓவர்டேக் எடுத்து முந்தும் சாகசங்களை தவிருங்கள். கேட்கும் கேள்விகளை சுருக்கமாக பென்சிலில் நோட்ஸ் எடுப்பது நேர்காணலை சிறப்பாக்கும்.

தொடர்புகள் தேவை!

போன் இன்டர்வியூ நிறைவுக்கு வந்ததும் அப்பாடி காசு மிச்சம் என உடனே போனை வைத்துவிட்டால் எப்படி ப்ரோ? நேர்காணல் நிறைவில் நன்றி சொல்லி, அடுத்த கட்ட நேர்காணலுக்கு அங்கேயே பேஸ்மெண்ட் அமைப்பது உங்கள் சமர்த்து. நேர்காணல் செய்பவரின் போன் நம்பரை பெற்றுவிட்டால் வேலை கிடைக்க வாய்ப்புகள் அமோகம்.

நன்றி:
 வெளியீட்டு அனுசரணை: தினகரன் கல்வி வேலைவாய்ப்பு மலர்