தற்கொலையைத் தூண்டும்
வசந்தகாலம்!
- கா.சி.வின்சென்ட்
தற்கொலைகள் மன
அழுத்தத்தால் நடைபெறுகிறது என்பதால் தற்கொலைக்கு முயற்சிப்பவரை ஜெயிலுக்குள் தள்ளவேண்டாம்
என இந்திய அரசு அண்மையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. தற்கொலை
மனநிலைக்கு சிகிச்சைகள் தேவை என்பது சரிதான். ஆனால் அதற்கு என்ன
காரணம், குறிப்பிட்ட பருவகாலங்களில் அவை அதிகம் நிகழ்கிறதா என்பதைக்
குறித்த அலசலே இக்கட்டுரை.
1800 ஆண்டுகளிலிருந்து
செய்யப்பட்டு வரும் ஆய்வுகளில் வசந்தகாலத்தில் தற்கொலை மரணங்கள் அதிகரித்தும்,
குளிர்காலத்தில் குறைந்தும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
"பனிக்காலத்தை அடிப்படையாக கொண்டால், வசந்தகாலத்தில்
நிகழும் தற்கொலைகளின் அளவு 20%-60% வரை" என பீதியூட்டுகிறார் ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான ஃபோடிஸ்
பாப்படோபௌலோஸ். பருவநிலைக்கும் தற்கொலை மனநிலையை தூண்டுவதில்
ஏதேனும் பங்கிருக்குமா? மூளையில் மனநிலையை தீர்மானிக்கும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்களில்
தோன்றும் செரடோனின் அளவில் ஏற்படும் மாறுபாடும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
பனிக்காலத்தை விட
வெயில்காலத்தில்,
சூரியனின் கதிர்கள் உடலின் ரத்தத்தில் செரடோனின் சுரப்பை அதிகம் தூண்டுகின்றன.
மனஅழுத்த மருந்துகளை ஒருமுறை சாப்பிட்டால் ஒரு மாதத்திற்கு மூளையில்
செரடோனின் அளவை கூடுதலாக்கி, அவை மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
"மனநிலைக்கான மருந்துகளை உண்ணும்போது அவை சிலரின் எண்ணங்களை தூண்டிவிட்டு
அதன்படி வேகமாக செயல்பட தூண்டுகிறது. இவ்வகையில் சூரியக்கதிர்களின்
தாக்கமும் இருக்கலாம்" என்கிறார் போடிஸ்.
ஆராய்ச்சியாளர்
போடிஸ் தற்கொலை செய்து இறந்த 12 ஆயிரம் நபர்களை ஆராய்ந்ததில் அவர்கள் மனநிலை
மாற்றத்திற்கான மருந்துகளை தற்கொலைக்கு முந்தைய காலத்தில் சாப்பிட்டிருப்பது தெரிய
வந்தது. ஆனால் சூரியக்கதிர்களின் தாக்கம் ஏதுமில்லை.
"செரடோனின் குறித்த தன்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது"
என உற்சாகமாகிறார் போடிஸ்.
தற்கொலைக்கு காரணமாக
கூறப்படும் இன்னொரு தியரி,
தாவரங்களிலிருந்து கிடைக்கும் மகரந்தம் உடலின் தன்மையில் ஏற்படுத்தும்
வேதியியல் மாற்றங்களினால் விபரீத எண்ணங்கள் தோன்றுகின்றன என்பது. "தாவரங்களுக்கிடையேயான அதிகளவிலான மகரந்த
பரிமாற்றம் பெண்களின் மனதில் தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது என்பதையும் கூறுவது நிரூபிக்கப்படாத
ஆய்வு" என்கிறார் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவமையத்தின்
பேராசிரியரான தியோடர் போஸ்டோலாசே. நோய் எதிர்ப்பு செல்களுக்கான சைடோகைன் தெரபி குறிப்பிட்ட
நோயாளிகளுக்கு தற்கொலை எண்ணத்தை உருவாக்குகிறது என்கிறார் இவர். சூழல் காரணமான சூரிய ஒளி, மகரந்தம், மனநிலை மாற்றும் மருந்துகள் ஆகியவற்றுக்கான முறையான ஆராய்ச்சிகளிலிருந்தே நாம்
சரியான உண்மையை அறியமுடியும்.
நன்றி: முத்தாரம் வார இதழ்