ஊழலில் தவிக்கும் தம்மகயா!
ஊழலில் தவிக்கும்
தம்மகயா!
- ச.அன்பரசு
கடந்த ஒரு மாதமாக
தாய்லாந்தின் அந்த புத்த மடாலயத்தைப் பற்றி பேசாத நாளிதழ்களே இல்லை. இன்று
கோயிலைச்சுற்றி 3 ஆயிரம் போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருக்கும்
அளவு பரபரப்பு ஏற்படுத்தியதற்கு காரணம் அந்த
மடாலய குருதான்.
வாட்டிகன் நகரைவிட 8 மடங்கும்,
கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கும்
பெரிய மடாலயம்தான் தாய்லாந்திலுள்ள வாட் தம்மகயா. மடாலயம் ஏலியன்களின்
வாகன வடிவில் திகைப்பை ஏற்படுத்தும் பிரமாண்டம். உலகிலுள்ள
30 நாடுகளிலிருந்து வந்த புத்த துறவிகள் இங்கு தங்கியுள்ளனர்.
15 அடுக்கிலான இக்கட்டிடத்தை புத்த மதத்தின் ஐ.நா சபை என்று இதன் பக்தர்கள் அழைக்கின்றனர். புத்தமதம்
தொடர்பான விஷயங்களைக் கவனிக்க 20 மூத்த துறவிகளை உறுப்பினர்களாக
கொண்ட குழுவே தம்மகயாவிற்கு உண்டு.
ராணுவத்தின் கிடுக்கிப்பிடி!
தாய்லாந்தில் 2014 மே 22 அன்று ராயல் தாய் ஃபோர்ஸ் எனும் ஆயுதப்படை அதன்
தலைவர் ஜெனரல் பிரயுட் சான் ஓ சான் தலைமையில் கலகத்தை தொடங்கியது. அதன்பிறகு நாடாளுமன்றம் முடக்கப்பட்டு என்சிபிஓ(National Council
for Peace and Order) வசம் நாடு ஒப்படைக்கப்பட்டு ராணுவ ஆட்சி தொடங்கியது.
தற்போதைய பிரதமர் பிரயுட் சான். தொலைக்காட்சி,
ரேடியோ உள்ளிட்டவைகளுக்கு தணிக்கை உண்டு.
கடந்த ஒரு மாதமாக
ஆயிரக்கணக்கான வீரர்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சிப்பதும், துறவிகள்
அவர்களை தடுப்பதும் தொடர்கதை நிகழ்வு. மடாலய குரு லுவாங்க் பர் தம்மாஜயோ மீதுதான் பணமோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசியலுக்கும் மதத்திற்குமான தொடர்பு வரலாறு முழுக்க கிடைக்கும் ஒன்றே.
என்சிபிஓ வின் ஜந்தா ராணுவத்திற்கு இது தன்னை ஆதிக்கத்தை நிறுவும் வாய்ப்பு
என அதை கப்பென பிடித்துக்கொண்டு விட்டது எனவும் கருத்துகள் கூறப்படுகின்றன.
தம்மகயா மர்மங்கள்!
தம்மகயாவின் தியான
மையங்கள் பெல்ஜியம்,
சிங்கப்பூர், சாலமன் தீவுகள் ஆகிய நாடுகளில் செயல்பட்டு
வருகின்றன. மேலும் மடத்திற்கு சொந்தமான டிவி கூட உண்டு.
இம்மையங்களில் கட்டாய மதமாற்ற பிரச்சாரங்களை தீவிரமாக செய்கிறார்கள்
என்ற சர்ச்சையும் சுழன்றடிக்கிறது. மடாலயத்தினுள் சீனியர் துறவிகளுக்காக
சிசிடிவி பாதுகாப்போடு உடற்பயிற்சி சாதனங்கள், கோல்ஃப் மைதானம்,
ஏராளமான பிரைவசி கண்ணாடி மற்றும் ஸ்டீல் அறைகள் போன்றவையும்
120 ஏக்கர் பரப்பில் உண்டு.
"இம்மடாலயத்தில்
இப்போதெல்லாம் பிரசங்கம் அதிகரித்துவிட்டது. நான் என் வாழ்க்கையை
முழுமையாக 200% வாழ விரும்புகிறேன்." என விரக்தி குரலில் பேசுகிறார் இம்மடாலயத்தைச் சேர்ந்த மனோஜ் ஹெம்புரோம்மராஜ்.
ஆனால் இதனை மரபான புத்த கொள்கையோடு புதிய தலைமுறை ஒத்திசைய முடியாத பிரச்னை
என்றே கூறலாம். 10 பில்லியன் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோயிலில்
வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதப்பட்டுள்ள வாசகம் சொர்க்கத்திற்கு செல்லும் வழி.
தாய்லாந்து சமூகத்தில்
மன்னராட்சி,
தேசம் என்பதற்கடுத்து புத்தமதம் இடம்பெற்றுள்ளது. துறவிகளுக்கு அங்கு வரி கிடையாது. துறவியாக நீடிக்கும்வரை
அவர்களுக்கு சிறை தண்டனையும் கிடையாது. ஆனால் ராணுவம் மடாலயத்தில்
நுழைந்தது பணமோசடி புகார்கள் குவிந்ததால்தான் என்பதை துறவிகளின் நடவடிக்கை நிரூபிப்பது
போலவே உள்ளது. மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட
40 மில்லியன் டாலர்களை மோசடி செய்தார் என்பதுதான் வழக்கு. இம்மோசடிக்காக 16 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
சுழன்று தாக்கும்
அரசியல்!
தம்மகயா
மடாலயமானது,
முன்னாள் ஆட்சியாளரான தக்ஷின் ஷினவத்ராவுக்கு ஆதரவானது என்ற காரணத்தினால்தான்
ஜந்தா ராணுவம் இவ்வளவு கடுமை காட்டுகிறது என மடாலயத்தை சேர்ந்த அதிகாரி கூறுகிறார்.
2006 ஆம் ஆண்டு நிகழ்ந்த ராணுவப்புரட்சியில் பதவி இழந்தவர் தக்ஷின்
ஷினவத்ரா. ராணுவ ஆட்சியில் சிறைதண்டனை விதிக்கப்படும் பீதியில்
துபாயில் தலைமறைவாகியிருக்கிறார். இதற்கு முன்பு இம்மடாலய தலைவராக
இருந்த மனோ லாவோஹவானிச், மடாலயத்தை விரிவாக்குவதற்கு செய்த முயற்சிகளை, நாஸிக்களோடு
ஒப்பிட்டு பேசுமளவு வேகமாக இருந்தது என்று அன்று விமர்சிக்கப்பட்டது. காவல்துறையினரை தடுக்க 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மடாலய
பக்தர்கள் திரண்டு தடுப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால்
மார்ச் 10 அன்று இந்த நானா, நீயா போர் முடிவுக்கு
வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: முத்தாரம் வார இதழ்